நம்ம எல்லோருக்குமே அளவுக்கு மீறிய ஆடம்பர ஆசை இருக்கு...



நிதானமாக பேசுகிறார் இயக்குநர் சுசி கணேசன்

- நா.கதிர்வேலன்

‘‘‘திருட்டுப்பயலே’தான் ஏஜிஎஸ்சின் முதல் படம். ஆசைக்காக ஒரு படம் எடுக்கிறோம்னு சொல்லி கல்பாத்தி அகோரம் சார் எடுத்தார். அது வெற்றியடைய, திரும்பிப் பார்த்தால் ‘திருட்டுப்பயலே 2,’ அவர்களின் 19வது படம். நான் ‘திருட்டுப்பயலே 2’வுக்கான ஒன்லைனை அவரிடம் சொன்னபோது ‘அருமையாக இருக்கு. தொடருங்க’ என்றார். இதில் கதைதான் உயிரோட்டம். நம்பகத்தன்மை அதில் பெரும் விஷயம். இது எல்லாமே கொண்டது ‘திருட்டுப்பயலே 2’ ’’ தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் சுசி கணேசன். பத்திரிகையாளராகவும், இயக்குநராகவும் வெற்றி முகம் கொண்டவர்.

‘திருட்டுப் பயலே 2’வின் அடியோட்டம் என்ன?
சோஷியல் மீடியா வளர்ந்த பிறகு எல்லோரும் நீதிபதியாகி, ஜட்ஜ்மென்ட் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நாம் சரியாக இல்லாமல், அடுத்தவங்களை விமர்சிக்கிறது இயல்பாப் போச்சு. ஒருத்தரோட 24 மணி நேர செல்போன் பேச்சை ஒட்டுக்கேட்க நேர்ந்தால், அவங்க 100% ப்யூர்னு சொல்லவே முடியாது.

‘மனதில் இருக்கிறதை ஓப்பனாக சொல்லுற உத்தமன் ஒருத்தனும் இல்லைடா’னு ஒரு வரி எங்க பாட்டில் வருது. அவர் இப்படி, இவர் அப்படின்னு பேசும்போது, நாம் எப்படினு யோசிக்கிறதில்லை. நமக்குள் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கிற திருட்டுத்தனத்தை யார் சொல்றது? இப்ப இருக்கிற சோஷியல் யுகத்தில் மக்களுக்கு கருத்து சொல்றது, சமூகத்தை திருத்துறதெல்லாம் சுத்த ஹம்பக். நாம் எல்லோரும் வேஷம் போடுறோம். திருக்குறளில் அத்தனை கருத்துகளும் இருக்கு. அந்தக் காலத்திலேயே சமூகம் கெட்டுப் போயே இருந்திருக்கு.

அதுல பொய் சொல்லாதேன்னு வருது. அப்பவே பொய் சொல்லியிருக்காங்க. பிறன்மனை நோக்குதல் பற்றிக்கூட இருக்கு. இத்தனைக்கும் வள்ளுவர் இருந்த காலம் தெளிவில்லாமலே இருக்கு. உன்னதமான, கறந்த பால் மாதிரி சுத்தமான சமூகம் நம்மகிட்டே இல்லை. 25 வருஷங்களுக்கு முன்னாடி ஊர்ல ஒரு தடவை ஜன்னலை திறந்து வைச்சாங்கன்னு எங்க அக்காவை அப்பா அடிச்சிட்டாரு. அக்கா மிதமிஞ்சி என்ன பார்த்திருக்கும்? வேடிக்கை பார்த்திருக்கும். மழை வருதான்னு மேகம் பார்த்திருக்கலாம். பசங்க விளையாடறதை ரசித்திருக்கலாம். அதுக்கே அப்படி.

இப்ப என் மகளை ஜன்னலை திறக்காதேன்னு சொல்ல முடியுமா? இப்ப வீட்ல கூரை இல்லை, சுவர் இல்லை. வானமே எல்லையா இருக்கு. எங்கோ இருக்கிற ஒருத்தனோட பக்கத்துல இருக்குற மாதிரி பார்த்திட்டு பேச முடியுது. Complete Change. இது நல்லதா கெட்டதா தெரியாது. நான் சொல்லப் போறதும் இது கிடையாது. இந்த லிமிட்டேஷனை வைச்சு ஒரு கதை சொல்றேன். எச்சரிக்கையும் இல்லை, நீதி போதனையும் கிடையாது. இது ஒரு போலீஸ் கதை. ‘வால்டர் வெற்றிவேல்,’ ‘சாமி,’ ‘சிங்கம்’னு வந்தாச்சு. என் பார்வையில் ஒரு போலீஸ் கதை.

பாபி சிம்ஹாவிற்கே இது முக்கியமான படம்...
ரொம்ப பிரபலமான நடிகர் இந்தப் படத்தை பண்ண முடியாது. சில குற்ற விஷயங்கள் இருக்கு. இமேஜ் பத்தி பயப்படுவாங்க. பாபி படத்தில் உள்ளே புகுந்த பிறகு இப்போ பார்த்தால் பிரமிப்பா இருக்கு. கேரக்டரில் செட்டில் ஆனபிறகு நல்ல சின்சியாரிட்டி இருக்கு. இதுக்கு முன்னாடி பண்ணின படங்களில் அவரது ஆக்‌ஷன் துருத்திக்கிட்டு நிற்கும். போலீஸ் கதையில் பொருந்தி வர்றது ரொம்ப கஷ்டம். ஏற்கனவே பாபியோட சீனியர்ஸ் செய்த விஷயங்கள் அவருக்கே தெரியும். அதையும் புரிந்து கொண்டதால் கேரக்டர் புதுசா வந்திருக்கு.

அமலாபால் பிரமாதமா இருக்காங்க...
படம் ஆரம்பிச்சபோது அவங்களுக்கு சில பர்சனல் பிராப்ளம் இருந்தது. அவங்களுக்கு முக்கியமான கேரக்டர். பெயர் அகல்விளக்கு. அசல் மூக்குத்தி குத்தி, சேலை கட்டி வந்து நிற்கும்போது, நடிக்கத் தொடங்கியபோது அவங்க என் மனசில் இருந்த ‘அகல்’தான். அவங்களையே டப்பிங் பேச வைச்சேன். இங்கிலீஷ்காரன்

திரையில் தமிழ் பேசறதை பார்த்து ரசிக்கிறோம். அமலாபால் பேசுவதை ரசிக்க மாட்டார்களா! பேசுங்கன்னு தைரியம் சொன்னேன். அருமையா வந்திருச்சு. இப்ப அவங்க நடிக்கிற படங்களில் எல்லாம் நானே டப்பிங் பேசுவேன்னு அக்ரிமென்ட்டில் சேர்ப்பதாகச் சொன்னார். நல்லது.

உங்க அறிமுகம் பிரசன்னாவை கொண்டு வந்திட்டிங்க...
‘ஃபைவ் ஸ்டார்’ வரும்போது வெடவெடன்னு இருப்பார். இப்ப பார்த்தால் இன்னும் அழகா, நேர்த்தியா உடற்கட்டோடு இருக்கார். நானும் இதில் டிடெக்டிவ்வாக வருகிறேன். ‘திருட்டுப்பயலே’யின் முதல் பாகத்தின் வாசனை இதில் இருக்கு. உங்க ரகசியம் இன்னொருத்தரிடம் சிக்கிட்டால், தப்பான வழியில் போனதை ஒருத்தன் பார்த்திட்டால்... இப்படியான சிக்கல், முடிச்சுகள் இதில் வருது.

கருத்து சொல்ல வரலைன்னு சொன்னேன். இருந்தாலும் முன்னாள் பத்திரிகையாளன் ஆச்சே... ஒரு சின்ன மெசேஜ் ஊடாடி வருது. நல்லா கூர்ந்து பார்த்தால் அனேகமா நம்ம எல்லோருக்குமே அளவுக்கு மீறிய ஆடம்பர ஆசை இருக்கு. எல்லோரும் அவங்க தகுதிக்கு மேல் ஆசைப்பட ஆரம்பிச்சு, அதை நியாயம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டோம். ஒவ்வொருத்தருடைய தனிப்பட்ட திருட்டுத்தனம் எப்பவும் வெளியே வர காத்திருக்கு. இதுதான் இந்தக் கதையின் பலம்.

பாடல்கள் ரொம்ப அருமையா இருக்கு. வித்யாசாகரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறீர்கள்?
‘நீ எப்படியிருக்கே, போனே பண்ணல, மறந்திட்டாய் இல்லை...’ என்ற சாதாரணப் பேச்சைக் கூட இழுத்துப் பாடி ஒரு பாட்டாக மாற்றி விடுகிறார்கள். ரொம்ப நாளாக இனிமையான அழகுணர்ச்சியில் மிளிரும் பாடல்களை கேட்க மறந்திட்டோம்னு தோணுச்சு. வித்யாசாகரை அழைத்த போதே ‘இந்த ட்ரம்ஸ் வேண்டாம், ‘காச் மூச்’ இரைச்சல் நம்ம பாடலில் வேண்டாம், வார்த்தைகள் நல்லா மேலெழும்பி புரியட்டும்’னு சொன்னேன். அப்படியே அருமையாகச் செய்தார். நாலே பாடல்கள். பாடலுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த பிறகுதான் இந்த வகை பாடல்களுக்கு நாம் ஏங்கி நிக்கிறோம்னு புரிஞ்சது.

ஒளிப்பதிவாளர் செல்லத்துரை இதில் மேஜிக் செய்திருக்கார். அனுபவம் செறிந்திருந்தும் அவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. ‘என்னிடம் உங்க படத்தில் ஒரு வாய்ப்பு வேணும்’னு மும்பையில் இருக்கும்போது கேட்டுக் கொண்டே இருப்பார். ‘திருட்டுப்பயலே 2’ பண்ணும்போது அவர்கிட்டே ‘நீங்கதான் கேமராமேன்’னு சொன்னேன். அவரால் நம்ப முடியலை. வடிகால் அமைத்துக் கொடுத்தால் யாரும் பிரமாதப்படுத்திவிட முடியும் என்பதற்கு அவரே ஓர் உதாரணம். எடிட்டர் ராஜா முகமது அவருடைய வேலையை திறம்பட செய்திருக்கார். நேஷனல் அவார்டு பெற்ற கரங்களின் நேர்த்தி படத்தை அடுக்கியதில் வருது.