இணைந்த கைகள்
கன்சர்வேஷன் இந்தியாவை உருவாக்கிய இரு நண்பர்களின் கதை
- ச.அன்பரசு
இன்றைய காலகட்டத்தில் வார இறுதி விடுமுறையில் இரு நண்பர்கள் ஒன்றாகச் சந்தித்தால் என்ன நடக்கும்? கத்தரிக்காய் கொத்ஸோடு பிரியாணி சாப்பிட்டு பாட்டில் எடுத்துக் கொண்டாடுவார்கள். ஆனால், இந்த ஸ்டோரி வேறு மாதிரி. ஒரு வார இறுதி. அறிமுகமற்ற இருவர் சந்தித்து நண்பரானார்கள். இருவரின் ஆர்வமும் காடும் காடு சார்ந்ததுமாய் இருந்தது. வனப் பாதுகாப்புக்கு ஓர் அமைப்பு ஏற்படுத்தினால் என்ன என்று யோசித்தார்கள். உடனே களத்தில் இறங்கிவிட்டார்கள்.
சென்னைக்காரரான சேகர் தத்தாரியா பாம்புகளின் காதலர் என்றால், பெங்களூர்வாசியான ராம்கி ஸ்ரீனிவாசன் பறவைகளின் உபாசகர். பிபிசி, நேஷனல் ஜியோகி ரபி எனப் புகழ்பெற்ற டிவி சேனல்களுக்காக ஆவணப்படங்களை எடுத்துள்ள காட்டுயிர் திரைப்பட இயக்குநரான சேகர், தன் பணிக்காக ஸ்வீடனின் ரோலக்ஸ், எட்பெர்க் ஆகிய உயரிய விருது அங்கீகாரங்களைப் பெற்றவர்.
தொடக்கத்தில் ப்ராக்டர் அண்ட் கேபிள் நிறுவனத்தில் பணியாற்றியவர், பின்னாளில் மார்க்கெட்டிக்ஸ் எனும் ஸ்டார்ட்அப் தொடங்கி ஜெயித்தார். திடீரென காட்டுயிர்கள் மீது ஆர்வம் பிறக்க, இன்று பறவையியலாளர் பிளஸ் போட்டோகிராபர். ‘‘எனக்கு வைல்டு லைஃப் போட்டோகிராபி மீது சிறுவயதில் பெரிய ஆர்வம் இல்லை. புகைப்படங்கள் மூலம் வனம் மேம்படும் என்ற நம்பிக்கை அறவே கிடையாது.
உங்களுக்குக் காடு மீது உண்மையான மதிப்பு, ஆர்வம் இருந்தால் அதில் உள்ள உயிர்களைக் காப்பாற்றப் போராடியிருக்க வேண்டாமா? அப்படி ஆக்கபூர்வச் செயல்பாடுகள் ஏன் நிகழவில்லை? இன்றைய வைல்டு லைஃப் போட்டோகிராபர்களுக்கும் இந்தப் பிரச்னையில் பங்குண்டு...’’ என ஆவேசமாகப் பேசுகிறார் சூழலியலாளர் ராம்கி. அதேசமயம் சேகரும் இதே கேள்விக்கான பதிலைத்தான் தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ராம்கியுடன் சந்திப்பு நடந்தது.
2009ம் ஆண்டில் ராம்கியின் வீட்டில் நடந்த சில மணி நேர சந்திப்பில், கன்சர்வேஷன் இந்தியா ப்ளூபிரிண்ட் ரெடியானது. தன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை அப்போதுதான் விற்றிருந்த ராம்கி, இணையதளத்துக்கான பெயரையும் முன்னமே பதிவு செய்திருந்தார். ‘‘வனங்கள் குறித்து பலரும் அதிகம் அறியாததால், அறிவியல், இலக்கியம் மூலம் அதுகுறித்த விழிப்புணர்வைத் தரலாம் என்ற நம்பிக்கை முயற்சி இது...’’ என்று புன்னகைக்கும் ராம்கி - சேகர் இருவருக்கும் சூழலியலில் உயிரியலாளர் டாக்டர் உல்லாஸ் காரந்த் மிகப்பெரும் இன்ஸ்பிரேஷன்.
இணையதளத்தை ஸ்பான்ஸர்ஷிப் மூலம் உருவாக்குவதுதான் இருவரின் பிளான். ஆனால், கமர்ஷியல் புயலில் லட்சியம் பப்படம் ஆகிவிடும் என்ற பயத்தில் இருவருமே தங்கள் கையிருப்பைச் செலவழித்து கன்சர்வேஷன் இந்தியா தளத்தைத் தொடங்கியுள்ளனர். ‘‘இந்த தளத்துக்கு எனத் தனி ஊழியர்கள், சொத்துக்கள் கிடையாது. தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் விஷயங்களை நானும், தளத்தின் செய்திகளுக்கு சேகரும் பொறுப்பு...’’ என்கிறார் ராம்கி.
இப்போது கன்சர்வேஷன் தளத்தை விசிட் செய்யும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரம். சராசரியாக இதுவரை இந்தத் தளத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன். ‘‘நம்பிக்கையான தரமான செய்திகள்தான் எங்கள் சொத்து. சேகரின் பங்கேற்பில் ஆழமான விரிவான கட்டுரைகள், செய்தித் தொகுப்பு இவையே கன்சர்வேஷன் இந்தியா ஜெயிக்க காரணம்...’’ என்கிறார் ராம்கி.
கன்சர்வேஷன் தளத்தின் வசீகர செய்தித் தொகுப்புக்குக் காரணமான சேகர், சென்னையில் மிடில் கிளாஸ் குடும்ப வாரிசு. பள்ளிப் படிப்பைக் கடந்த புத்தக வாசிப்பு குடும்பச் சொத்து. தன் 10 வயதில் சகோதரி கொடுத்த ஜெரால்டு டூரல்லின் ‘Rosie is my relative’ என்ற நூலில் சிறு ஊற்றாகத் தொடங்கிய வாசிப்பு 12 வயதில் பிரிட்டிஷ் கவுன்சிலில் உறுப்பினராக வைத்தது.
ஜிம் கார்பெட், ஜேன் குட்ஆல், சலீம் அலி ஆகியோரின் நூல்களை விறுவிறுவென படித்து முடித்தவர், அடுத்த ஆண்டே பாம்புப் பூங்காவில் தன்னார்வலராக சேர முடியுமா எனத் தீவிர ஆர்வக்கோளாறில் அதன் இயக்குநர் விட்டேகரிடம் பர்மிஷன் கேட்டுவிட்டார். முதலில் அனுமதி மறுத்த விட்டேகர், சேகரின் ஆர்வத்துக்கு இணங்க, பாம்பு பூங்கா பணி முழு நேரமும் பள்ளி பார்ட் டைமுமாக மாறியது. லயோலா கல்லூரியில் படிக்கும்போது இருளர்களோடு காடுகளில் அலைந்து திரிந்து பல்வேறு உயிரி களைப் பற்றி கசடறக் கற்றது வாழ்வின் முக்கிய நிகழ்வு.
அப்போது பாம்பு பூங்காவைப் படம் எடுக்க அமெரிக்காவிலிருந்து வந்த ஆவணப்பட இயக்குநர்களான ஜான் மற்றும் லூயிஸ் ஆகியோரின் உதவியாளராகப் பணிபுரிந்து ஆவணப்பட நுணுக்கங்களைத் துலக்கமாகக் கற்ற சேகர், விட்டேகருடன் இணைந்து ஈகோ மீடியா நிறுவனத்தைத் தொடங்கி ‘Sanctuary Asia’ என்ற இதழுக்கு முதல் அசைன்மென்டை சிறப்பாகச் செய்தார்.
அதில் கிடைத்த புகழால், டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிரபி உள்ளிட்ட டி.வி சேனல்களின் பட வாய்ப்புகளும் காலிங்பெல் அடிக்க, 2010ல் உலகறிந்த ஆவணப்பட இயக்குநரானார். ‘‘எனது லட்சியத்தில் நான் ஜெயித்ததோடு, புகழ், பணம் போனஸாகக் கிடைத்தன என்றாலும் வனத்தைப் பாதுகாக்க இவை அமீபா அளவும் பயன்படவில்லை என்ற அதிருப்தி நெஞ்சில் குறையவேயில்லை...’’ என்கிறார் சேகர்.
பெங்களூரைச் சேர்ந்த வைல்டு லைஃப் ஃபர்ஸ்ட் என்ற சூழலியல் அமைப்புக்காக ‘Mindless Mining: the tragedy of Kudremukh’ என்ற ஆவணப் படத்தை சேகர் எடுத்ததும், அந்தப் படத்தின் மூலம் குட்ரேமுக்கில் உள்ள இரும்புத்தாது தொழிற்சாலையை உச்ச நீதிமன்றம் மூட உத்தரவிட்டதும் சேகரின் டாகுமெண்டரி திறமைக்கு சூப்பர் சாம்பிள். ராம்கி - சேகரின் பணிகளில் முக்கியமானது நாகலாந்தில் ஃபால்கன் பறவைகளின் அழிவைக் கட்டுப்படுத்த உழைத்ததுதான். பசுமைத் தோழமை வெல்லட்டும்!
பச்சை உடுத்திய காடுகள்!
வளர்ச்சி - 5,081 ச.கி.மீ (2013 - 2015) 21.34% மாங்குரோவ் (112 ச.கி.மீ).
காற்றிலுள்ள கார்பன் - 103 மில்லியன் டன்கள்.
இந்திய சட்டத்தின்படி - 3 இல் 1 பங்கு காடு (அடர்த்தியான காடு 2.61%, அடர்த்தியற்றவை - 9.59%, திறந்தவெளி காடு - 9.14%).
அடர்த்தியான காடுகள் - மிசோராம் (88.93%), அந்தமான் (1,930 ச.கி.மீ), உ.பி. (572 ச.கி.மீ), தமிழ்நாடு (100 ச.கி.மீ)
இயற்கைப் பேரழிவு!
காடுகளின் இழப்பு - 2,510 ச.கி.மீ. (2013).
இழப்பில் முன்னணி - காஷ்மீர், உத்தரகாண்ட், மேகாலயா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, அருணாச்சலப் பிரதேசம்.
குடியிருப்பாக மாறிய காடுகள் - 2,254 ச.கி.மீ.
(The India State Forest Report 2015 தகவல்படி)
|