வெளிநாட்டில் விவசாயம் செய்யும் இந்தியர்கள்!



- ச.அன்பரசு

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்புகள் என்றால் விவசாயம்தான் கிராமங்களின் முதுகெலும்பு. அரசின் பொருளாதாரக் கொள்கைகள், உலகமயமாக்கல் போன்ற பல்வேறு சூழல்களால் இந்திய விவசாயிகள் நாள்தோறும் தற்கொலை செய்துகொண்டிருக்க, மறுபுறம் விவசாயத்தை விட முடியாத மக்கள் வெளிநாடுகளுக்குப் பறந்துபோய் ஏர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பஞ்சாபியர்கள்தான் இதில் அதிகம்.

பஞ்சாப், ஐந்து நதிகள் பாயும் வளமான நிலம். காலகாலமாய் விவசாயம் செழித்த பகுதி. மொத்த தேசத்துக்கும் கோதுமையும் அரிசியும் வழங்கும் அன்னதாதாக்கள் பஞ்சாபியர்கள்தான். பஞ்சாபில் விவசாயம் பொய்த்துப்போகத் தொடங்கியவுடன் விவசாய டிஎன்ஏ நிறைந்த சிங்குகள் கனடாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் கிளம்பிப் போய் கலப்பை பிடித்து மகசூல் பார்த்து மகிழ்கிறார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, வட ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நிலங்கள் அரசின் மானிய விலையில் ஒரு ஏக்கர் ரூ.500க்கு கிடைக்கத் தொடங்கியதும் தொடைதட்டிக் கிளம்பிவிட்டார்கள் சிங்குகள். விவசாயத்தை அந்த நிலத்தில் வளர்ப்பதற்காக எத்தியோப்பிய அரசும் நிறைய சலுகைகள் வழங்க அத்தனையையும் கப்பென பிடித்துக்கொண்டு எத்தியோப்பிய வயல்களில் பங்காரா இசைத்தபடி இப்போது பண்ணையம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பஞ்சாபின் ஃபாஸில்கா மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத்தைச் சேர்ந்த விவசாயி உபேந்திரகுமார், எத்தியோப்பியாவின் பாஹிர் டார் பகுதியில் 1,500 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார். ‘‘உரம் தேவைப்படாத நல்ல வளமான நிலம் அது. முதலில் காய்கறிகள், பின்னர் வாசனைப் பொருட்களுக்கான பயிர்களைப் பயிரிட்டேன். அருகிலேயே விமான நிலையம் இருப்பது போய்வர வசதி...’’ என்கிறார்.

தொலைதூரத்தில் இருந்து நிர்வாகம் செய்வது சிரமமாய் இருக்கிறது என இப்போதுதான் கைவிட்டிருக்கிறார். ஜிம்பாப்வே, மொசாம்பிக் ஆகியவற்றிலும் பஞ்சாபியர்களின் அன்னக்கொடி காற்றில் பறக்கிறது. கருங்கடல், காகசஸ் மலை சூழ இருக்கும் முன்னாள் சோவியத் குடியரசு நாடான ஜார்ஜியாவில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.20 ஆயிரம் என அரசு அறிவித்தவுடன் அங்கும் நுழைந்தது பஞ்சாபியர் படை.

கடந்த 2012ம் ஆண்டிலிருந்தே ஜார்ஜியாவின் தலைநகர் பிலிஸியிலும், அங்கிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள சோனோரி என்னும் காகசியன் மலைகள் சூழ்ந்த கிராமத்திலும் ஏறத்தாழ 2,000 பஞ்சாபிய குடும்பங்கள் குடியேறியுள்ளன. ‘‘அதிகரிக்கும் விவசாய செலவுகள், இன்ஸூரன்ஸ் இன்மை, தரகர்களின் தொல்லை, அரசின் ஆதரவின்மை, விவசாயிகள் தற்கொலை, போதைக் கலாசாரம், விவசாய நிலம் ரியல் எஸ்டேட்டாக மாறும் அவலத்தை எவ்வளவுநாள் பொறுத்திருப்பது? எனவே ஐரோப்பிய நாடுகளில் பஞ்சாபியர்களின் குடியேற்றங்கள் ஆச்சரியமான ஒன்றல்ல...’’ என்கிறார் விவசாயி குஷ்வந்த் சிங்.

இவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். எண்பதுகளில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள். ஃபாரீன் விவசாயம், விவசாயிகளை ஈர்க்கக் காரணம் ஊழலற்ற எளிய நடைமுறைகள், குற்றங்கள் குறைவு என்ற நிம்மதியான சூழல்தான். மேலும், பஞ்சாபியர்கள் தங்கள் குடும்பத்தோடு இங்கு குடியமரவும் இதுவே முக்கியக் காரணம்.

உலக அளவில் எளிதாகத் தொழில் தொடங்க உதவும் நாடுகளில் ஜார்ஜியாவுக்கு 17வது இடம். அதோடு நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.7,059 மட்டுமே. நூறு தொழில்களைச் செய்வதற்கும் ஒரே அனுமதி போதும். விவசாய நிலங்கள் அதன் அமைவிடத்தைப் பொறுத்து இந்திய மதிப்பில் ரூ.60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை குத்தகைக்குக் கிடைக்கின்றன. தரம் இல்லாத உரங்கள், வணிக மின்சாரக் கட்டணம், சொத்துவரி, விலையுயர்ந்த விதைகள் ஆகியவற்றோடு மொழி, உணவு உள்ளிட்ட மைனஸ்
பக்கங்களும் இதில் உள்ளன.

இந்திய விவசாயிகள் மட்டுமல்ல, சீனர்கள், ஈரானியர்கள், ரஷியர்கள் ஆகியோரையும் ஜார்ஜியா அரசு வரவேற்று உணவு தன்னிறைவுக்காக விவசாயத்தில் ஈடுபடுத்தியதை உள்ளூர் விவசாயிகள் விரும்பவில்லை. வெளிநாட்டு மக்கள் ஜார்ஜியாவில் நிலங்களை வாங்குவதற்கு தடை விதிக்க உள்நாட்டு விவசாயிகள் ஆக்ரோஷப் போராட்டம் நடத்தியதால், 2014ம் ஆண்டு அரசு இதற்கான தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தது. எனவே, நஷ்டத்திலிருந்து தப்ப பஞ்சாபியர்கள் நிலத்தை விற்கவும்; குத்தகை நிலங்களை குறைத்துக்கொள்ளவும் தொடங்கினர்.

காய்கறி, கோதுமை என விவசாயம் செய்தவர்கள் பின்னாளில் விவசாயத்தை மட்டும் நம்பியிருக்காமல் சுற்றுலா வாகனங்கள் எனத் தொழில் நிறுவனங்களிலும் சமயோசிதமாகக் கால் பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் விவசாயம் செய்யும் இந்த பஞ்சாப் சிங்கங்கள் மனதில் தங்கள் தாயகத்தில் விரைவில் விவசாய சூழல் சீராகும் என்ற நம்பிக்கை மலைபோல் உள்ளது. அந்த நம்பிக்கைதான் அந்நிய வயல்களில் அவர்களை உற்சாகமாய் உழைக்க வைக்கிறது. உழவுக்கு வந்தனை செய்வோம்!    

அக்ரி தேசம் ஜார்ஜியா!

ஜார்ஜியாவில் முன்பு பயிரிடப்பட்டவை தேயிலை, சோளம், திராட்சை ஆகியவை மட்டுமே. சோவியத்திலிருந்தபோது 428 ஹெக்டேர்கள் நிலம் கூட்டுப்பண்ணை முறையில் இருந்தன. சோவியத்திலிருந்து பிரிந்து உள்நாட்டுப் போர் சிக்கல் ஏற்பட்டபோது நிலங்கள் தனியார்மயமாயின. 1990க்கு முன் தனியாரிடமிருந்த நிலங்கள் 7%. இது, 2000ம் ஆண்டுக்குப் பிறகு 37% என உயர்ந்து இன்று 100% விவசாய உற்பத்தி தனியாரிடமே உள்ளது.

கிராம மக்களுக்கு நிலங்கள் பிரித்தளிக்கப்பட்டதில் தனியார் நிலத்தின் அளவு 0.96%. இதில் 5% விவசாய பண்ணைகள் மட்டுமே 2 ஹெக்டேர்களுக்கும் அதிகம். ஜார்ஜியாவின் ஜி.டி.பியில் விவசாயத்தின் பங்கு 8.4% (2012). விவசாய ஏற்றுமதி மதிப்பு 1.1 பில்லியன் டாலர்கள் (2012). (www.wikipedia.org, www.moa.gov.ge தகவல்படி).

எத்தியோப்பியா

தேன் மற்றும் தேன்மெழுகு தயாரிப்பில் முன்னணி நாடு. நைஜீரியாவுக்கு அடுத்து அதிக மக்கள்தொகையாக 96 மில்லியன் பேர் வசிக்கிறார்கள். இவர்களில் 85% மக்களின் தொழில் விவசாயம்தான். பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு 36.7%, ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7%. காபி, பருப்புகள், தோல் பொருட்கள் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். (www.fao.org, www.export.gov 2015 - 16 தகவல்படி)