COFFEE TABLE



- குங்குமம் டீம்

ஃபேஷன்!
பாதங்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஷூ, செருப்பு அணிவது ஓல்டு ஃபேஷன் ஆகிவிட்டது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் உள்ள ‘Design ideas’ பக்கத்தில் ‘This is awesome creativity’ என்ற தலைப்பில் உள்ள வீடியோவை 20 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.

அப்படியென்ன அந்த வீடியோவில்... என பார்த்தால், நாம் தூக்கியெறியும் பயன்படாத பொருட்களைக் கொண்டு, காலணிகளை டிசைன் செய்துள்ளனர். ‘எப்படி இப்படி முட்டாள்தனமா டிசைன் பண்றாங்க?’ என்ற கண்டன கமெண்ட்களும், ‘இதெல்லாம் ஒரு கலை’ என்ற ஆதரவு கமெண்ட்களும் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றன.

தில்லி குளோப்ஜாமூன்
தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார் ‘புரூஸ்லீ’ ஹீரோயின் கீர்த்தி கர்பந்தா, தில்லியில் பிறந்து வளர்ந்த மாடலிங் குளோப் ஜாமூன். ஏற்கெனவே பாலிவுட்டிலும் கன்னடத்திலும் பிஸி பொண்ணு. இப்போது துல்கர் சல்மானுடன் மலையாளத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ‘‘படத்துல எனக்கு க்ளாமர் கிடையாது. சின்ன கேரக்டர்தான். இருந்தாலும் நடிப்பதற்கான ஸ்கோப் இருக்கு. கொஞ்சம் மலையாளமும் பேசப்போறேன்...’’ எனச் சொல்லும் கீர்த்தி, தமிழில் நடிக்கவே ஆர்வமாக இருக்கிறார்.

பென் டிரைவ்!
பென் டிரைவ் பிரியர்களுக்கு ரொம்ப பிடித்தமான பெயர் சான்டிஸ்க். சமீபத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என்றே பிரத்யேகமான பென் டிரைவ்வை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சான்டிஸ்க் நிறுவனம். டேட்டா கேபிள் மூலம் ஸ்மார்ட் போனுடன் இந்த பென் டிரைவ்வை நீங்கள் கனெக்ட் செய்துகொள்ள முடியும்.

ப்ளூடுத் வழியாக பாடல்களை, படங்களை, டேட்டாக்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த பென் டிரைவ் ஒரு வரப்பிரசாதம். 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி, 128 ஜிபி என்று நான்கு விதமான ஸ்டோரேஜ்களில் கிடைக்கிறது, அமேசான் இணையதளத்தில். இதன் விலை ரூ.700 முதல் ரூ.3,500 வரை.

சாகச ஓட்டம்!
மாரத்தான் போட்டியில் முதல் ஆளாக ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். அடைய வேண்டிய இலக்கு சில அடிகள் தூரத்தில்தான் இருக்கிறது. ஆனால், இலக்கை நெருங்கும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துவிடுகிறீர்கள். என்ன செய்வீர்கள்? பதிலை யோசித்துக்கொண்டே கடந்த வாரம் வாஷிங்டனில் நடந்த மாரத்தான் போட்டியில்  பைலிங் என்ற வீராங்கனை செய்த சாகசத்தை அறிந்துகொள்ளலாம். பைலிங் இலக்கை அடைய 36 அடிகளே இருக்கிறது.

ஆனால், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துவிடுகிறார். மேலே எழ பலமுறை முயற்சி செய்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. உடனே தரையில் உருண்டு கொண்டே போய் இலக்கை அடைந்ததோடு போட்டியையும் பலரின் இதயங்களையும் வென்றுவிட்டார். இந்த அரிய காட்சியை வீடியோவாக்கி இணையத்தில் பதிவிட, லட்சக்கணக்கானோர் பார்த்து வைரலாக்கி விட்டனர். 

மரணக் குழி!
இந்திய சாலைகள் ஆபத்தானவையா? ஆம்; கடந்த நான்கு வருடங்களில் மட்டும் வாகனத்தில் போகும்போதும், நடந்து செல்லும்போதும் சாலைகளில் உள்ள குழிகளில் விழுந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,386 என்கிறது ஓர் ஆய்வு. அதாவது சராசரியாக ஒரு நாளில் ஏழு பேர் இறந்திருக்கின்றனர். இதில் முதல் இடத்தை வகிப்பது உத்திரப் பிரதேசத்திலுள்ள சாலைகள்தான். இங்குள்ள சாலைகள் 3,428 பேரின் உயிரைப் பறித்திருக்கிறது.

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், ஆந்திராவில் உள்ள சாலைகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன. ஏழாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பது கொஞ்சம் ஆறுதல். ‘‘பல மரணங்கள் இந்தக் குழியால் ஏற்பட்டாலும், அதை சாதாரண விபத்தாகவே காவல்துறை பதிந்துவிடுகிறது. அதனால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘‘இதுமாதிரியான மரணங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும்...’’ என்றும் அந்த ஆர்வலர்கள் குரல் கொடுக்கிறார்கள்.