COFFEE TABLE



- குங்குமம் டீம்

பிரின்ட் கேஸ்

உங்களின் ஸ்மார்ட் போனை இன்ஸ்டன்ட் கேமராவாக மாற்ற வந்துவிட்டது பிரின்ட் கேஸ். மொபைல் கேஸ் மாதிரி இதை உங்களின் ஸ்மார்ட் போனுக்கு அணிவிக்க வேண்டும். பிறகு போனில் உள்ள போட்டோக்களை இதற்கென்றே இருக்கும் ‘ப்ரின்ட் ஆப்’பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்புறம் என்ன?  உங்களுக்கான போட்டோவை பிரின்ட் செய்து, கேஸின் மறுமுனையில் பிரின்டட் போட்டோவாக பெற்றுக்கொள்ளலாம். பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பு. விலை ரூ 17,500! 

நயாகராவில் ஐஸ்!

இந்தி, மலையாளம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நீண்ட நாள் கனவு ‘ஒரு வேர்ல்டு டூர் அடிக்க வேண்டும்... கண் குளிர நயாகராவைப்  பார்த்து ரசிக்க வேண்டும்’ என்பதுதான். அது இன்ஸ்டன்ட் நனவாக சமீபத்தில் அமெரிக்கா பறந்திருக்கிறார் ஐஸ். அங்கே நயாகராவைப் பார்த்ததும் மெய்மறந்து செல்ஃபியும் எடுத்துக்கொண்டிருக்கிறது பொண்ணு.

ஓரினச்சேர்க்கைக்கு மரண தண்டனை!

உலகமெங்கும் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக குரல்கள் எழுந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அதற்கான தண்டனைகள் கடுமையாக எகிறிக் கொண்டே போகின்றன என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. உதாரணத்துக்கு ஏமன் நாட்டில் திருமணமான ஆண்கள் இந்த செயலில் ஈடுபட்டிருந்தால் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை இருப்பதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. பாகிஸ்தான், ஆப்கன், கத்தார் போன்ற நாடுகளில் இதற்கு மரண தண்டனை என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இதுவரைக்கும் யாரையும் இதற்காக தூக்கில் போடவில்லை என்பது ஆறுதல்.

உயிரைவிட முக்கியம் த்ரில்!

உலகெங்கும் த்ரில் அனுபவத்துக்காக உயிரைக் கூட துச்சமாக மதித்து சாகசத்தில் இறங்கும் இளைஞர்கள் அதிகரித்து விட்டார்கள். சமீபத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ரயிலின் மேற்கூரை மீது சைக்கிள் ஓட்டி சாகசம் செய்துள்ளனர். இதில் என்ன சாகசம் என்கிறீர்களா? அவர்கள் சைக்கிள் ஓட்டியது 140 கி.மீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலின் மேற்கூரையில்! ஒருவர் சைக்கிள் ஓட்ட, இன்னொருவர் வீடியோவாக்கி யூ டியூப்பில் பதிவேற்ற, சமூக வலைத்தளங்களில் பெரிய வைரலாகிவிட்டது இந்த வீடியோ. ‘‘யாரும் எங்களை மாதிரி செய்ய வேண்டாம்!’’ என்பதே அந்த சாகச நாயகர்களின் அன்பான வேண்டுகோள்.   

செயற்கை கடற்கரை

கடற்கரையில் கால் நனைப்பது எல்லோருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், அதற்கான நேரம்தான் யாருக்கும் வாய்ப்பதில்லை. இந்த சிம்பிளான லாஜிக்கை சரியாகப் புரிந்து வைத்துள்ளது துபாயிலுள்ள மால் ஒன்று. உடனே அதை விஷுவலாகவும் செயல்படுத்தி விட்டது. மாலின் இரண்டாவது மாடியில் உள்ள தளத்தில் கடல் நீர் அலைகளோடு ஓடி வருவது போலவும்...

அலைகள் வந்து முடிந்த பின், கொத்து கொத்தாக மீன்கள் கூட்டம் நீந்தி வருவது போலவும் 3டி எஃபெக்ட்டில் லைட்டிங் செய்துள்ளனர். உண்மையிலேயே இது கடல் நீரா! என்ற ஆச்சர்யத்துடனேயே  பார்வையாளர்கள் அதைக் கடந்து செல்கிறார்கள். இதை 30 நொடிகள் ஓடக்கூடிய  வீடியோவாகப் பதிவு செய்து ஃபேஸ்புக்கின் ‘soy curioso’ பக்கத்தில் ‘This is the floor in a Dubai Mall’ என்ற தலைப்பில் பதிவிட 40 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.