சூயிங்கம் செங்கல்!



- ரோனி

சூயிங்கம்மை வாங்கி மெல்கிறோம். இனிப்பு போனதும் சிம்பிளாக ஓரத்தில் துப்பிவிட்டு அடுத்த சோலியைப் பார்க்கிறோம். இந்நிலையில் பினிஷ் தேசாய், சூயிங்கம் மென்று முக்கிய சூழல் கண்டுபிடிப்பாளராக மாறியிருக்கிறார்! சிலநாட்கள் மென்று ஒட்டிய சூயிங்கம்மை எடுக்காமல் விட, அது அப்படியே உலர்ந்து இறுகிவிட்டது. ஆம். செங்கல்லாக சூயிங்கத்தை பயன்படுத்தலாம் என கண்டறிந்திருக்கிறார்.

உண்மையில் வேஸ்ட் பொருட்களை ரீசைக்கிள் செய்து புதிய பொருட்களைத் தயாரிக்கும் எண்ணம் இவருக்கு 16 வயதில் உதித்திருக்கிறது. விளைவு? ஹைதராபாத், மகாராஷ்டிரா, குஜராத் என குப்பைகளின் மூலமே டாய்லெட்டுகளை உருவாக்கியுள்ளார் தேசாய். கடந்தாண்டு தொடங்கிய இகோ எக்லெக்டிக் டெக்னாலஜி மூலம் சூழலுக்கு உகந்த 40க்கும் மேற்பட்ட பொருட்களை இப்போது தயாரித்து வருகிறார். அத்துடன் ‘புனர் அவ்ருதி’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் ரீசைக்கிள் பொருட்களை தயாரிப்பது குறித்து கற்றும் தருகிறார்.