ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 52

தலைவர்கள் குறித்தும் தனி நபர்கள் குறித்தும் வாலி எத்தனையோ கவிதைகளை எழுதியிருக்கிறார். தலைவர்களையும் தனி நபர்களையும் மேடையிலேயே துதிபாடியிருக்கிறார். முதல் மாதம் கலைஞரையும் இரண்டாவது மாதம் ஜெயலலிதாவையும் மூன்றாவது மாதம் வைகோவையும் நான்காவது மாதம் மூப்பனாரையும் அவர் வாழ்த்துவதைப் பார்த்தவர்கள், ‘வாலி ஏன் எல்லோரையும் உச்சியில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்?’ என்றிருக்கிறார்கள். ‘ஒரு கவிஞனுக்கு அரசியல் வேண்டாமா? எல்லோரையும் புகழ்கிறார் என்றால் அவர் அரசியல்தான் என்ன?’ எனவும் கேட்டிருக்கிறார்கள். ‘சமூகம் சார்ந்து சிந்திக்க வேண்டுமானால், எது சிறந்த கொள்கையாகப்படுகிறதோ அதைப் பற்றிக்கொண்டுதானே நிற்கவேண்டும்.

அப்படியில்லாமல் அந்தத் தலைவரையும் புகழ்வது, இந்தத் தலைவரையும் புகழ்வது என்றிருந்தால் அந்த வார்த்தைகளுக்கு என்ன மதிப்பிருக்க முடியும்?’ எனச் சர்ச்சித்திருக்கிறார்கள். அதையெல்லாம் தெரிந்து கொண்ட வாலி, “எல்லோரிடமும் கடவுள் இருக்கிறார் என்னும் எண்ணமுடையவனே நான்...” என எளிதாகக் கடந்திருக்கிறார். “என்மீது விமர்சனம் வைப்பவர்கள், எல்லோரையும் விமர்சிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். என்னால் யாருமே புண்படக்கூடாது என்பதுதான் என் எச்சரிக்கை. மேலும், புல் பூண்டில்கூட இறைவன் இருப்பதாகக் கருதினால் எதை, யாரை தூஷிக்க வாய்வரும்...” என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்’, ‘பெரும் புள்ளிகள்’ ஆகிய இரண்டு தொகுப்பில் அவர் எழுதிய வாழ்த்துக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவர் காவியம் இயற்றுவதிலும் ஆர்வம் காட்டினார். ‘அவதார புருஷன்’, ‘பாண்டவர் பூமி’, ‘பகவத் கீதை’, ‘கிருஷ்ண விஜயம்’ ஆகியவை நூல்களாக வெளிவந்துள்ளன. புதுக்கவிதை வடிவில் அவர் காவியங்களை எழுத வேண்டுமென விரும்பியிருக்கிறார். ஆழ்ந்த பக்தியும் மொழிப்பற்றும் உடைய அவர், இக்காலத்திற்கு ஏற்றவாறு காவியங்களை ஆக்கி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இயைபுத் தொடைகளில் அதிக கவனம் செலுத்தும் அவருடைய சொல்லாடல்கள் வாசிக்கத் தக்கன.

ஒரு சொல்லுக்கு இத்தனை அர்த்தங்களா எனவும், இத்தனை அர்த்தங்களுக்கும் ஒரே சொல்லா எனவும் அக்காவியங்களில் வார்த்தைகளை அருவிபோல் கொட்டியிருப்பார். சோ.ராமசாமி சொல்வதைப் போல, ‘பாண்டவர் பூமி’யில் சரித்திரமும், ‘அவதார புருஷனி’ல் பக்திப் பரவசமும், ‘பகவத் கீதை’யில் தத்துவமும் அவருக்கு மட்டுமே சாத்தியம். விரிந்த தளத்தில் பக்தி நூல்களையும், சரித்திர ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளாமல் அக்காவியங்களை அவரால் ஆக்கியிருக்க முடியாது. அதே சமயத்தில் சோ.ராமசாமி இயக்கிய ‘முகமது பின் துக்ளக்’ திரைப்படத்தில் ‘அல்லா அல்லா...’ என்றொரு பாடலை எழுதியிருப்பார்.

அப்படம் வெளிவரவிருந்த சமயத்தில் அப்படம் இஸ்லாமி யர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படமென்று சொல்லப்பட்டது. வதந்தி பரவியிருந்தது எனவும் சொல்லலாம். பிரதமர் இந்திராகாந்தி வரை தலையிட்டுத்தான் அப்படம் வெளிவந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட படமாக எண்ணியவர்களின் வாயை அடைப்பதற்கே ‘அல்லா அல்லா...’ இணைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த எதிர்ப்பாளர்கள், அப்பாடலைக் கேட்டதும் கைதட்டி ஆரவாரம் செய்தது தனிக்கதை. ஒரு பாடலால் ஒரு படத்தைக் காப்பாற்ற முடியும் என நிரூபித்தவராக வாலி இருந்திருக்கிறார்.

ஆனாலும், அப்பாடலில் வாலி, அல்லாவுக்கு இணை வைத்து நபியைச் சொல்லியிருப்பதால் இலங்கை வானொலியில் இன்று வரை அப்பாடல் ஒலிபரப்பப்படவில்லை. ‘சமரசமில்லாமல் வாழ்வில்லை’ என்பதை தாரக மந்திரமாகக் கொண்டிருந்த வாலி, தன்னுடைய சுயமரியாதையை யாராவது சமரசம் செய்து கொள்ளச் சொன்னால் முகத்தில் அடித்தாற்போல் பேசியிருக்கிறார். ஒருமுறை இயக்குநர் பாலச்சந்தர், வாலியின் பாடலைக் கேட்டுவிட்டு, “இவ்வளவு சிறப்பாக பாடல் இருப்பதால் அது கண்ணதாசன் எழுதியதாக நினைத்தேன்...” என்றிருக்கிறார்.

உடனே வாலியும், “இவ்வளவு சிறப்பாக குடும்பக்கதை வந்திருப்பதால் நானும் இப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்...” என்றிருக்கிறார். சரிக்குச் சரியாக வாதிடுவதில் அவர் சமர்த்தர். பாடல் வரிகளில் திருத்தம் கேட்கும் பொழுது, சரியான காரணங்களைச் சொல்லாவிட்டால் சண்டைதான். தன்னை அப்டேட் செய்துகொண்டே இருந்ததால் ஒரு பாடலில் எங்கே ஆங்கிலத்தை கலக்கலாம், எங்கே ஆங்கிலத்தைக் கலக்கக்கூடாது எனப் புரிந்து வைத்திருந்தார். வேகமான பாடல்களில் மட்டுமே ஆங்கிலப் பிரயோகங்களை அனுமதிப்பார். அதுவல்லாத மெல்லிசைப் பாடல்களில் எங்கேயுமே ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியதில்லை. இயக்குநரே விரும்பினாலும் தவிர்த்துவிடுவார்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் காட்டலாம். அதுகூட அவர் பார்வைக்கு எட்டாமல் நடந்திருக்கலாம் என்றே நம்புகிறேன். வாலியின் திரைவாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கின்றன. திரும்பிய திசையெல்லாம் அவருடைய பாடல்களே காற்றை நிறைத்திருக்கின்றன. இந்த இடத்தில் அவர், திரைப்படங்களுக்கு எழுதிய திரைக்கதைகளையும் வசனங்களையும் பற்றிச் சொல்ல வேண்டும். அவருடைய படங்களில் என்னை மிகவும் கவனிக்க வைத்தது, ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்னும் திரைப்படம். அப்படத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த ஜோதிபாண்டியன் இயக்கியிருப்பார். தேசிய விருது பெற்ற அத்திரைப்படம், இட ஒதுக்கீட்டை விமர்சித்திருந்தது. காயத்ரி என்னும் பெயருடைய பிராமணப் பெண், கருப்பாயியாக மாறி கலெக்டராகிவிடுவார்.

காயத்ரி ஏன் கருப்பாயியாக மாறினாள் என்பது கதை. மண்டல் கமிஷனைப் பற்றி தீவிரமான விவாதங்கள் போய்க்கொண்டிருந்த நேரத்தில் அப்படம் வெளியானது. ஆனபோதும், அப்படத்தை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எடுக்கப்பட்டதால் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு ஜோதிபாண்டியனுக்குக் கிடைக்காமல் போனதோ என்னவோ? ஒரு திரைப்படம் எந்த விஷயத்தையும் பேசலாம். பொதுக்கருத்துக்கு அல்லது பொதுப்புத்திக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. மாற்றுக் கருத்துக்கும் மாற்று சிந்தனைகளுக்கும் இடமளிக்கத் தவறுகிற சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழாதென்பதே ஜனநாயகவாதிகள் சொல்வது.

‘ஒரே ஒரு கிராமத்திலே’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஓலக் குடிசையிலே’ என்னும் பாடல் எப்போதும் என் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது. இளையராஜாவின் குரலில், மெய்மறக்கச் செய்த அவ்வரிகள் நாடோடித் தாலாட்டு வகைக்கு நல்ல சான்று. ஆரம்பகாலங்களில் நாடகங்களை எழுதியும் நடித்தும் அனுபவம் பெற்றிருந்ததால், அவருக்கு திரைக்கதைகளை அமைப்பதிலும் திரையில் தாமே தோன்றி நடிப்பதிலும் சிரமம் இருக்கவில்லை. இயக்குநர் பாலச்சந்தர் சொல்லிக் கொடுத்ததால்தான் திரைப்படத்திலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தேன் என அவர் சொல்லியிருந்தாலும், காலத்தையும் களத்தையும் சூழலையும் கருத்திற்கொண்ட ஒருவருக்கு, எல்லாமே சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது.

தனக்கு இடப்படும் பணி எதுவோ, அதைச் சரியாகச் செய்துவிடுவதில்தான் மொத்தமுமே இருக்கின்றன. மெட்டுக்கு வார்த்தைகளை அளந்து அளந்து போடக்கூடிய பாடலாசிரியர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் என்றொரு கருத்து நிலவுகிறது. ஒருவகையில் அது உண்மையும்கூட. வார்த்தைகளின் பொருளும் குறியும் அவர்களை அறியாமலே அவர்களை உணர்ச்சிக்குத் தள்ளிவிடும். கலைஞரின் திரைக்கதைகளைத் தொடர்ந்து படமாக எடுத்துவந்தவர் இராம.நாராயணன். ஒருகட்டத்தில் மக்களின் நாடி பிடித்து, பாம்புகளை வைத்து படமெடுக்க ஆரம்பித்தார். அப்போது அவருடைய படங்களுக்கு வாலிதான் பாடல்கள் எழுதிவந்தார்.

இராம.நாராயணன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இயக்கி வெளிவந்த ஒரு படத்திற்கு பாராட்டு விழா நடந்திருக்கிறது. அந்த விழாவில் பேசிய வாலி, மொத்த நாகத்தையும் வைத்து படமெடுக்கும் இராம.நாராயணனுக்கு இனி, துத்தநாகத்தை வைத்துத்தான் பாடலெழுத வேண்டுமென ஹாஸ்யமாகப் பேசியிருக்கிறார் அப்போது மேடையிலிருந்த கலைஞர், “நான் துத்தநாகத்திற்கெல்லாம் பாட்டெழுத மாட்டேன்” என்று செல்லமாய் வாலியை சீண்டியிருக்கிறார். அந்த வாக்கியம் வாலிக்கு வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது. வார்த்தைதானே, விட்டுவிடலாம் என சமாதானமடையவில்லை. மறுநாள், கலைஞரே பேசி வருத்தம் தெரிவித்தவுடன்தான், மீண்டும் இராம. நாராயணனுக்கு பாடல் எழுத சம்மதித்திருக்கிறார்.

இறுதிக் காலங்களில் ஒருநாள், இளம்கவிஞர்கள் எல்லோரையும் ஒருசேர சந்திக்க வேண்டுமென வாலி விரும்பினார். நண்பர் மை.பா.நாராயணன் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஒரு முழுநாள் இளம் கவிஞர்களோடு அவர் அடித்த இலக்கிய அரட்டைகள் மறக்க முடியாதவை. என் தோளிலும் இளையகம்பன் தோளிலும் கைகளைப் போட்டுக்கொண்டு, “ஒருபக்கம் பாரதி, இன்னொரு பக்கம் கம்பன், வேற என்னய்யா வேணும் வாழ்க்கையில” என்று குறும்பாகச் சிரித்த சிரிப்பு எதையோ இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. முதல் முதலில் வித்யாசாகரின் ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்த அதே மிடுக்கோடும், அதே குண இயல்புகளோடுமே அவர் இறுதிநாளிலும் இருந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், பாட்டெழுத வாங்கியிருந்த அட்வான்ஸைத் திருப்பித் தரச்சொல்லிவிட்டுத்தான் மரித்திருக்கிறார். இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய ‘காவியத் தலைவனே’, அவர் கடைசியாகப் பாட்டெழுத ஒப்புக்கொண்ட திரைப்படம். ‘காவியக்கவிஞர்’ வாலி என்னும் அடைமொழிக்குப் பொருத்தமாகவே அவருடைய இறுதிச் சொற்களும் அமைந்தன என்பது எதார்த்தமில்லை. ‘பீமா’ என்னும் திரைப்படத்தில் ‘ரகசியக் கனவுகள்’ பாடலை எழுதிவிட்டு வீடு திரும்பிய பொழுது, அப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி தொலைபேசியில் அழைத்தார். பாடலில் ஏதோ திருத்தம் இருக்கிறதுபோல என எண்ணிக்கொண்டு, தொலைபேசியை எடுத்த என்னிடம், “இன்னொரு பாடலிருக்கிறது. உடனே எழுதவேண்டும், முடியுமா?” என்றார்.

திரையில் என்னை அறிமுகப்படுத்தியவர் என்பதால் எதையுமே கேட்காமல், “தாராளமாக எழுதுகிறேன், மெட்டை அனுப்புங்கள்” என்றேன். சொன்னதுபோல மறுநாளே ‘எனதுயிரே எனதுயிரே’ என்னும் பாடலை எழுதிக்கொண்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒலிப்பதிவுக் கூடத்திற்குப் போனேன். அங்கே போகும்வரை எனக்குத் தெரியாது, அப்பாடலின் மெட்டு, ஏற்கனவே வாலிக்குத் தரப்பட்டதென்று.‘‘ஒரு இயக்குநர், ஒரு பாடலாசிரியனின் சிந்தனைக்குப் பாடலை விட்டுவிட்ட பிறகு, அந்த சிந்தனையிலிருந்து நல்லதை எடுப்பதுதான் இயக்குநரின் வேலையே தவிர, தான் சிந்தித்ததை தாங்கள் ஏன் எழுதவில்லை எனக் கேட்பது அபத்தம்’’ என்று ஆரம்பத்தில் வித்யாசாகர் ஒலிப்பதிவுக்கூடத்தில் வாலி சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. என்னைப் பாட்டெழுத அழைக்கும் இயக்குநர்களிடம் இப்பொழுது நான் சொல்வதும் அவர் சொன்னதுதான். ‘‘என்ன வேண்டுமென்று சொல்லுங்கள், எழுதிவிடலாம்.’’

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்