காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 25

“உங்களைச் சந்திக்க முஸெல்லா சம்மதித்து விட்டார்...” தொலைபேசியில் எமிலோவின் குரலைக் கேட்டதுமே, மோரா தன் வயதுக்கு மீறிய துள்ளலை வெளிப்படுத்தினார். “எப்போ, எங்கே அவரை போய் பார்க்கணும்?” “அதெல்லாம் நீங்க விருப்பப்பட்டபடி நடக்காது மோரா. எப்போ வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம். முஸெல்லா காத்து மாதிரி. தயாரா இருங்க...” உடனடியாக கொலம்பியாவுக்கு தகவல் போனது.

ஒட்டுமொத்த கார்டெல்களின் சார்பாக பாப்லோ, மோராவுக்கு தங்கள் சார்பாக முஸெல்லாவிடம் பேசவேண்டிய விஷயங்களை விலாவரியாக விளக்கினார். “என்ன இருந்தாலும் அவன் அமெரிக்கன். பார்த்து பேசு. பொருளை மட்டும்தான் நாம் கொடுப்போம். அமெரிக்க எல்லையில் பெற்றுக் கொள்ள வேண்டியதும், சந்தைக்கு கொண்டு போக வேண்டியதும் முஸெல்லாவின் பொறுப்பு.

அதன் பிறகு சி.ஐ.ஏ.வோ, எஃப்.பி.ஐயோ... யாராக இருந்தாலும் அவர்களை எதிர்கொள்ள வேண்டியது அவன் தலையெழுத்து...” “சரி. அவனுக்கு கமிஷன் என்ன சதவிகிதம்?” “கமிஷனே கிடையாது...” “..?” “பார்ட்னர்னு சொல்லு. கொலம்பிய கார்டெல்கள் அத்தனை பேருக்கும் இனி அவன்தான் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க ஏஜெண்ட். மொத்த லாபத்தில் அவனும் நாமும் சரிபாதியாக பிரிச்சுக்கலாம்...” பொதுவாக கமிஷன் விஷயத்தில் கறாராக பேசும் பாப்லோவே லாபத்தை சமபங்காக பிரித்துக்கொள்ளச் சொல்லுகிறாரே என்று ஆச்சரியப்பட்டார் மோரா.

“வேற வழியில்லை மோரா. நம்மோட பிசினஸ் அமெரிக்காவைத்தான் பிரதானமா நம்பியிருக்கு. நம்மோட லாபத்தை குறைச்சுதான் முஸெல்லா கிட்டே பிசினஸ் பண்ணப் போறோம். ஆனா, முன்பைவிட கூடுதலா சரக்கை அனுப்ப முடியும். எல்லாரும் நம்ம புரொடக் ஷனை டபுள் ஆக்கிக்க வேண்டியதுதான். அங்கே மார்க்கெட் பண்ணுற ரிஸ்க்கை ஃபுல்லா அவன் மட்டுமே ஏத்துக்கணும் என்பது மட்டும்தான் நம்ம கண்டிஷன்.

புரியுதா?” பாப்லோ, யதார்த்தத்தை உணர்ந்தவர். அவ்வளவு பெரிய அமெரிக்க அரசை போதை மாஃபியாக்கள் எதிர்கொள்ள முடியாது என்று அவருக்குத் தெரியும். பிசினஸ் விஷயத்தில் அவருக்கு எந்தவித ஈகோவும் கிடையாது. முடிந்தால் அமெரிக்க அரசாங்கத்தோடுகூட அவர் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளத் தயாராகத்தான் இருந்தார். அதென்ன கொலம்பிய அரசா, சொந்த மக்களிடமே போதையை விற்று அரசு நடத்துமளவுக்கு கையாலாகாமலா போய்விட்டது? இதெல்லாம் நடந்து மிகச்சரியாக ஒரு வாரம் ஆகியிருக்கும்.

மோரா, ஒரு கால்பந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். முஸெல்லாவிடமிருந்து அழைப்பு வரும் என்கிற நம்பிக்கையையே அவர் இழந்துவிட்டார். மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் கோகோ கோலா விற்றுக் கொண்டிருந்த ஒரு பையன் அவர் அருகில் வந்தான். அவர் காதில் மெதுவாக கிசுகிசுத்தான். “உங்களுக்காக நுழைவாயில் அருகே கருப்புநிற பென்ஸ் கார் காத்துக் கொண்டிருக்கிறது...” இவரது பதிலை எதிர்பார்க்காமல் அவன் பாட்டுக்கு விறுவிறுவென்று கிளம்பிவிட்டான்.

மோராவுக்கு முதலில் திகிலாக இருந்தது. ஏனெனில், அமெரிக்க எஃப்.பி.ஐ. ஏஜெண்டுகளும்கூட தங்களுடைய வேலைகளுக்கு கருப்புநிற கார்களையே அப்போது பயன்படுத்துவார்கள். இருந்தாலும், இது தனக்கான முஸெல்லாவின் அழைப்பாகத்தான் இருக்குமென்று நினைத்தார். பாதுகாவலர்களை அழைத்து தன்னை தூரமாக நின்று கண்காணித்துக் கொண்டே இருக்கும்படி கட்டளையிட்டார். மெதுவாக நுழைவாயிலுக்கு வந்தார்.

படகு மாதிரி அந்த பென்ஸ் நின்றிருந்தது. என்ஜின் உறுமிக் கொண்டிருந்தது. டிரைவர் இருக்கையில் இருந்தவன் சீனன். அவனைப் பார்த்ததும்தான் இவர் ஆசுவாசமானார். சீனர்கள், நிழல் வேலைகளுக்காக பயன்படுத்தப்படுபவர்கள். நிச்சயமாக அமெரிக்க போலீஸ் அல்ல என்று உணர்ந்து ரிலாக்ஸாக நடந்தார். காருக்கு அருகே சென்றார். கருப்பு ஃபிலிம் ஒட்டப்பட்டிருந்த காருக்குள் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மெதுவாகத் தட்டினார்.

சட்டென்று கதவு திறந்தது. இரண்டு கைகள் முரட்டுத்தனமாக அவரை இழுத்து காருக்குள் அடைத்தது. கதவு சாத்தப்பட, சட்டென்று கார் வேகம் எடுத்தது. தனக்கு என்ன ஆனது என்பதைக்கூட உணரமுடியாத நிலையில் மோராவின் கண்கள் இறுக்கமாகக் கட்டப்பட்டன. இடுப்பில் செருகியிருந்த அவருடைய ரிவால்வர் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது. சாக்ஸில் ஒளித்து வைத்திருந்த கத்தியும் கைப்பற்றப்பட்டது. கைகளால் தடவி, அவரது உடல் முழுவதையும் சோதனையிட்டார்கள்.

“நீங்க யாரு?” “...” “நீங்க எத்தனை பேரு?” “...” “என்னை எங்கே கொண்டு போறீங்க?” “...” “ப்ளீஸ், யாராவது சொல்லுங்க...” மோராவின் கன்னத்தை ஒரு கை கண்டிப்போடு தட்டியது. “உஷ்...” கார் எங்கோ க்ரீச்சிட்டு திரும்பும் சப்தம். சில நிமிடங்கள் கழித்து கார் நின்றது. கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே மோரா நடத்திச் செல்லப்பட்டார். ஏதோ கட்டிடத்துக்குள் நுழைவதை மட்டும் அவரால் உணர முடிந்தது. அடுத்து லிஃப்ட் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. அவர் திணிக்கப்பட்டார். லிஃப்ட் மேலெழும்புவதை உணர்ந்தார்.

சில நொடிகளில் லிஃப்ட் நின்றது. கதவு திறக்கும்போது ஹெலிகாஃப்டர் சப்தம். ‘ஆஹா... முஸெல்லா உஷாரான ஆள்தான் போல. அவன் எங்கிருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சுத்தலில் விட்டு சந்திக்கிறான். அதிருக்கட்டும். தன்னை இப்படி வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வது முஸெல்லாவின் ஆட்கள்தானா?’ குழப்பத்தோடு அவர் இருந்தபோதே ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டார். வானத்தில் பறப்பதை உணர்ந்தார்.

தனக்கு அருகில் யாரோ அமர்ந்திருப்பதை தொட்டுத் தெரிந்து கொண்டவர், “நீங்கதான் முஸெல்லாவா?” என்று கேட்டார். “உஷ்...” இங்கும் அதே பதில்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இவரது கையைப் பிடித்து இறக்கினார்கள். உப்புவாடையோடு ஈரக்காத்து. அனேகமாக, தான் ஏதோ கப்பலில் இறக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தார். அவரது கண்கட்டு அவிழ்க்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய நான்கு காவலர்கள் வந்தார்கள்.

மீண்டும் அவரது உடலை சோதித்தார்கள். ஆயுதம் எதுவும் இல்லை என்பதை அறிந்ததும் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அந்த அறையே ஓர் ஆடம்பரமான மதுவிடுதி போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. துள்ளலான இசை காதைக் கிழித்தது. அங்கே இளம்பெண்களோடு தாடிவைத்த ஒரு கோட்டு சூட்டு மனிதர் ஈடுகொடுத்து ஆடிக் கொண்டிருந்தார். இவரை அழைத்துச் சென்றவர்கள், ஒரு சோஃபாவில் அமர வைத்தார்கள்.

நடனம் ஆடிக் கொண்டிருந்தவர், சட்டென்று இவரை கவனித்தார். சைகையில் இவரையும் நடனம் ஆட அழைத்தார். இவர் மறுத்துவிட்டு நகம் கடிக்க ஆரம்பித்தார். ஒரு ஷாம்பெயின் பாட்டில் மோராவுக்கு முன்பாக வைக்கப்பட்டது. டூ பீஸ் உடையணிந்த அழகி ஒருத்தி வந்து கிளாஸில் ஊற்றிக் கொடுத்தாள். மதுக்கோப்பையை வாயருகே கொண்டுசென்றவருக்கு தயக்கம். விஷம் கலந்திருக்குமோ? சட்டென்று இசை நின்றது. ஆடிக் கொண்டிருந்தவர்கள் வேக வேகமாக அங்கிருந்து நகன்றார்கள். அந்த மனிதர் மட்டும் இவரையே உற்றுப் பார்த்துக் கொண்டு எதிரில் வந்து நின்றார்.

முழுமையாக ஒரு நிமிடம் மவுனத்திலேயே கரைந்தது. திடீரென்று பெருங்குரலெடுத்து அவர் ‘ஹா… ஹா...’வெனச் சிரிக்க, மோராவுக்கு ஏகத்துக்கும் கோபம் தலைக்கேறிக்கொண்டே போனது. “நீங்க யாரு? எதுக்கு என்னை இப்படி வலுக்கட்டாயமா இழுத்துக்கிட்டு வந்திருக்கீங்க?” “முஸெல்லாவைப் பார்க்கணும்னு விருப்பப்பட்டீங்களாமே?” “ஆமாம். உங்களுக்கு என்ன?” “நீங்க இப்போ முஸெல்லாவைத்தான் பார்த்துக்கிட்டிருக்கீங்க..!” அந்த நொடியிலிருந்து கொலம்பிய கார்டெல்களின் குடுமி முஸெல்லாவின் கரங்களில் மாட்டிக் கொண்டது.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்