கவிதை வனம்
தொட்டில் மீன்கள்
ஏன் இப்போது பார்த்துக்கொள்கிறோம் அடிக்கடி திசைமாறும் பார்வைகள் கண்ணீரை மறைப்பதற்கு மட்டுமல்ல அடித்து அடித்து கூடுதலாய் சூடேற்றுகிறது ஒரு குளிர்காற்று கண்ணாடி தொட்டி மீன்கள் யாருக்கு சொந்தம்? ஓரிரு வார்த்தைகள் எனதருகில் அதோ அத்தெருவில் நாய் குரைக்கத் துவங்கிவிட்டது.
- ப.காளிமுத்து

பறவையான சிறகு
தரை நோக்கித் தாழ வீழ்ந்த ஓர் இறகு குழந்தையின் உள்ள(ம்)ங் கைபட்டதும் உயிர்பெற்றது மெல்ல ஊதுகிறது குழந்தை மேனியெங்கும் புதுமூச்சுக் காற்றில் படபடக்க பறவையாகிப் பறக்கிறது சிறகு மீண்டும் மீண்டும் குவித்த உதடுகளைக் குறி பார்த்து இறங்குகிறது அப்படியே விட்டு விடுங்கள் அக்குழந்தையை நமக்கான அவசரத்துக்குள் வராமல் இருக்கட்டும் கோழியை இறகாக்கத் தெரியாத பருவம் ஓர் இறகை உயிராக்கி மகிழ்கிறது.
- நா.கி.பிரசாத்
|