வண்டலூர் ஜூவின் கதை!



-குரு

விடுமுறை என்றாலே சென்னைவாசிகளின் முதல் சாய்ஸ் வண்டலூர் உயிரியல் பூங்காதான். முப்பது வருடங்களைக் கடந்தும் அதே வனப்போடு எல்லோரையும் கவர்ந்து கொண்டிருக்கும் வண்டலூர் ஜூவின் வரலாறு, அது கட்டமைக்கப்பட்ட விதம், விலங்குகளுடனான அனுபவங்கள் என அனைத்தையும் சேர்த்து ‘த ஜூ ஸ்டோரி’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் எஸ்.சுப்பராயலு. இவர், வண்டலூர் ஜூவின் முன்னாள் இயக்குநர். மட்டுமல்ல, அந்த ஜூவை உருவாக்கியவரும் இவர்தான்.

‘‘ஸ்கூல்ல படிக்கிறப்ப ஈவ்னிங் அப்பா கூட தினமும் திருவனந்தபுரம் ஜூவுக்கு வாக்கிங் போவேன். அப்ப அங்கிருக்கிற விலங்குகளை எல்லாம் பார்ப்பேன். என்னையும் அறியாம அதன் மேல ஈர்ப்பு வந்தது. அப்புறம் ஜூவுக்குப் போகிற நேரத்துக்காகவே காத்திருக்க ஆரம்பிச்சேன். ஜூ கீப்பர்ஸ்தான் விலங்குகளோட நெருங்கிப் பழகுவாங்க. விலங்குகளை நோய் தாக்காம பராமரிப்பதுதான் அவங்க வேலை. நான் எப்பவும் அவங்க கூடவே சுத்துவேன்.

விலங்குகளைப் பத்தி அவங்க சொன்ன கதைகளைக் கேட்டுகிட்டே இருப்பேன்...’’ மலரும் நினைவுகளில் மூழ்கிய எஸ்.சுப்பராயலுவுக்கு லண்டனில் ஃபாரஸ்ட்ரி படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘‘இங்கிலாந்துல இருக்கிற ஜூக்களுக்கு செல்வதையே என் முக்கிய வேலையா மாத்திக்கிட்டேன். நம்மோட ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிற யானைகளைப் பார்ப்பதே பிரமிப்புதான். கால் தடத்தை வைச்சே விலங்குகளைக் கணிக்கிற டிராக்கர்களின் திறமையை எப்படி வியக்காம இருக்க முடியும்?

விலங்குகள் வாழற சூழல் எப்படி இருக்கணும்... அழியும் தருவாய்ல இருக்கிற உயிர்களோட இனப்பெருக்க சிக்கல்கள் நடைமுறை ரீதியா என்னென்ன... ஜூ எப்படி செயல்படுது... இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். சரியா இந்த நேரம் பார்த்துதான் சென்னைல ஒரு ஜூ தொடங்கப் போவதாகச் சொல்லி அதுக்கு இயக்குநரா என்னை நியமிச்சாங்க...’’ என்ற சுப்பராயலு, ஜூ உருவான விதத்தை விளக்கினார்.

‘‘ரிஷிகள் தங்கள் ஆசிரமங்கள்ல மயிலையும், மானையும் வளர்த்தாங்க. திருவிழாக் கொண்டாட்டங்கள்ல மன்னன் வளர்க்கிற விலங்குகளை வேடிக்கைப் பார்க்க கிரேக்க மக்கள் கூடினாங்க. இந்த வரலாற்றுத் தகவல்கள் எல்லாம் நமக்கு சொல்றது ஒண்ணே ஒண்ணுதான். மனிதனுக்கும் விலங்குகளுக்குமான தொடர்பு காலம் காலமா இருக்கு என்ற உண்மை!

முன்னாடி உயிரியல் பூங்காக்கள்ல பார் கம்பி போட்ட இருப்பிடங்கள்லதான் விலங்குகள் வாழ்ந்தன. ஆனா, உண்மைல காடுதான் விலங்குகளோட அரண். ஸோ, அது மாதிரியான ஒரு வாழ்வியலை ஜூலயும் விலங்குகளுக்கு ஏற்படுத்தித் தர நினைச்சேன். இந்த நேரத்துல கார்ல் ஹேகன்பெக் பற்றி தெரிய வந்தது. அவர் விலங்குகளுக்கு பயிற்சி கொடுத்து, அதனோட பழகி பார் கம்பி தடுப்பு இல்லாமலயே நடமாடவிட்டு பார்வையாளர்களை ஈர்த்தார்.

இதை அடித்தளமா எடுத்துக்கிட்டோம். தேர்ந்தெடுக்கபட்ட வண்டலூர் ரிசர்வ் ஃபாரஸ்ட்ல கம்பித் தடுப்பு இல்லாம விலங்குகளை உலாவ விட்டோம். விலங்குகள் வந்ததும் நாங்க எதிர்கொண்ட முதல் பிரச்னை தண்ணீர். இதை தீர்க்க செயற்கை நீர்வீழ்ச்சியை உருவாக்கி தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்தோம்...’’ என்ற சுப்புராயலு, வண்டலூர் ஜூ எப்படி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாக மாறியது என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘வண்டலூர் ஜூவை 1981ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி பார்வையிட அன்றைய முதல்வர் எம்ஜிஆர் வர்றதா தகவல் வந்தது. உயிர்கள் மேல எப்பவும் அவருக்கு காதல் உண்டு. ஜூ பணிகளை அவ்வப்போது கேட்டுக்கிட்டே இருந்தார். திறப்பு விழா பத்தி அவரோட பேசப் போனப்ப ஜூவோட நுழைவாயில் எப்படி இருக்கும் என்கிற வரைபடத்தை காட்டினேன்.

எதுவும் சொல்லாம வாழ்த்தி அனுப்பிட்டார். திடீர்னு தோட்டத்துல வந்து சந்திக்கவும்னு செய்தி அனுப்பினார். குழப்பத்தோட அவரைப் போய் பார்த்தேன். ‘சிறைச்சாலை நுழைவு வாயில் மாதிரி ஜூவோட என்ட்ரன்ஸ் இருக்கக் கூடாது. விலங்குகளோட உறுமல், பிளிறல், கர்ஜனை எல்லாம் கேட்டுக்கிட்டே அவன் உள்ள நுழையணும். அப்பதான் காட்டுக்குள்ள இருக்கிற ஃபீல் அவனுக்கு கிடைக்கும்’னு சொன்னார்.

நல்ல ஐடியாவா பட்டது. அப்படியே செஞ்சோம். அதுதான் இப்ப இருக்கிற குகை வடிவிலான நுழைவுவாயில். இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் அவர் கவனம் செலுத்தினார். அவரேதான் ‘அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா’னு பெயர் வைச்சார். 1985, ஜூலை 24ம் தேதி திறந்து வைச்சார்...’’ என நெகிழ்ந்த சுப்பராயலுவிடம் வண்டலூர் ஜூவின் இப்போதைய நிலை குறித்து கேட்டோம்.

‘‘கவர்ச்சிக்காக எந்த செயற்கைத் தன்மையையும் இணைக்கக் கூடாது என்பது மாதிரியான சில கொள்கைகளை நான் இயக்குநரா இருந்த காலகட்டத்துல பின்பற்றினோம். பார்வையாளர்கள் ஜூவை ஒரு காடாகத்தான் பார்க்கணும். இந்த ஜூவுக்கு நடுவுல சின்னதா ஒரு மலை இருக்கு. கீழப்பகுதில இருக்கிற புற்கள் மானுக்கு உணவு. மேல இருக்கிற புலிக்கு மான் உணவு. இதை மனசுல வைச்சுத்தான் மலையோட மேல்பகுதில புலிகளுக்கான வசிப்பிடத்தை அமைச்சோம்.

அதாவது இயற்கையான எகோலாஜிக்கல் சிஸ்டத்தை வண்டலூர் ஜூவுக்குள்ள கஷ்டப்பட்டு உருவாக்கினோம். இப்படி பார்த்துப் பார்த்து நாங்க உருவாக்கின ஜூ, இப்ப வேற மாதிரி இருக்கு. அருகில் உள்ள தண்ணீர்ல இறங்கிடக் கூடாதுனு மலையின் மேற்பகுதில கம்பி போட்டு புலிகளை நடமாட விட்டிருக்காங்க.

இதன் மூலமா புல் - மான் - புலி என்கிற சங்கிலித் தொடரை சிதைச்சிருக்காங்க...’’ ஆதங்கத்துடன் பேசிய சுப்பராயலு, தனக்கும் உயிர்களுக்கும் இருக்கும் பிணைப்புதான் ஜூவின் மீதான தன் பார்வையை மாற்றியது என்கிறார். ‘‘பார்வையாளனுக்கு ஜூ, வெறும் பொழுதுபோக்குதான். ஆனா, பராமரிப்பவனுக்கு அது உயிர்களோட உலகம்.

அழியிற நிலைல இருக்கிற விலங்குகளோட இனப்பெருக்க உற்பத்தியை அதிகரிக்கணும். அதே நேரம், வேட்டையாடும் திறனை அது இழக்காம வாழ்விடம் அமைச்சுத் தரணும். இதுதான் பராமரிப்பவனின் நோக்கம். நான் இந்த பராமரிப்பவனின் உலகத்தைச் சேர்ந்தவன். பல ஜூக்களுக்கு போயிருக்கேன். வேலை பார்த்திருக்கேன். ஆனா, இப்ப வரைக்கும் விலங்குகளோட உளவியலை முழுமையா கற்கலை. அந்த தீராத தேடலின் நீட்சியாதான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கேன்...’’ என்கிறார் சுப்பராயலு.