ரேஸ் கோர்ஸ்
அறிந்த இடம் அறியாத விஷயம்
- பேராச்சி கண்ணன்
எத்தனையோ மனிதர்கள். எத்தனையோ முகபாவங்கள். எத்தனையோ மொழிகளில் உரையாடல்கள். சிலர் லுங்கியுடன் லோக்கலாக. சிலர் பேன்ட், ஷர்ட்டில் டிப்-டாப்பாக. இன்னும் சிலர் கோட், டை சகிதம் லக்சரியாக. சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானம் விதவிதமான மனிதர்களால் களைகட்டுகிறது. ‘குதிரைப் பந்தயமா? இப்பவும் நடக்குதா?’ ஆச்சரியக் கேள்விக்கு, ‘ஆமாப்பா ஆமாம்’ என்பதே பதில்! கிண்டி ரயில் நிலையத்தின் எதிரில் இருக்கும் மெட்ராஸ் ரேஸ் கோர்ஸினுள் நடக்கிறோம்.
 லக்சரி மனிதர்களைத் தவிர மேற்சொன்ன மற்றவர்கள் நுழைவுவாயிலில் ஆங்காங்கே மரத்தடிகளில் அமர்ந்திருக்கிறார்கள். யாரும் சும்மா இல்லை. கையில் மஞ்சள் நிறத்திலான ஒரு புத்தகத்தில் எண்களைக் கிறுக்கியபடியே பரபரப்பாகக் காணப்படுகிறார்கள். எதற்காக இந்தக் கணக்கு? ‘ஜாக்பாட்’ அடிப்பதற்காக! மட்டுமல்ல, எந்தக் குதிரை முதலில் வரும், எது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதை கணித்துச் சொல்வதற்காகவும்தான்.
சீரியஸாக கணக்குப்போட்டுக் கொண்டிருந்த ஒருவரின் அருகில் போய் நின்றோம். நம்மை ஏறெடுத்தும் அவர் பார்க்கவில்லை. கணக்கிலேயே பிஸியாக இருந்தார். ‘‘பொறுங்க தம்பி. தில்லி ரேஸ் நடக்கப் போகுதுல!’’ என்கிறார் சீரியஸ் தொனியில். சென்னை ரேஸ் கோர்ஸில் எப்படி தில்லி ரேஸ்? குழப்புகிறது. கூடார வடிவிலான நீண்ட வளாகம். அதன் நடுவே பெரிய ஸ்கிரீன். பழைய டூரிங் டாக்கீஸ் போல காட்சியளிக்கிறது. அதில், வரிசையாக சேர்களும், பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிலும் ஆட்கள். பலர் நின்று கொண்டே விளையாட்டில் மும்முரம் காட்டுகின்றனர்.
 இதைச்சுற்றிலும் டிக்கெட் கவுண்டர்கள். அதில் நாலைந்து பேர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் புக்மேக்கர்ஸ் எனப்படு கிறார்கள். ஷார்ட்டாக புக்கீஸ்! ரேஸ் கிளப்பால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த புக்கிகளிடமும் பெட் கட்டி ஆடலாம். அந்தப் பெரிய ஸ்கிரீனில்தான் ஒளிபரப்பாகிறது தில்லி ரேஸ். அதை இங்கிருந்து பார்த்தவாறே பந்தயம் கட்டி விளையாடுகிறார்கள்.
‘எப்படி விளையாடுவது?’ அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தோம். ‘‘‘Win, Place, Forecast, Jackpot’ எனக் கேட்டு டிக்கெட் எடுக்கணும். ‘வின்’ என்பது எந்தக் குதிரை முதல்ல வரும்னு கணிச்சு எடுக்குற டிக்கெட். ‘பிளேஸ்’னு சொல்றது ஏழெட்டு குதிரைகளுக்கும் மேல ஓடுற ரேஸ்ல எந்த குதிரை இரண்டாவது இடத்துக்கு வரும்னு கணிக்கிறது. அப்படி கணிக்கிற குதிரை முதலாவதா வந்தாலும் காசுதான்.
 ஆனா, ‘Second horse pool’னு ஒரு டிக்கெட் இருக்கு. இதுல ரெண்டாவதா வர்ற குதிரையை மட்டும் சரியா கணிக்கணும். அடுத்து, ஃபோர்காஸ்ட்டும் இதுபோலத்தான். இதுல முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கிற குதிரைகள் எதுனு துல்லியமா கணிச்சு சொல்லிடணும். அப்புறம் ஜாக்பாட். சில ரேஸ்களை மட்டும் ஜாக்பாட் பட்டியல்ல வச்சிருப்பாங்க. உதாரணத்துக்கு பாருங்களேன்...’’ எனத் தன் கையிலுள்ள அந்த புக்கை நம்மிடம் காட்டுகிறார்.
‘‘இதுல, 4, 5, 6, 7, 8 ரேஸ்கள்தான் ஜாக்பாட்னு போட்டிருக்காங்க. குதிரை மற்றும் ஜாக்கி பெயர்கள், குதிரை வெயிட், இதுக்கு முன்னாடி போட்டிகள்ல அது எப்படி ஃபினிஷிங் பண்ணியிருக்கு, அதன் ஓனர் யார்... எல்லாமே விவரமா இந்த புக்ல இருக்கும். இதை வச்சு கணக்குப்போட்டு எந்த குதிரை வரலாம்னு கணிப்போம். ஜாக்பாட்டை பொறுத்தவரை குறிப்பிட்ட அந்த அஞ்சு ரேஸ்கள்லயும் எந்த குதிரை முதல் இடத்துல வரும்னு கணிச்சு டிக்கெட் எடுக்கணும். கரெக்ட்டா சொல்றவங்களுக்கு பணம் போய்ச் சேரும். ஒரு ரேஸ்ல கணிக்கிறதே கஷ்டம். அஞ்சு ரேஸ்ன்னா பார்த்துக்கோங்க. ஆனாலும், கணிச்சு சொல்லி பணம் ஜெயிப்பாங்க. இந்தப் பணத்துல அரசுக்கான வரி, கிளப் கமிஷன் போக மீதித் தொகை கிடைக்கும்!’’ என்றவர், வேகமாக ரேஸ் நடக்கும் இடத்துக்குப் பாய்ந்தார். நாம் ரேஸ் கோர்ஸின் உறுப்பினர்களுக்கான வாயிலுக்குள் நுழைந்தோம்.
இங்கேயும் பெரிய ஸ்கிரீனில் லைவ் ரேஸ் ஓடிக்கொண்டே இருக்கிறது. கிளப் உறுப்பினர்களின் பந்தயம் தூள் பறக்கிறது. இதனுடன் மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் பந்தயமும் மைதானத்தில் நடக்கிறது. ‘‘கமான், கமான், கமான்...’’ எனக் குரல் வரும் திசை நோக்கி நகர்ந்தோம். அந்தப் புல்வெளி மைதானத்தில் பத்து பனிரெண்டு குதிரைகள் பாய்ந்து வருகின்றன. குதிரைகள் எல்லையைத் தொடும் வரை கைதட்டலும், கூச்சலும் ஓயவில்லை.
 பிறகு, சட்டென அடங்கி விடுகிறது சத்தம். டிக்கெட்டைப் பார்த்து பணம் பெற ஓடுகிறார்கள் சிலர். வின்னரா, பிளேஸா, ஃபோர்காஸ்ட்டா என்பது தெரியவில்லை. தொடர்ந்து ரேஸ் கிளப்பின் பழைய கட்டிடத்தின் முன் வந்து சேர்ந்தோம். அங்கிருந்த புல்வெளியில் அடுத்த ரேஸ்க்கான குதிரைகள் வலம் வருவதைப் பார்த்தோம். ஜாக்கிகள் குதிரையின்மீது அமர்ந்து கொள்கிறார்கள். குதிரைகளைப் பராமரிக்கும் பையன்கள் அத்தனை அழகாக குதிரைகளை இழுத்து வருகிறார்கள்.
‘‘ஒவ்வொரு ரேஸ் ஆரம்பிப்பதற்கு முன்பும் இந்த நிகழ்வு நடக்கும். இந்தப் பக்கம் உறுப்பினர்களும், அந்தப் பக்கம் பொதுமக்களும் பந்தயம் கட்டியிருக்கிற தங்கள் ஆஸ்தான குதிரைகளையும், ஜாக்கிகளையும் பார்க்க இப்படியொரு ஏற்பாடு...’’ என்றார் அங்கிருந்த ஒருவர். இந்த cat walkகுக்குப் பிறகே, குதிரைகள் மைதானத்திற்குள் வருகின்றன.
ரேஸ் கிளப்பின் அனுமதியுடன் ரேஸ் தொடங்கும் இடத்திற்குப் பயணித்தோம். மைதானத்தின் அந்தப்பக்கமாக இருக்கிறது ஸ்டார்ட்டிங் பாயின்ட். தூரத்தைப் பொறுத்து இந்த ஆரம்பப்புள்ளி மாறுபடும். இரண்டு ஆம்புலன்ஸ்களில் மருத்துவக் குழுக்கள், ரேஸ் கிளப்பின் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழு, பயிற்சியாளர்கள் அல்லது உரிமையாளர்கள் கொண்ட ஒரு வண்டி ஆகியவையும் ஸ்டார்ட்டிங் ஏரியாவிற்குள் வந்து விடுகின்றன. இந்த நான்கு வண்டிகளும் ஓடும் குதிரைகளுடன் பாதுகாப்பிற்காக அருகிலுள்ள தார் சாலையில் பயணிக்கின்றன.
‘‘ஒரு ஆம்புலன்ஸ் கிளப்புக்கு சொந்தமானது. இன்னொன்று தனியார் மருத்துவமனைக்கானது. ஏதாவது அசம்பாவிதம் நடந்ததுன்னா ஒரு ஆம்புலன்ஸ் நின்னு மருத்துவம் பார்க்கும். இன்னொண்ணு ரேஸ் கூடவே போகும். கண்காணிப்புக் குழு, ரேஸின் விதிகளைச் சரியா பாலோ பண்றாங்களானு பார்த்திட்டே வரும். இதுல தவறு நடந்தா குறிப்பிட்ட அந்தக் குதிரையை நிராகரிச்சிடுவோம்.
 அதேமாதிரி, ஒவ்வொரு போட்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் குதிரையை ஓட்டுற ஜாக்கி களுக்கு எடையை செக் பண்ணுவோம். ஏன்னா, ஜாக்கியோட எடைதான் குதிரையின் வேகத்தைத் தீர்மானிக்கும். இதனால போட்டியின் முடிவு மாறலாம். இதுல எந்த தவறும் நடக்கக்கூடாதுனு இந்த செக்அப். அப்புறம், ஸ்பாட்லயே குதிரைக்கும் டோப் டெஸ்ட் முடிச்சிடுவோம்...’’ என்கிறார் நம்மோடு வந்த ஒருவர்வரிசையாக நம்பர்கள் இடப்பட்ட ஹைட்ராலிக் பாக்ஸினுள் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
சில குதிரைகள் இதற்குள் வருவதற்கு முரண்டு பிடிக்கின்றன. அவற்றின் கண்களில் துணிகளைப் போட்டு உள்ளே நிறுத்துகின்றனர். இந்த பாக்ஸிற்குள் குதிரை வருவதற்கு தனிப் பயிற்சியே இருக்கிறதாம். அந்தப் பயிற்சி முடித்ததும், ‘ஸ்டார்ட்டிங் ஸ்டால் சர்ட்டிபிகேட்’ என்கிற சான்றிதழை, போட்டியைத் தொடங்கி வைக்கும் ஸ்டார்ட்டரிடம் பெற வேண்டும். அப்படியான குதிரைகள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றன. இதில், நீண்ட நேரம் முரண்டு பிடிக்கும் குதிரைகள் நிராகரிக்கப்பட்டுவிடும். சில நொடிகளில் பச்சைக் கொடி காட்டியதும் ஹைட்ராலிக் பாக்ஸ் திறக்க, சீறிப் பாய்கின்றன குதிரைகள்.
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
குதிரை பராமரிப்பு
‘‘காலைல அஞ்சரை மணிக்கெல்லாம் குதிரைகளுக்கான பயிற்சியை தொடங்கிடுவோம். 2 வயசுல இருந்து 12 வயசு வரை குதிரைகள் ரேஸில் ஓடலாம். நாங்க ஒன்றரை வயசுல இருந்தே பயிற்சியை ஆரம்பிச்சிடுவோம். முதல்ல, ஒரு வட்டவடிவிலான பாதையை உருவாக்கி ஆற்று மணல் போட்டு அதுல சுத்தி வரச் செய்வோம். இதைச் சரியா செஞ்ச பிறகுதான் குதிரைக்கு சேணம் மாட்டுவோம். மறுபடியும் சுத்தி வர்ற பயிற்சிதான்.
அப்புறம் ரைடிங் பாய்ஸ் உட்காரந்து சுத்தி வருவாங்க. இந்த ரைடிங் பாய்ஸ்தான் பின்னாடி ஜாக்கியா மாறுவாங்க. தொடர்ந்து ஓட்டி ஓட்டி பிறகு வேகமா ஓட பயிற்சி கொடுப்போம். அப்புறம், ஸ்டார்ட்டிங் பாக்ஸ் பயிற்சி. கிட்டத்தட்ட எட்டு மாச தீவிர பயிற்சிக்குப் பிறகே ஒரு குதிரை ரேஸ்க்கு வரும். ஒரு குதிரையைப் பராமரிக்க மாசத்துக்கு 14 ஆயிரம் ரூபாய் என்பது ரூல்.
 ஆனா, உரிமையாளர்கள் அதுக்கு மேலயும் செலவு பண்ணுவாங்க. ஓட்ஸ், கேரட், இங்கிலீஷ் ஃபுட்னு நிறைய உணவுகள் கொடுத்து ஆரோக்கியமா பேணுவோம். இங்கே எங்ககிட்ட 650 குதிரைகள் வரை இருக்கு. தவிர ஒரு கால்நடை மருத்துவமனையும் இருக்கு...’’ என்கிறார் பயிற்சியாளர் கிருஷ்ணா
ஹிஸ்டரி
‘‘சென்னை குதிரைப் பந்தயம் 1777லிருந்து நடந்திட்டு வருது. ஆங்கிலேயர்கள்தான் இதைத் தொடங்கினாங்க. சின்னதாகத் தொடங்கின இந்த விளையாட்டு 1900ல் நல்ல வளர்ச்சி அடைஞ்சது. அந்தக் காலத்துல மகாராஜாக்கள், பிரிட்டிஷ்காரர்கள் எல்லாம் இந்த விளையாட்டை ஊக்குவிச்சாங்க. அப்புறம், சமூகத்திலுள்ள பிரபல மனிதர்களும் நிறைய குதிரைகள் வைச்சு விளையாடினாங்க.
ஆரம்பத்துல பெட்டிங் நோக்கம் பெரிசா இல்ல. எல்லோருக்கும் தங்கள் குதிரை ஜெயிக்கணும்னு ஆர்வம் மட்டுமே இருந்துச்சு. பிறகு, எந்த குதிரை வரும், எவ்வளவு பணம் பார்க்கலாம்னு சிலரோட ஆசையால பல விஷயங்கள் நடந்து போச்சு. 1960ல் இருந்து 86 வரை முன்னிலையில் இருந்தது. சில தவறுகளால, 1974ல் கலைஞரும், 86ல் எம்ஜிஆரும் இதை நிறுத்தணும்னு சட்டம் போட்டாங்க. 1974ல் ஜெமினி மேம்பாலம் அருகே குதிரைப் பந்தய ஒழிப்பு சிலையும் வச்சாங்க.
ஒவ்வொரு முறையும் கோர்ட் போய் தடுத்து நிறுத்தினோம். பிறகு, 1993ல் சுப்ரீம் கோர்ட், ‘ரேஸ் என்பது பெட்டிங் மட்டுமல்ல. இது ஒரு விளையாட்டு. வெறும் சூதாட்டம் கிடையாது’னு தீர்ப்பு சொன்னது. கிளப்பை எம்.ஏ.எம்.ராமசாமி திருப்பிக்கொண்டு வந்தார். ஆனா, மறுபடியும் மோசமான நிலைக்குப்போனது.
80 முதல் 84 வரை நான் சேர்மனா இருந்தப்ப நல்ல விஷயங்கள் நிறைய செய்தேன். அதனால, எம்.ஏ.எம். இறக்கும் தருவாயில் தன்கிட்ட திரும்ப வரும்படி அழைப்பு விடுத்தார். 2015ல் இருந்து சேர்மனா இருக்கேன். ஒரு காலத்தில் மெட்ராஸ்தான் பெஸ்ட் ரேஸ் கோர்ஸ்னு பெயர் வாங்கினது. இங்க இருக்குற ஆய்வகம், பார்வையாளர்கள் ஸ்டாண்ட், மருத்துவமனை எல்லாம் பார்த்து வெளிநாட்டுக்காரங்க பிரமிச்சுப் போயிருக்காங்க.
 நாங்க நடத்துற டோப் டெஸ்ட்டுக்கான ஆய்வகத்தை ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கே stand by ஆய்வகமா இந்திய அரசு அங்கீகரிச்சது. அந்தளவுக்கு பல வசதிகள் கொண்ட ரேஸ் கோர்ஸ் இது. சில தடுமாற்றங்களுக்குப் பிறகு, இப்ப எந்தத் தப்பும் நடக்கக்கூடாதுனு பல விஷயங்கள செய்திட்டு வர்றோம். அதைப் பார்த்திட்டு தில்லி, பெங்களூர், மும்பைனு பல இடங்கள்ல நம்ம ரேஸ் நேரலையில் போக ஆரம்பிச்சிருக்கு. சென்னை ரேஸை பெட்டிங் எடுக்கவும் ஆரம்பிச்சி இருக்காங்க. கடந்த இரண்டு வருஷங்களா மீண்டும் பிரபலமாகிட்டு வருது.
மக்களைத் திரும்ப வரவைக்கவும், நம்பிக்கை ஏற்படுத்தவும் கொஞ்சம் நாளாகும்தான். இப்பவே நிறைய பேர் வர ஆரம்பிச்சிருக்காங்க. முன்னாடி பெட்டிங் கலெக்ஷன் போடுற மிஷின்ல ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம்தான் வசூலாகும். இப்ப, பத்து லட்சம், 20 லட்சம்னு வருது. கூடிய சீக்கிரமே ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வர ஆரம்பிச்சிடும்.
இதுல கிளப் நடத்துற totalizator சிஸ்டம் மட்டும் முழுமையா வந்திட்டா பல பிரச்னைகள் முடிவுக்கு வந்திடும். அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டு வர்றோம். சீக்கிரமே சென்னை ரேஸ் பெஸ்ட்டா மாறும்...’’ என்கிறார் மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் சேர்மன் ராமகிருஷ்ணன் நம்பிக்கையாக.
|