இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



அனுபவத் தொடர் - 20

நானெல்லாம் தின்னாமல் இருந்த நாளே கிடையாது. பத்து நிமிடம் கூடப் பசி பொறுக்க மாட்டேன். மூன்று வேளை சாப்பாடும் முப்பது வேளை நொறுக்குத்தீனியுமாக வாழ்நாளில் பாதியைக் கடந்துவிட்டு சட்டென்று விரதமெல்லாம் என்னால் இருக்க முடிகிறது என்றால் அதனை என் வீட்டார் அல்ல; என்னாலேயே நம்ப முடியவில்லை. இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளுவதற்கு ஒரே ஓர் உதாரணம்தான் உண்டு.

நாம், நமது சம்பாத்தியம், நமது குடும்பம். இது ஒரு பக்கம். ரிடையராகி பென்ஷன் பணம் வாங்கும் நமது தந்தை, தாத்தா - அவர்கள் நடத்தும் குடும்பம்; அது எதிர்ப்பக்கம். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நமது சம்பாத்தியம் என்பது இப்போது நடப்பது. மாதம் முழுதும் உழைத்து, ஒரே ஒருநாள் சம்பளம் வாங்கி வந்து அதை அடுத்த மாதம் முழுவதற்கும் செலவு செய்கிறோம்.

ரிடையர் ஆனவர்கள், பென்ஷன் வாங்குவோர் என்ன செய்கிறார்கள்? என்றோ உழைத்து முடித்துவிட்டவர்கள் அவர்கள். கொடுத்த கூலி குறைவு என்று அரசாங்கம் பெரிய மனது பண்ணி இப்போது மாதம் கொஞ்சமாக விடாமல் அனுப்பிக்கொண்டிருக்கிறது. அது சம்பந்தப்பட்டவர் உயிருள்ளவரை வந்துகொண்டேதான் இருக்கும்.

அவர்களும் சாப்பாட்டுக்கு, மருந்து மாத்திரைகளுக்கு, தீர்த்த யாத்திரைகளுக்கு அந்தக் காசை செலவு பண்ணிக்கொண்டிருப்பார்கள். ‘என் இறுதிச் சடங்குக்கு’ என்று சீட்டு எழுதி வைத்து தனியே ஒரு தொகையை ஒரு பர்ஸில் போட்டு பீரோவுக்குள் வைத்திருந்த பெரியவர் ஒருவரை எனக்குத் தெரியும். ஆனால், அவரது இறுதிச் சடங்கு அந்தப் பணத்தில்தான் நடந்ததா என்று தெரியாது.

இப்போது யோசிக்கலாம். என்றைக்கோ உழைத்ததற்கான கூலி மிச்சம் அவர்களுக்கு இன்னமும் எப்படி வந்து கொண்டிருக்கிறதோ, அம்மாதிரிதான் நம் உடல் இயந்திரமானது, இதுநாள் வரை சேர்த்து வைத்த கொழுப்பை விரத காலங்களில் எரித்து சக்தியாக மாற்றிக் கொடுக்கும். என்ன ஒன்று, வழக்கமான அரிசிச் சாப்பாடு சாப்பிடுவோர் இப்படி விரதம் இருக்கும்போது பசி தெரியும்.

வயிறு எரியும். தலை சுற்றிக் கண் இருட்டும். காதடைத்து, கொய்ங் என்றொரு சத்தம் கேட்கும். கை கால் மெல்ல நடுங்கும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதியஸ்தர்கள் என்றால் அடித்து வீழ்த்தியே விடும். ஆனால், கொழுப்புணவு உண்ணும் வழக்கம் வந்துவிட்டால் மேற்படி தேகாவஸ்தைகள் இராது. இந்த உணவின் சிறப்பே அதுதான். எப்படி சாப்பிட்டாலும் சாப்பிடாதிருப்பது போலவே வயிறு லேசாக இருக்குமோ, அதேபோல் சாப்பிடாதிருக்கும்போதும் சாப்பிட்ட மாதிரியே இருக்கும்.

அந்த தைரியத்தில்தான் நான் நாற்பத்தி எட்டு மணி நேர விரதம் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். இம்மாதிரி விரத காலங்களில் தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியம். எப்போதும் கையில் ஒரு பாட்டிலுடனேயே திரிய வேண்டியிருக்கும். உடம்பு டீ ஹைடிரேட் ஆகாதிருப்பது முக்கியம். ரொம்ப தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு இரண்டு ப்ளாக் காப்பி அல்லது க்ரீன் டீ குடிக்கலாம். கொஞ்சம் உப்புப் போட்டுக் குடித்தால் நன்றாக இருக்கும். ஆனால், அதற்குமேல் எதுவும் கூடாது. நடுவே ஒரு பால் காப்பி அருந்தினால்கூட விரதம் கெட்டதாகத்தான் அர்த்தம்.

ஒரு எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்தாலும் முடிந்தது கதை. அதிலுள்ள கார்போஹைடிரேட் உள்ளே கலந்துவிட்டால் தீர்ந்தது. ப்ளாக் காப்பியிலேயே ஒன்றிரண்டு கலோரி உண்டு. விரத காலத்திலும் நான் என்னுடைய தினசரி நடைப்பயிற்சியை நிறுத்தப் போவதில்லை என்பதால் அந்த ஒன்றிரண்டு கலோரிகளை அதில் கரைத்துவிடலாம் என்று தோன்றியது. ஒரு முடிவோடுதான் ஆரம்பித்தேன்.

அன்று காலை எழுந்ததும் முதல் வேலையாக நடப்பதற்குச் சென்றேன். ஐம்பது நிமிடங்கள் மித வேக நடை. தோராயமாக ஐயாயிரம் தப்படிகள் நடந்திருப்பேன் என்று நினைக்கிறேன். உற்சாகமாக இருந்தது. வந்து ஒரு ப்ளாக் காப்பி உப்புப் போட்டுக் குடித்துவிட்டு பேப்பர் படித்தேன். குளித்து முழுகி வழக்கமான வேலைகளைப் பார்க்க உட்கார்ந்தேன்.

மதியம் வரை ஒரு வித்தியாசமும் இல்லை. எப்போதும் ஒரு மணிக்குச் சாப்பிடுவது வழக்கம். அன்றைக்கு அது கிடையாது என்பதால் ஒரு மணிக்குப் படுத்துவிட்டேன். மாலை வரை நல்ல தூக்கம் (இதில் தெரிந்துகொண்டது என்னவென்றால், சாப்பிடாவிட்டால் தூக்கம் வராது என்பது ஒரு மாயை). மாலை எழுந்து மீண்டும் ஒரு ப்ளாக் காப்பி அருந்தினேன். மீண்டும் எழுத உட்கார்ந்தேன்.

சுமார் ஏழு மணி வாக்கில் லேசாகப் பசிப்பது போலத் தெரிந்தது. அது ஒரு பிரமை என்றும் தோன்றியது. எனக்கு எப்படிப் பசிக்கும்? ஏழு தலைமுறைகளுக்குச் சேர்த்து தின்று வைத்திருக்கிறேன். இப்போது சாப்பிடாவிட்டால் உள்ளே உள்ள சொத்தைக் கரைப்பதுதானே உடம்புக்கு விதி? ஆனால், என்ன நடந்திருக்கிறது என்று சொல்லுகிறேன். விரதம் தொடங்குவதற்கு முதல் நாள் நான் உண்டது புளியோதரை, சாம்பார் சாத வகையறாக்கள். அது ரெகுலர் உணவு. ஏகப்பட்ட மாவுச் சத்து கொண்டது.

முன் தினம் வரை கொழுப்புணவு எடுத்து வந்தவன், சட்டென்று மாவுச் சத்து மிக்க உணவுக்கு மாறியபோது வயிற்றுக்குள் ஓர் அதிர்ச்சி அலை உருவாகியிருக்கும். இவன் என்னத்தைத் தின்று தொலைக்கிறான் என்று வயிறு குழம்பும். திடீரென்று எப்படி இத்தனை சர்க்கரை சேர்கிறது என்று புரியாமல் தவிக்கும். சரி போ, கிறுக்குப் பயல் வேறு என்னவோ செய்கிறான்; இன்றைக்கு இதை எரிப்போம் என்று கார்ப் எரித்து சக்தியாக்க முயற்சி செய்திருக்கும்.

ஆனால், ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? கார்ப் உணவின் அடிப்படைக் குணமே உண்ட நான்கு மணி நேரத்தில் மீண்டும் பசியுணர்ச்சியைத் தூண்டுவதுதான். அதுதான் சிக்கல். அந்த ஐந்நூறு - அறுநூறு கிராம் கார்ப் உள்ளே போனதை முற்றிலும் அழித்து ஒழிக்கும்வரை விரதத்தை விடவே கூடாது. என்னவாவது செய்து அச்சிறு பசியை விரட்டத்தான் வேண்டும்.

நான் மீண்டும் ஒரு வாக்கிங் போக முடிவெடுத்தேன். பசிக்கும்போது நடப்பது ஒரு மகத்தான அனுபவம். இதனை என் நண்பர் கோகுல் குமரன் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். நடையானது பசியை அதிகப்படுத்தும் என்று நாம் நினைப்போம். ஆரம்பத்தில் அப்படித்தான் தெரியும். ஆனால், நடக்க, நடக்க, பசி உள்ளிட்ட அனைத்து உணர்ச்சிகளுமே அடங்கி ஒடுங்கி உடலும் மனமும் மகத்தானதொரு ஓய்வு நிலைக்குப் போய்ச் சேரும்.

மூளை விழிப்புடன் இருக்கும். பரபரவென்று என்னவாவது செய்யலாம் என்று தோன்றும். எனக்கு அன்று அப்படித்தான் ஆனது. அன்றிரவு பன்னிரண்டு மணி வரை வேலை செய்துவிட்டுப் படுத்தேன். அன்றைக்கெல்லாம் ஆறு லிட்டர் தண்ணீர் குடித்திருந்தேன். மறுநாள் அதே போல் காலை நடை. அதே ப்ளாக் காப்பி. அதே ஆறு லிட்டர் தண்ணீர். ஆனால், அன்று மதியம் ஒரு மணிக்கு உறங்கப் போகும்போது யாரோ மோகினி கூப்பிடுவது போலத் தோன்றியது.

(தொடரும்)

- பா.ராகவன்


பேலியோ கிச்சன்

இந்த வாரம் சமையல் குறிப்பு கிடையாது. மாறாக ஓர் அதிருசி காப்பி தயாரிப்பது பற்றிச் சொல்கிறேன். நல்ல ஸ்டிராங்கான டிகாக் ஷன் அரை தம்ளர் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் கால் தம்ளர் வெந்நீர் சேருங்கள். சிட்டிகை உப்பு போட்டால் அப்படியே குடித்துவிட முடியும்தான். ஆனால், கொஞ்சம் பொறுங்கள். ஒரே ஒரு புதினா இலை. இரண்டு சொட்டு எலுமிச்சை ரசம்.

ஒரு சிட்டிகை சீரகப் பொடி. இவற்றை அந்தக் காப்பியில் போட்டு ஒரு ஆற்று ஆற்றி அருந்திப் பாருங்கள். செய்து பார்க்கும் முன்னரே உவ்வே என்பீரானால் இழப்பு உங்களுக்குத்தான். இந்த மாறுவேடக் காப்பி ஒரு மகத்தான அனுபவத்தைத் தரும். அருந்தி முடித்ததுமே வீறுகொள்ளும் புத்துணர்ச்சி, வாழ்வில் அதற்குமுன் நீங்கள் அனுபவிக்காததாக இருக்கும்!