டிம்பர் மாஃபியாவை எதிர்த்துப் போராடும் லேடி டாா்ஜான்!



- ச.அன்பரசு

ரக்‌ஷா பந்தன் வட இந்தியாவில் அன்பையும் சகோதரத்துவத்தையும் போற்றும் ஓர் அற்புதத் திருவிழா. பெண்கள் தங்கள் உடன்பிறந்த/பிறவா சகோதரர்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என வேண்டிக்கொண்டு ரக்‌ஷா எனும் திருநூலை தங்கள் சகோதரர்கள் கையில் கட்டும் இந்தத் திருவிழா, ஜார்கண்டின் புர்பி சிங்பம் மாவட்டத்தில் உள்ள முதுர்காம் கிராமத்தில் மட்டும் வித்தியாசமாக நடைபெறுகிறது.

அங்குள்ள பெண்கள் மரங்களைத் தங்கள் சகோதரர்களாக எண்ணி அவற்றுக்கு ரக்‌ஷா கயிறு கட்டுகிறார்கள்! மரத்தை தன் சகோதரி என்று சொன்ன சங்க இலக்கியப் பெண் நம் நினைவுக்குவர, சரி இங்கு மட்டும் ஏன் இப்படி வித்தியாச ரக்‌ஷா பந்தன் என்று விசாரித்தால், ஜமுனா துடு என்ற வீர மங்கைதான் இதற்குக் காரணம் என  கை காட்டுகிறார்கள் கிராம மக்கள்.

யார் இந்த ஜமுனா?
ஒடிஷாவைச் சேர்ந்த ஜமுனா பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். 1998ம் வருடம் திருமணமாகி முதுர்காம் கிராமத்துக்கு வந்தார். கள்ளங்கபடம் இல்லாத மக்களான முதுர்காம் கிராமத்தவர்களை ஏமாற்றிச் சுரண்டி ஒட்டுமொத்த வனப்பகுதியையும் மாஃபியா கும்பல் சிதைத்துக்கொண்டிருப்பதைக் கண்டார். ‘டிம்பர் மாஃபியா’ எனப்படும் இந்தக் கொடூரக் கூட்டம் பற்றி ஊர் முழுக்க பலரும் பலவிதமாகச் சொன்னார்கள். வனம்தான் மக்களின் சொத்து. வனத்தை இழந்தால் வாழ்க்கையை இழந்த மாதிரிதான் என்பதை உணர்த்த ஜமுனா துணிந்து களமிறங்கினார்.

கொலைகாரக் கூட்டத்தை எதிர்த்தார். கிராமத்தினரிடம் பேசி, அவர்களின் தயக்கத்தை உடைத்தெறிந்தார். 25 பெண்களை ஒருங்கிணைத்து ‘வன் சுரக்‌ஷா சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஜமுனா இதைச் சாதித்த போது அவருக்கு வயது ஜஸ்ட் 17தான். ‘‘இந்த வனத்தில் உள்ள மரங்கள்தான் எங்களுக்குச் சகோதரர்கள். ஒவ்வொரு ஆண்டும் ரக்‌ஷாபந்தனின் போது, மரங்களுக்கும் ராக்கி கட்டுவது எங்கள் வழக்கம். இதனால் இந்த மரங்களோடு எங்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு உருவாகிறது...’’ எனப் புன்னகையோடு பேசுகிறார் ஜமுனா. விட்டுக் கொடுக்காத ஜமுனாவின் அபார மனவலிமையைப் பார்த்து வியந்த கிராமத்து ஆண்களும் மெல்ல அவரின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு வனப் பாதுகாப்புக்கு உதவினார்கள்.

ஊருக்கு நன்மை ஓரிரவில் எப்படிக் கிடைக்கும்? 2008 - 2009க்கு இடைப்பட்ட காலத்தில் சட்ட விரோத மரக் கடத்தலில் மக்களின் குறுக்கீட்டைக் கண்டு மூர்க்கமான மாஃபியாக்கள், கிராமத்தினர் மீது திடீர் கல்லெறித் தாக்குதலைத் திட்டமிட்டு நிகழ்த்தினார்கள். இதில் ஜமுனாவைக் காப்பாற்ற முயன்ற அவரது கணவர் மான்சிங்கின் மண்டை உடைந்தது. மக்களின் வாழ்வாதாரத் தேவைக்குக் கற்பகத்தரு போல அனைத்தும் தரும் வனத்தை கைவிடக் கூடாது எனப் பெண்கள் படையை வில், அம்பு, லத்தி எனத் தற்காப்பு ஆயுதங்களால் வலுவாக்கினார். வனத்தில் காலை, மதியம், மாலை, இரவு என ஷிப்ட் வாரியாக நான்கு காலமும் ரோந்து செல்லும் முறையை உருவாக்கினார்.

ஜமுனாவின் ஆர்வத்தைப் பார்த்து ஆச்சர்யமான வனத்துறை கிராமத்தினருக்கான குடிநீர் வசதி மற்றும் பள்ளி ஒன்றையும் அமைத்துத் தந்துள்ளனர். ‘‘முழு கிராமமே என்னுடைய முயற்சிக்குத் துணை நிற்கிறது. மரங்களை வியாபாரத்திற்காக அழிப்பவர்களை இன்று மக்களே முனைந்து தடுக்கிறார்கள். சால் இலைத் தட்டுகள், காளான்களை விற்பதன் மூலம் மக்களுக்கு வாரத்துக்கு ரூ.400 வரை வருமானம் தருவது இந்த வனம்தான்.

தவிர நாம் மரம், தாவரம் என இயற்கையிலிருந்து வந்தவர்கள் எனும்போது அவற்றைப் பராமரிப்பதுதானே முறை?’’ தீவிரமான குரலில் கேட்கிறார் ஜமுனா. இன்று கிராமத்துப் பெண்களும் ஜமுனாவின் வழியைப் பின்பற்றுகின்றனர். பெண் குழந்தை பிறந்தால் 18 மரங்களும், பெண் திருமணமாகி புகுந்தவீடு செல்லும்போது 10 மரங்களும் நட்டு வனப் பரப்பினை அதிகரிக்க முயற்சித்து வருகிறார்கள்.

வனத்தை சேதப்படுத்துபவர்களுக்கு ரூ.501 அபராதம் உண்டு. இந்தத் தொகையை கிராமத்திற்கான அடிப்படை விஷயங்களுக்குச் செலவிடுகிறார்கள். கடந்த ஆகஸ்டில் இந்தியாவை மாற்றிய பெண்கள் விருதை (2017) நிதிஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை சார்பாக டெக்ஸ்டைல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜமுனாவுக்கு வழங்கி கவுரவித்தார். ஸ்த்ரீ சக்தி விருது (2014), காட்ஃப்ரே பிலிப்ஸ் பிரேவரி விருது (2013) ஆகிய விருதுகளையும் தன் அர்ப்பணிப்பான உழைப்புக்கு அங்கீகாரமாகப் பெற்றுள்ளார் இந்த வன மனுஷி.

பொதுநல விருது!
காட்ஃபிரே இந்தியா எனும் புகையிலை நிறுவனம் வழங்கும் விருது, Godfrey Phillips National Bravery Awards (முன்னர் Red and White Bravery Awards). 1990ம் ஆண்டு காட்ஃப்ரே தன் பிராண்டை விளம்பரப்படுத்த, சமூகத்தில் பிறருக்கு முன்னோடியாக சாதனை செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கத் தொடங்கியது. இந்திய அரசின் 2003ம் ஆண்டு புகையிலைச் சட்டம் காட்ஃப்ரே நிறுவனத்தை முடக்கியது. நடிகர் விவேக் ஓபராய், செயல்பாட்டாளர் ஹர்மன் சித்து ஆகியோர் விருது பெற்றவர்களில் சிலர்.

ஐ.நா. அமைப்புகள்!
இந்தியாவில் 26 அமைப்புகளை செயல்படுத்தி வரும் ஐ.நா. சபை, 300 மில்லியன் டாலர்களை செலவழித்து நாட்டின் கல்வி, மருத்துவம், பாலின சமநிலை உள்ளிட்ட விஷயங்களை மேம்படுத்த உழைக்கிறது. 29 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் ஐ.நா. அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.