ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 44

ஒரு படைப்பாளனுக்கு பாட்டாளி வர்க்கச் சிந்தனை இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது இப்போது பிரச்னையே இல்லை. எப்படியும் எழுதலாம். எதையும் எழுதலாம். எழுதுபவனின் அனுபவத்தை, அதை வாசிப்பவன் உள்வாங்கிக் கொண்டாலே போதும். ஒருபடி மேலே போய் அவன் உள்வாங்கிக் கொண்டானா? இல்லையா? என்றுகூட படைப்பாளன் கவலைப்பட வேண்டியதில்லை. அது வாசிப்பவனின் அறிவு சார்ந்த, அனுபவம் சார்ந்த எல்லையாக இன்றைக்குப் பார்க்கப்படுகிறது.

ஒரு படைப்பு வாசிப்பவனுக்குப் புரியவில்லை என்றாலோ அல்லது பிடிக்கவில்லை என்றாலோ அது அவனுடைய தலைவிதியுடன் சம்பந்தப்பட்டதாகச் சொல்லி படைப்பாளன் தப்பித்துக்கொள்ளலாம். என்னுடைய படைப்புகளைப் புரிந்துகொள்ள வாசகனுக்கு வக்கில்லை என்றும் வாதிடலாம். ஆனால், எழுபதுகளில் எழுத வந்த படைப்பாளர்களுக்கு இந்த சுதந்திரம் இருக்கவில்லை.

ஏதாவது ஒரு சிந்தனையுடன் தங்களை ஐக்கியப்படுத்தி எழுதவேண்டிய கட்டாயமிருந்தது. திராவிடமோ, தேசியமோ, மார்க்சியமோ அவர்கள் கைகொள்ள வேண்டிய சிந்தாந்தங்களாக முன் வைக்கப்பட்டன. எதையேனும் ஒன்றைப் பற்றித்தான் அவர்கள் மேலேற வேண்டியிருந்தது. குறைந்தபட்சம் அறம் சார்ந்தாவது அவர்கள் எழுத வேண்டு மென பொதுச் சமூகம் எதிர்பார்த்தது.

ஒரு படைப்பாளன் சமூகத்தில் மதிக்கத்தக்க கருத்துக்களைச் சொல்பவனாகக் கருதப்பட்டான். மனித குலத்தின் மேன்மைகளைப் போற்றுபவனாக அல்லது மனித குலத்தை மேன்மையோடு பார்க்கப் பழகியவனாக தரிசிக்கப்பட்டான். குறிப்பிட்ட சித்தாந்தத்தில் அவனுக்கு ஏற்போ, மறுப்போ இருக்கலாம். ஆனாலும், அவன் அந்த வட்டத்திலிருந்து வெளியேறிவிட முடியாது. முழு வீச்சோடு இலக்கியம் இயங்கி வந்த அந்தக் காலகட்டத்தில் எழுதவந்தவர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் இராசேந்திரசோழன்.

இன்றைய வட தமிழக எழுத்தாளர்கள் பலருக்கும் அவரே முன்னத்தி ஏராகச் சொல்லப்படுகிறார். நடுநாட்டு சொல்லக ராதியை உருவாக்கிய கண்மணி குணசேகரனும், வட்டார நாவல்களில் பெண்ணியத்தைப் பிரதானப்படுத்தும் ச.தமிழ்ச்செல்வியும் தங்கள் ஊற்றுக்கண்ணாக இராசேந்திரசோழனைப் பார்க்கிறார்கள். இமையத்தின் கதைகளும்கூட அப்படியானதாகத்தான் எனக்குப்படுகிறது. ‘எட்டுக்கதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்புமூலம் எழுத்துலகிற்கு எழுபதுகளில் அறிமுகமான இராசேந்திரசோழன், இடதுசாரி முகாமைச் சேர்ந்தவராகத் தன்னைக் காட்டிக்கொண்டவர்.

காட்டிக்கொண்டது மட்டுமல்ல, அக்கொள்கைகளைத் தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியும் வந்தவர். எழுதுபவர்கள் எல்லோருமே இடதுசாரியாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறவர்கள் உண்டு. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை என்பதும் பொருத்தம் என்பதும் விவாதத்துக்குரியன. கருத்துத்தளத்தில் நின்றுகொண்டு கலைசெய்வதை இன்றைய படைப்பாளர்கள் வேடிக்கை என்கிறார்கள். முன் யோசனையுடனும், முன் தயாரிப்புடனும் படைக்கப்படுவது படைப்புகளே இல்லை என்றும் எண்ணுகிறார்கள்.

எழுத்தை விமர்சகர்கள் அளவிட்டுக் கொண்டிருந்த காலம்போய், எழுத்தாளர்களே தங்கள் சக படைப்பாளர்களின் எழுத்துக்களை அளவிடும் அவலமான காலத்தில் நாமிருக்கிறோம். இராசேந்திர சோழனின் எட்டுக்கதைகளை இன்றைக்கு வாசித்தாலும் அதன் இறுக்கமும் அடர்த்தியும் குலையாமல் இருப்பதை உணரமுடியும். ‘புற்றில் உறையும் பாம்புகள்,’ ‘தனபாக்கியத்தோட ரவ நேரம்,’ ‘வினை,’ ‘இச்சை,’ ‘பரிணாமச் சுவடுகள்,’ ‘பாசி,’ ‘சூழல்,’ ‘எதிர்பார்ப்புகள்,’ ‘கோணல் வடிவங்கள்,’ ‘சிதைவுகள்’ போன்ற கதைகள் இருபது வருடமாகியும் என் நினைவிலிருந்து அகலாததற்கு அதுவே காரணம்.

ஒரு கதை, அது சொல்லவந்த கருத்தால் நிற்கிறதா இல்லை எழுதப்பட்ட நேர்த்தியால் நிற்கிறதா என்று கேள்வி எழுப்பினால், இரண்டுமே தேவை என்றுதான் சொல்லுவோம். அதற்கான உதாரணங்களைக் காட்ட இராசேந்திரசோழனின் பல கதைகள் உதவக்கூடும். தமிழினி பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘இராசேந்திரசோழன் கதைகள்’ தொகுப்பில் மொத்தம் எழுபத்தி ஏழு கதைகள் அடங்கியுள்ளன. அடங்கியுள்ளன என்ற சொல்லைவிட இடம்பெற்றுள்ளன என்பதே சரி.

அடங்கிப்போனவை கதைகளாகவே ஆகமுடியாது என்பது என் எண்ணம். அடங்கிக்கிடக்கும் உணர்வுகளைத் தட்டியெழுப்பக் கூடியவைகளே கதைகள். எல்லாமே ரத்தினங்கள் என்று சொல்வதற்கில்லை. பொக்குகளும் புழுதிகளும் உண்டுதான். என்றாலும், மிகுதியை கணக்கிட்டே அபிப்ராயங்கள் அரும்புகின்றன. ‘புற்றில் உறையும் பாம்புகள்’ கதையின் இறுதி வாக்கியம் அக்கதையை மறக்க முடியாத கதையாக மாற்றிவிடும்.

‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே அய்யா, இதுதானய்யா கற்பு’ என்று புதுமைப்பித்தன் ‘பொன்னகர’த்தில் எழுதியிருப்பார். 1934ல் வெளிவந்த அக்கதை அப்போதைய மதராஸில் வறிய பெண் ஒருத்தி தன் கணவனைக் காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டதை நியாயப்படுத்தியது. அக்கதை வெளிவந்த சமயத்தில் எழுந்த எதிர்வினைகள் கற்பு குறித்த பார்வைகளை அகலச் செய்தன.

இத்தனை வருடங்களைத் தாண்டியும் அக்கதை உதாரணக் கதையாகக் காட்டப்படுவதற்கும், அக்கதைக்கு எழுந்த எதிர்வினைகளே காரணமென்பதை யாருமே மறுக்க மாட்டார்கள். கருத்தாலும் செய்நேர்த்தியாலும் ஒரு கதை கவனிக்கப்படுவதைப் போலவே அதற்கு எழும் எதிர்வினையும் அக்கதையைக் காப்பாற்றி இறவாமல் வைக்கிறது.

அதற்கும் நாற்பது ஆண்டுகள் கழித்து எழுதவந்த இராசேந்திரசோழன், தன் கதையின் இறுதி வாக்கியத்தை இப்படி முடிக்கிறார். ‘போமே சரிதான், இப்பத்தான் ஒரேயடியா காட்டிக்கிறா... பெரிய பத்தினியாட்டம்...” புதுமைப்பித்தனுக்கும் இராசேந்திரசோழனுக்கும் உள்ள கால இடைவெளியை கருத்திற்கொள்வதை விடுத்து கதையாக வாசித்தால் இரண்டுமே அதனதன் அம்சத்தில் சிறப்பானவை.

மதராஸில் வாழ்ந்த பெண்ணுக்கான கற்பிலக்கணமும், வட ஆற்காடு மாவட்டத்தில் வாழ்ந்த பெண்ணுக்கான கற்பிலக்கணமும் வெவ்வேறாகவே இருந்திருக்கின்றன. மட்டுப்படாத காமத்தோடு ஒரு பெண், எதிர்வீட்டு இளைஞன் குறித்து பேசிக்கொண்டிருப்பதை விளங்கிக்கொள்கிறான் கணவன். தன் மனைவியை அடக்கவும் அதட்டவும் அவனுக்கு பத்தினி எனும் சொல் பயன்படுகிறது. பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் அளவிடும் சொல்லாக கற்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. காலங்கள் கடந்தாலும்கூட கற்பின் கட்டுமானங்கள் அசைவதில்லை.

ஒரு பெண்ணை கேவலப்படுத்த அல்லது கேள்விக்குள்ளாக்க இன்றும் இல்லாத கற்புதான் ஏதுவாக இருக்கிறது. இராசேந்திரசோழனின் இந்தக் கதையை பெண்ணியவாதிகளால் ஏற்க இயலாது. ‘இவரெப்படி இடதுசாரி படைப்பாளராகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்?’ எனக் கேட்கலாம். ‘பெண்ணை கற்பு சார்ந்து கொச்சைப்படுத்தும் ஒருவனுடைய குரலை பதிவு செய்ததன் மூலம் ஆணாதிக்கம் அல்லவா வெளிப்படுகிறது?’ எனவும் சொல்லலாம்.

உண்மை அதுவே ஆயினும், அவருடைய கதைகளின் அசல் தன்மையே அதுதான். கருத்துக்காகவும் கொள்கைக்காகவும் எதார்த்தத்தை மீறி அவரால் எதையுமே எழுத முடிந்ததில்லை. கொள்கைகளும் கோஷங்களும் தேவைதான் என்றாலும், அதையே கட்டிக்கொண்டு அழவேண்டியதில்லை என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்திருக்கிறது. ‘உள்ளதை உள்ள படியே சொல்வதில்தானே இலக்கியமிருக்கிறது’ என்று அவரே ஒரு காலத்தில் சொல்லியிருக்கிறார்.

உள்ளதை உள்ளபடியே சொல்லக்கூடிய ஒருவர் இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும் இருக்கமுடியாது என அவர் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கமே அவர் மீது விமர்சனம் வைத்தது. மே தின மலருக்கு கதை கேட்ட கட்சிப் பத்திரிகை, அவர் எழுதி அனுப்பிய ‘சிறகுகள் முளைத்து’ என்னும் குறுநாவலை பிரசுரிக்க மறுத்துவிடுகிறது.

கட்சியின் கட்டுத் திட்டங்களுக்கு விரோதமானதாக அக்கதை பார்க்கப்பட்டு, பிரசுர தகுதியிழந்தது. பிறகு வெகுகாலம் கழித்து அக்குறுநாவலை ‘உதயம்’ என்னும் சிற்றிதழைத் தொடங்கி வெளியிட வேண்டிய நிலை இராசேந்திரசோழனுக்கு ஏற்பட்டது. ஒருவிதத்தில் அவர்களுடைய மறுப்புகள்தாம் எழுத்து குறித்து தீவிரமாகச் சிந்திக்க அவரைத் தூண்டியிருக்கிறது. ஒரு படைப்பாளன் புரட்சி குறித்தும் மக்கள் எழுச்சி குறித்தும் மட்டுமேதான் எழுதவேண்டுமா, கட்சிக் கட்டுப்பாடு அல்லது ஸ்தாபன விதிகளுக்கு உட்படாத எழுத்துக்கள் எழுத்துக்களே இல்லையா என்னும் கேள்வியோடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேறிவிடுகிறார்.

அதுவரை தன்னை ஆதரித்தவர்கள், திடீரென்று கைவிட்டு விட்ட நிலையில் எதையுமே அவரால் எழுத முடியவில்லை. ஒரு காலம்வரை அவரால் படைப்பிலக்கியத்தில் பங்கெடுக்கமுடியாமல் போய்விடுகிறது. படைப்பின் பாதைகள் சட்டென்று அடைபட்டுவிட்டால் ஒரு படைப்பாளனால் எந்த திசையில்தான் நகரமுடியும்? இயல்பாக விமர்சனங்களைத் தாண்டிச் செல்வது ஒருவகை. வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற தன்னைத் தயார்படுத்திக் கொள்வது இன்னொருவகை. இராசேந்திரசோழன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். என்னென்ன விமர்சனங்கள் அவர்மீது வைக்கப்பட்டதோ அதையெல்லாம் தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முனைந்தார்.

உலகெங்கும் படைக்கப்பட்டுவரும் முற்போக்கு இலக்கியங்கள் குறித்த ஆய்விலும் அப்போதுதான் இறங்குகிறார். இடதுசாரியாக அறியப்பட்ட அவர், இடதுசாரி இலக்கியத்தின் மீது முன்வைத்த விமர்சனங்கள் முக்கியமானவை. என்றாலும், அவருடைய விமர்சனங்கள் எதுவும் எதிர்த்தரப்பினருக்கு சாதகமானதாக அமையவில்லை. வீட்டுக்குள் இருக்கும் ஒட்டடைகளை அடிக்க வீட்டை கொளுத்துவதல்ல வழியென்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.

ஆகவே, அவர் மார்க்சிய கத்தி யைப் போலி மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகத் திருப்பினாரே தவிர மார்க்சியத்துக்கு எதிராகத் திருப்பவில்லை. இராசேந்திரசோழனை வெறும் கதாசிரியராக, நாவலாசிரியராகப் பார்ப்பதற்கில்லை. நான் அவரை அறிந்தபோது அவர் ‘தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி’யில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அதே கட்சியில் நகரப் பொறுப்பு வகித்து வந்த என் அப்பாவின் தோழராகவும் அவர் இருந்தார்.

திண்டிவனத்தை அடுத்த மயிலத்தை வாழிடமாகக் கொண்டிருந்த அவர், அவ்வப்போது தஞ்சாவூர் வருவது வழக்கமாயிருந்தது. கட்சிப் பணிகள் தொடர்பாகவும் கட்சி ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்கவும் அவர் வருகிற போதெல்லாம் அவரைச் சந்தித்திருக்கிறேன். ‘அஸ்வகோஷ்’ என்னும் பெயரில் எழுதுபவரும் அவரே என்பதை அப்பா சொல்லித்தான் அறிந்துகொண்டேன். ‘கடவுள் என்பது என்ன?’, ‘சொர்க்கம் எங்கே இருக்கிறது?’, ‘சொர்க்கத்துக்குப் போவது எப்படி?’ போன்ற அவருடைய மார்க்சிய மெய்யியல் நூல்கள் அப்போது எனக்குப் புரியவே இல்லை.

கதையோ கவிதையோ எழுதுகிறவன், இதையெல்லாம் ஏன் படிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது. அதைவிட மார்க்சிய மெய்யியல் நூலை எழுதக்கூடிய ஒருவர் நல்ல கவிதையோ கதையோ எழுத வாய்ப்பில்லை என்றே நினைத்தேன். அதுமட்டுமல்ல, அவர் மேடையில் பேசும்போது ஒருமுறைகூட நான் கைதட்டியதில்லை.

“என்ன இந்த அஸ்வகோஷ் மாமா இப்படி அறுக்கிறார்..?’’ என்றே அப்பாவிடம் குறைபட்டுக்கொண்டேன். ‘‘அடே அவரு பேசுறது பெரிய விஷயம்டா, அத தெரிஞ்சுக்க நீ இன்னும் நிறைய படிக்கணும்...” என்பார். “ம்ஹும். இவரு பேசறதையே புரிஞ்சிக்க முடியலையாம். இதுல படிச்சிட்டு வேற புரிஞ்சிக்கணுமா...” என நக்கலடிப்பேன். நான் அப்படிக் கருதினாலும் அப்பாவும் அவரொத்த தோழர்களும் அவருடைய நூல்களை ஆழ்ந்து படிப்பார்கள். அவர் நூல்களை அவர்கள் பிரித்து மேய்ந்து விவாதிப்பது ஆச்சர்யமளிக்கும்.

சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை விஷயங்களையும் அலசக்கூடியவர் என்பதான தோற்றத்தை அவருடைய நூல்கள் ஏற்படுத்தின. கைத்தறி ஜிப்பாவும் தோள் பையுமாக வளையவந்த அவர், கதாசிரியர் என்பதைவிட அறிவுஜீவி என்கிற பிம்பத்திற்கு பொருத்தமாயிருந்தார். அவர் அணிந்துவரும் ஜிப்பாவை அவரே அவர் கைப்பட தைத்துக்கொள்வது என்று அப்பா சொன்ன நாளில், வரும் தீபாவளிக்கு அப்பா துணியெடுத்துத் தரமாட்டாரோ என்னும் அச்சம் கவ்வியது.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்