தமிழ்ல பேசினா எல்லா நாட்டுக்காரனும் புரிஞ்சுப்பான்!வந்தாச்சு translation gadget!

‘நான் அந்நிய மொழியைப் பேச மாட்டேன்’ என்று சொல்லும் மொழிப்பற்று மிக்கவரா நீங்கள்? வேறு வேறு நாடுகள், வேறு வேறு மனிதர்கள் என உலகம் முழுதும் சுற்ற வேண்டும் எனக் கருதும் பயணங்களின் காதலரா? அப்படியானால் உங்களுக்காகத்தான் இந்தக் கருவி! மனதின் உணர்வை மற்றவர்களுக்கு உரைக்க உதவுவதே மொழி. ‘இது என் மொழி, என் உயிர்’ என அதற்கு சென்டிமென்ட் வேல்யூ ஏற்றிக்கொள்வது எல்லாம் அவரவர் விருப்பம்.

ஆனால், நீங்கள் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் மற்ற மொழிக்காரர்களிடம் பேசும்போது உங்கள் தாய்மொழியிலேயே பேசலாம். ஆம். இந்தக் கருவி நீங்கள் பேசுவதை மொழிபெயர்த்துச் சொல்லிவிடும்! ஜப்பானைச் சேர்ந்த கேட்ஜெட் நிறுவனமான லோக்பர், ‘ili’ என்னும் ட்ரான்ஸ்லேட் செய்யும் கருவி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. அதில்தான் இந்த அமர்க்களமான வசதி உள்ளது.

‘Ili Wearable Translator’ ஒரு சின்ன ரெக்கார்டர் அளவில் இருக்கும். இது சுமார் 32க்கும் மேலான மொழிகளை ட்ரான்ஸ்லேட் செய்கிறது. வெள்ளை நிறத்தில் சிம்பிள் லுக்கில் இருக்கும் இந்தக் கருவியை பேசும்போது வாய்க்கு அருகில் வைத்துக்கொண்டு, பேசியபிறகு டெலிவரி பட்டனை அழுத்தினால், வெறும் 0.2 விநாடி களில் தேவையான மொழியில் மொழிபெயர்த்துச் சொல்கிறது.

இதைக் கழுத்தில் மாட்டிக்கொள்ளலாம், சட்டை பாக்கெட், பர்ஸ், ஹேண்ட் பேக் என எதிலும் கச்சிதமாக வைத்துக்கொள்ளலாம். தற்சமயம் ஜப்பான், அமெரிக்க நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ‘ili’ விரைவில் ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் அறிமுகமாக உள்ளது. ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் மொழிகள் ஏராளம் என்பதால் இன்னும் சில மாற்றங்கள், அப்டேட்டுகள் ஆன பிறகு இங்கும் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது லோக்பர்.

எப்படி கூகுள் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையையோ அல்லது வரியையோ கொடுத்தவுடன் தேவையான மொழியில் மொழி பெயர்ப்பு செய்து கொடுக்குமோ... அப்படித்தான், அதே முறைதான் இதிலும் உள்ளது. கூகுள் ட்ரான்ஸ்லேட்டரை அடிப்படையாகக் கொண்ட ட்ரான்ஸ்லேட், சவுண்ட் க்ளவுட் சாஃப்ட்வேரை மையமாகக் கொண்டு வாய்ஸ் டெலிவரி செய்கிறது.

இதன் இன்னொரு சிறப்பு, இதைப் பயன்படுத்த இணையதள வசதி தேவை இல்லை என்பதுதான். வெளியூர், வெளிநாட்டுப் பயண ஆர்வலர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் இந்தக் கருவியில் ஒரே ஒரு பிரச்னை இருக்கிறது. எந்த மொழியில் பேசினாலும் கலோக்கியலாக இல்லாமல் எழுத்துபூர்வமாக எப்படி இலக்கண சுத்தமாக டைப் செய்வோமோ, அப்படி சரியான வார்த்தைகளை இந்தக் கருவியிடம் உபயோகிக்க வேண்டும்.

டோன்ட் ஒரி... டெக்னாலஜி வளர்ந்தால் இதற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என லோக்பர் தட்டிக் கொடுக்கிறது. இதன் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் $249; அதாவது இந்திய மதிப்பில் ரூ16,228/- விற்பனை அதிகரிப்பைப் பொறுத்து இதன் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாக கேட்ஜெட் உலக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

- ஷாலினி நியூட்டன்