எல்லோருக்கும் சொந்த வீடு!உலகுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழக கிராமம் குறித்த ஸ்கேன் ரிப்போர்ட்

கோவை மாவட்டத்தின் எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ளது ஓடந்துறை பஞ்சாயத்து. பச்சைப் பசேல் என 12 கிராமங்கள் இதில் உள்ளன. கண்ணை நிறைத்து மனதைக் குளிர்விக்கும் இயற்கை எழில். தலை தூக்கிப் பார்த்தால் நீலகிரி மலை. காலுக்குக் கீழே நழுவியோடும் பவானி ஆறு. வேர்கள் விரும்பி மண்புகும் செழித்த நிலம்.

இப்படி வஞ்சனை இல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுத்த இயற்கை, அதை முறையாக நிர்வகிக்க நல்ல தலைமையையும் தந்ததுதான் அந்த கிராமத்துக்கு அமைந்த பெரும்பேறு. ஓடந்துறை சண்முகம் என்றால் அந்தப் பக்கத்தில் தெரியாதவர்கள் கிடையாது. ஓடந்துறைக்கு 10 ஆண்டுகள் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர். அன்னை போல் பிறந்த மண்ணை நேசிக்கும் பெரிய மனசுக்காரர்.

தன்னுடைய கிராமம் முன்னேற வேண்டும் என இவர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியதன் விளைவாக, இன்று தேசிய அளவிலே முன்னோடியான முன்மாதிரியான கிராமமாக உள்ளது ஓடந்துறை பஞ்சாயத்து. அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு, சுத்தமான சாலைகள், 100 சதவிகித வரி வசூல்... என்று ஆச்சர்ய ஸ்மைலியிட வைக்கிறது இந்த அழகான கிராமம்.

உள்ளூர் லயன்ஸ் கிளப் முதல் உலக வங்கி வரை பாராட்டியுள்ளது. ஜப்பானே வியந்து போற்றுகிறது. நிர்மல் புரஸ்கார், பாரத் ரத்னா ராஜீவ்காந்தி சுற்றுச்சூழல் விருது என வரிசைகட்டுகின்றன விருதுகள். உலகம் முழுதும் இருந்து இதுவரை 53 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த கிராமத்தைப் பார்த்து ஆய்வுசெய்து அதிசயித்துள்ளனர். ‘‘1996 முதல் 2005 வரை பஞ்சாயத்துத் தலைவராக இருந்தேன்.

இங்கு வாழும் மக்களில் 20 சதவீதத்தினர் பழங்குடியினர். காலம் காலமாகத் தனியார் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நிரந்தர வசிப்பிடம் கிடையாது. கிடைக்கும் இடங்களில் தார்ப்பாய்களில் வீடு போல அமைத்துக் குடி இருந்தனர். தனியார் தோட்ட நிறுவனங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக தரிசு நிலம் இருந்தால் அதனை அந்த கிராமப் பஞ்சாயத்து கையகப்படுத்திக் கொள்ளலாம் எனும் விதி உள்ளது.

அதன்படி அப்போது ஆறு ஏக்கர் நிலத்தை தனியாரிடம் இருந்து எங்கள் பஞ்சாயத்துக்கு பெற்றுத் தந்தது வருவாய்த்துறை. அதில் 107 தொகுப்பு வீடுகள் கட்ட முடிவு செய்து அடிக்கல் நாட்டினோம். ஆனால், அந்த நிலத்தின் உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை எதிர்கொண்டு வாதாடினோம். ‘மக்களுக்குத்தான் சொந்தம்’ என வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

பிறகு கட்டடப் பணிகளைத் துவங்கி ஜன்னல், சுவர் எழுப்பினோம். கான்ங்க்ரீட் மட்டும்தான் போடவில்லை என்ற நிலையில் மீண்டும் நிலத்தின் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினார்கள். இப்படி வழக்கு நடத்துவதிலேயே ஆறேழு வருடங்கள் ஓடிவிட்டன. ஒருவழியாக தில்லி வரை சென்று வாதாடி வெற்றி பெற்றோம். புல் புதர்கள் மண்டிய பகுதியைச் சுத்தப்படுத்தி, 250 பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித் தந்தோம்.

இப்போது அனைவரும் நிம்மதியாக வசித்துவருகின்றனர்...’’ என்று பூரிப்புடன் நினைவுகூர்கிறார் சண்முகம்.  ‘‘இது மட்டும் இல்லை. வினோபாஜி நகரில் 101 பசுமை வீடுகள் சோலார் மின் தொழில்நுட்பத்துடன் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் 201 பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் ஒரே பஞ்சாயத்து ஓடந்துறை மட்டுமே.

மேலும் ஒரு சிறப்பு உண்டு. தமிழகம் முழுவதுமே பசுமைவீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், அதில் பயன்பெற அடிப்படைத் தகுதியாக சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். இங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்துடன் வீட்டை சொந்தமாக்கித் தந்துள்ளோம்! இதுவரை 850 வீடுகளைக் கட்டித் தந்துள்ளோம். ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வீடுகளில் வசிக்கின்றனர்.

பிழைப்பு தேடி எங்கள் கிராமத்தில் இருந்து நகரத்துக்குச் சென்றவர்கள் இப்போது கிராமத்துக்கே திரும்பிவருகின்றனர் என்பதுதான் எங்கள் உண்மையான வெற்றி...’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் அதன் இப்போதைய தலைவர் லிங்கம்மாள் சண்முகம். இங்கே அரசுக்குச் சொந்தமான பூமிதான நிலம் 3.22 ஏக்கர் இருந்திருக்கிறது. வருவாய்த் துறையிடம் பேசி, கிராம சபை தீர்மானம் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கு அந்த நிலத்தை மாற்றியவர், அங்கு வீடுகளைக் கட்டியிருக்கிறார்.

“கிராமத்துல இருக்குற அனைவருக்குமே சொந்த வீடு உள்ளது. அதில் முக்கால் பங்கு வீடுகள் அரசு தொகுப்பு வீடுகள். வாடகை வீடு என்ற வழக்கமே எங்க கிராமத்துல இல்லை. சுத்தமான காற்று, செழிப்பான நிலம், போதுமான நீர் வளம் என நிம்மதியாக இருக்கிறோம்...” என்கிறார் கிராமவாசியான குமரன். பல பஞ்சாயத்துகள் முறையான நிதி வசதி இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் கோடி ரூபாய் செலவில் காற்றாலையை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் ‘‘பஞ்சாயத்தின் மொத்த வருவாயில் 40 சதவீதத்தை மின்சாரக் கட்டணமாவே கொடுத்திட்டிருந்தோம்.

இப்டியே போனால் 100 சதவிகிதம் வரி வசூல் செய்து, மிகப்பெரிய தொகையைத் திரட்டினால்கூட நம்ம பஞ்சாயத்து ஓட்டாண்டியாகிவிடும் என அஞ்சினோம். தெருவிளக்குகளை எல்லாம் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாற்றியும் பெரிய பலன் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் அந்த ஐடியா தோன்றியது. பவானி ஆற்று நீரைப் பயன்படுத்தி நீர்மின்சக்தி தயாரித்தால் என்ன என்று தோன்றியது. உடனே வல்லுநர்களிடம் பேசினோம். ஆனால், அது எங்கள் சக்திக்கு மீறிய காரியமாக இருந்தது.

மாற்றுவழி என்ன என்று யோசித்தபோதுதான் காற்றாலைத் திட்டம் எங்கள் கவனத்துக்கு வந்தது. ‘350 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய காற்றாலையின் விலை ஒரு கோடியே 55 லட்சம்’ என்று சொன்னார்கள். 2001 முதல் 2006 வரை பஞ்சாயத்துக்கு வந்த வருவாயில் 40 லட்சம் சேமிப்பாக இருந்தது. மீதம் தேவைப்பட்ட ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை வங்கிக் கடனாக வாங்கினோம்.

2006ம் வருடம் மே மாதம், ஓடந்துறை பஞ்சாயத்துக்குச் சொந்தமான காற்றாலையை உடுமலைப்பேட்டை பக்கம் உள்ள மயில்வாடி கிராமத்தில் நிறுவினோம். இது, வருடத்துக்கு ஆறே முக்கால் லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கக்கூடியது. எங்கள் தேவை நாலரை லட்சம் யூனிட். எங்கள் தேவை போக மீதம் உள்ளதை மின்சாரவாரியத்துக்கு விற்கிறோம். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வங்கிக் கடனை அடைத்துக்கொண்டு வருகிறோம்.

இதுவரை 40 சதவீத கடன் அடைந்துவிட்டது. மீதியையும் கட்டியபிறகு உபரி மின்சாரத்தில் வரும் பணம் பஞ்சாயத்தின் எதிர்கால சேமிப்பாக இருக்கும். 30 வருடங்கள் வரை நன்றாக இயங்கக்கூடிய காற்றாலை இது. இந்தியாவிலேயே காற்றாலை நிறுவியிருக்கும் ஒரே பஞ்சாயத்து எங்களுடையதுதான்...’’ என்று பெருமிதமாகச் சொல்கிறார் லிங்கம்மாள். வாஷிங்டனில் இருந்து உலக வங்கி இயக்குநர் தலைமையிலான குழு ஒன்று ஓடந்துறையை ஆய்வு செய்திருக்கிறது.

ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய வளர்ந்த நாடுகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இங்கே வந்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துச் சென்றுள்ளனர். மின்சார உற்பத்தி மற்றும் தொகுப்பு வீடுகளைப் பார்வையிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்கள் தங்கள் நாட்டில் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்கள்.

ராஜீவ்காந்தி தேசிய மக்கள் பங்களிப்பு குடிநீர் திட்டம் அறிமுகமானபோது முதன்முதலில் மக்கள் பங்களிப்பு நிதியைக் கொடுத்தது ஓடந்துறை பஞ்சாயத்து. அதனை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு ஓடந்துறையில் வைத்தே தேசிய அளவிலான அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவை நடத்தியது. தொடர்ந்து தில்லியில் நடந்த அந்தக் குடிநீர் திட்ட தேசிய மாநாட்டில் உரையாற்றினார்கள் இந்த பஞ்சாயத்தார். உலகமே வியந்து பார்க்கும் ஓடந்துறைக்கு ஒரு சல்யூட்!

- திலீபன் புகழ்
படங்கள்: க.சர்வின்