A படம் எடுக்கறது தப்பா..?



ரொம்பவே ஃபீல் ஆகிறார் ஹரஹர மஹாதேவகி இயக்குநர்

- மை.பாரதிராஜா

‘‘தமிழ்ல அடல்ட் மூவி அப்பப்ப வந்திருக்கு. ரீஸன்டா கூட ‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’ வந்தது. அதோட ப்ளஸ், மைனஸ் பத்தி பேசின எல்லோருமே ‘அதில் பெண்களை ரொம்ப கொச்சைப்படுத்தி பேசிருக்காங்க’னு சொன்னாங்க. பொதுவா ‘ஏ’ சர்டிபிகேட் மூவீஸ்ல ஒரு பாலினத்தை உயர்த்தியோ, இன்னொரு பாலினத்தை குறைச்சு மதிப்பிட்டோதான் படங்கள் வந்திருக்கு.

ஆனா, ‘ஹரஹர மகாதேவகி’ அப்படி இல்ல. ஆண், பெண் எல்லாருமே சமம்னு சொல்லியிருக்கோம். ஹாலிவுட் அடல்ட் மூவீஸ் பார்க்கிறப்ப விழுந்து விழுந்து சிரிக்கறோம். அப்படித்தான் இந்தப் படமும் இருக்கும்...’’ உற்சாகமாக பேசுகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடிக்கும் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் அறிமுக இயக்குநர். ‘எங்கேயும் எப்போதும்’ சரவணனின் ஸ்கூலில் இருந்து வந்தவர்.

‘‘வயது வந்தோருக்கான படங்கள்னா அதுல செக்ஸுவல் எக்ஸ்போஷர், உரசல், சீண்டல் அதிகம் இருக்கும்னு நினைக்கறாங்க. அப்படி இல்ல. நாம ஜாலியா பேசுற நாலு விஷயத்தைக் கூட சென்ஸார் கட் கொடுத்து அதை அடல்ட்னு நினைக்க வச்சிருக்காங்க. இது நீங்க நினைக்கற மாதிரி படம் இல்ல. நம்முடைய சென்சார் மீட்டருக்கு தகுந்த காட்சி, வசனங்களோடு எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆர்டிஸ்ட்டை கன்வின்ஸ் பண்ணத்தான் சிரமப்பட்டோம். மத்தபடி ஷூட்டிங் சமயத்துல எந்த சிக்கலும் வரலை. டபுள் மீனிங்ல எதையும் நாங்க சொல்லலை. எல்லாமே நேரடி மீனிங்தான்!

இந்தப் படம் முழுக்க முழுக்க 18 வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்காக எடுக்கப்பட்டதுதான். சென்சார்ல கூட ‘இந்தப் படத்தோட ஆடியன்ஸ் யாரு’னு கேட்டாங்க. ‘அடல்ட் ஸ் ஒன்லி ஃபிலிம். ஸோ, ஏ சர்டிபிகேட் கொடுங்க’னு கேட்டு வாங்கினோம்...’’ சிரிக்கிறார் சந்தோஷ்.

முதல் படத்துலயே அடல்ட் கதையை எடுத்தது ஏன்?
கொஞ்சம் வித்தியாசமா பண்ணணும்னு நினைச்சேன். பேய், ஃபேமிலி, த்ரில்லர் ஜானர்ஸ் அடிக்கடி வந்திட்டிருக்கு. ஸோ, அடல்ட் ட்ரை பண்ணலாம்னு விரும்பினேன். ஹாலிவுட் படமான ‘அமெரிக்கன் பய்’ எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த தாக்கத்துலதான் இந்தக் கதையை எழுதினேன்.

‘ஹரஹர மஹாதேவகி’ டைட்டில் தன்னால வந்து விழுந்தது. ஏன்னா, எல்லாருக்கும் தெரிஞ்ச வார்த்தை அது. நிறைய புரொட்யூசர்ஸ், ஹீரோஸ்கிட்ட இந்த கதையை சொன்னேன். ‘இந்த டைட்டிலா? முழுக்கவே அடல்ட்டா இருக்கே... ஃபேமிலி ஆடியன்ஸ் வரமாட்டாங்களே... வரிச்சலுகை கிடைக்காதே... எங்க இமேஜ் பாதிக்கப்படுமே’னு தயங்கினாங்க.

இந்த நேரத்துல நண்பர் மூலமா சூர்யாவோட ‘2டி’ல கதை சொல்ல போனேன். அங்க என் கதையை கேட்ட ராஜசேகர் சார் ஷாக் ஆகிட்டார். ‘இப்படி ஒரு கதையை இந்த கம்பெனி தயாரிக்கும்னு நம்பி வந்த உங்க கான்ஃபிடன்ட்டை பாராட்டுறேன். கதை நல்லா இருக்கு’னு சொல்லி ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா சார்கிட்ட சிபாரிசு பண்ணினார். அவர் இந்தப் படத்தோட தயாரிப்பாளர் தங்கராஜ் சார்கிட்ட சொன்னார். அதுக்கப்புறம்தான் இந்தப் படம் டேக் ஆஃப் ஆச்சு. 

இந்தக் கதை எந்த ஹீரோவுக்கு வேணாலும் பொருந்தும். அதனால ஹீரோ யாருன்னு மனசுல வைச்சு ஸ்கிரிப்ட் எழுதலை. ஆனா, ஹீரோயின் நிக்கி கல்ரானில இருந்து மத்த கேரக்டர்ஸான ரவிமரியா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், மயில்சாமி, மனோபாலா, பால சரவணன், ஆர்.கே.சுரேஷ்னு அத்தனை பேரையும் மனசுல வைச்சுதான் எழுதினேன். கெளதம் கார்த்திக்கிட்ட இந்த கதையை சொன்னதும், சந்தோஷமா நடிக்க சம்மதிச்சார். நாலு பசங்க அவுட்டிங் போறாங்க. அவங்களுக்கிடையே நடக்கற விஷயங்கள்தான் படத்தோட ஒன்லைன்.

நாலு பசங்க ஒண்ணு சேர்ந்தா வல்கராதானே பேசுவாங்க? படத்துலயும் அப்படித்தான்! கௌதம் கார்த்திக்ல இருந்து அத்தனை நடிகர்களும் கொடுத்த ஒத்துழைப்பை மறக்கவே முடியாது. டயலாக்ஸ் எல்லாமே காமெடி. அதனால செட்டே கலகலப்பா இருக்கும். இந்தக் கதை எழுதினதுல இருந்து என்னோட ட்ராவல் பண்ணிட்டிருந்த பாலமுரளி பாலுவை இதில் இசையமைப்பாளரா அறிமுகப்படுத்தறேன்.

எனக்கு புரொட்யூசர் கிடைக்கறதுக்கு முன்னாடியே அதுவும் சம்பளமே வாங்காம சாங்ஸ் போட்டுக் கொடுத்தார்.‘மாநகரம்’ ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே அதோட ஒளிப்பதிவாளர் செல்வக்குமாரை கமிட் பண்ணிட்டோம். படத்துல நிறைய லொகேஷன்ஸ். லைவ்வா ஷூட் பண்ணியிருக்கோம். 

உங்களப் பத்தி சொல்லுங்க..?
அப்பா சி.பி.ஜெய், பல வருஷங்களா சினிமாவில் புரொடக்‌ஷன் எக்ஸிக்யூட்டிவ்வா இருந்தவர். அதனால சின்ன வயசுல இருந்தே நானும் சினிமா சூழல்ல வளர்ந்தேன். ஸ்கூல்படிக்கும்போதே, டைரக்டரா ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். முதல்ல படிப்புல கவனம் செலுத்துனு வீட்ல சொன்னதால, என்ஜினியரிங் படிச்சேன். அப்புறம் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன்கிட்ட ‘இவன்வேற மாதிரி’ல ஒர்க் பண்ணினேன்.

அவர் எப்பவும் ஒரு விஷயம் சொல்வார். ‘நம்ம உடம்புல சேருகிற அழுக்கு மாதிரிதான் சினிமாவில் கத்துக்கறது. குளிக்கும்போது உடம்பை தேய்ச்சா அழுக்கா வெளிய வரும். அந்த மாதிரிதான் ஒரு அசிஸ்டென்ட் லைஃப். நீ என்ன கத்துக்கிட்டேன்னு உனக்குத் தெரியாது. தனியா படம் பண்ணும்போது அது பிரதிபலிக்கும்’ன்னார். இப்ப படம் பண்றப்ப அதை உணர்ந்தேன்!