ஜீனில் தெரியும் எதிர்காலம்!



புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல்

நவீன வாழ்க்கைமுறை நமக்குத் தந்த துயரப் பரிசுகளில் ஒன்று புற்றுநோய். முன்பெல்லாம் யாரோ ஒருவருக்குத்தான் கேன்சர் வரும். இன்றோ அது யாருக்கு வேண்டுமானாலும் வர சாத்தியமான ஒரு வாழ்வியல் சார்ந்த பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மிரட்டுவதற்காக சொல்லவில்லை. இதுதான் எதார்த்தம் என்கின்றன புற்றுநோய் தொடர்பான புள்ளிவிவரங்கள். மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் புற்றுநோய் என்பது குணப்படுத்தவே இயலாத நோய் அல்ல.

இன்றைக்கு இருக்கும் மருத்துவ தொழிநுட்ப வளர்ச்சியில் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் புற்றுநோயை வெல்வதும் எளிதான விஷயம்தான். நோய் வந்த பிறகு அதற்கான சிகிச்சைகளை நோக்கி ஓடுவது ஒருவகை என்றால் நோய் வரும் முன்பே அதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து நோயைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்வது மற்றொரு முறை.

‘ப்ரிவென்டிவ் மெடிகேஷன்’ (Preventive Medication) என்று இதை அழைக்கிறார்கள். ப்ரிவென்டிவ் மெடிகேஷன் எனும் நோய்த் தடுப்பு மருத்துவ முறைகளில் ‘ஜெனடிக் தெரப்பி’ எனப்படும் மரபணு அளவில் சிகிச்சை தரும் மருத்துவம், நவீன மருத்துவத்தின் சாதனைகளில் ஒன்று. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என ஓர் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சுமார் ஆறு முதல் ஏழு லட்சம் பேர் வரை மரணத்தைத் தழுவுகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம். மேலை நாடுகளில் புற்றுநோயை முன்பே கண்டறியும் விழிப்புணர்வு நம்மைவிடவும் அதிகம். அங்கு பெரும்பாலும் நோய் வரும் முன்பே கண்டறிந்துவிடுகிறார்கள் அல்லது தொடக்க நிலையிலேயே கண்டறிகிறார்கள். இதனால் தேவையான சிகிச்சைகளைச் செய்து உயிரிழப்பைக் கட்டுப்படுத்த முடிகிறது.


* புற்றுநோயும் மரபணுவும்

இந்தியாவில் மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், குடல் புற்றுநோய் உருவாக 30 சதவிகிதம் மரபணுக் கோளாறுகள்தான் காரணம் என்று சொல்கிறார்கள். இதுவும் மேலை நாடுகளோடு ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம். இந்தப் புள்ளிவிவரம் புற்றுநோயைக் கண்டறிவதிலும் சிகிச்சை தருவதிலும் மரபணு மருத்துவத்தின் பங்கு என்ன என்பதை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

புற்றுநோய் என்பது உறுப்புகளில் ஏற்படும் கோளாறு என்ற மரபார்ந்த பார்வை மருத்துவர்களிடம் மெல்ல மாறிவருகிறது. புற்றுநோய் என்பது உடல் செல்களில் உள்ள மூலக்கூறு அளவிலும் ஜீன் அளவிலும் எப்படிச் செயல்படுகிறது; அதை அதன் அடிப்படையான செயல்நிலையிலேயே எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை இன்றைய நவீன மருத்துவம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

யெஸ். புற்றுநோய் என்பது நமது ஜீன்களில் ஏற்படும் கோளாறு என்ற கருத்து மருத்துவர்களிடையே உருவாகிக்கொண்டிருக்கிறது. நமது உடலில் உள்ள ஜீன்கள் அன்றாடம் டீகோட் (Decode) செய்யப்பட்டு புதிதாக எழுதப்பட வேண்டும் என்பது உடல் இயங்கியலின் அடிப்படை விதி. அப்படி மீண்டும் எழுதப்படும்போது அதில் ஏதேனும் கோளாறுகள், சொதப்பல்கள் நிகழ்ந்தால், குறிப்பிட்ட செல்கள் அதிகமாகப் பெருகும் நிலையை அடைந்துவிடும். இந்தக் குறைபாட்டையே நாம் கேன்சர் என்கிறோம்.

* டார்கெட்டட் தெரப்பிகள்
புற்றுநோய் செல்கள் உடலில் அதிகரிக்கும்போது ஒட்டுமொத்த உறுப்பையும் நீக்குவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து அங்குள்ள செல்களை அழிப்பதை டார்கெட்டட் தெரப்பிகள் என்கிறார்கள். இப்போது புற்றுநோய்க்கான மருத்துவத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மருந்துகள் வந்துள்ளன. ஜீன் மீது செயல்படும் மருந்துகளின் வருகை என்பது புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.

இதன்மூலம் புற்றுநோய்கான மருத்துவம் என்பது மேலும் துல்லியமானதாகவும், பக்கவிளைவுகளைக் குறைப்பதாகவும் உள்ளது. டார்கெட்டட் தெரப்பி என்பது புற்றுநோய்க்கட்டி எங்குள்ளது என்பதை மட்டும் தீர்மானித்து வைத்தியம் செய்வது இல்லை. மாறாக, என்ன வகையான காரணங்களால் புற்றுநோய் உருவாகிறது, புற்றுநோயை உருவாக்கும் அல்லது தூண்டும் காரணி எது எனக் கண்டறிந்து அதை நீக்குவது அல்லது அந்தக் குறைபாட்டைக் களைந்து அந்தப் பருப்பொருளைச் சீராக்குவது!

* அமெரிக்க ஆய்வு தரும் நம்பிக்கை
அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி (ASCO) என்ற நிறுவனம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு Larotrectinib என்ற மருந்தைக் கொடுத்துப் பரிசோதித்தது. இதில், முதல் 50 நோயாளிகளின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளிவந்தன. இதன்படி இந்த நோயாளிகளில் 60 சதவிகிதம் பேருக்கு மேல் புற்றுநோய்க்கான அறிகுறி முற்றிலுமாக நீங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மருந்து Tropomyosin receptor kinase என்ற பாதிக்கப்பட்ட ஜீனின் மீது செயல்பட்டு புற்றுநோயை குணமாக்கியுள்ளது.

* ஓர் ஆசிரியையின் கதை
தில்லியைச் சேர்ந்த ஆசிரியை மீனா நந்தாலின் கதை இது. அடிவயிற்றில் அடிக்கடி மெலிதான வலி ஏற்பட ஏதாவது வயிற்றுக்கோளாறாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் மருத்துவரிடம் சென்றார் மீனா. பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சினைப்பை புற்றுநோய் என்று சொன்னபோது உலகமே இருண்டு போனது. என்ன செய்வது என்றே தெரியாமல் இடிந்துபோனார்.

மீனாவுக்கு கீமோதெரப்பி தரப்பட அவரது உடல் ஒத்துழைத்தது. ஆனால், கொஞ்ச நாட்களிலேயே புற்றுநோய் கட்டிகள் மீண்டும் வளரத் தொடங்கின. மீண்டும் கீமோ தந்தார்கள். ஆனால் புற்று செல்கள் கட்டுப்படாமல் மீண்டும் மீண்டும் வளர்ந்துகொண்டேயிருந்தன. மருத்துவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

டாக்டர் அமீத் அகர்வால் மீனாவுக்கு மரபணு பரிசோதனை செய்யலாம் என முடிவு செய்தார். பெங்களூரில் உள்ள Strand Life Sciences Ltd என்ற பரிசோதனைக்கூடத்துக்கு மீனாவின் ரத்த மாதிரிகள் சென்றன. அவரது உடலில் உள்ள BRCA2 ஜீன்களின் தவறான தூண்டுதலால்தான் மீனாவுக்கு புற்றுசெல்கள் பெருகுகின்றன எனக் கண்டறிந்தார்கள்.

தொடர்ந்து மீனாவின் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது சகோதரி மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் அவரது சகோதரர் இருவருக்கும் மரபணு பரிசோதனை செய்தபோது அவர்களுக்கும் அந்த ஜீன் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக, இந்த வகையான ஜீன் குறைபாடு இருந்தால் கீமோதெரப்பியை உடல் ஏற்றுக்கொள்ளாதாம். எனவே, மீனாவுக்கு PARP inhibitor என்ற மருந்து தரப்பட்டது. மருந்து உடலில் நன்றாக வேலை செய்ய புற்றுசெல்கள் கட்டுப்படத் தொடங்கின.

இப்போது ஆசிரியை மீனா தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு உற்சாகமாகப் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்! புற்றுநோய்க்கான மருத்துவத்தில் மரபணுவின் இடம் என்ன? எதிர்காலத்தில் மரபணு மருத்துவம் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் எப்படிச் செயலாற்றும்? என அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்டியூட் மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் அவர்களிடம் கேட்டோம்.

‘‘புற்றுநோயைக் கண்டறிவதிலும் சிகிச்சை தருவதிலும் மரபணு மருத்துவத்தின் பங்கு என்பது நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறது. எல்லா புற்றுநோய் மருத்துவமனைகளிலும் இப்போது மரபணு பரிசோதனைக்கு எனத் தனியான பிரிவு செயல்படுகிறது. இதை, “Hereditary Cancer Clinic” என்பார்கள். BRCA எனும் மரபணுவின் தவறான தூண்டுதலால் மார்பகப்புற்று நோய், சினைப்பை புற்றுநோய் உருவாகின்றன.

FAP ஜீன்களின் குறைபாட்டால் குடல் புற்றுநோயும், RET ஜீன்களின் குறைபாட்டால் தைராய்டு புற்றுநோயும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்தப் புற்றுநோய்கள் மரபியல் காரணங்களால் வருவதற்கான வாய்ப்புகள் கணிசமாக உள்ளதால் இந்த வகைப் புற்றுநோய் வந்தவர்களின் குடும்பத்தார் மரபணு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

மேலும், இந்த வகைப் புற்றுநோய் உள்ளவர்களும் மரபணு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் இவர்களுக்கான சிகிச்சைகளை இன்னும் சிறப்பான முறையில் வழங்க முடியும். ரத்தமாதிரிகளைக் கொண்டே மரபணு பரிசோதனைகளைச் செய்ய முடியும். மரபணு பரிசோதனை செய்து ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் அந்த குறிப்பிட்ட பகுதியை நீக்கிவிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

இந்த முறை இன்று உலகம் முழுதும் அதிகரித்துவருகிறது. பிரபலங்கள் பலர் இப்படி எதிர்காலத்தில் புற்றுநோய் வருவதைத் தடுப்பதற்காக அறுவைசிகிச்சை செய்துகொண்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். பொதுவாக அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரப்பி என மூன்றுவகையான சிகிச்சைமுறைகள் புற்றுநோய்க்கு உள்ளன. இதில் டார்கெட்டட் தெரப்பி என்பது ஒருவகையான கீமோதெரப்பிதான். அதாவது கீமோதெரப்பியின் போது குறிப்பிட்ட இடத்தில் கீமோ சிகிச்சை தரும்போது அந்தப் பகுதியில் உள்ள நல்ல செல்களும் சேர்ந்தே அழிகின்றன.

ஆனால், டார்கெட்டட் தெரப்பியில் குறிப்பிட்ட பாதிப்புள்ள செல்கள் மட்டுமே அழியும். இதனால், பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும். நடைமுறையில் பலவகையான டார்கெட்டட் தெரப்பிகள் உள்ளன. புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிட்ட ஜீனை சரி செய்வதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இப்போது, புற்றுநோய் அல்லாத ஓரிரு நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக நடந்து வருகிறது. எதிர்காலத்தில் ஜீன் அளவிலேயே புற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும்’’ என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்.            

- இளங்கோ கிருஷ்ணன்

உதாரண மனுஷி

ஏஞ்சலினா ஜூலி!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலியின் அம்மாவுக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது. இதை அடுத்து தனக்கும் அந்தப் பிரச்னை வரக்கூடும் என சந்தேகித்த ஏஞ்சலினா ஜூலி மரபணு பரிசோதனை செய்துகொண்டார். இதில் தனக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 87 சதவிகிதமும் சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதமும் உள்ளது எனக் கண்டறிந்த அவர் கடந்த 2013ம் ஆண்டு அவற்றை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிக்கொண்டார்.

இதனால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பிலிருந்து முழுதுமாக விடுபட்டிருக்கிறார் ஏஞ்சலினா ஜூலி. ‘‘புற்றுநோய் என்பது ஆழமான பயத்தை உருவாக்கி நம்மை உடலாலும் மனதாலும் பலவீனமானவர்களாக மாற்றும் ஒரு கொடூர நோய். ஆனால், இன்று அதை ஒரு ரத்தப் பரிசோதனை மூலமாகக் கண்டறிய முடியும் எனும் அளவுக்கு நம் மருத்துவமுறைகள் வளர்ந்துள்ளன. நவீன மருத்துவத்துக்கு நன்றி!’’ என நெகிழ்கிறார் ஏஞ்சலினா ஜூலி.