நிபுணன்
-குங்குமம் விமர்சனக்குழு
சமூக சேவகர், மருத்துவர், வழக்குரைஞர் என அடுத்தடுத்து கொலை செய்யும் சீரியல் கில்லரை அழிப்பவனே ‘நிபுணன்’. தமிழ்நாட்டின் திறமையான உளவு அதிகாரி அர்ஜுன். எடுத்துக் கொண்ட வழக்குகளை திறமையாக துப்பறிந்து முடித்து வைக்கிறார். நகரத்தை கலக்கிக் கொண்டிருக்கும் தொடர் கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய பணி அவரிடம் தரப்படுகிறது. உதவி அதிகாரிகளாக இருக்கும் பிரசன்னா, வரலட்சுமி துணை கொண்டு குற்றவாளியைப் பிடிக்க முயல்கிறார். இடையில் திடீரென ஏற்படும் உடல்நிலை கோளாறு வேறு. எல்லாவற்றையும் சிரமேற்கொண்டு எதிரியை அழிப்பதே கதை!
 கனிந்த வயதின் தோற்றத்தில் அர்ஜுன் அற்புதம். முகமொழியிலும், ‘சூப்பர்மேன்’ பாரம் சுமக்கும்போதும், உடல்மொழியிலும் வெரைட்டி வித்தியாசம். என்றும் பொருந்தியிருக்கும் அந்த ஃபிட்னஸ் இன்றைய ‘பொதபொத’ ஹீரோக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பதறாமல் எதிரிக்கு செக் வைக்கும்போதும், தன்னையே பணயம் வைத்து வில்லனைச் சந்திக்கச் செல்வதும் ரசனை அத்தியாயங்கள்.
நிதானமாகப் பேசிக்கொண்டே கொலைகாரனை நெருங்கும் போதும், இறுதிக் கணங்களின் சண்டையில் அதிரடியாக எதிரியை வீழ்த்தும்போதும் அனல் தெறிக்கிறது. ஸ்டைலீஷான போலீஸ் கதையைக் கொடுத்த வகையில் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் கூர்மை. படம் முழுவதும் வருகிற பிரசன்னா, வரலட்சுமி டீம் களைகட்டுகிறது. அவர்களின் குறும்புகளும் அடிக்கடி செய்கிற குறுக்கீடும் புன்னகையை வரவழைக்கின்றன. காதலில் சேர்க்க முடியாமல், நட்பிற்கு கொஞ்சம் மேலான சுவாரஸ்ய ரகம்.
அர்ஜுனின் இணையாக வரும் ஸ்ருதி ஹரிஹரன் பென்சில் அழகியாக பரிமளிக்கிறார். அர்ஜுனுடன் சேர்ந்து அவர் தரும் இறுக்க நெருக்க தருணங்களில் அவரின் கிறக்கக் கண்களும், ஹனி ஸ்மைலும் விருந்து. முன் எப்பொழுதும் காணாத புது வகை முகம். அர்ஜுனை விழிகளிலே வீழ்த்துகிறாரே, நிஜமாகவே மேட் ஃபார் ஈச் அதர்! டில்லியில் நடந்த பரபரப்பான ஒரு கொலை வழக்கை ேசர்த்திருப்பது புது ட்விஸ்ட். வழக்கமான போலீஸ் கதையாகிப் போய்விடாமல் உண்மையான நடைமுறைகளைக் காட்டுவது ஆறுதல்.
 முதல் என்கவுண்ட்டர் காட்சியில் லேசர் பார்வை, இரும்பு உடம்பு, சிறுத்தை ஓட்டம், துப்பாக்கிச் சீற்றம் என உதவியாளர்களுக்கு இடம் கொடாமல் அர்ஜுனே சுட்டுத் தள்ளிவிட்டு இதழோரப் புன்னகையோடு சக தோழர்களிடம் கண்ணடிப்பது அழகு. இத்தனை அனுபவம் இருந்தும், யாரையும் காப்பாற்ற முடியாமல் போவது வழக்கமான போலீஸ் கதை ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம்.
கடைசியில் யார் கொலைகாரன் எனத் தெரிய வரும்போது விறுவிறு ஆச்சரியம்! திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் எழுத்தாளர் ஆனந்த் ராகவ், நல்வரவு. நிபுணனின் டெம்போவைத் தக்க வைக்கிறது நவீன் இசை. அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அமைதி யில், பரபரப்பில், வேகத்தில், பதற்றத்தில் பின்னியெடுக்கிறது. ஃப்ரெஷ் லுக். வித்தியாச போலீஸ் படங்களை தமிழில் பண்ண முடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறது படம்.
|