பாகுபலி - 2சென்ற இதழ் தொடர்ச்சி...

அந்த சிறுநகர ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் ஹால், சினிமாவில் காண்பிப்பது போல் இல்லாமல், சந்தைக் கடை போல் இரைச்சலாக இருந்தது. ஜட்ஜிடம் அசிஸ்டென்ட் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் (ஏபிபி), “மை லார்ட்... ஒரு ரிமாண்ட்...” என்று ரிப்போர்ட்டை நீட்டினார். இன்ஸ்பெக்டர் எங்களை நோக்கி கண்களைக் காண்பிக்க... நானும், ஆபரேட்டரும் கூண்டில் ஏறி நின்றோம்.

ஜட்ஜ் என்னை லேசான கேலிப் புன்னகையுடன் பார்த்துவிட்டு ஏபிபியிடம், “கேஸ் ரிஜிஸ்டர் பண்ணியாச்சா? எஃப்ஐஆர் காப்பி?” என்றார். ஏபிபி எஃப்ஐஆரை நீட்ட அதைப் பார்த்துவிட்டு கீழே வைத்தார். பிறகு ஜட்ஜ் எங்களிடம் பெயர், வயது விபரங்களைக் கேட்டார். பிறகு கண்ணாடியைக் கழற்றி டேபிளில் வைத்துவிட்டு, “ம்... சொல்லுங்க. என்ன படம் காமிச்சீங்க?” என்றார்.

நான் ரகசியமான குரலில் கிசுகிசுப்பாக, ‘‘பாருக்குட்டி...” என்றேன். “காதுல விழல. சத்தமா...” “பாருக்குட்டி பார்ட் டூ யுவர் ஆனர்!” என்று நான் சத்தமாகக் கூற... கோர்ட்டில் அனைவரும் சிரித்தனர். ஒரு காகிதத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, “ரிமாண்டட்!” என்றார் ஏபிபியைப் பார்த்து. அப்போது என் வக்கீல் எழுந்து, “மை லார்ட்... திஸ் இஸ் பெய்லபிள் க்ரைம். பெய்ல் பெட்டிஷன்...” என்று ஒரு மனுவை நீட்டினார். 

உடனே ஏபிபி ஆவேசமாக, “இவங்கள ஜாமீன்ல விடக்கூடாது யுவர் ஆனர். பரம்பரை பரம்பரையா இவங்களுக்கு இதான் தொழிலு. அக்யூஸ்டு சரவணக்குமாரோட தாத்தா தண்டபாணி, ‘சத்திரத்தில் ஒரு ராத்திரி’ படம் போட்டு அரெஸ்ட் ஆகியிருக்காரு. அப்பா சுந்தரமூர்த்தியும் ‘ரகசிய ராத்திரி’ படம் போட்டு அரெஸ்ட்டாயிருக்காரு. இவரும் ஏற்கனவே ‘விடியாத ராத்திரி’ படம் போட்டு அரெஸ்ட் ஆகியிருக்காரு...’’ என்று அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க... என் வக்கீல் ஒன்றும் பேசாமல் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.  கடுப்பான நான், “யுவர் ஆனர்...” என்றேன் ஜட்ஜை நோக்கி.

“சொல்லுங்க...” என்றார் ஜட்ஜ் புன்னகையுடன். “அய்யா... இவரு என்னை ஜாமீன்ல விடக்கூடாதுங்கிறாரு. அவருகிட்ட ஒரே ஒரு கேள்வி. அவரு தன் வாழ்நாள்ல, ஒரு தடவை கூட இந்த மாதிரி படம் பாத்ததில்லன்னு சொல்லச் சொல்லுங்க பாப்போம்!” என்று கூற... கோர்ட்டில் சிரிப்பு. “ஏன் சிரிக்கிறீங்க? உங்க எல்லாத்தையும் கேக்குறேன். நீங்க யாரும் ஒரு தடவை கூட, இந்த மாதிரி படத்த பாத்தது  இல்லன்னு கையைத் தூக்குங்க பாப்போம்!” என்று நான் கேட்க... ஒரு கை கூட உயரவில்லை.

“தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!” ஜட்ஜ் புன்னகையுடன் ஏபிபியை நோக்கி, “குருமூர்த்தி... ஜாமீன் தந்துடலாம். அப்புறம் ஊருல யாராரு, என்னென்ன படம் பாத்தாங்கன்னு சொல்வாரு. இந்த கேஸ்க்கு போய், எதுக்கு கொலைக் கேஸ் மாதிரி ஆர்க்யூ பண்றீங்க. எனக்கு ஜாமீன் கொடுக்கலாம்னு தோணுது!” “நோ மை லார்ட்... தி கலெக்டர் ஹேஸ் இன்ஸ்ட்ரக்டட் மீ. ஒன் மினிட். கலெக்டர் லெட்டரக் காமிக்கிறேன்...” என்ற ஏபிபி ஃபைலில் கலெக்டரின் கடிதத்தைத் தேடினார்.

ஜட்ஜ் பொழுதுபோகாமல் என்னிடம், “கைல என்ன பேக்? ரொம்ப பெருசா இருக்கு?” என்றார். “சும்மா... படிக்கிறதுக்கு புத்தகம் வச்சிருக்கேன்.” “என்ன புத்தகம்?” “நடிகை ஷகிலா மேடத்தோட சுயசரிதை யுவர் ஆனர்!” “ஷகிலா சுயசரிதையா?” அலறினார் ஜட்ஜ். “இத ஷகிலா மேடம் முதல்ல மலையாளத்துல ‘என்ட ஆத்மகதா’னு எழுதினாங்க. அதைத்தான் இப்ப மேடம் தமிழ்ல போட்டுருக்காங்க யுவர் ஆனர்!” கடுப்பான ஜட்ஜ், “ஸ்டாப்... ஸ்டாப்...” என்று கூற, நான் விடாமல், “சில்க் ஸ்மிதாவும், ஷகிலாவும் ‘ப்ளே கேர்ள்ஸ்’ படத்துல ஒண்ணா நடிச்சிருக்காங்க யுவர் ஆனர்.

ஓர் அத்தியாயத்துல சில்க் ஸ்மிதாவப் பத்தி ஷகிலா மேடம், ‘பிரியமான நட்சத்திரமே... நீ ஒரு பொன் வசந்தமாக இருந்தாய்’னு எழுதியிருக்காங்க பாருங்க... எனக்கு கண்ணு கலங்கிடுச்சு யுவர் ஆனர்...” என்ற நான் கண்களைத் துடைத்துக்கொண்டேன். ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஜட்ஜ், “இந்தாளுக்கு ஜாமீன் கிடையாது. முதல்ல ஜெயிலுக்கு அழைச்சுட்டு போங்கய்யா!” என்றார் சத்தமாக.

பதறிப்போன நான், “அய்யா... இனிமே நான் திருந்தி வாழலாம்னு இருக்கன்ய்யா. எனக்கு யாரும் கல்யாணத்துக்கு பொண்ணு கொடுக்கல. இப்பதான் ஒரு பொண்ணு சரின்னு சொல்லியிருக்கு. அவங்க வர்ற வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு ‘பாகுபலி 2’ படம் பாக்க வர்றன்னுருக்காங்க. நீங்க வெளிய விட்டாதான் என் கல்யாணம் நடக்கும்ய்யா. இந்த பாவிய மன்னிச்சு விட்டுடுங்கய்யா...” என்று கைகளைக் குவித்து கதறினேன்.

மனம் இரங்கிய ஜட்ஜ், “பெய்ல் க்ராண்டட்!” என்று  கையெழுத்து போட்டார். மறுநாள் காலை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம். நான் கலெக்டர் அறைக்கு வெளியே மனோகருடன் உட்கார்ந்திருந்தேன். தியேட்டர் சீல் ஆர்டரை ரத்து செய்வதற்கு கலெக்டர் உத்தரவு போடவேண்டும். பொதுவாக இந்த மாதிரி சீல் செய்தால், நான்கைந்து மாதங்கள் கழித்து, ஃபைன் போட்டுதான் மீண்டும் திறக்க அனுமதிப்பார்கள். ஆனால், இந்த கலெக்டர் மிகவும் இரக்க சுபாவமுடையவர் என்றும், நேரில் சந்தித்து கேட்டால் மனமிரங்க வாய்ப்புண்டு என்றும் பலரும் சொன்னதால் கலெக்டரைப் பார்க்க வந்திருந்தேன்.

எனது மொபைல் ஃபோன், ‘கண்ணே... கட்டிக்கவா... ஒட்டிக்கவா?’ என்று அடித்தது. மொபைலை ஆன் செய்தேன். ஃபோனில் குமார், “சரவணா... ‘பாகுபலி-2’ படத்துக்கு பேசி, அட்வான்ஸ் கொடுத்துட்டன். வர்ற வெள்ளிக்கிழமை பாஸ்வர்டு அனுப்பிடறன்னு சொல்லிட்டாங்க...” என்றான். அப்போது ‘‘நீங்க போங்க...” என்று பியூன் கூற... நான் ஃபோனை கட் செய்துவிட்டு நடந்தேன். கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த நான் அடுத்த வினாடியே, “அய்யா...” என்றபடி அப்படியே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினேன். “நீங்கதான்யா எனக்கு வாழ்க்கை கொடுக்கணும்!” என்று கதறினேன்.

“யோவ்... என்னய்யா இது. முதல்ல எழுந்திரி...” என்று கலெக்டர் கூற, எழுந்தேன். “உனக்கு இப்ப என்ன வேணும்?” “‘பாருக்குட்டி’ படம் போட்டேன்னு தியேட்டர மூடி, சீல் வச்சுட்டாங்கய்யா. நீங்கதான்ய்யா மனசு வச்சு சீல எடுத்து விடணும்...” “க்ளோஸ் பண்ணி ரெண்டு நாள் கூட ஆவல. அதுக்குள்ள க்ளோஸிங் ஆர்டர ரிவோக் பண்ணமுடியாது!” “தெரியும்ய்யா. நான் இந்த மாதிரி படம் ஓட்டுறன்னுதான் 33 வயசாகியும், எனக்கு பொண்ணு கிடைக்கல.

இப்பத்தான் ஒரு பொண்ணு ஓகே சொல்லியிருக்கு. வர்ற வெள்ளிக்கிழமை அவங்க எங்க தியேட்டருக்கு படம் பார்க்க வர்றன்னுருக்காங்க...” என்றவுடன் கலெக்டர், “‘பாருக்குட்டி’ய பாக்கவா?” என்றார் கிண்டலாகச் சிரித்தபடி. “இல்லய்யா. ‘பாகுபலி-2’ படம் போடப் போறேன்!” “இப்படி சொல்லித்தான் மறுபடியும் தியேட்டரத் திறப்பீங்க. அப்புறம் மறுபடியும் ‘பாருக்குட்டி’ய அழைச்சுட்டு வந்துடுவீங்க!” “சத்தியமா அந்த மாதிரி பண்ணமாட்டேன்ய்யா. இது என் வாழ்க்கை.

முத முதல்ல ஒரு பொண்ணு முடியற மாதிரி இருக்கு. தியேட்டரத் திறந்தாதான் கல்யாணம் முடிவாகும்ய்யா...” கலெக்டர், “உன்ன எப்படி நம்புறது. ம்...” என்று யோசித்து விட்டு, ‘‘ஒண்ணு பண்றேன். நான் இப்ப ரிவோக் பண்றேன். ஆனா, முத நாளு நானே வந்து, நீ ‘பாகுபலி-2’ படம் போடுறியான்னு செக் பண்ணுவேன்!” “அய்யா... வாங்கய்யா... நீங்க எங்க தியேட்டருக்கு வர, நான் புண்ணியம் செஞ்சுருக்கணும்ய்யா!” “சரி, வர்ற வெள்ளிக்கிழமை காலைல பத்து மணிக்கு அங்க இருப்பேன்!” வெள்ளிக்கிழமை.

தியேட்டரே திருவிழாக் கோலமாக இருந்தது. வெளியே தோரணம் கட்டி, ‘பாகுபலி 2’ போஸ்டர் ஒட்டப்பட்டிருக்க... ஒரே ஜனக் கூட்டம். எனது அழைப்பின் பேரில், நான் திருந்தி வாழ்வதை ஊக்கப்படுத்தும் விதமாக ஜட்ஜ், இன்ஸ்பெக்டர், கலெக்டர் எல்லாரும் வந்திருந்தனர். மூவரும் கடைசி வரிசையில் தனியாக அமர வைக்கப்பட்டனர். நான் அவர்கள் அருகில், புது சிவப்பு நிற சில்க் சட்டை அணிந்து நின்றுகொண்டிருந்தேன். இரண்டாவது வரிசையில் பெண் வீட்டார் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

நியூஸ் ரீல் ஓடிக்கொண்டிருக்க... வெளியேயிருந்து கையில் மொபைலுடன் வந்த குமார், “சரவணா... நம்ம ‘பாகுபலி-2’ படத்தோட டிஸ்ட்ரிப்யூட்டர் விநாயகம்...” என்று ஃபோனை நீட்டினான். மொபைலை வாங்கிய நான், “ஹலோ... சொல்லுங்க. இருங்க... நான் வெளிய வரேன்...” என்று வெளியே வந்தவன், “உங்க தயவுல தியேட்டரே ஹவுஸ்ஃபுல்லு!” என்றேன்.

பதிலுக்கு விநாயகம், “உங்களுக்கு பயங்கர தில்லுங்க. அஞ்சே நாள்ல தியேட்டர மறுபடியும் திறந்து, மறுபடியும் அதே ‘பாருக்குட்டி’யப் போடுறீங்களே!” என்று கூற... எனக்கு பகீரென்றது. “‘பாருக்குட்டி’யா? என்னண்ணன் சொல்றீங்க? நான் ‘பாகுபலி’க்குல்ல அட்வான்ஸ் கொடுத்திருந்தேன்!” என்ற எனது கால்கள் பயத்தில் வெடவெடவென்று நடுங்கின.

“‘பாகுபலி’யா? அப்ப நீங்க நிஜமாவே ‘பாகுபலி’தான் கேட்டுருந்தீங்களா?” “ஆமாம்ணே!” “அய்யோ... ஒரு தப்பு நடந்து போயிருச்சு. மேனேஜர் ‘பாகுபலி 2’ன்னுதான் சொன்னாரு. ஆனா, 35 வருஷமா உங்க தியேட்டர்ல மலையாளப் படம் மட்டும்தானே போடுவீங்க.. தியேட்டருக்கு சீல் வச்சப்ப ‘பாருக்குட்டி பார்ட் டூ’ தானே ஓடிக்கிட்டிருந்துச்சு. அதனால தியேட்டரத் திறந்தவுடனே மறுபடியும் நீங்க ‘பாருக்குட்டி பார்ட் டூ’ கேட்டிருப்பீங்க.

இவனுங்க காதுல ‘பாகுபலி 2’ன்னு விழுந்திருக்கும்னு நினைச்சுகிட்டு...” என்று அவர் நிறுத்தினார். நான், “நினைச்சுகிட்டு...” என்றேன். “‘பாருக்குட்டி-2’ படத்தோட பாஸ்வேர்டதான் அனுப்பி வச்சேன்!” என்று விநாயகம் கூறி முடிக்க... எனக்குத் தலை சுற்றி, மயக்கம் வருவது போல் இருந்தது. “படம் இன்னும் போட லல்ல?” என்றார் விநாயகம். “நியூஸ் ரீல் ஓடிக்கிட்டிருக்கு...” “சீக்கிரம் போய் நிறுத்துங்க.

நான் வேற இந்தப் படத்துல, டைட்டிலுக்கு முன்னாடியே ஒரு குளிக்கிற சீன் சேத்துருக்கேன்!” “டைட்டிலுக்கு முன்னாடியே குளிக்கிற சீனா?” என்ற நான், “தேவராஜு…. தேவராஜு…”. என்று அலறியபடி ஆபரேட்டர் ரூமுக்கு படியேறினேன். வேகமாக வெளியே வந்த தேவராஜ், “என்னண்ணே... எடுத்தவுடனே தர்ப்பனா குளிக்கிற சீன் ஓடுது. ‘பாகுபலி’ படத்துலயும் தர்ப்பனா நடிச்சிருக்காங்களா?” என்றான்.

“‘பாகுபலி’ படத்துல தர்ப்பனாவா? பரதேசி நாயே...” என்று ஆபரேட்டர் அறைக்குள் ஓடி, சதுர ஓட்டை வழியாகப் பார்த்தேன். கீழே ஜனங்கள் இரைச்சலாக கத்திக்கொண்டிருந்தார்கள். “அய்யோ... நிறுத்துடா!” என்று நான் கத்த... தேவராஜ் நிறுத்துவதற்குள் திரையில் ‘பாருக்குட்டி-2’ என்று டைட்டில் ஓடியது!

- ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

ஓநாய்க்கு சிகிச்சை!

மியாமியில் ஷாப்பிங் மையத்தின் அருகில் காயமடைந்து சாலையில் கிடந்த நாயை, அங்கிருந்த விலங்கு அமைப்பு மீட்டு சிகிச்சை அளித்தது. அது நாயல்ல, ஓநாய் என்று அறிந்து ஷாக்கான குழுவினர், ‘நகருக்குள் ஊடுருவும் விலங்குகளிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும்’ என மெசேஜ் சொல்லி, ஓநாயை ஃப்ளோரிடாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மர்ம மனிதர்!

‘ஃபாரஸ்ட் கம்ப்’ (1994) படத்தில் டாம் ஹேங்க்ஸ் ரன்னிங் செல்வதைப் போல, கலிஃபோர்னியாவில் மர்ம மனிதர் முகத்தில் கண்ணாடியும், தாடியுமாக ஓடுவதை சிலர் இணையத்தில் வைரலாக்கியுள்ளனர். ‘நான் யார் என்பது முக்கியமல்ல. மக்கள் முகத்தில் என்னைப் பார்த்தவுடன் சிரிப்பு மலர்கிறது. அதுவே போதும்!’ என்று ரன்னிங்கிலேயே பதில் சொல்லுகிறார் இவர்!

இருதலை ஆமை!

தாய்லாந்தின் விலங்கு பராமரிப்பாளரான நாங் சோம்ஜாய் வெளியிட்ட இருதலை ஆமை வீடியோ, செம ஹிட். மைக்கேல் ஏஞ்சலோ என பெயரிடப்பட்ட இந்த இருதலை ஆமைக்கு வயது 3. ‘நான் பல்வேறு ரக ஆமைகளை வளர்த்து விற்றாலும் மைக்கேல் சம்திங் ஸ்பெஷல்!’ என நெகிழ்கிறார் சோம்ஜாய்.