தயாரிப்பாளர் விக்ரம் பிரபு!



-மை.பாரதிராஜா

‘‘சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்ல புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்திருக்கேன். படத் தயாரிப்பு தொடர்பான சின்னச் சின்ன நுணுக்கங்களை அங்க கத்துக்கிட்டேன். அந்த அனுபவங்களோட ‘ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கேன். அதன் முதல் தயாரிப்புதான் ‘நெருப்புடா’. நிச்சயம் உங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்ச படமா இது இருக்கும்...’’ நம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் விக்ரம் பிரபு.

‘‘ஆடியோ ஃபங்ஷனுக்கு வந்த ரஜினி சார், ‘இந்தப் படம் நூறு பர்சன்ட் சக்சஸ் ஆகணும். ஆகும்...’னு மேடையிலயே என் நிறுவனத்தையும் சேர்த்து வாழ்த்தினார். டீஸரையும் பார்த்துட்டு, ‘ஃபென்டாஸ்டிக்... காமிராமேனுக்கு ஹேட்ஸ் ஆஃப்...’னு தோள்ல தட்டிக் கொடுத்தார். நடிகனா நான் அறிமுகமான ‘கும்கி’ ஆடியோ ஃபங்ஷனுக்கும் ரஜினி சார் வந்திருந்து ஆசீர்வதிச்சார். இப்படி நான் சார்ந்த முதல் விஷயங்கள்ல எல்லாம் அவரோட பிளஸிங்ஸ் இருக்கு. உண்மைலயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்...’’ மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.

நடிகர் விக்ரம்பிரபு - தயாரிப்பாளர் விக்ரம்பிரபு... என்ன வித்தி யாசம்?
தயாரிப்பாளரான பிறகு பொறுப்புகள் கூடியிருக்கு. பொறுமையும் அதிகமாகியிருக்கு. ஒரு நடிகரா ஸ்பாட்டுக்கு போனா டைரக்டரோட ஆக்டராதான் இருப்பேன். அப்பாவும், தாத்தாவும் கற்றுக் கொடுத்த பாடம் இது. இயக்குநர் மேல முழு நம்பிக்கையும் வச்சு இறங்கிடுவேன். அப்பா என்கிட்ட சொல்வாங்க, ‘உன்னோட படங்கள் எல்லாத்தையும் கவனிச்சிட்டிருக்கேன்.

நல்லா பண்றே... வித்தியாசமான கதைகளா செலக்ட் பண்ணு. வெற்றி, தோல்விகள் பத்தி கவலைப்படாத... அடுத்தடுத்த ஒர்க்ல கவனம் செலுத்து’னு. அதைத்தான் ஃபாலோ பண்றேன். ‘ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனம் தொடங்கினதும் புரொடக்‌ஷனுக்கான டீம் ரெடி பண்றதே பெரிய சவாலா இருந்தது. தினமும் நூறுபேருக்கு வேலை. அறுபது நாட்கள் படப்பிடிப்பு தேவைனு வேலைக்காக திட்டமிடுவதும், செலவுகளை கையாள்வதும் புது அனுபவம்.

முதல் தயாரிப்பே கொஞ்சம் பெரிசா இருக்கணும்னு திட்டமிட்டோம். புது டைரக்டர் அசோக்குமார் சொன்ன கதை பிடிச்சிருந்தது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மனிடம் அசோசியேட்டா இருந்தவர். ‘ரோமியோ ஜூலியட்’ல ஒர்க் பண்ணியிருக்கார். ஒளிப்பதிவாளர் சவுண்டா இருக்கணும்னு விரும்பினேன். நினைச்சது மாதிரியே ஆர்.டி. ராஜசேகர் கிடைச்சார்.

ஷான் ரோல்டன் அருமையா இசையமைச்சிருக்கார். ஷூட்டிங் போனா நடிகன் விக்ரம் பிரபுவைத்தான் பார்க்க முடியும். அங்கே நான் புரொட்யூசரா இருந்ததில்லை. என் இயக்குநரும் கம்ஃபோர்ட்டா உணர்ந்திருப்பார்னு நினைக்கறேன். நிச்சயம் தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன். வேற ஹீரோக்களுக்கு கதை அமைஞ்சா அதையும் ப்ரடியூஸ் பண்ற ஐடியா இருக்கு.

இப்ப நடிக்கற படங்கள்..?
மூணு படங்கள் போயிட்டிருக்கு. ‘நெருப்புடா’ ஷூட்டிங் ஓவர். டைட்டிலுக்கு ஏத்த மாதிரி ஆக்‌ஷன் த்ரில்லர். ஃபயர் சர்வீஸ்ல இருக்கறவங்கதான் நிஜமான ஹீரோஸ்னு அதுல இருக்கற அஞ்சு பேர் நம்புறாங்க. அவங்க நம்பினது நடந்ததா? இதுதான் ஒன்லைன்.
நிக்கி கல்ரானி

ஹீரோயின். நண்பர்களா வருண், வின்சென்ட், ராஜ்குமார், தினேஷ் தவிர, நாகினீடு, மதுசூதன், நரேன், ராஜேந்திரன்னு நல்ல ஸ்டார் காஸ்ட்களும் இருக்கு. ஓ.எம்.ஆர்., கண்ணகி நகர்ல ஷூட்டிங் நடந்தது. கண்ணகி நகர்ல பெரிய மணிக் கூண்டு செட் போட்டிருந்தோம். ஆறுபதாயிரம் மக்கள் வசிக்கற ஏரியா அது. அவங்க கொடுத்த ஆதரவை மறக்கவே முடியாது. அப்பா, தாத்தாவோட ஒர்க் பண்ணின சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் இதுலயும் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கார்.

95 சதவிகிதம் நிஜ நெருப்போடு தான் ஷூட்டிங் நடத்தினோம். ஒரு குடிசைப் பகுதில தீ விபத்து நடக்கிற மாதிரி காட்சி. இதுக்காகவே நூறு குடிசைகள் செட் போட்டு எடுத்தோம். நெருப்புக்கு மத்தில ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கேன். புகையையும், மூச்சுத் திணறலையும் தாண்டி நடிச்சது மறக்க முடியாத அனுபவம். அடுத்து ‘பக்கா’. ஒரு ஷெட்யூல் பாக்கியிருக்கு.

இது கலகலனு ஃபுல் அண்ட் ஃபுல் காமெடி ப்ளஸ் எமோஷனல் மூவி. நிக்கி கல்ரானி, பிந்துமாதவி, சதீஷ், சூரி தவிர நிறைய பெரிய ஆர்ட்டிஸ்ட்ஸ் இருக்காங்க. ‘வெள்ளக்காரதுரை’ மாதிரி ஒரு ஜாலி என்டர்டெயின்மென்ட் கேரன்டி. ‘இவன் வேற மாதிரி’க்குப் பிறகு மீண்டும் சத்யா மியூசிக் பண்றார். அப்புறம் ஆகஸ்ட்ல ஒரு படம் தொடங்குது.

ரெண்டு படத்துல நிக்கி கல்ரானி..?
சார்..! ஹீரோயின் தேர்வு எல்லாம் டைரக்டர்களோட சாய்ஸ். ‘நெருப்புடா’ல நிக்கிக்கு பத்து நாட்கள்தான் ஒர்க் இருந்தது. துறுதுறுன்னு ஒரு அழகான கேரக்டர். லெங்த்தி டயலாக் எல்லாம் பேசி நடிச்சிருக்காங்க.

‘தியேட்டர்கள்ல டிக்கெட் விலையை குறைக்க மாட்டோம். முதல்ல ஹீரோவோட சம்பளத்தை குறைக்க சொல்லுங்க’னு பேச்சா இருக்கே...? ஒரு படத்தை தயாரிச்ச பிறகுதான் அதுல எவ்வளவு செலவுகள் ஆகுதுனு எனக்கே புரியுது. நல்ல கதைக்கு அதுக்கான செலவுகளை பண்றது அவசியம். படங்களோட பட்ஜெட் கோடிகள்ல போன பிறகும் பல வருஷங்களா டிக்கெட் விலை இங்க ஏறாமதான் இருந்தது. இன்னொரு விஷயம்... தியேட்டர்ல டிக்கெட் விலை ஏறின பிறகும் ‘பாகுபலி2’ பிரமாண்ட வெற்றி தொடருது.

நல்ல மேக்கிங் உள்ள ‘விக்ரம் வேதா’வுக்கு ரிபீட் ஆடியன்ஸ் வர்றாங்க. தரமான படம் கொடுத்தா மக்கள் தியேட்டருக்கு கண்டிப்பா வருவாங்க. பெங்களூரு, மும்பைல எல்லாம் தியேட்டருக்கு போய் படங்கள் பார்த்திருக்கேன். அங்க டிக்கெட் விலையே முந்நூறு ரூபாய்லதான் ஆரம்பிக்குது. அப்படிப் பார்த்தா நம்ம ஊர்லதான் குறைந்த கட்டணமா எனக்குத் தோணுது.

ஒரு நாள் ஷூட்டிங்னா... குறைஞ்சது நூறு பேருக்கு சம்பளம் கொடுக்கணும். இன்னிக்கு எல்லா செலவு களுமே அதிகரிச்சிடுச்சு. எவ்வளவு கம்மி பண்ணினாலும் பெரிய பட்ஜெட்லதான் வந்து முடியுது. கதைக்கான செலவை பண்ணினாதான் தரத்தைக் கூட்ட முடியும். பொதுவா எல்லாருமே நாம கொடுக்கற காசுக்கு தகுந்த மாதிரி ஒர்த்தா இருக்கணும்னு விரும்புவாங்க. அப்படித்தான் ‘நெருப்புடா’ எடுத்திருக்கோம்!