கும்ப லக்னம்- தனித்து நிற்கும் சனியின் யோகம்
கிரகங்கள் தரும் யோகங்கள் - 102
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
பன்னிரெண்டு ராசிகளுக்குள் கும்பத்தையும், மகரத்தையும் சனிதான் ஆளுகிறது. ஆனாலும் மகரச் சனிக்கும், கும்பச் சனிக்கும் வேறுபாடு உண்டு.
மகரச் சனி சர வெடி எனில், கும்பச் சனி குத்துவிளக்கின் தீபச் சுடர். ஒன்று வெடிக்கும், இன்னொன்று நிதானமாக ஒளியை பரவவிடும். மகரத்தை சர ராசி என்பார்கள். ஒருமுறை என்ன சிந்தித்தார்களோ, பிறகு அதைப்பற்றி யோசிக்க மாட்டார்கள். ஆனால், கும்பமோ ஒன்றுக்கு பத்து முறை எந்த விஷயமானாலும் யோசித்து முடிவெடுப்பார்கள்.
 கும்பம் என்பதே எல்லாவற்றையும் ஒடுக்கியும், வெளிப்படுத்தியும் சக்தியை சிதறாது செய்யும் ஓர் அமைப்பு. அதனாலேயே மற்றவர்கள் இவர்களை தாமதன், மந்தன் என்றெல்லாம் குறை கூறுவார்கள். இவர்கள் அலங்காரமாகவும், அழுத்தக்காரர்களாகவும் இருப்பார்கள். மேலே சொன்னவை பொதுவான பலன்கள். இனி, ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான சனி தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா?
கும்ப லக்னத்திலேயே-அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனி இருந்தால், எதிராளி பத்து நிமிஷங்கள் பேசியதற்குப் பிறகுதான் தங்கள் விஷயத்தை சொல்லவே ஆரம்பிப்பார்கள். எல்லா விஷயங்களுக்கும் ஊடாக ஒரு தொடர்பு இருப்பதை உணர்வார்கள். தொடர்புறுத்தியும் பேசுவார்கள். பொறுமை, சாந்தம் என்பதுதான் இவர்களின் பொதுவான இயல்பாக இருக்கும். ‘‘உலகம் உருண்டைதானே. எப்படிப் பார்த்தாலும் எங்கிட்ட அவன் வந்துதானே ஆகணும்’’ என்பார்கள்.
ஒருவர் சார்பாக பேசாது இருவரின் தரப்பிலுள்ள நியாயத்தை சொல்வார்கள். ஏனெனில், சனி ஒரு நீதிக் கிரகமும் ஆகும். ஒரு விஷயத்துக்காக செல்லும் இவர்களுக்கு இரண்டு மூன்று விஷயங்களை சேர்த்துப் பார்த்து விட்டு வரத் தெரியவில்லை என்கிற குற்றச்சாட்டும் உண்டு. பனி, புயல் போன்றவற்றைப் பார்க்காமல் கடுந்தவம்புரியும் சித்தர்களைப்போல சுற்றுப்புறச் சூழ்நிலையால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள். மிகப்பெரிய தொழிலில் இறங்கும்போது பண விஷயத்தில் கவனமாக இருத்தல் அவசியம்.
இரண்டாம் இடமான மீனத்தில் சனி இருந்தால் ஐந்தாம் வகுப்பிலிருந்து வரலாற்றுப் பாடத்தின் மீது தனிக் கவனம் செலுத்துவார்கள். வகுப்பறை ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். சி.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய ஒன்றில் சிறந்து விளங்குவார்கள். எதையும் நுணுக்கமாகத் தெரிந்து கொள்வார்கள். மனப்பாடம் செய்து அப்படியே திரும்பச் சொல்வது இதிலெல்லாம் இவர்களுக்கு நம்பிக்கை இருக்காது.
தொழிலுக்கு ஒரு கல்வி, தன்னுடைய ஆர்வத்திற்கு ஒரு படிப்பு என்று பிரித்து வைத்துக் கொண்டு படிப்பார்கள். அதேபோல, கம்ப்யூட்டர் டெஸ்ட்டிங், கம்ப்யூட்டரில் அனிமேஷன், ஆர்க்கிடெக்ட் போன்றவை ஏற்றம் தருவதாக அமையும். வானியல், எரி நட்சத்திரம், செயற்கைக்கோள் என்று ஆர்வமாகப் படிப்பார்கள். பள்ளியிறுதி படிக்கும்போதே ஸ்பேஸ் கிராப்ட், பைலட் ஆவது பற்றிய விஷயங்களை காதில் போட்டு வைப்பது நல்லது.
மூன்றாம் இடமான மேஷத்தில் சனியிருந்தால் விவரமறியா வயதிலிருந்து விவகாரங்களை எதிர் கொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைக் காட்டிலும், தெரியாத விஷயத்தில்தான் ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் எந்தக் கருத்தை எடுத்து வைத்தாலும் அதை எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். கனவை நனவாக்க நடைமுறையில் உழைக்க வேண்டும் என்பதையே அவ்வப்போது மறந்து விடுவார்கள். இளைய சகோதர, சகோதரிக்கு எத்தனைதான் உதவிகள் செய்தாலும் திடீரென்று உறவுகளை முறித்துக் கொள்வார்கள். மூன்றாம் இடத்தின் அதிபதியான செவ்வாய் லக்னாதிபதியான சனிக்கு பகையாக வருவதால் எமோஷனலாக முடிவுகளை எடுக்குமாறு இவர்களைத் தூண்டுவார். எனவே, ரத்த பந்தங்களிடையே பொறுமை முக்கியம். மாமனார் ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. சமூகத்தில் செல்வாக்குள்ள மனிதராக இருப்பார்.
நான்காம் இடமான ரிஷபத்தில் சனி இருந்தால் சிறு வயதில் படிப்பிற்கோ அல்லது வேலைக்கு செல்லும் வயதிலோ தாயாரை பிரிந்திருப்பார்கள். தாயாரோடு கருத்து மோதல்கள் வந்து செல்லும். தேன் தடவிய பேச்சுக்களுக்கு எப்போதுமே செவி சாய்க்கக் கூடாது. எச்சரிக்கையோடு இருங்கள். பூமிகாரகனான செவ்வாய் லக்னாதிபதியான சனிக்கு பகையாக இருப்பதால் காலிஇடங்களை வாங்குவதை விட கட்டிய வீட்டை வாங்குவது நல்லது. ராணுவக் குடியிருப்பு, தீயணைப்பு நிலையம், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், காவல் நிலையம் போன்ற இடங்களுக்கு அருகில் வீடோ, அடுக்ககமோ கிடைத்தால் நல்லது.
 பணத்திற்கு எப்போதுமே ஒரே ஆளை நம்பாமல், பல்வேறு வழிகளைக் கையாள வேண்டும். இவர்கள் கியர் இல்லாத வண்டியை தேர்ந்தெடுக்க வேண்டும். கார் வாங்கினால் டிரைவர் வைத்துக் கொள்ள வேண்டும். ஐந்தாமிடமான மிதுனத்தில் சனி நின்றிருந்தால், இவர்களின் குழந்தை பாக்கிய ஸ்தானத்திற்கு, அதாவது பூர்வ புண்யாதிபதியாக மிதுன புதன் வருகிறார்.
மிதுனம் என்ற சொல்லுக்கே இரட்டை என்று பொருள். இதற்கேற்ப ரெட்டை ஆண் அல்லது பெண் பிள்ளைகள் பிறக்க வாய்ப்பிருக்கிறது. இஷ்ட தெய்வத்திற்கு துலாபாரம் தருவதன் மூலம் பிள்ளை பாக்யம் உடனே கிடைக்கும். வாரிசுகள் நுண்ணறிவு அதிகமுள்ளவர்களாகவும், பெற்றோரின் கனவுகளை நனவாக்குபவர்களாகவும் இருப்பார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குரியவராக புதன் வருவதால் நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி செய்யுங்கள்.
தரமான எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் இருந்தும் தன் படைப்பை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவருக்கு உதவுதல் நல்லது. புதன் நேர்மறையான பலன்களை உடனே தருவார். ஏழு வருடத்தில் முடிக்க வேண்டிய விஷயத்தை இவர்கள் இரண்டு வருடத்தில் முடிப்பார்கள். ஆறாம் இடமான கடகத்தில் சனி இருந்தால் எப்போதும் கபம் இருந்து கொண்டே இருக்கும்.
உணவுக் குழலுக்கும் மூச்சுக்குழலுக்கு இடையே தொந்தரவு இருக்கும். குறட்டை இருக்கும். பொதுவாகவே மதுவின் பக்கம் செல்லாமல் இருந்தாலே நல்லதுதான். கடன் வாங்கும்போது நகையையோ, வீட்டுப் பத்திரத்தையோ வைத்து கடன் வாங்குங்கள். உடனடியாக கடனைக் கொடுப்பதாக உறுதியளிக்காதீர்கள். ஆறாம் இடமாக சந்திரன் வருவதால் சந்திரன் மனோகாரகனாக இருப்பதால் மனம் சொல்வதை விட மனசாட்சிக்குரிய கிரகமான சனியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவர்களுக்கு ஏழரைச் சனி நடக்கும்போது தைரியமாக வீடு வாங்கலாம். இல்லையெனில் வேறு ஏதேனும் வீண் செலவுகள் வரலாம். ஏழாம் இடமான சிம்மத்தில் சனி இருந்தால் திருமணம் தாமதமாகும். வாழ்க்கைத் துணைவர் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார் என்ற குறை இருந்து கொண்டேயிருக்கும். சம வயதுள்ள அல்லது சில மாதங்களே இடைவெளியில் பிறந்த வாழ்க்கைத் துணை அமையும். ஒரு பிடிவாத குணம் இருந்து கொண்டேயிருக்கும். வாழ்க்கைத் துணைவர் சட்டென்று தூக்கி எறிந்து பேசுபவராக இருப்பார். தான் சொல்வதே சரியென்று நிலைநாட்டிக் கொண்டிருப்பார்.
எட்டாமிடமான கன்னியில் சனி இடம்பெற்றிருந்தால் சிறு வயதிலேயே மனரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும். உறவினர்களால் வஞ்சிக்கப்படுதல், தூஷிக்கப்படுதல் என்றெல்லாம் நிகழும். இவர்களால் பாசாங்காகவும், பாவனையாகவும் எதையும் பேச முடியாது. கடுங்கோபம் கொள்ளுதலை இவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒன்பதாம் இடமான துலாத்தில் சனி இருந்தால் வாழ்வின் முக்கிய தருணங்களை தந்தையாரே தீர்மானிப்பார். தனக்குப் பிறகு நடக்க வேண்டிய காரியங்கள் என்று பலவிதமான தர்ம காரியங்களைப் பட்டியலிட்டு அதற்காக பணத்தையும் ஒதுக்கி விட்டுத்தான் செல்வார்கள். சமய வழிச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். மத்திம வயதிற்குப் பிறகு தனக்குப் பிடித்த துறையிலேயே ஈடுபட்டு புகழ் பெறுவார்கள்.
பத்தாம் இடமான விருச்சிகத்தில் சனி இடம்பெற்றிருந்தால் திரைத்துறையில் மிளிர்பவர்களாகவும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் பெரும் பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். அரசாங்கத்தோடு தொடர்புடைய தொழில்களில் டெண்டர் எடுப்பார்கள். வெளிநாடு சென்று பட்டம், விருது வாங்கினாலும் குலத் தொழிலைக் காதலிப்பார்கள். உத்யோகத்தில் எத்தனை பிரமோஷன் வாங்கினாலும் பேச்சில் பணிவு குறையாது. உடைகளிலும் பெரிய மாற்றம் இருக்காது. இவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்.
காவல் நிலைய எழுத்தர், பாடத்திட்டத்தை உருவாக்குபவர், சி.பி.ஐ., அணுகுண்டை செயலிழக்கச் செய்பவர், ரயில்வே அதிகாரி, பஸ் கண்டக்டர், பட்ஜெட்டை உருவாக்குபவர், நிதிநிலை அதிகாரி, வங்கி அதிகாரி, யோகா மாஸ்டர் என்று சில வேலைகளில் அமர்வார்கள். அதுவே வியாபாரமெனில், இறைச்சிக் கூடம், மரப் பயிர், தோட்டப் பயிர் செய்பவர், அசைவ உணவகங்கள், மரக்கடை, சிமெண்ட், மெழுகுவர்த்தி, பட்டாசு தொழிற்சாலை என்று தொழிலில் இறங்கி பாராட்டும்படியாக சாதிப்பார்கள்.
இவர்களின் மாமியார் ஸ்தானத்திற்கும் விருச்சிகமே. எனவே மாமியார் சூட்சுமமான ஆளுமைத் திறனோடு இருப்பார். புதியதாக திட்டமிடுதலை விட ஏற்கனவே திட்டமிட்ட விஷயத்தை எளிதாக செயல்படுத்துவார். பதினோராம் இடமான தனுசு ராசியில் சனி தனித்து இடம்பெற்றிருந்தால் மூத்த சகோதரரோடு இணக்கமாக இருப்பது நல்லது. இல்லையெனில் அவரால் பிரச்னைகள் வரக்கூடும். மூத்த சகோதரரை அடக்கி ஆளுவார்கள். மத்திம வயதில் விட்ட குறை தொட்ட குறையாக நட்பு வந்துபோகும்.
பன்னிரண்டாம் இடமான மகர ராசியில் சனி அமர்ந்தால் லக்னாதிபதியே பன்னி ரண்டாம் இடத்திற்குரியவராகவும் வருவதால் மறுபிறவி இல்லை என்கிற ஜோதிட கருத்தாக்கம் இவர்களுக்கு பொருந்தும். பெரும்பாலும் நேர்மையாகவே சம்பாதிப்பார்கள். தனித்து நின்ற சனியின் அமைப்பானது தனிப்பட்ட முறையில் வாழ்வின் துயரங்களைப்பற்றி பேசக் கூடியதாகும். எங்கு யார் அழுதாலும் அவர்களுக்கு அருகே இவர்கள் இருப்பார்கள். பலர், தியாகசீலர்களாக தங்களின் வாழ்வினை அமைத்துக் கொள்வார்கள்.
சனி சில ராசிகளில் அமர்ந்து பகை பெற்றோ, நீசமடைந்தோ காணப்பட்டால், நமக்கு மட்டும் ஏன் இம்மாதிரியான வாழ்க்கை அமைகிறது என்று நொந்து கொள்ள வைக்கும். எப்போதும் சுய கழிவிரக்கத்தோடு எல்லோரிடமும் புலம்பத் தோன்றும். இந்த குணங்களெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒருவரின் சுய ஆளுமையை அழித்துவிடும். போராட்ட குணத்தை வளர்த்தெடுக்காது; கோழையாக்கும்.
இம்மாதிரி நேரங்களில் சென்னை - மயிலாப்பூர் தலத்தில் அமைந்துள்ள கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றுவாருங்கள். இத்தலம் காபாலிகர்களால் பூஜிக்கப்பட்டது. மேலும், அம்மையே மயிலுருவில் ஈசனை பூஜித்ததாகும். மயில் வணங்கிய தலத்திற்கு சென்று வணங்கும்போது வாழ்க்கையின் மீது பிடிப்பு உண்டாகும். மயிலின் வண்ணங்கள் என்பது வாழ்வின் பலவித ருசிகளை உணர்த்துவதேயாகும். எனவே, மயிலை கபாலீஸ்வரரையும், கற்பகாம்பாளையும் வணங்கி வாருங்கள்.
(கிரகங்கள் சுழலும்)
ஓவியம்: மணியம் செல்வன்
|