பீர் ATM



- ஷாலினி நியூட்டன்

ஒரு படத்தில் சந்தானம் பம்புசெட்டில் சாராயத்தை ஊற்றி ஊரெல்லாம் அசத்துவார். சினிமாதானே என்று நாமும் சிரித்து வைத்தோம். நிஜத்திலும் இது சாத்தியம் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? ‘அடபோப்பா! இங்க குழாயில் தண்ணீரே வரமாட்டேங்குது. வெறும் காத்துதான் வருது!’ என்றுதான் பலரும் சொல்வார்கள்.

ஆனால், மலேசியாவில் குழாயைத் திறந்தால் பீர் வரவைத்து குடிமக்களின் வயிற்றில் பீர் வார்த்திருக்கிறார்கள். அதுவும் எப்படி? அவரவர்க்கு பிடித்த விதவிதமான பிராண்டுகளில் பீர் கொட்டுகிறது. கோலாலம்பூரின் சோஹோ KL என்னும் இடத்தில்தான் இந்த விநோத பீர் சர்வீஸ் நடக்கிறது. இதை ‘Tap it Out’ அல்லது ‘Beer ATM’ என்கிறார்கள். ஏடிஎம் மெஷினை உபயோகிப்பது போல இந்த மெஷினில் பணத்தைச் செலுத்திவிட்டு வேண்டிய அளவு பீரை பி(கு)டித்துக் கொள்ளலாம்.

வரிசையில் நிற்க வேண்டியது இல்லை, ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்து அலுத்துக்கொள்ள வேண்டியது இல்லை, டிப்ஸ் இல்லை, சர்வரிடம் சண்டை இல்லை என ஏகப்பட்ட பிளஸ்கள் என்பதால் ஈயாய் மொய்க்கிறார்கள் மலேசிய குடிமகன்கள். இதுதான் மலேசியாவின் முதல் பீர் ஏ.டி.எம். இதை மேலும் விரிவுபடுத்தும் எண்ணம் உண்டாம்.

‘‘வாடிக்கையாளர்களின் நேரம் எங்களுக்கு முக்கியமானது. அதை வீணாக்குவதைத் தவிர்க்கவே இந்த செல்ஃப் சர்வீஸ் பீர். தவிர, வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கொடுக்க அருகிலேயே சேவை மைய அதிகாரிகளும் இருப்பார்கள். அமர்ந்து குடிக்க வசதியான இருக்கைகள் மட்டும் இன்றி விளையாடுவதற்கான அரங்கமும் உருவாக்கியிருக்கிறோம்...” என்கின்றனர் ‘Tap it Out’ நிர்வாகிகள்.

ஏற்கெனவே ‘Uno Brewing’ என்னும் நிறுவனம் வெர்ஜீனியா மாகாணத்தில் தொடங்கி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது இந்த பீர் ஏடிஎம். கனடா, அமெரிக்கா எனப் பல நாடுகளில் முன்பே பிரபலமாகி இப்போது ஆசிய நாடுகளிலும் நுழைந்திருக்கிறது இந்த ஆட்டோமேட்டிக் பீர் மெஷின். இது எல்லாம் நல்ல துக்கா என்றுதான் தெரியவில்லை!