ஆணுறைக்கு வரிச் சலுகை நாப்கினுக்கு GST வரி!
- ஷாலினி நியூட்டன்
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமுலானதுமே சர்ச்சைகள் இறக்கை கட்டத் தொடங்கி விட்டன. பல பொருட்களுக்கு வரி உயர்வு என்பதால் மத்திய வர்க்கம் முதல் அடித்தட்டு மக்கள் வரை அனைவருமே கொந்தளிக்கிறார்கள். எல்லாவற்றையும் விட தாய்க்குலத்தையும் சமூக செயல்பாட்டாளர்களையும் கொதிப்படைய வைத்திருக்கும் வரி உயர்வு என்றால் அது பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினுக்கான வரி உயர்வுதான்.
 ஆணுறைக்கு வரி கிடையாது. ஆனால், நாப்கின்களுக்கு 12% ஜி.எஸ்.டி என்பதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. ‘நாப்கின்களுக்கு இப்போதுதான் வரி விதிப்பு நடக்கிறதா என்ன? இதற்கு முன்பும் மறைமுகமாக சுமார் 13.7% வரை வரி கட்டிக் கொண்டுதானே இருந்தீர்கள்?’ என இதற்கு மத்திய அரசு பதில் சொல்கிறது. கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட நாப்கின்களுக்கு வரி விலக்கு உள்ளது. ஆனால், இங்கு மட்டும் ஏன் இவ்வளவு வரி? இது குறித்து பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டோம்.
செம்மலர் ஜீவா, இந்திய மாணவர் சங்கம் (SFI), மதுரை. எங்கள் அமைப்பில் உள்ளவர்கள் சேர்ந்துதான் #Bleeding withoutfear #Bleedingwithouttax என்னும் பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி போராட்டம் நடத்தினோம். தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் அடுத்த கட்டப் போராட்டமாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு நாப்கின்களை பதிவுத் தபாலில் அனுப்பினோம்.
ஏற்கெனவே கிராமப்புறப் பெண்களில் பெரும்பாலானவர்கள் இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவது இல்லை. சொல்லப்போனால் சில பெண்கள் துணிகள்கூட பயன்படுத்துவது இல்லை. துணி ஏதும் கிடைக்காததால் வழி இல்லாமல் சாம்பல், மரத்தூள், மணல், இலைகள், காகிதம் என கிடைப்பதை எல்லாம் பயன்படுத்துகிறார்கள்.
 இதனால் நோய்த்தொற்றுகள்தான் ஏற்படுகின்றன. இந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காகவே பள்ளிகள், அங்கன்வாடிகளில் இலவச நாப்கின்கள் கொடுத்தார்கள். இந்த ஜி.எஸ்.டி. அறிவிப்பு அதற்கும் சமாதிகட்டிவிட்டது. மக்களிடம் நாப்கின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ள நிலையில் நாப்கின் விலையை அதிகப்படுத்தினால், இதைப் பயன்படுத்துவது இன்னமும் குறைந்துபோகும். பெண் உடலின் இயல்பான, இயற்கையான நிகழ்வான இதை இன்னமும் அருவருப்பான, அசிங்கமான விஷயமாகத்தான் இந்த சமுதாயம் நினைக்கிறது. பீட்ஸா, பர்கருக்குக்கூட ஐந்து சதவிகிதம்தான் வரி. நாப்கின்களுக்கு மட்டும் 12% என்பது அநியாயம்.
அ.கரீம், வழக்குரைஞர், கோவை. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்பது இன்னமும் பொய்யாகத்தான் உள்ளது என்பதற்குச் சரியான சான்று இதுதான். இந்த வரியை நீக்குவதால் அரசுக்கு பெரிய இழப்புகள் ஏதும் ஏற்படாது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசு இது போன்ற விஷயங்களை மனிதாபிமானத்தோடு எதிர்கொள்வதுதான் நல்லது. நாப்கின் பயன்பாடு குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் வரிச்சலுகை மட்டும் அல்ல, ரேஷன் கடைகள், ஊராட்சி மையங்களில் அரசே நாப்கின்களை இலவசமாகத் தர முன்வரவேண்டும்.
இயற்கையாகப் பெண்களுக்கு ஏற்படும் உடல் சார்ந்த ஒரு பிரச்னையில் அரசு லாபம் தேட முனைவது மோசமான அரசியல். மாதவிடாய் காலங்களில் தினசரி நான்கைந்து நாப்கின்கள் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த வரி உயர்வால், நாப்கின் பயன்பாட்டின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏழை, எளிய பெண்கள் பாதிக்கப்படுவார்கள். இதற்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகளைப் பொதுநல அமைப்புகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியம்.
டாக்டர் ஆர்த்தி, தோல் நோய் நிபுணர், சென்னை. பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் உடல் உபாதையான மாதவிடாய்க்கு நாப்கின்கள் பயன்படுத்துவது இப்போது மெல்ல அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம். அழுக்கான, பழைய துணிகள், மரத்தூள், கரித்தூள் போன்றவற்றைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. இதனால், பிறப்புறுப்பில் எளிதாக நோய்த்தொற்று ஏற்படும். நீண்ட கால அளவில் இவற்றைப் பயன்படுத்தும்போது கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு உயிருக்கேகூட ஆபத்தாய் முடியும்.
நாப்கின்கள்தான் மாதவிடாய் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வு. இப்படியான நிலையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் விலையை உயர்த்தியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அரசு, பெண்களின் உணர்வைப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் இன்று இந்த அளவுக்கு வீட்டைவிட்டு வெளியேறி படிப்பு, வேலை என முன்னேறியிருப்பதற்கு நாப்கின் ஒரு முக்கிய காரணம். பெண்களின் தன்னம்பிக்கையை நாப்கின்தான் அதிகரிக்க வைத்துள்ளது.
துணி என்றால் ஓரிரு மணி நேரம்தான் தாங்கும். ஆனால், நாப்கின் நான்கைந்து மணி நேரம் வரை பயன்படும். தவிர, இதை ஹேண்ட்பேக், பர்ஸ் போன்றவற்றில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். குழந்தைப் பேறு, மெனோபாஸ் காலங்களில் நாப்கின்களின் அன்றாடத் தேவை இன்னமும் அதிகம். துணியைப் பயன்படுத்துவது மிகவும் அசெளகரியம் மட்டும் அல்ல;
 அதை சுடுநீரில் துவைத்து, உலர்த்திப் பயன்படுத்த வேண்டும். இதெல்லாம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எளிய விஷயங்கள் அல்ல. சரியாக அலசாமல் துணியைப் பயன்படுத்துவதால் அலர்ஜி, ரேசஸ், படை, புண் உள்ளிட்ட தோல் வியாதிகள், கர்ப்பப்பை பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
மாதவிடாய் பிரச்சனைக்கு வேறு என்ன தீர்வு எனக் கேட்டால் நிச்சயமாக நாப்கின்களைவிட அதிக விலையுடைய தீர்வுகள்தான் உள்ளன. டாம்பான்ஸ், மாதவிடாய் கப். இந்த இரண்டுமே தற்சமயம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நாப்கின்களைவிட விலை உயர்ந்தவை. மேலும், நம் தமிழ்நாட்டுப் பெண்கள் இந்த டாம்பான் அல்லது கப்களுக்கு இன்னமும் பழக்கப்படவில்லை. இவை இரண்டுமே பெண் உறுப்புக்குள் வைக்கக் கூடியவை. இதைவிட நாப்கினே எளிதானது. பாதுகாப்பானது.
இந்தியாவில் நாப்கின் சந்தை
இந்தியா ரூ.4 ஆயிரம் கோடி vs சீனா ரூ.65 ஆயிரம் கோடி இந்தியா - 20% தாய்லாந்து,இந்தோனேசியா - 50% சீனா - 70% கென்யா - 30%
மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை!
இந்த கோரிக்கை மெல்ல வலுத்து வருகிறது. ஆனால், இந்த கோஷம் இன்னமும் அரசின் காதில் விழவில்லை. இந்நிலையில் கல்ச்சர் மெஷின் எனும் நிறுவனம் மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே மாதவிடாய்க்கு விடுமுறை அளித்துள்ள முதல் நிறுவனம் இதுதான். 75 பெண்களுக்கு மேல் பணிபுரியும் இந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறைத் தலைவரான தேவ்லீனா எஸ் மஜூம்தார், தன் மூத்த அதிகாரிகளிடம் போராடி இந்த உரிமையைப் பெற்றிருக்கிறார். இது தொடர்பான யூடியூப் வீடியோ ஒன்றை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
|