ஷூட் தி பப்பி



- அருண் சரண்யா

தவிப்போடு காத்திருந்தோம். தனக்கு வந்திருந்த அவசரத் தொலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டிருந் தார் கோபி. எங்கள் நிறுவனத்தின் முக்கிய செயலதிகாரி. நிர்வாகத்தின் முகம். ‘‘போயிட்டு வா அனு. என்னாலே வர முடியாதும்மா. சாரி. ஆல் தி பெஸ்ட்...’’ மறுமுனையில் பேசுவது அவர் மனைவி என்பது புரிந்தது. மொபைலை ஆஃப் செய்தார். அடுத்த கணம் எங்கள் இருவரையும் உற்றுப் பார்த்தார். நீளமாக ஏதோ உரையாற்றுவார் என நினைத்தோம். ஊஹூம். ‘‘ஷூட் தி பப்பி’’ என்ற ஒற்றை வாக்கியத்தைக் கூறிவிட்டு மாநாட்டு அறையிலிருந்து கிளம்பத் தயாரானார் கோபி.   போகும்போது ஒரு பட்டியலை நீட்டிவிட்டுச் சென்றார்.    

அந்தப் பட்டியலை மேம்போக்காகப் பார்த்தேன். ஒவ்வொரு பெயரும் வலியைக் கிளப்பியது. கடைசி இரு பெயர்கள் அதி​ர்ச்சி அளித்தன. ‘‘அடுத்த வாரம் என் மகளுக்கு நிச்சயதார்த்தம்.​ மூணு மாசத்திலே கல்யாணம்...’’ என்று இன்று காலை கூறிய ரவிச்சந்திரன் இந்தப் பட்டியலில் தன் பெயர் இருப்பதை அறிந்தால் என்ன செய்வான்? ‘‘வாடகைக்கு ஒரு ஃப்ளாட் பார்த்திட்டேன் சார். ஊரிலே இருக்கிற அப்பா, அம்மாவை இனிமே கூடவே வச்சிக்கப்போறேன்...’’ என்று கூறிய ஆதிகேசவன் நினைவுக்கு வந்தான்.

இவர்களைப் போன்றே பல திட்டங்களை வைத்திருந்த அத்தனை பேரும் அடுத்தடுத்து நினைவில் தோன்றினார்கள். அவர்கள் அத்தனை பேரின் மகிழ்ச்சியும் தொலையப் போகிறது. அதாவது கிட்டத்தட்ட அத்தனை பேரின் மகிழ்ச்சியும்...’’​​‘ஷூட் தி பப்பி’ என்ற ஒரே வாக்கியம் இதை சாதிக்கப்போகிறது! ‘‘சார், இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே...’’ கெஞ்சுதலாகக் கேட்ட என்னை உற்றுப் பார்த்தார் கோபி. ‘‘நிலைமையை மாத்த ஏதாவது நம்பகமான திட்டம் வச்சிருக்கீங்களா?’’ என்றார். தவிப்புடன் இடவலமாகத் தலையசைத்தவுடன் ‘‘அப்ப நான் சொன்னதை செஞ்சிடுங்க...’’ என்றபடி வெளியேறினார்.

பக்கத்திலிருந்த மோகனசுந்தரம் குழப்பமாக என்னைப் பார்த்தார். ‘‘சி.இ.ஓ. என்ன முடிவெடுத்திருக்கிறார். நாய்க் குட்டியைக் கொல்லணுமா? புரியல்லியே...’’ அரை நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சியில் பிரபலமாக விளங்கிய ஒரு நிகழ்ச்சி அது. ‘ஷூட் தி பப்பி’.   திரையில் ஒரு குழந்தை கையில் ஒரு அழகான நாய்க் குட்டியை ஆசை பொங்க அணைத்துக் கொண்டிருக்கும். பின்னணியில் குரல் கேட்கும். ‘‘நீங்கள் இந்த நாய்க்குட்டியைக் கொல்ல வேண்டும். இப்படி நீங்கள் கொல்வது திரையில் லைவ்வாக ஒளிபரப்பாகும். இதற்காக நீங்கள் 50 டாலர் கொடுக்க வேண்டும். நீங்கள் தைரியத்துடன் சுடுவதை பல்வேறு கோணங்களில் எங்கள் சானல் ஒளிபரப்பும். உங்கள் புகழ் பரவும். உங்கள் அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கூடும்.

உங்களைத் திருமணம் செய்து கொள்ளப் பல பெண்கள் வருவார்கள்...’’ தொடக்கத்தில் எல்லோரும் தயங்குவார்கள். கொடுக்க வேண்டிய தொகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்படும். ஒரு கட்டத்தில் பலரும் நாயைச் சுட முன்வருவார்கள். தொலைக்காட்சித் திரையில் தோன்றுவதில் அவ்வளவு ஆர்வம்.  அதுவும் பல சானல்கள் தொடங்கப்பட்டிருக்காத அந்த நாட்களில் தொலைக்காட்சியில் தோன்றுவது என்பது மாபெரும் பாக்கியம். விளக்கியவுடன் மோகன சுந்தரம் புரிந்து கொண்டார். என்றாலும் அவரிடம் ஒரு கேள்வி மீதமிருந்தது. அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் சி.இ​.ஓ. எடுத்த முடிவுக்கும் என்ன சம்பந்தம்?

நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒரு விஷயத்தைச் செய்வது என்ற பொருளில் ‘ஷூட் தி பப்பி’ பயன்படுத்தப்படுகிறது. உணர்வுபூர்வமான விஷயத்தை மனதைக் கல்லாக்கிக் கொண்டு செய்வது. இப்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பட்டியல்போல. நிர்வாகத்தின் நலனுக்காக இத்தனை பேருக்கும் வேலை நீக்கம். மோகனசுந்தரத்தால் இன்னமும் நடப்பதை  முழுவதுமாக நம்ப முடியவில்லை. ‘‘தீர்மானம் செய்து விட்டாரா?’’ என்றார். ஆம். தனது தீர்மானத்தைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு நாய்க்குட்டி அல்ல, பல நாய்க்குட்டிகள். ரவிச்சந்திரன், ஆதிகேசவன், பரிமளா, சுந்தரேசன் போன்ற பல பப்பீஸ். ஆட்குறைப்பு என்ற ஒற்றைத் துப்பாக்கியைக் கொண்டு கொலைகள் நடத்தப்படவிருக்கின்றன.

கூடவே ‘தங்கக் கைகுலுக்கல்’ என்ற பெயரில் ஓரளவு தொகையும் வழங்கப்படும். இந்தத் தனியார் நிறுவனத்தில் நேரம், காலம் பார்க்காமல் உழைத்தவர்களில் பாதிப் பேரை வீட்டுக்கு அனுப்பப் போகிறார்கள். மாற்று வேலை பத்து சதவிகிதம் பேருக்குக்கூட கிடைக்காது. மனித வளத்துறை பொறுப்பாளராக இங்கு வேலையில் சேர்ந்ததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். நிர்வாகம் இந்த விஷயத்தில் தீவிரமாகவே இருந்தது. யார் யாரை நீக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை தயாராக வைத்திருந்தார் கோபி. அந்தப் பட்டியலைப் பார்த்தபோது அதில் காணப்பட்ட பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது. தென்னிந்தியர்களும், அதிக ஊதியம் பெறும் சீனியர்களும் கட்டம் கட்டப்பட்டு வெளியேற்ற வேண்டிய நிலையில் இருந்தார்கள். 

ஒரு காலத்திய தென்னாப்ரிக்கா நினைவில் எழுந்தது. தென்னாப்ரிக்கா ஒரு காலத்தில் நிறவெறிச் சூழலில் சிக்கியிருந்தபோது அங்கு இருந்த ஓர் அறிவிப்புப் பலகையை புகைப்படம் எடுத்து என் தாத்தா அனுப்பியிருந்தார். ‘இங்கு கருப்பர்களுக்கு அனுமதி கிடையாது...’ என்று அறிவிப்பு. இந்த விளம்பரப் பலகையில் கருப்பு நாய் ஒன்றின் படம் தீட்டப்பட்டிருந்தது. அதாவது கருப்பர்களை நாயோடு ஒப்பிட்டிருந்தார்கள். எவ்வளவு திமிர்! அப்போது அங்கு ஒரு ப​லூன்காரர் சென்று கொண்டிருந்தார். அவரிடம் பலவித வண்ண ப​லூன்கள் காணப்பட்டன. அதில் கருப்பு ப​லூனும் இருந்தது. ‘‘சம்பந்தப்பட்டவங்க கிட்டே இன்னிக்கே சொல்லிடலாமா?’’ என்று கேட்டார் மோகனசுந்தரம்.

இப்போதைய சூழலில் இதையெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது என்று தோன்றியது. ‘‘நாளைக்குப் பார்த்துக்கலாம்...’’ என்றேன். மோகனசுந்தரம் வேதனையுடன் நகர்ந்தார். மிகவும் அடிப்படையான ஒரு கேள்வியை அவரிடமிருந்து எதிர்பார்த்தேன். ‘என்னை அனுப்பிட மாட்டாங்கதா​னே?’ ஆனால், என்ன காரணத்தினாலோ அவர் அதைக் கேட்கவேயில்லை. நம்பிக்கை. வீட்டுக்குப் போனதும் ராஜி வேகமாக என்னிடம் வந்தாள். ‘‘என்னங்க உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்...’’  ஆட்குறைப்பு விஷயம் இவளுக்கும் தெரிந்து
விட்டதா? உடை மாற்றிக் கொள்ளாமல் உடல் முழுவதும் சோர்வுடன் சோபாவில் நான் படுத்துக் கொண்டது அவள் சிறிதும் எதிர்பாராத ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

‘‘உடம்பு சரியில்லையா? என்ன ஆச்சு?’’ என்று பதற்றப்பட்டாள். ‘‘ஒ​ண்ணுமில்லே...’’ என்றபோது தென்னாப்ரிக்க ப​லூன்காரரின் மிச்சக்கதை நினைவுக்கு வந்தது. கருப்பர் இனத்தைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி அந்த ப​லூன்காரரிடம் ஏக்கத்துடன் ‘‘அண்ணா, கருப்பு ப​லூன்கூட மேலே போகுமா?’’ என்று கேட்டாளாம். அவள் கூறுவதைப் புரிந்து கொண்ட பலூன்காரர், ‘‘கலர்ல என்னம்மா இருக்கு?  உள்ளே இருக்கும் காத்திலேதான் எல்லாம் இருக்கு...’’ என்றாராம். பட்டியலின் இறுதிப் பகுதியில் என் பெயரும் இடம் பெற்றிருக்கிறது! சமாளித்துக் கொள்ள முடியும். எனக்கு உரிய தகுதிகள் உண்டு. இப்போதைக்குப் போதிய சேமிப்பும் இருக்கிறது.

மகளின் பிரசவம் இன்னும் ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான். மாப்பிள்ளையும் அருமையானவர். எனினும் நிர்வாகம் இன்னமும் கொஞ்சம் முயற்சிகள் எடுத்துப் பார்த்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டிருந்தது. திறமையான ஆலோசகர் ஒருவரை நியமித்து நிலைமையை எப்படிச் சமாளிக்கலாம் என்று கேட்டிருக்கலாம். எவ்வளவு பேரின் வாழ்க்கை இந்த முடிவால் எப்படியெல்லாம் பாதிக்கப்படப் போகிறதோ! ‘‘என்னங்க இன்னிக்கு நம்ம ப்ரியாவைக் கூட்டிக்கிட்டு டாக்டரின் க்ளினிக்குக்கு போயிருந்தேன்.

அங்கே உங்க சி.இ.ஓ. கோபியின் மனைவியும் செக்கப்பிற்கு வந்திருந்தா. ஸ்கேன் பண்ணிப் பார்த்ததிலே அவ கருவிலே இருக்கிற குழந்தைக்கு ஏதோ பெரிய பிரச்னையாம். டவுன் சிண்ட்ரோம்னு சொன்னாங்க. கருச்சிதைவு பண்ணிக்கறதா இல்லையா என்பதை இன்னும் இரண்டு நாளுக்குள்ளே சொல்லணுமாம். க்ளினிக்கில் வேலை செய்யும் சிஸ்டர் ஃபிலோமினா என் பள்ளித் தோழிதானே. அவதான் இதையெல்லாம் சொன்னா...’’ பாவமாக இருந்தது. கூடவே அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.
‘ஷூட் தி பப்பி?’             

பெட்ரோல் குரங்கு!
அரியானாவின் பானிபட்டில் இன்சார் பஜார் வியாபாரிகளின் பைக்குகளில் சிலநாட்களாக பெட்ரோல் குறைந்திருந்தது. யார் ஆட்டையைப்போடுவது என்று பார்த்தால் நம் முப்பாட்டன் குரங்குதான் திருடர். அருகில் யாருமில்லாதபோது பைக்கில் பெட்ரோலைக் குடிக்கும் குரங்கு பழங்கள், பருப்புகள் என எதையும் தொடுவதில்லை!

வெட்டிங் தூக்கம்!
அமெரிக்காவின் லூசியானாவில் டேவிட் மற்றும் ரோசலி பியர்ஸுக்கு திருமணம் நடைபெற்றது. இருவரின் மகனான மேக்ஸ் ரிவருக்கு வயது 9. கல்யாண ஆரவாரம் கண்களை அயர வைக்க, கெட்டிமேளம் முழங்கும்போது மேக்ஸ் ரிமோட் காரில் தலைசாய்த்து தூங்கியேவிட்டார். உடனே பளிச் என ஸ்டில் எடுத்து இணையத்தில் ஏற்ற, மேக்ஸ், இன்று சோஷியல்தள பிரபலமாகிவிட்டார்.

ஹெல்ப் கேட்ட கிளி!
அமெரிக்காவின் ஒரேகானிலுள்ள கிளாக்கமாஸ் நகரில் ஒரு வீட்டிலிருந்து ஹெல்ப் என குரல் கேட்க, பதறிய டாக்ஸி ட்ரைவர் உடனே போலீசுக்கு நம்பர் அழுத்தி விட்டார். ஹெய்டன் சான்டர்ஸ் என்ற போலீஸ் வீட்டில் நுழைந்து ஹெல்ப் கேட்டவரைப் பார்த்து சிரித்தேவிட்டார். யெஸ். டியாகோ எனும் பச்சைக்கிளி அது!