இளைப்பது சுலபம்



வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?

அனுபவத் தொடர் - 22

சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த நாற்பது கிராம் கார்ப், ஐம்பது கிராம் கார்ப் போன்ற அளவுகள் சற்றுத் தலை சுற்றச் செய்திருக்கலாம். பிறந்ததில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எத்தனை சாப்பிடுகிறோம் என்பதைக் கூட அளந்து சாப்பிட்டுப் பழக்கமில்லை. இதில் சாப்பிடுகிற வஸ்துவில் எத்தனை கிராம் கார்போஹைடிரேட் இருக்கிறது என்றெல்லாம் எப்படிக் கணக்கிடுவது? இப்படியெல்லாம் உயிரை வாங்கும் டயட் எனக்கு எதற்கு? சாப்பிடுவதைச் சற்று அளவு குறைத்துச் சாப்பிட்டுக்கொள்கிறேன். காலை ஒரு மணி, மாலை ஒரு மணி நடக்கிறேன். பத்தாது? காலக்கிரமத்தில் எனக்கும் எடை குறையத்தான் செய்யும் என்று உள்மனமானது இந்த இடத்தில் கொஞ்சம் சண்டித்தனம் செய்யும்.

எனக்குச் செய்தது! ஏற்கெனவே இந்தப் பக்கங்களில் சொல்லி யிருக்கிறேன். பேலியோவுக்கு வருவதற்குப் பல வருடங்களுக்கு முன்னால் நானொரு குத்து மதிப்பு டயட் கடைப்பிடித்துப் பார்த்திருக்கிறேன். சுமார் ஒரு வருடம் என்று நினைக்கிறேன். அப்போது கிட்டத்தட்ட தொண்ணூறு கிலோ எடை இருந்த ஜீவாத்மாவானது படிப்படியாக இறங்கி எழுபத்தி எட்டு அல்லது எழுபத்தி ஒன்பது கிலோவுக்கு வந்ததாக நினைவு. ஒன்றும் பெரிய பாதகமில்லையே? பன்னிரண்டு, பதிமூன்று கிலோக்களை ஒரு வருடத்தில் குறைப்பதே பெரிய விஷயமல்லவா? இத்தனைக்கும் அப்போது எனக்கு பேலியோ என்ற பெயரே தெரியாது.

உலகில் வேறு என்னென்ன டயட் முறைகள் இருக்கின்றன என்று தெரியாது. எந்த டயட்டானாலும் முதல் ஐந்தாறு கிலோ சரசரவென்று இறங்கும் என்பதோ, அதன் காரணம் உடம்பிலுள்ள நீர் எடை வற்றுவதே என்பதோ சுத்தமாகத் தெரியாது. நாலு ப்ளேட் சாதம் சாப்பிட்ட இடத்தில் இரண்டு ப்ளேட் என்று ஆக்கிக்கொண்டேன். ஸ்பூனில் எடுத்துப் போட்டுக்கொண்ட காய்கறிகளைக் கரண்டியில் எடுத்துப் போட்டுக்கொள்வது. பொரித்த பலகாரங்கள், இனிப்புகளை மட்டும் அறவே தவிர்த்துவிட்டு நிறைய ஜூஸ், பழங்கள் என்று சாப்பிடுவது.

இவற்றோடு தினமும் சுமார் ஒரு மணி நேர நடை அல்லது அரை மணி நீச்சல். இவ்வளவுதான் அன்றைய எனது டயட் முறை. இதில்தான் நான் சொன்ன பன்னிரண்டு கிலோ குறைந்தது. ஆனால், ஒரு விபத்தில் எனக்குக் கால் எலும்பு முறிந்து வாழ்க்கையில் இரண்டாவது முறையாகக் கால் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டில் கிடக்க நேரிட்டது. அந்தச் சில மாதங்களில் இந்த டயட்டெல்லாம் எனக்கு மறந்துவிட்டது. மீண்டும் எழுந்து எடை பார்த்தபோது அது தன் சௌக்கியத்துக்குத் தொண்ணூற்றைந்தில் போய் நின்றிருந்தது. அதாவது பன்னிரண்டு கிலோ இறக்குவதற்கு ஒரு வருடம்.

அதை ஒரு போனஸுடன் ஏற்றித் தொண்ணூற்றைந்து கிலோவுக்குக் கொண்டு செல்ல இரண்டு அல்லது இரண்டரை மாதங்கள். சரி போ, நாமெல்லாம் எடை குறைத்து எழிலுருவம் பெற்று எந்த இளவரசியை மீண்டும் மணந்துகொள்ளப் போகிறோம் என்ற அலுப்பிலும் களைப்பிலும் அதை அப்படியே விட்டுவிட்டேன். மீண்டும் எடையைக் குறைத்தே தீரவேண்டும் என்ற தீர்மானம் வந்தபோது 111 கிலோவில் இருந்தேன். இன்னும் விட்டிருந்தால் மேலும் பெருத்திருப்பேன். நமக்கு எதிலுமே தாராளம்தான். இம்முறை எடையைக் கணிசமாக இறக்கியே தீருவது என்று வீர சபதம் செய்துகொண்டு இறங்கியதற்கு பேலியோவின் அறிவியல் அடிப்படையே காரணம்.

ஓர் அடிப்படையைப் புரிந்து கொள்ளுங்கள். மனித உடலுக்கு மூன்று மூலாதார சத்துகள் தேவை. ஒன்று க்ளூக்கோஸ். இன்னொன்று கொழுப்பு. மூன்றாவது ப்ரோட்டின். இதில் கொழுப்பு இல்லாவிட்டாலோ, ப்ரோட்டின் இல்லாவிட்டாலோ ஆள் காலி. காலி என்றால் நிஜமாகவே காலி! உயிர் போய்விடும். ஆனால் ஒரு ஜீவாத்மாவானது க்ளூக்கோஸ் இல்லாமல் உயிர் வாழ முடியும்! கொஞ்சம் கூட மாவுச் சத்தே இல்லாத முட்டை அல்லது சிக்கனை சாப்பிட்டுக்கொண்டு நீங்கள் சாகிற வரைக்கும் சௌக்கியமாக வாழ்ந்துவிட முடியும். எஸ்கிமோக்கள் எல்லாம் பொன்னி அரிசிச் சாதமா சாப்பிடுகிறார்கள்?

கடல் மட்டுமே அவர்களுக்கு விளைநிலம். அங்கு என்ன கிடைக்கிறதோ அதுதான். சாவதில்லையே? ஆனால் மூன்று வேளையும் கார்போஹைடிரேட் மிகுந்த இட்லி தோசை வகையறாக்களைச் சாப்பிட்டு, பத்தாத குறைக்கு பரோட்டா, சோளாபூரி, பீட்சா, பர்கர் என்று வளைத்துக் கட்டி பாவாத்மாக்களுக்கு மாவாட்டி உண்பதே விதி என்று எண்ணிக்கொண்டு வாழ்கிற நமக்குத்தான் ஆயிரத்தெட்டு வியாதிவெக்கை. எது இல்லாவிட்டாலும் மனித உடல் இயங்குமோ, அதைத்தான் நாம் வண்டி வண்டியாக உண்கிறோம். எது நம் உடலுக்கு அத்தியாவசியமோ அதை அளவோடு உண்கிறோம், அல்லது அளவு குறைத்து உண்கிறோம்.

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். பிறந்த குழந்தைக்கு ஏன் தாய்ப்பால் அவசியம் என்று சொல்லப்படுகிறது? அது வெறும் கொழுப்பு, வெறும் ப்ரோட்டின். மருந்துக்கும் அதில் வேறு ஒன்றும் கிடையாது. பிறந்த குழந்தைக்குக் குறைந்தது ஆறேழு மாதங்கள் வரையிலாவது தாய்ப்பால் கொடுக்கச் சொல்லி டாக்டர்கள் ஏன் கதறுகிறார்கள் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? க்ளூக்கோஸ் சேர்மானமின்றி (கார்போஹைடிரேட் தாக்குதலின்றி) அது சௌக்கியமாகத் தன்னை வடிவமைத்துக்கொள்ள அந்த ஓருணவு அதற்குப் போதும்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, ஒரே மாதத்தில் டப்பா பால் சாப்பிட்டு வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியைக் காட்டிலும் சர்வ நிச்சயமாக அதிகமாகவே இருக்கும் என்கிறது மருத்துவ அறிவியல். பிறந்த குழந்தையையே இயற்கை கீடோசிஸ் நிலையில்தான் (கார்ப் இல்லாத நிலை) வைத்துப் பராமரிக்கச் சொல்கிறது. ஏழு கழுதை வயதான நமக்கெல்லாம் அது என்னத்துக்கு? மனித குலம் அனுபவிக்கும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட மிகப்பல வியாதிகளின் மூலாதார வித்து மாவுப் பொருளுக்குள் ஒளிந்திருக்கிறது. தானியங்கள். எண்ணெய்கள். விதவிதமான இனிப்புகள்.

எதையெல்லாம் நாம் பல்லாண்டுக் காலமாக விரும்பி உண்டு வந்தோமோ, அவை அனைத்துமே பிழையான உணவுகள் என்கிறது பேலியோ அறிவியல். எளிமையாகப் புரியவேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். நீங்கள் சிக்கன் மட்டுமே சாப்பிடுபவராக இருந்தால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராது. சிக்கன் பிரியாணியை ப்ளேட் ப்ளேட்டாக அடிப்பவரென்றால் வாய்ப்புகள் அதிகம். பாதாம் பருப்பை எத்தனை கிலோ வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பாதாம் அல்வா ஒரு கிலோ உண்டாலும் கோவிந்தா.

புரிகிறதா? பிரியாணி அரிசியும் அல்வாவின் சர்க்கரையும்தான் விஷம். சிக்கனோ, பாதாமோ அல்ல. ஏனென்றால் அவை நல்ல கொழுப்பு. நம் உடலுக்கு உகந்த கொழுப்பு. உடம்பு விரும்பும் கொழுப்பு. உண்டால் ஒன்றும் செய்யாத கொழுப்பு. இது புரிந்துவிட்டால் நமது உணவில் ஏன் கார்போஹைடிரேட்டைக் குறைக்க வேண்டும் என்பது புரிந்துவிடும். ஏன் குறைக்க வேண்டும் என்பது புரிந்துவிட்டால் எவ்வளவு குறைப்பது என்பதைக் கணக்கிடுவது சுலபம் அல்லவா? இனி கார்ப் கேல்குலேஷன் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

(தொடரும்)

- பா.ராகவன் 


பேலியோ கிச்சன்

சாக்லெட் சாப்பிடுங்கள்!

பேலியோவில் இனிப்பு கிடையாது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழ்விலும் இனிப்பு கிடையாது. அதனாலென்ன? சாக்லெட் சாப்பிடக்கூடாது என்று கட்டாயமில்லை. நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ஒரு சாக்லெட் தயாரிப்போம். இருநூறு கிராம் வெண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை சேர்க்காத சுத்த கொக்கோ பொடி கடைகளில் கிடைக்கும். அமேசான் போன்ற ஆன்லைன் அங்காடிகளில் 100 சத டார்க் சாக்லெட் பொடியே கிடைக்கும். அதில் ஒரு நூறு கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். வெண்ணெயில் கொக்கோ பொடியைக் கொட்டி நன்றாகக் கலக்குங்கள். வெண்ணெயானது பிரவுன் வெண்ணெயாக மாறும் அளவுக்கு.

நூறு சத டார்க் சாக்லெட் என்பதே ரசனைக்குரிய கசப்பில்தான் இருக்கும். அதெல்லாம் முடியாது; எனக்கு இனிப்பு இருந்தே தீரவேண்டும் என்பீரானால் இந்தக் கலவையில் ஐம்பது மில்லி இளநீரைக் கொட்டி மீண்டும் கலக்குங்கள். முடிந்தது ஜோலி. ஃப்ரிட்ஜில் ஐஸ் க்யூப் டிரே இருக்கும் அல்லவா? அதில் இந்தக் கலவையை ஸ்பூனால் எடுத்துப் போட்டு அழகாக நிரப்புங்கள். ஃப்ரீசரில் ஒரு முழு நாள் வைத்து எடுத்தால் பிரமாதமான சாக்லெட் தயார். இதில் இளநீர் சேர்ப்பது மத்திமம். சேர்க்காதிருப்பது உத்தமம். இளநீருக்கு பதில் தேன் சேர்க்கிறேன், வெல்லப்பாகு ஊற்றுகிறேன் என்பீரானால் அது அதமம்.