விஜயனின் வில்கே.என்.சிவராமன் - 52

‘‘ஆதி ஏன் இப்படி செய்யறான்..?’’கேட்ட ஐஸ்வர்யாவின் பக்கம் கிருஷ்ணன் திரும்பவில்லை. மாறாக அவன் பார்வை ஆதியின் வெற்று மார்பிலேயே பதிந்திருந்தது. குறிப்பாக ‘KVQJUFS’ எழுத்துக்கள் மீது. ‘‘க்ருஷ்... உன்னைத்தான்...’’ உலுக்கினாள். ‘‘என்ன உன்னைத்தான்..?’’ சீறினான். ‘‘இன்னுமா உனக்குப் புரியலை?’’ ‘‘இல்ல...’’ ‘‘ஜெர்கின், சட்டை எல்லாம் கழற்றிட்டு யார் முன்னாடி ஆதி வெற்று மார்போட நிற்பான்?’’

‘‘எனக்கெப்படி தெரியும் க்ருஷ்? இதுக்கு முன்னாடி இந்தக் கோலத்துல இவனை நான் பார்த்ததேயில்லையே..?’’ ‘‘நானும்தான்...’’ ‘‘அப்புறம் எப்படி ஆதியோட பிஹேவியர் பத்தி அவ்வளவு துல்லியமா சொல்ற?’’ ‘‘கெஸ்ஸிங்...’’ ‘‘அப்படியென்னத்த யூகிச்ச..?’’ ‘‘உண்மையை!’’ ‘‘டேய்...’’ பற்களைக் கடித்தாள். ‘‘இருக்கிற ஆத்திரத்துல அப்படியே கடிச்சுடுவேன். இப்ப நாம இருக்கிற நிலைக்கு மணிரத்னம் ஸ்டைல்ல வசனம் பேசணுமா..?’’ சுற்றிலும் பார்த்தாள். ஆராய்ந்தாள்.

‘‘குரல் கொடுத்தது யாருனு தெரியலை. அதைக் கண்டுபிடிக்கறதா இல்ல எதுக்காக ஆதி இப்படி எதுவும் பேசாம மவுனமா முட்டி போட்டிருக்கான்னு யோசிக்கறதானு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்... இதுல நீ வேற...’’ ‘‘கூல் ஐஸ்... கூல்...’’ அவளை அணைத்தாற்போல் தோளில் கை போட்டான். ‘‘இப்ப என்ன நடந்துடுச்சுனு இப்படி மிரண்டு போயிருக்க..?’’ ‘‘விளையாடாத...’’ அவன் கரங்களைத் தட்டிவிட்டாள். ‘‘எல்லாம் தெரிஞ்சா மாதிரி ஒரு ஸ்லாங்குல பேசறியே... சொல்லு.

குரலை கேட்டதும் ஆதி ஏன் தன் சட்டையை கழட்டினான்?’’ ‘‘அந்தக் குரலுக்கு உரியவருக்கு இவன் கட்டுப்பட்டு இருக்கறதால...’’ ‘‘அதான் யார் அவர்?’’ ‘‘நீயே கெஸ் பண்ணு...’’ முறைத்தாள். ‘‘எந்த நேரத்துலயும் நிதானத்தை தவற விடக் கூடாது ஐஸ்... பொறுமையா ரீவைண்ட் பண்ணு. குறிப்பா ஆதியை நாம சந்திச்சதுலேந்து...’’ அவள் கண்களில் யோசனையின் ரேகைகள் படர்ந்தன.

‘‘தன்னோட அமைப்பான ‘Intelligent Design’ பத்தி நம்மகிட்ட பேசியிருக்கான்...’’ ‘‘ம்...’’ ‘‘அப்புறம்...’’ கிருஷ்ணனின் வாக்கியத்தை ஐஸ்வர்யா முடித்தாள். ‘‘மாஸ்டர் பத்தி...’’ சொல்லிக் கொண்டே வந்தவள் சுண்டி விட்டதுபோல் நிமிர்ந்தாள். ‘‘மாஸ்டர்?’’ ‘‘எக்ஸாக்ட்லி...’’ கிருஷ்ணன் 360 டிகிரியில் தன் கருவிழியைச் சுழற்றினான். ‘‘இதுக்கு மேல ஏன் மறைஞ்சு இருக்கீங்க? குரலைக் கேட்க வைச்சுட்டீங்க.

அப்படியே உருவத்தையும் காண்பிக்கறதுதானே முறை..? வாங்க மாஸ்டர்...’’ கிருஷ்ணன் உச்சரித்து முடிக்கவும் காலடி ஓசை கேட்கவும் சரியாக இருந்தது. அந்த திசை நோக்கி ஆதி எழுந்து தலை வணங்கினான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் அந்தப் பக்கம் திரும்பினார்கள். கோட் சூட் அணிந்தபடி க்ளீன் ஷேவ் முகத்துடன் ஒரு மனிதர் வந்து சேர்ந்தார். அவர் முகமெல்லாம்
புன்னகை நிரம்பி வழிந்தது.

‘‘க்ளாட் டூ மீட் போத் ஆஃப் யூ...’’ சொன்னவரை இருவரும் ஸ்கேன் செய்தார்கள். மாஸ்டர் அதை பொருட்படுத்தவில்லை. மாறாக ஆதியை கட்டி அணைத்தார். ‘‘தேங்க்ஸ் கண்ணா...’’ பதில் சொல்ல ஆதியின் உதடு துடித்தது. அமைதியாகவே நின்றான். ‘‘வெல்...’’ மூவரையும் பார்த்து மாஸ்டர் கண்சிமிட்டினார். ‘‘எல்லாம் என் கைங்கர்யம்னு புரிஞ்சுகிட்டீங்க. குட்...’’ ‘‘புரியாததும் இருக்கு...’’ கிருஷ்ணன் அவரைக் கூர்ந்து பார்த்தான்.

‘‘எது? உங்களை டிராப் பண்ணினதா..?’’ புருவத்தை உயர்த்தினார். ‘‘ஆதியையும் இதுல கோர்த்து விட்டதா..?’’ ‘‘...’’ ‘‘உங்க ரெண்டு பேரையும் போல எனக்கும் அர்ஜுனனின் வில் தேவை!’’ ‘‘...’’ ‘‘அதை எடுக்கறதுக்கான சாவி...’’ ‘‘தாராவோட ரேகை...’’ ஐஸ்வர்யா முடித்தாள். ‘‘இல்ல!’’ பளீரென்று மாஸ்டர் பிரகாசமானார். ‘‘தாராவோட ரேகை மட்டுமில்ல!’’ சட்டென்று தன் தலையை ஆதி உயர்த்தினான். கிருஷ்ணனையும் ஐஸ்வர்யாவையும் மாறி மாறிப் பார்த்தான்.

மூவரின் இதயங்களும் வேகமாக துடிக்கத் தொடங்கின. அதை அதிகரிப்பது போல் மாஸ்டர் தொடர்ந்தார். ‘‘விஜயனின் வில்லை எடுக்க மொத்தம் அஞ்சு ரேகைகள் தேவை. பஞ்ச பாண்டவர்கள்ல அர்ஜுனன் ஒருத்தர் இல்லையா... அதனால இப்படி மறைச்சு வைச்சிருக்காங்க...’’ ‘‘...’’ ‘‘அந்த அஞ்சுல ஒண்ணு தாரா...’’ மூவரும் எச்சிலை விழுங்கினார்கள். அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறார் என அவர்களது உள்ளுணர்வு உணர்த்தியதோ... அதையே கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் உச்சரித்தார். 

‘‘ப்ளஸ் நீங்க மூணு பேர்!’’ ‘‘...’’ ‘‘அமைப்பு சார்பா ஆதியை நாங்க பொத்திப் பொத்தி பாதுகாத்தது அவனும் ஒரு சாவியா இருந்ததாலதான்!’’ ‘‘எங்க இரண்டு பேரையும் எப்படி கண்டுபிடிச்சீங்க..?’’ ‘‘இந்திய அரசாங்கத்தோட உதவியாலதான் க்ருஷ்... கிருஷ்ணன்தானே உன் பேரு?’’தலையசைத்தான். ‘‘நீங்க ரெண்டு பேரும் ஆதார் அட்டை எடுத்திருக்கீங்க இல்லையா..? அவனை ஏன் பார்க்கற ஐஸ்வர்யா... யாருக்கும் தெரியாம ஆதார் எடுக்க ஒருமுறை இந்தியாவுக்கு கிருஷ்ணன் வந்திருக்கான்... ஓகே. ஃப்ளாஷ்பேக்கை ரொம்ப நீட்ட வேண்டாம்.

ஆதார் டேட்டாலேந்துதான் எந்தெந்த ரேகைகள் சாவியா இருக்கும்னு கண்டுபிடிச்சேன். கண்களை ஸ்கேன் செய்த டேட்டா பேஸ்லேந்து கைரேகை எப்படி இருக்கும்னு உத்தேசமா தீர்மானிச்சோம். உங்களை trap செஞ்சோம். இங்க ரேகைகள் எடுத்து அதை கன்ஃபார்ம் செய்துகிட்டோம்!’’ ‘‘அஞ்சாவது நீங்களா..?’’ நிதானமாக கேட்டாள் ஐஸ்வர்யா. ‘‘இல்ல. கார்க்கோடகர்! என் நோக்கத்தை எப்படியோ அவர் தெரிஞ்சுகிட்டார்.

அதனாலதான், தான் இறக்கறதுக்கு முன்னாடி முட்டை வழியா தாராவை எச்சரிச்சார்...’’ ‘‘ஸ்ரீரங்கம் ப்ளு ப்ரிண்ட் கூட...’’ கிருஷ்ணன் இழுத்தான். ஆமோதிக்கும் வகையில் மாஸ்டர் தோளைக் குலுக்கினார். ‘‘அர்ஜுனனோட வில் இருக்கிற இடம்... ஜாக்கிரதைனு தாராக்கு காஷன் கொடுத்தார்...’’ ‘‘அதனாலதான் அவ உங்களை ஏமாத்திட்டாளா..?’’ ‘‘எதை சொல்ற ஐஸ்வர்யா..?’’ ‘‘தெரியாத மாதிரி கேட்கறீங்களே மாஸ்டர்! அவளோட விரல்... செயற்கையாச்சே!

கிருஷ்ணன்தான் அதை கண்டுபிடிச்சு சொல்லிட்டானே? நீங்களும்தானே மறைஞ்சிருந்து கேட்டீங்க...’’ கடகடவென்று மாஸ்டர் சிரித்தார். ‘‘இவ்வளவு செஞ்சவன் அதுல ஏமாந்திருப்பேனா..?’’ ‘‘அப்ப...’’ ஐஸ்வர்யா இழுத்தாள். ‘‘அதேதான்! இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்களே உண்மையை தெரிஞ்சுப்பீங்க. கமான் லெட்ஸ் கோ... ஆதியையும் கூட்டிட்டு வாங்க...’’ ‘‘எங்க?’’ ‘‘என்ன கிருஷ் இப்படி கேட்டுட்ட... கடல் கடந்து நீ வந்தது எதுக்காகவோ... அதுக்காகத்தான்! புரியலை? எடுக்க வேண்டாமா விஜயனின் வில்லை?!’’

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்