இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



அனுபவத் தொடர் - 14

பா.ராகவன்

சென்ற அத்தியாயத்தின் இறுதியில் கொஞ்சம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேனல்லவா? அப்படியே இன்னும் இரண்டு அத்தியாயங்கள் முடிகிற வரைக்கும் யோசித்துக்கொண்டிருப்போம். யோசனையின் முடிவில் கிடைத்த அந்த வழியைச் சொல்லுவதற்கு முன்னால் வேறொரு சங்கதியைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது ரொம்ப முக்கியமான விவகாரம். பேலியோவில் உடம்பு இளைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் ஒரே எம்எல்ஏ.

எனக்கு உணவுப் பரிந்துரை செய்து, வழிகாட்டிய நண்பர் சங்கர்ஜி, கூடவே இன்னொன்றைச் சொன்னார். தினமும் சுமார் நாலாயிரம் தப்படிகளாவது மிதமான வேகத்தில் நடக்க வேண்டும்! இதெல்லாம் அக்கிரமம் இல்லையா? யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டார்! ‘நடையில் நின்றுயர் நாயகன்’ என்று ராமனைப் பார்த்து கம்பர்  சொன்னதெல்லாம் சும்மா. நான் நடந்தால் அண்ட சராசரமும் கிடுகிடுக்கும். பிரளயம் வரும். அது கும்பகர்ணன் போருக்குக் கிளம்புகிற காட்சிக்குச் சற்றும் சளைக்காத சம்பவ சரித்திரமாக இருக்கும்.

ஏனென்றால் நமது தேக ஆகிருதி அப்படி. பன்னெடுங்காலமாக உருட்டி உருட்டி உருவேற்றி வைத்திருக்கும் கருணையற்ற கிழங்கின் களேபர வடிவமல்லவா? தவிரவும் கால்கள் என்பன, மடக்கி அமர்வதற்கும் நீட்டிப் படுப்பதற்கும் மட்டும் பயன்படும் உறுப்புகள் என்றே எண்ணி வந்திருப்பவன் நான். இந்த நடப்பது, ஓடுவது, குதிப்பதெல்லாம் என்னைப் போன்ற சொகுசு சுந்தரர்களுக்கு அநாசாரம்.

உட்கார்ந்த இடத்தில் எதையும் செய்வதுதான் என் வழக்கம். உட்கார்ந்தபடி செய்ய முடியாத எதையும் அதுவரை நான் செய்ததில்லை. அட ஒரு கீரைக்கட்டு வாங்கத் தெரு முனை வரை போகிற வழக்கம்கூடக் கிடையாது. எங்காவது வெளியூர் போனால்கூட இறங்கிய இடத்தில் வாடகை வண்டி அமர்த்திக்கொண்டுவிடுகிற உத்தமனாகவே இருந்தேன்.

இக்காரணங்களால் என் கால்களுக்கு நடப்பது என்னும் கலை மறந்துவிட்டிருந்தது. ஆனால், பேலியோவில் அரை மணி நேர நடை என்பது கட்டாய விதி என்றார் நண்பர். ரொம்ப வேகமெல்லாம் வேண்டாம். ஆயிரக்கணக்கான கலோரிகள் அதன்மூலம் செலவிட வேண்டாம். சும்மா ஒரு நூறு, நூற்றைம்பது கலோரி எரிந்தால் போதும். மென் நடை. ‘வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று இளங்கோவடிகள் கண்ணகியைச் சொல்லுவாரே, அந்த மாதிரி நடை போதும்.

இதென்னடா புது பேஜார் என்று கவலையுடன்தான் முதல் நாள் களத்தில் இறங்கினேன். முதல் பத்திருபது அடிகள் நடந்து முடிக்கிறபோதே மூச்சு வாங்கியது. பத்து நிமிடம் ஆகியிருக்குமா என்று மணி பார்த்தேன். ம்ஹும். பத்து வினாடிகள்தாம் ஆகியிருந்தன. சரி, இன்னொரு பத்தடி நடப்போம் என்று நடந்தேன். உடல் மெல்ல வியர்க்கத் தொடங்கியது. என் இலக்கு, நான் வசிக்கும் வீதியைக் கிழக்கு மேற்காக ஒருதரம் அளந்து பார்த்துவிடுவது. ஆண்டுக்கணக்கில் அந்த வீதி என் உடைமையாகத்தான் இருக்கிறது. ஆனால், என் வண்டிச் சக்கரங்களுக்குத்தான் அது பழக்கமே தவிர, பாதங்களுக்கல்ல.

நடக்க ஆரம்பித்தபோது, வீதியானது திரவுபதி வஸ்திரம் மாதிரி நீண்டுகொண்டே போவதாகப் பட்டது. முடிவற்ற பெரும்பாதை. கரடுமுரடானது. ஏற்ற இறக்கங்கள் கொண்டது. வாழ்க்கையைப் போன்றதுதான். வாழ்ந்துதானே தீர்க்க வேண்டியிருக்கிறது? இது மிகையே அல்ல. அந்த முதல் நாள் நான் என் வீட்டில் இருந்து புறப்பட்டு, அந்தச் சாலையின் இறுதிப் புள்ளிவரை போய்ச் சேர்ந்து திரும்பிப் பார்த்தபோது உண்மையிலேயே பயந்துவிட்டேன்.

எப்படி திரும்பி வீட்டுக்குப் போகப் போகிறேன்? போன் செய்து மனைவியை வண்டி எடுத்து வரச் சொல்லலாமா என்று தோன்றியது. அவமானம்தான். ஆனால், அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா! அந்தக் கணத்தில் ஒன்று தோன்றியது. நடந்தே பழகாத ஜென்மமாக இருப்பது எப்பேர்ப்பட்ட அவலம்! மூச்சிரைத்து, வியர்த்துக் கொட்டி, கண்கள் இருட்டிவிட்டன. என் ஸ்தூல சரீரத்துக்குள் என்னென்னவோ நிகழ்வதாகத் தோன்றியது. எலும்புகள் அனைத்தும் இடம் பெயர்ந்து முறிந்து நிற்பது போல.

எப்படியோ சமாளித்து வீடு திரும்பிவிட்டேன். அன்று எனக்குக் கிட்டிய புள்ளிவிவரம், நான் வசிக்கும் வீதியானது மொத்தம் தொள்ளாயிரத்தி இருபது தப்படிகள் நீளம் கொண்டது என்பது. ஆக நான் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது தப்படிகள் நடந்திருக்கிறேன்! மாபெரும் மாரத்தான் சாகசமல்லவா இது? வீட்டுக்கு வந்து அக்கடாவென்று படுத்துவிட்டேன். பேலியோ கூடப் பரவாயில்லை; இந்த நடை என்னைக் கொன்றுவிடுமோ என்று பயமாக இருந்தது. உண்மையில், அந்தளவுக்கு நான் பருத்திருந்தேன்.

என்னுடைய 111 கிலோ எடையைக் காட்டிலும் அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த 111ஐயும் வெறும் கெட்ட கொழுப்பாக வளர்த்து வைத்தவர்கள் எத்தனைப்பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை. சரி, தொடங்கிவிட்டோம்; உயிரே போனாலும் விடுவதில்லை என்று எண்ணிக்கொண்டேன். ஊர் உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களையும் சகாயத்துக்குக் கூப்பிட்டுக்கொண்டு மறுநாளும் என் நடைப்பயணத்தைத் தொடர்ந்தேன். மூன்று நாள். நான்கு நாள். அட பரவாயில்லையே... மூச்சிரைப்பு குறைந்தாற்போல் இருக்கிறதே.

ஒரு வாரத்தில் எனக்கு நடந்தால் வரும் இடுப்பு வலி, முட்டி வலி, மூச்சிரைப்பு அனைத்தும் இல்லாமல் போயின. நெஞ்சை அடைப்பது போல ஓர் உணர்வு முதல் சில தினங்கள் இருந்தன. அதுவும் எங்கே போனதென்று தெரியவில்லை. ஒரு தெருவை அளந்துகொண்டிருந்தவன், இரண்டாம் வாரம் முதல் இரு தெருக்களின் மொத்த நாய்கள் எண்ணிக்கையைக் கணக்கிட ஆரம்பித்தேன். நைட்டியுடன் வாசலில் கோலம் போட வரும் பெண்கள் யார் யாரிடம் என்னென்ன நிறத்தில் நைட்டி உள்ளதென்கிற புள்ளிவிவரம் தெரியவந்தது. இதில் தலையையாவது கோதிக்கொண்டு வரும் பெண்கள் எத்தனை பேர், உறங்கி எழுந்த கோலத்திலேயே கலாசாரக் காவலுக்கு வருகிற பெண்கள் எத்தனை பேர் என்கிற கணக்கு தனி.

காலைப் பொழுதுகளில் டீக்கடையில் காணக்கிடைத்த நபர்களில் பத்துக்கு மூன்று பேராவது மெதுவடை சாப்பிடுவதைப் பார்த்தேன். போஸ்டர்களைப் பார்த்தே நாட்டு நடப்பு தெரிந்துகொள்ளும் வேட்கையில் வருகிறவர்களைக் கவனித்தேன். பால்காரர்கள், பேப்பர்காரர்கள், காய்கறி விற்பவர்கள், காலை ஷிஃப்ட் பணிக்கு ஓடுகிறவர்கள், குப்பைவண்டிக்காரர்கள் - உலகில் என் ஒருத்தனைத் தவிர எல்லோரும் காலையில் பிசியாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது.

ஆக, நான் நடக்க ஆரம்பித்துவிட்டேன். என்னால் இப்போது மூவாயிரம் தப்படிகள் நடக்க முடிந்தது. இது என்னாலேயே நம்ப முடியாததாக இருந்தது. எனக்கு ஏதாவது பரிசு கொடுத்துக்கொண்டால் என்ன? உடனே பெங்களூரில் உள்ள என் நண்பன் என்.சொக்கனை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். ஒரு நல்ல நாள் பார்த்து அவன் எனக்கு MI Band என்றொரு கங்கணத்தை வாங்கி அனுப்பினான். வெறும் ஆயிரம் ரூபாய் வஸ்து. அது வந்து சேர்ந்தபோது பார்க்கப் பரம சாதுவாகத்தான் தெரிந்தது. ஆனால், பயன்படுத்தத் தொடங்கிய ஓரிரு நாள்களிலேயே அது ஒரு குட்டிச்சாத்தானாக உருமாற்றம் கண்டது.

(தொடரும்)

நடை டிப்ஸ்

இந்த வாரம் பேலியோ கிச்சன் கிடையாது. பதிலுக்கு, இது:

* வேகமாக நடந்தால் சீக்கிரம் இளைக்கலாம் என்று நினைக்காதீர். மிதவேக நடையே மனிதனுக்கு நல்லது.
* செருப்புடன் நடக்காதீர். குறைந்த விலைக்கே பதமான வாக்கிங் ஷூக்கள் கிடைக்கின்றன. ஷூ அணிந்து நடப்பதே காலுக்கு நல்லது.
* மிக மிக மெதுவாக நடக்கத் தொடங்கி, படிப்படியாக வேகத்தைக் கூட்ட வேண்டும். மூச்சு வாங்குகிற வேகம் கூடவே கூடாது. நடைப் பயிற்சி முடிவடையும் கடைசி ஐந்து நிமிடங்கள் மெல்ல மெல்ல வேகத்தைக் குறைத்து, தொடங்கியபோது கடைப்பிடித்த வேகத்துக்கே வரவேண்டும்.
* எத்தனை தப்படிகள் நடந்திருக்கிறோம் என்று காட்டும் பட்டைகள் நிறைய வந்துவிட்டன. அதிலொன்றை வாங்கி மாட்டுங்கள். இது தரும் பரவசத்துக்கு நிகரே கிடையாது. நம்மையறியாமல் நிறைய நடக்க வைக்கும்.
* நடக்கும்போது போன் பேசாதீர்கள். பதிலாக ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கலாம். கிண்டில் போன்ற கருவிகள் துணையுடன் புத்தகம் படிக்கலாம். ஆனால், மெயின் ரோடில் இப்படிப் படித்தபடி நடந்தால் மாடு அல்லது லாரி முட்டும், ஜாக்கிரதை.