ஓவியர் பிக்காஸோவின் குரு



- கிங் விஸ்வா

அது ஒரு தீவு. காலனியாதிக்க அரசாங்கத்தினாலும், மதப்பிரசாரத்தாலும் கட்டுண்டு கிடக்கும் அந்தத் தீவிற்கு ஒரு ஓவியர் வருகிறார். தீவைச் சுற்றிப் பார்க்கவேண்டுமென்று அவர் கேட்க, அவரை இயற்கை அழகு மிக்க அத்தீவின் அனைத்து பகுதிகளுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். கடற்கரைப் பகுதியில் இருக்கும் ஒரு மலைமுகட்டைக் காண்பித்து, “அங்கே என்ன தெரிகிறது?” என்று அவர் கேட்க, ஒவ்வொருவரும் ஒருவிதமான பதிலைச் சொல்கிறார்கள். பிறகு, அந்த இடத்தின் அழகை அவர் விவரிக்க ஆரம்பிக்கிறார். அவருடன் வந்தவர்களில் சிலர் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அந்தத் தீவில் வசித்தவர்கள். ஆனால், அவரது வர்ணனைக்குப் பிறகு, அவர்களின் பார்வை மாறுபடுகிறது.

ஒரு பெருமையுடன், கர்வத்துடன் அந்த இடத்தைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இந்த மாற்றத்தை ஒரு கலைஞனால் மட்டுமே உருவாக்க இயலும். அந்தக் கலைஞன்தான் பால் கோக்யான் என்ற ஓவியர். வரலாறும் வாழ்க்கையும்: பாலின் பாட்டி எப்படி 1848ம் ஆண்டின் ஐரோப்பிய புரட்சிக்கு வித்திட்டார் என்பதையோ, பத்திரிகையாளரான பாலின் தந்தை பிரெஞ்சு நாட்டை விட்டே ஏன் வெளியேற்றப்பட்டார் என்பதையோ நாம் விக்கிபீடியாவில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இந்த கிராஃபிக்ஸ் நாவல் அவரது வாழ்வின் கடைசிக் காலத்தைப் பற்றியது என்பதால், மார்க்வைசஸ் தீவில் அவர் வாழ்ந்ததைப் பற்றி மட்டுமே பேசுகிறது.

பால் இறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி விசாரித்து ஒருவர் வருகிறார். இவரது தேடலும், பாலின் கடைசி நாட்களும் நான் லீனியராக சொல்லப்படுகிறது. கூர்ந்து கவனிக்காவிட்டால், எது ஃப்ளாஷ்பேக், எது தேடல் பயணம் என்பதே தெரியாத அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. அடக்குமுறைக்கு எதிரான போராளி: மார்க்வைசஸ் தீவில் காலனியாதிக்க அரசாங்கமும், கிறித்தவ மதப்பிரசாரங்களும் கைகோர்த்து, அங்கு வாழும் பூர்வகுடியினரை நசுக்குவதைக் கண்ட பால், அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்.

பிரசாரப் பள்ளிகளில் படிக்கத் தேவையில்லை, அது ஒன்றும் சட்டமில்லை என்பதை அவர் விளக்க, பூர்வகுடியினர் அவர்கள் பிள்ளைகளை மதம் குறித்த போதனைகளை மேற்கொள்ளும் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்துகின்றனர். காவலர்கள் இவரைத் தேடி வந்து மிரட்ட, ஒற்றைக் காலில் நின்றுகொண்டு, அவர்களை மிரட்டுகிறார் பால். பிறகு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். நீதிபதிகளுக்கு எதிராக ஆக்ரோஷமாக வாதாடும் பாலைக் கண்டு திகைக்கிறார்கள் மக்கள். ஒரு கட்டத்தில், நீதிபதி “பால், நீங்கள் என்ன செய்யவேண்டுமென்றால்…” என்று ஆரம்பிக்க, வெகுண்டெழுகிறார். ‘‘எனக்கு நீங்கள் உத்தரவிடுவதுபோல் பேசுவதைக் கேட்கும்போது, நான் புரட்சியாளனாக மாறுகிறேன்...” என்கிறார்.

இந்த கிராஃபிக் நாவலின் உச்சமாக, பாலின் வாழ்க்கையை மிகத் துல்லியமாக விளக்கும்படியாக ஒரு காட்சி அமைந்திருக்கிறது. பாலைப் பற்றிச் சொல்லும்போது, அவர் இரண்டு, மூன்று நாட்களுக்கு அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் என்றும், திடீரென்று மூன்றாவது நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தது போல வரைய ஆரம்பிப்பார் என்றும் சொல்லப்பட்டிருக்கும். அதைப்போன்ற ஒரு மூன்றாவது நாளில், பால் கடற்கரையோரமாக நடந்து செல்கிறார். புயல்காற்று, மழையுடன் இணைந்த அந்த நாளில் பாலின் முகம் க்ளோஸ்-அப்பில் வரையப்பட்டிருக்கும். சீறிப்பாயும் கடல் அலைகள், மழை, சூறைக்காற்று இது எதுவுமே பாலை பாதித்தது போலத் தெரியவில்லை.

அவர் அமைதியாக இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறார். இதுதான் பால் கோக்யானின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தியோ?! பால் கோக்யான்: அருமை மகள் அலைன் நிமோனியாவால் இறந்த செய்தி அவரை வந்தடைகிறது. அவரது வீட்டை காலி செய்தாக வேண்டிய கட்டாயம். ஆசையுடன் கட்டிய புதிய வீட்டையும் வங்கிக் கடன் காரணமாக கைவிட வேண்டிய சூழல். அதே சமயம் அவரது உடல்நிலையும் தீராத ஒரு மோசமான நிலையை நோக்கிச் செல்லும்போதுதான் அவர் Where Do We Come From? What Are We? Where Are We Going? என்ற மாஸ்டர்பீஸ் ஓவியத்தை வரைகிறார். வரைந்து முடித்தவுடன், தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அந்த ஓவியத்தின் தாக்கம் அப்படியானது.

ஓவியர் பிக்காஸோவை நமக்குத் தெரியும். அவரது குரு, வழிகாட்டிதான் அந்த ஓவியத்தை வரைந்த பால் கோக்யான். ஓவியத்துறையில் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர், கலைஞர்கள் சமூகப் போராளிகளாகவும் இருக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கெதிரான போர்க்குரலை எழுப்பியவர் என இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஓவியராக அறியப்பட்டாலும், 1,500 பக்கங்களுக்கும் மேலாக எடிட்டோரியல்களை எழுதிய கலகக்காரர். காலவெள்ளம் அடித்துச் செல்ல இயலாத ஒரு சில உண்மையான கலைஞர்களில் இவரும் ஒருவர். எழுத்தாளர் டேனியல் சொன்னதைப் போல, என்றைக்குமான போராளி.

ஓவியர் கிறிஸ்தோஃப் கோச்சை(ர்) (48): விஸ்காம் படித்துவிட்டு, பல முக்கியமான அனிமேஷன் படங்களை உருவாக்கிய கிறிஸ்தோஃப், 2000ஆவது ஆண்டில் முதல் காமிக்ஸ் கதையை வரைந்தார். அதன்பிறகு, அவர் அனிமேஷன் துறையைவிட்டு விலகி, தொடர்ச்சியாக காமிக்ஸ் & கிராஃபிக் நாவல்களைப் படைத்து வருகிறார். இவரே கதையை எழுதியும் சில படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். பெய்ரூட்டைப் பற்றிய இவரது கிராஃபிக் நாவல் மிகவும் முக்கியமானது.

ஸ்நிப்பெட்ஸ்

நூலின் பெயர்: Gauguin Off the Beaten Track (ஆங்கிலம்) ஜூன் 2016
எழுத்தாளர்: மக்ஸிமிலிய(ன்) லுஹுவா
ஓவியர்: கிறிஸ்தோஃப் கோச்சை(ர்)
பதிப்பாளர்: யூரப் காமிக்ஸ்
விலை: ரூ.783; 90 பக்கங்கள்
கதை: பால் கோக்யான் என்ற பெரும் கலைஞனை 90 பக்கங்களில் அடைத்துவிட இயலாது. ஆனால், அவரது கடைசி காலத்தைப் பற்றி இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த கிராஃபிக் நாவல் படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு ஓவியக் கலைஞனைப் பற்றிய ஒரு அருமையான அறிமுகத்தைக் கொடுக்கிறது.
அமைப்பு: பிரெஞ்சு அரசாங்கத்துக்கு எதிராக தனது எதிர்ப்பைக் காட்டிவிட்டு, தஹீதிக்குச் சென்று, பின்னர் மார்க்வைசஸ் தீவில் தங்கி, அங்கிருந்த காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பாலின் கடைசி இரண்டு வருடங்களை, அவரது போராட்டங்களை, அவரது துயரங்களை கோர்வையாகச் சொல்வதில் கதாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
ஓவிய பாணி: ஓவியர் கிறிஸ்தோஃபிற்கென்று ஒரு பாணி இருக்கிறது. மெல்லிய கோட்டோவியங்களுக்குப் பதிலாக, ‘திக்’ கான வடிவங்களைக் கொண்டு இந்த கிராஃபிக் நாவலை வரைந்திருக்கிறார். மார்க்வைசஸ் தீவின் பசுமையும், கோக்யானின் கடைசி கால துயரங்களும் நமக்கு பச்சை மற்றும் சாம்பல் நிறங்களின் மூலமாக உணர்த்தப்படுகிறது. பெரும்பாலான பக்கங்களில் வசனங்களே இல்லாமல், ஓவியங்களே கதையை முன்னெடுத்துச் செல்வது சிறப்பு.