கல்யாணத்தில் குழந்தை தொழிலாளர்கள்!



- ரோனி

கல்யாணத்தை கிராண்டாக ஐஸ்க்ரீம், தாம்பூலம், ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரி என கொண்டாடலாம். ஆனால் குழந்தைகளை ஆடம்பரத்திற்காக படுத்தி எடுத்தால்..? இலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகளின் மெகா ஆடம்பரத் திருமணம் இது. மணப்பெண் அணிந்திருந்த புடவையின் நீளம் 3.2 கி.மீ. பிரச்னை அதல்ல. அதனைத் தூக்கிப்பிடித்திருந்த 250 குழந்தைகளும் அரசுப்பள்ளியில் படிப்பவர்கள்.

அதோடு, சாலையில் நடந்த தம்பதிகளுக்கு பூத்தூவியது அரசுப்பள்ளியைச் சேர்ந்த நூறு மாணவர்கள். மாநில முதல்வர் சரத் எகநாயகதான் கல்யாணத்தின் ஸ்பெஷல் சீஃப் கெஸ்ட். ‘‘கல்வி கற்க வந்த மாணவர்களின் தன்மானத்தைக் குலைக்கும் இச்செயலைத் தண்டித்தே ஆகவேண்டும். இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது...’’ என சீறுகிறார் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநரான டே லிவேரா.