டார்கெட் 2015



டீ வித் 5 நன்பர்கள் @ 5 இயக்குனர்கள்

- மை.பாரதிராஜா

‘‘தேர்தல்ல நிக்க கூட்டணி சேர்ந்திருக்காங்களானு யோசிக்காதீங்க பாஸ். நாங்க எப்பவும் இப்படித்தான். கூட்டாதான் திரிவோம். டீ குடிப்போம். ஒருத்தர் எடுக்கிற படத்தைப் பத்தி இன்னொருத்தர்கிட்ட டிஸ்கஸ் செய்வோம். ஏன்னா, வி ஆர் பஞ்சபாண்டவாஸ்..!’’ கோடம்பாக்கத்தில் உள்ள தெருமுனை டீக்கடை வாசலில் ஊதி ஊதி தேநீர் அருந்தியபடி நம்மை வரவேற்றார்கள் இளம் இயக்குநர்களான ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘டார்லிங்’ சாம் ஆண்டன், ‘அடங்காதே’ சண்முகம் முத்துசாமி, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆதிக் இரவிச்சந்திரன்.‘‘Broஸ்... நாலு டீதான் வந்திருக்கு. Where is our ‘புரூஸ் லீ’? சிம்புவ வெச்சு படம் பண்ணின நானே சீக்கிரமா வந்துட்டேன்! புரூஸ்லீக்கு போனை போடுங்க?’’

டி.ஆர். ஸ்டைலில் தலையைக் கோதி, எம்ஜிஆர் பாணியில் உதட்டைக் கடித்து ஆதிக் கேட்க, ‘‘மேக் ஃபைவ். உங்க பின்னாடிதான் நிக்கறேன்...’’ என என்ட்ரி கொடுத்த ‘புரூஸ் லீ’ பிரசாந்த் பாண்டியராஜைப் பார்த்ததும், ‘‘சுகர் இல்லாம ஒரு க்ரீன் டீ...’’ என ஆர்டர் கொடுத்த தாஸ் ராமசாமி, ‘‘வெயிட்டை குறைக்கறார்...’’ என கண்சிமிட்டினார்.  ‘தமிழ் சினிமாவுல இப்படி ஒரு மிராக்கிளா? உங்க அஞ்சு பேருக்குள்ள எப்படி இப்படியொரு கெமிஸ்ட்ரி?’ என ‘வாவ்...’ கேள்வியை நீட்டினால், ஐந்து பேருமே சிரிக்கிறார்கள். ‘‘வாங்க பாஸ்... உட்கார்ந்து பேசுவோம். பக்கத்துலதான் என்னோட ‘அடங்காதே’ ஆபீஸ் இருக்கு. ஃப்ளாஷ்பேக்கை அங்க ஓபன் பண்ணலாம்...’’ என சண்முகம் முத்துசாமி வழிகாட்ட... கட் டூ ‘அடங்காதே’ டிஸ்கஷன் ரூம்.

அங்குள்ள சுவரில் தமிழ் சினிமாவில் சாதனை புரிந்த இயக்குநர்கள், நடிகர்களின் போட்டோக்கள் அடுக்கடுக்காக மாட்டப்பட்டிருக்கின்றன. ‘‘மாப்ளே, இந்த மாதிரி நம்ம போட்டோவும் ஃப்யூச்சர்ல வரணும்...’’ எக்கச்சக்க எனர்ஜியுடன்  சாம் ஆண்டனும், ஆதிக்கும் சொல்ல, ‘‘ஆல்ரெடி நான் என் போட்டோவ பிரிண்ட் எடுத்து ஃப்ரேம் போட ஆர்டரும் கொடுத்துட்டேன்!’’ என தோளைக் குலுக்கினார் பிரசாந்த். ‘‘போதும். இதோட நிறுத்திப்போம்...’’ நண்பர்களை அடக்கிவிட்டு பேச ஆரம்பித்தார் தாஸ் ராமசாமி. ‘‘இங்க என்னைத் தவிர மத்த எல்லாருக்குமே ஓர் ஒற்றுமை இருக்கு. அத்தனை பேரும் ஜி.வி.பிரகாஷ் சாரை டைரக்ட் பண்ணியிருக்காங்க. இவங்க கேங்ல நான் வந்ததுக்கு காரணமே சண்முகம் அண்ணன்தான். அவர் ஒரு புரட்சி போராளி. தங்கர்பச்சான் சார்கிட்ட அசிஸ்டெண்ட்டா இருந்தவர்.

அடிக்கடி எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவார். ஆமா... எங்க டீம் சமுத்திரக்கனி அவர்தான்! நாங்க அஞ்சு பேருமே ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி டீக்கடை சினிமாங்கற ஒரு ஷார்ட் ஃபிலிம் அவார்டு ஃபங்ஷன்ல சந்திச்சோம். ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிச்சோம்...’’ என தாஸ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இடைமறித்தார் ஆதிக். ‘‘குரூப் பெயரை சொல்லிடாத..!’’ சட்டென பூத்தது சிரிப்பு மழை. ‘‘பாத்தீங்களா! ‘ட்ரிபிள் ஏ’னு படம் எடுத்தவரே பயப்படுறார்னா... எங்க குரூப் பேரு என்னவா இருந்திருக்கும்னு பார்த்துக்குங்க...’’ அசரீரியாக ஒரு குரல் வந்து விழ, அதிர்ந்தது புன்னகைகள்.

‘‘சைலன்ட் ப்ளீஸ்...’’ அடக்கிவிட்டு தொடர்ந்தார் சண்முகம் முத்துசாமி. ‘‘அந்த வாட்ஸ் அப் குரூப் பெயரை இப்ப ‘டார்கெட் 2025’னு மாத்திட்டோம்...’’ என முற்றுப்புள்ளி வைக்க, தலையசைத்த பிரசாந்த், ‘‘என் கல்யாணப் பத்திரிகை ரெடியாகிடுச்சு. நாளைக்கு எடுத்துட்டு வரேன். திருச்சிலதான் நடக்குது. கண்டிப்பா வந்திருங்கய்யா... நோ எக்ஸ்க்யூஸ்...’’ என நண்பர்களிடம் கெஞ்சினார். ‘‘நாங்க இல்லாமலா? அதை விடு. நண்பா... உன் லவ் ஸ்டோரியை லட்சத்து ஒன்றாவது முறையா திரும்ப சொல்லு...’’ என சாம் தூண்டில் வீசியதும் உற்சாகத்துடன் அதில் சிக்கினார் பிரசாந்த்.

‘‘ப்ளஸ் ஒன் படிக்கும்போது டியூஷன் போனேன். அங்கதான் அவங்களை சந்திச்சேன். பார்த்ததுமே பத்திக்கிச்சு. க்யூட்டா லவ் பண்ண ஆரம்பிச்சோம். ஒரு ட்விஸ்ட். எனக்கு டியூஷன் எடுத்த அக்காவை எங்க அண்ணனுக்கு கட்டி வைச்சேன். அவங்க இப்ப எங்க அண்ணி. அப்ப டியூஷன் படிக்க வந்த பொண்ணை இப்ப நான் கட்டிக்கப் போறேன். லவ் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து படிப்புல கோட்டை விட ஆரம்பிச்சேன். ஆனா, அவங்க நல்லா படிச்சாங்க. ப்ளஸ் டூல எயிட்டி பர்சன்ட். எம்.பி.ஏ. வரை படிச்சிட்டாங்க. நான், அப்படி இப்படினு தட்டுத் தடுமாறி டைரக்டரா வந்துட்டேன். பொண்ணுங்க லவ் பண்ணினா கூட, படிப்புல கவனமா இருப்பாங்கனு இப்ப புரியுது...’’ தோளைக் குலுக்குகிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

உடனே சாமும், சண்முகமும் ‘‘கங்கிராட்ஸ்டா. உன் வொய்ஃப் எம்பிஏவா? வாட் எ சர்ப்ரைஸ்...’’ என புதிதாகக் கேட்பது போல் ஆச்சர்யப்பட்டார்கள்! இந்த டீமில் சண்முகமும், தாஸும் ஏற்கனவே மணமானவர்கள். ஆதிக்கும், சாமும் பேச்சுலர்ஸ். ‘‘சாம் ஆபீஸுக்கு எப்ப போனாலும் வெரைட்டியான ஃபுட் கிடைக்கும். ‘பாய்ஸ்’ல செந்தில் சார் சொல்வாரே ‘இன்பர்மேஷன் இஸ் வெல்த்’னு... அந்த மாதிரி சென்னைல எங்க நல்ல சாப்பாடு கிடைக்கும்னு சாமுக்கு அத்துப்படி...’’ தாஸ் புல்லரிக்க, வெட்கப்பட்டார் சாம். ‘‘படம் பண்ணிட்டுத்தான் மேரேஜ் பண்ணணும்னு குறிக்கோளோடு இருந்தேன். ‘டார்லிங்’ பண்ணினேன். சரி அடுத்த படம் முடிச்சுட்டு கல்யாணம் செய்துக்கலாம்னு ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் பண்ண போயிட்டேன்.

இப்ப, இன்னொரு படம் முடிச்சுட்டு பெண் தேடுவோம்னு மூணாவது பட பிசில இருக்கேன்...’’ என சிங்கிளாக, தான் இருப்பதற்கான காரணத்தை சாம் அடுக்கியதும் ஆதிக் முகம் பிரைட் ஆனது. ‘‘கண்டிப்பா நான் லவ் மேரேஜ்தான் பண்ணுவேன். என்ன... லவ் பண்ணத்தான் டைம் இல்லை!’’ என ஆதிக் முடிப்பதற்குள், ‘‘ஆதிக்தான் ஆரம்பிச்சு வைச்சவன்...’’ என நாற்காலியின் நுனிக்கு வந்தார் சண்முகம். ‘‘ஜி.வி.பிரகாஷ் சார் இசையமைப்பாளரா இருக்கும் போதே, அவருக்கு கதை சொல்லி, அவரை நடிக்க வைக்க நினைச்சதே ஆதிக்தான். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’தான் முதல்ல வந்திருக்க வேண்டியது. பட், ‘பென்சில்’ ஸ்டார்ட் ஆகிடுச்சு. ஆனா, சாமோட ‘டார்லிங்’ முதல்ல ரிலீஸ் ஆச்சு. நான் ‘பென்சில்’ல டயலாக் எழுதினேன். ‘புரூஸ்லீ’ல நடிகனானேன்.

இப்ப மறுபடியும் ஜி.வி.சாரை வச்சு ‘அடங்காதே’ பண்றேன்...’’ என ஷார்ட் கட்டாக தன் ஹிஸ்டரியை சண்முகம் சொல்லி முடித்தார். உடனே தாஸ் பக்கம் ஆதிக் திரும்பினார். ‘‘நீங்க அசிஸ்டெண்ட் டாக இருக்கும்போதே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. எப்படி அப்படி ஒரு கான்ஃபிடன்ட் வந்தது?’’ ‘‘அது அது அந்தந்த வயசுல நடந்துடணும்னு தெளிவா இருந்தேன்...’’ என்றபடி தன் மலரும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தார் தாஸ். ‘‘சற்குணம் சார்கிட்ட இணை இயக்குநரா இருந்தப்ப அவருக்கு ரெண்டு சீன் சொன்னாலே நாற்பதாயிரம் ரூபாய் கொடுப்பார். அது தனிக்கதை. அவர்கிட்ட இருந்து வெளியே வந்த டைம்ல திடீர்னு எங்க அப்பா போன் பண்ணி ‘உனக்கு பொண்ணு பார்த்திருக்கேன்’னார்.

அப்ப எனக்கு வருமானமே இல்ல. அதை வெளில காட்டிக்காம, ‘எனக்கு இப்ப எதுக்குப்பா கல்யாணம்’னு சீன் போட்டேன். அவரும், ‘உன்னப் பத்தி தெரியும்டா... என் பென்சன் பணத்தை அக்கவுண்ட்ல போடுவாங்க. என் ஏடிஎம் கார்டை நீ வச்சுக்க. உனக்கு வருமானம் வர்ற மாதிரி பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட காண்பிக்கலாம்’னார். அதே மாதிரி பொண்ணு வீட்டுல காட்டி, கல்யாணமும் பண்ணி வச்சுட்டாங்க. அதுக்கப்புறம் நடந்ததுதான் டெரர். மனைவிக்கு டிரெஸ் எடுத்துக் கொடுக்கக் கூட அந்த ஏடிஎம் கார்டைத்தான் பயன்படுத்தினேன். கார்டுல காசு போனதும், அப்பாவுக்கு மெசேஜ் வரும். உடனே அவர், ‘ஆயிரத்து ஐநூறு குறைஞ்சிருக்கே... என்ன பண்ணினே?’னு விசாரிப்பார்.

இப்படி ஒவ்வொரு தடவையும் அப்பா கேட்கவும், நாம கண்டிப்பா படம் பண்ணியே ஆகணும்னு ஃபுல் ஃபார்ம்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன். அந்த படம்தான் ‘டோரா’. பட், இப்பவும் எங்க வீட்டுல பணம் வாங்கிட்டுத்தான் இருக்கேன்...’’ என தாஸ் முடித்ததும் பேச்சு கேஷுவலாக ஜி.வி.பிரகாஷ் பக்கம் திரும்பியது. ‘‘நாங்க எடுத்த படங்கள் ஓடினதோ இல்லையோ இப்ப நாங்க நம்பிக்கையோட இயங்க காரணம் ஜி.வி.பிரகாஷ் சார்தான். அவர் கொடுக்கற தைரியமும், நம்பிக்கையும்தான் எங்களை இப்படி சிரிச்சு சிரிச்சு பேச வைக்குது. வழக்கமா ஓர் இயக்குநர் கதை ரெடி பண்ணினா அதை இன்னொரு இயக்குநர்கிட்ட ஷேர் பண்ணிக்க மாட்டார்.

ஆனா, நாங்க அப்படியில்லை. இன்ச் பை இன்ச் ஒருத்தருக்கு ஒருத்தர் டிஸ்கஸ் பண்ணிப்போம்...’’ என கோரசாக சாம், பிரசாந்த், தாஸ், சண்முகம், ஆதிக் என பஞ்ச பாண்டவர்களும் சத்தியம் செய்ய... ஃபீலிங் மோடுக்கு சென்றார் ஆதிக். ‘‘‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’க்கு அப்புறம் நான் இயக்கின ‘ஏஏஏ’ சரியா போகலை. நொந்துபோயிட்டேன். இனிமே எனக்கு யார் படம் தருவாங்கனு வெக்ஸ் ஆகிட்டேன். மும்பை, பெங்களூர்ல கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்னு கிளம்பினப்ப ஜி.வி.பிரகாஷ்கிட்ட இருந்து போன்.

‘மச்சி எங்க இருக்கே’ன்னார். நொந்ததை சொன்னேன். ‘அடச்சீ... உடனே ஆபீஸுக்கு கிளம்பி வா. அடுத்து நாம படம் பண்ணுவோம்’னார். ‘கதை எதுவும் ரெடி பண்ணலியே’னு இழுத்தேன். ‘உன்மேல நம்பிக்கை இருக்கு. அடுத்த மாசம் ஷூட் போறோம்’னார். கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. ஜி.வி. எங்களுக்கு சாதாரண மச்சான் இல்ல... தெய்வ மச்சான்!’’ என ஆதிக் எமோஷனாக, ‘‘உனக்கு நாங்களும் இருக்கோம்டா...’’ என அத்தனை பேரும் அவரை அணைத்துக் கொண்டார்கள். அன்பால் நிறைந்தது அந்த நட்பு நந்தவனம்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்