விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 46

ஐஸ்வர்யாவின் கேள்வி அப்படியே கிருஷ்ணனை புரட்டிப் போட்டது. அவளைப் போலவே அவளது உள்ளங்கையில் பதில் எழுத முற்பட்டான். கார்க்கோடகரின் குரல் அதை தடுத்தது. ‘‘விரலால உள்ளங்கைல எழுதறது எல்லாம் அப்புறம் இருக்கட்டும்... நான் சொல்றதை கவனிங்க...’’ கிருஷ்ணனின் கையை கெட்டியாக ஐஸ்வர்யா பிடித்தாள். மவுனமாக தாங்கள் உரையாடியது எப்படி கார்க்கோடகருக்குத் தெரியும் என்ற வினா அவனுக்குள்ளும் எழுந்தது.

இதற்கான விடையையும் அவரே சொன்னார். ‘‘இதுவரை இப்படி கூட்டிட்டு வந்த எல்லாருமே இப்படித்தான் பேசிகிட்டாங்க...’’ ‘‘அப்படீன்னா இதுக்கு முன்னாடி பல பேரை இப்படி கூட்டிட்டு வந்திருக்கீங்களா..?’’ ஆதியின் குரலில் இறுக்கம் தென்பட்டது. ‘‘அதானே என் வேலை... எத்தனை காலமா அர்ஜுனன் வில்லை எடுக்க நாங்க முயற்சி செஞ்சுட்டு இருக்கோம்... எத்தனை மனிதர்களை, அவங்களோட குணாதிசயத்தை பார்த்திருப்போம்... பொதுவா என்ன செய்வாங்கனு தெரியாதா..?’’

‘‘நான் எதுவும் செய்யலை...’’ அழுத்தமாகச் சொன்னான் ஆதி. ‘‘இவங்க ரெண்டு பேரும் என்ன செய்திருப்பாங்கனு நினைக்கறீங்க..?’’ ‘‘வேறென்ன... நாம உயிரோட இருக்கமா இல்ல ஆன்மாவா நடமாடறோமானு அந்தப் பொண்ணு அந்தப் பையன் கிட்ட கேட்டிருப்பா..!’’ ‘‘இதுக்கு உங்க பதில் என்ன..? நாங்க செத்துட்டோமா இல்ல உங்களை மாதிரி நடமாடறோமா..?’’ கிருஷ்ணன் படபடத்தான்.

‘‘ரெண்டுக்கும் அர்த்தம் ஒண்ணுதான்! இதுக்கு ஒரே பதில்தான். இன்னமும் நீங்க மூணு பேரும் சாகலை. தூக்கத்துல கனவும் காணலை. எல்லாமே நிஜம்தான்...’’ பிசிறு தட்டாமல் சொன்ன கார்க்கோடகர், சட்டென்று விஷயத்துக்கு வந்தார். ‘‘இன்னும் கொஞ்ச நேரத்துல நாம ஓர் அறைக்குள்ள நுழைவோம். அங்க ஐஸ்வர்யாவுக்கும் கிருஷ்ணனுக்கும்தான் வேலை. ஆதி... அவங்க என்ன செய்யறாங்கனு நீ வேடிக்கை பாரு...’’ ‘‘நீங்க..?’’ ‘‘உங்களை கண்காணிப்பேன் கிருஷ்ணா..!’’ ‘‘ஒரேயொரு கேள்வி பெரியவரே...’’ சட்டென்று ஐஸ்வர்யா குறுக்கிட்டாள்.

‘‘...’’ ‘‘நிறைய பேரை இதுவரை இங்க கூட்டிட்டு வந்திருக்கறதா சொல்றீங்களே... அவங்களை எல்லாம் எந்த அடிப்படைல தேர்வு செய்தீங்க...’’ ‘‘உங்களை எப்படி குறி பார்த்து கொண்டு வந்தேனோ... அப்படித்தான்! இதோ வரவேண்டிய இடத்துக்கு வந்தாச்சு...’’ சொன்ன கார்க்கோடகர் எதையோ பிடித்து இழுத்தார். சட்டென்று வெளிச்சம் பாய்ந்தது. மூவரும் கண்களை அனிச்சையாக மூடிக்கொண்டார்கள்.

ஒளியைப் பார்த்தே பல காலமாகிறது என்பது அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது. சில நிமிடங்கள் அப்படியே நின்றார்கள். உடலைத் தழுவிய குளுமை அவர்களுக்கு எதையோ உணர்த்தியது. ‘‘ஏசியா..?’’ கேட்டபடியே ஐஸ்வர்யா கண்களைத் திறந்தாள். சொல்லி வைத்தது போல் மற்ற இருவரும் தங்கள் இமைகளைப் பிரித்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி... ஐஸ்வர்யா ஊகித்தது சரிதான். குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைதான் அவர்கள் கண் முன்னால் விரிந்தது.

ஆனால் - அதிர்ச்சியடைய வைத்தது அந்த அறை மட்டுமல்ல. அதற்குள் இருந்த கம்ப்யூட்டர்களும்தான்! மொத்தம் நான்கு கணினிகள். குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்திருந்தன. ‘‘இது எப்படி இங்க..?’’ ஆதியின் உச்சரிப்பில் ஆச்சர்யம் வழிந்தது. ‘‘இவங்களுக்காகத்தான். இப்பதான் பொருத்தினோம்...’’ ஐஸ்வர்யாவையும் கிருஷ்ணனையும் சுட்டிக் காட்டினார் கார்க்கோடகர்.

‘‘கைரேகையை போட்டோ பிடிச்ச இல்லையா... அந்த ரேகை யாரோடதுனு கம்ப்யூட்டர் மூலமா கண்டுபிடிங்க...’’ ‘‘மறுத்தா..?’’ ‘‘இங்கேந்து வெளியேற முடியாதுனு சொல்ல மாட்டேன் கிருஷ்ணா... உனக்கே அது தெரியும்! ஆனா, விஜயனோட வில்லை கொண்டு வர்றதா சத்தியம் செஞ்சு அட்வான்ஸ் வாங்கி இருக்கியே... அந்தத் தொகையை... அதை உனக்குக் கொடுத்த பன்னாட்டு நிறுவனங்களை யோசிச்சுப் பாரு... கூடவே மருத்துவமனைல இருக்கிற உன் அம்மாவையும்...’’ ‘‘மிரட்டறீங்களா?’’ ‘‘உண்மையை சொன்னேன்...’’ ‘‘திடீர்னு இப்படி வில்லனா மாறிட்டீங்களே பெரியவரே...’’ ‘‘தப்பு ஐஸ். உங்களுக்கு நான் வில்லன்னா எனக்கு நீங்க வில்லன்.

இந்த சமூகத்துக்கு..? நாம எல்லாருமே வில்லன்கள்தான். ஒவ்வொருத்தரோட தேவையும் குறிக்கோளும் லட்சியமும் ஒவ்வொரு விதமா பேச வைக்குது. அதை கேட்கறவங்க ஒவ்வொரு விதமா அர்த்தப்படுத்திக்கறாங்க...’’ ‘‘அப்ப இந்த ரேகை யாரோடதுனு கண்டுபிடிக்கத்தான் எங்களை தேர்வு செஞ்சு இங்க கூட்டிட்டு வந்தீங்களா..? அதுக்கு தாராவை பகடைக் காயா பயன்படுத்தினீங்களா..? அப்ப உண்மைல உங்க குறி நாங்கதானா..?’’ ஐஸ்வர்யாவின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் கார்க்கோடகர் வெறுமனே சிரித்தார்.

‘‘இவங்களால எப்படி அந்த ரேகை யாரோடதுனு கண்டு பிடிக்க முடியும்..?’’ ‘‘ஆதார் அட்டைக்காக இந்திய மக்களோட ரேகையை எல்லாம் நம்ம அரசாங்கம் எடுத்திருக்கே ஆதி... அதுலேந்துதான்! ஹேக்கிங்லதான் இவங்க ரெண்டு பேரும் கில்லாடியாச்சே...’’ எதையோ சொல்ல வந்த ஐஸ்வர்யா, கிருஷ்ணனின் கண் ஜாடையைப் புரிந்துகொண்டு பேச்சை நிறுத்தினாள். காரணமில்லாமல் க்ருஷ் எதையும் சொல்ல மாட்டான்... அவனைப் பின்தொடர்ந்து தானும் சென்று ஒரு கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்தாள்.

ஆதி தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதையும் அங்கும் இங்கும் நடந்தபடி கார்க்கோடகர் தங்களை கண்காணிப்பதையும் அவள் பொருட்படுத்தவில்லை. சட்டென்று அவள் கணினி 26 ஆங்கில எழுத்துக்களையும் தாறுமாறாக போட்டு உச்சரிக்க முடியாத சொல்லைத் துப்பியது. Code Word! க்ருஷ் அனுப்பியிருக்கிறான். அதை மனதுக்குள் சீர் செய்து படித்தாள். ‘அந்த ரேகை யாருடையது என நமக்குத் தெரிய வேண்டும். கண்டு பிடிப்போம்! நம்மை டிராப் செய்திருப்பதாக கார்க்கோடகர் நம்புகிறார்.

உண்மையில் நாம்தான் அவரை டிராப் செய்திருக்கிறோம்! Breaking Codes நமக்குத்தான் தெரியும். பிரேக் செய்வோம்... அர்ஜுனனின் வில்லை எடுப்போம்...’ ‘ஓகே...’ என பதில் அனுப்பிவிட்டு உற்சாகத்துடன் பாஸ்வேர்டை கண்டறிந்து அரசாங்க சர்வருக்குள் நுழைய ஆரம்பித்தாள். இருவரும் வேலை செய்வதை ஆதி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

கார்க்கோடகரின் கால்கள்தான் நடந்ததே தவிர அவரது பார்வை இருவரது கம்ப்யூட்டரையும் விட்டு விலகவில்லை. மொபைலில், தான் படம் பிடித்த ரேகையை கணினிக்குள் கிருஷ்ணன் ஏற்றினான். ஒரு காப்பியை ஐஸ்வர்யாவுக்கு பாஸ் செய்தான். இருவரும் சர்வர் துப்பிய ரேகைகளை மெல்ல மெல்ல ஒப்பிட ஆரம்பித்தார்கள்...

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்