காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 17

“நீங்க ட்ரிக்கரை அழுத்துறதுக்கு ஒரு மைக்ரோ செகண்ட் முன்னாடி நான் ட்ரிக்கரை அழுத்திடுவேன் தலைவரே. ரெண்டு பேரும் ஒண்ணாவே சொர்க்கத்துக்கு டிராவல் பண்ணுவோம்...” மந்தகாசப் புன்னகையோடு பாப்லோ சொன்னார். திடீரென அவரது கைகளில் அபாச்சேவை கண்டதும் எல் பாத்ரினோவுக்கு திகைப்பான புன்னகைதான் வந்தது. பாத்ரினோவின் இடுப்பில் பாப்லோவின் சிறிய துப்பாக்கி முனை வலிக்குமளவுக்கு அழுத்திக் கொண்டிருந்தது.

அடுத்த நொடி விளையாட்டாக ‘ஹேண்ட்ஸ் அப்’ செய்துவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தார். பாப்லோவும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டார். ஆனால் - வெகு கவனமாக தலைவரின் சிரிப்பைவிட சில டெசிபல் அடக்கியே சிரித்தார். பாப்லோவை ஆதரவாக இறுக்கிக் கட்டி அணைத்தார் பாத்ரினோ. “உன்னைப் பார்த்தா என்னையே என்னோட இருபது வயசுலே பார்த்த மாதிரி இருக்குடா…” பாப்லோ தன்னுடைய துப்பாக்கியை எடுத்து இடுப்பில் செருகினார்.

“என்னை நிழல் தொழிலில் வளர்த்துவிட்ட ரேஃபல் கூட இதே வார்த்தைதான் சொன்னாரு. ஆனா, தலைவரே, ஆணவத்துலே பேசுறேன்னு நெனைக்க வேணாம்...” “….” “நான் உங்களுக்கெல்லாம் ரொம்ப மேலே மேலே போவப் போறேன். ஒரு கட்டத்துல இந்த நாட்டையே கைப்பற்றப் போறேன்...” வேறு யாரேனும் இதுபோல எல் பாத்ரினோ முன்பாக பேசியிருந்தால் தலை வெடித்துச் சிதறியிருப்பார்கள்.

ஏனோ, அவர் பாப்லோவின் பேச்சை மழலைச்சொல் மாதிரியாக ரசித்துக் கொண்டிருந்தார். “இந்த திமிருதானே வேணாங்கிறது?” தன்னுடைய டேபிளில் இருந்த ‘பெல்’லை அடித்தார். வெளியே குழுமியிருந்த கார்டெல் உரிமையாளர்கள் பணிவோடு வந்து எல் பாத்ரினோ முன்பாகக் கைகட்டி நின்றார்கள். அவர்களைப் பார்த்ததுமே பாப்லோவும் எழுந்து வரிசையில் அவர்களோடு போய் நின்றார்.

தன்னுடைய கைத் துப்பாக்கியை பாப்லோவிடம் கொடுத்தார் பாத்ரினோ. தலைவர் இதுமாதிரி ஒருவனிடம் துப்பாக்கியைக் கொடுத்தால், அவனையும் கார்டெல் தலைவர்களில் ஒருவனாக அங்கீகரிக்கிறார் என்று அர்த்தம். பாப்லோ, கிரிமினல்தனத்தில் பட்டம் பெற்று விட்டதாகப் பொருள். இனிமேல் அவர் தனிக்கடை போடலாம். கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கரவொலி எழுப்பினார்கள். பாப்லோ தன்னுடைய மரியாதையைத் தெரிவிக்கும் விதமாக தலைவரின் கையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு, கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார்.

“பாப்லோ, இப்ப நீயும் எங்களில் ஒருத்தன். உன்னோட கார்டெலுக்கு என்ன பேரு வைக்கலாம்?” சட்டென்று பாப்லோவிடமிருந்து பதில் வந்தது. “மெதிலின் கார்டெல்!” எல்லாவற்றையும் வருடக்கணக்காக இவர் யோசித்துத் தானே வைத்திருந்தார்! “குட்... ஊர் பேரை வெச்சிக்கிட்டே. கெடுக்காம இருந்தா சரி...” மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார். “பாப்லோ இனி நம்முடைய சகோதரன். அவனுடைய தொழிலுக்கு நம்மில் யாரும் இடையூறு ஏதும் செய்யக்கூடாது. அவனும் செய்ய மாட்டான். செஞ்சா என்ன ஆவோம்னு பாப்லோவுக்கே தெரியும்…” ஓரக்கண்ணால் பாப்லோவைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

இதற்குள்ளாகவே தலைவரின் பணியாள் ஒருவன் பூங்கொத்தையும், ஷாம்பெயின் பாட்டிலையும், அனைவரும் புகைக்க உயர்தர கஞ்சா நிரப்பிய சுருட்டுகளையும் கொண்டு வந்து பணிவாக வைத்தான். பாப்லோவுக்கு பொக்கே கொடுத்தார் தலைவர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஷாம்பெயின் பாட்டில் குலுக்கி பீய்ச்சப்பட்டது.

மிகக்குறைந்த அளவிலான ஆட்களே அங்கு நிரம்பியிருந்தாலும், பார்ட்டி களை கட்டியது. ஏனெனில், ஒவ்வொருவருமே கொலம்பியாவின் வெடிகுண்டுகள். கொலைபாதகங்களுக்கு அஞ்சாத வில்லாதி வில்லன்கள். ஓச்சோ சகோதரர்கள், கார்லோஸ் லேதர், ஜோஸ் ரோட்ரிக்ஸ் என்று அங்கு வந்திருந்த கார்டெல் கடத்தல் மன்னர்கள் கோப்பையோடு, பாப்லோவிடம் வந்து பேசினார்கள்.

“பாப்லோ, தலைவரே சொல்லிட்டாருன்னு மெதப்பா இருந்துடாதே. இங்க சிலபேருக்கு உன்னை சுத்தமா பிடிக்காது. எங்களைப் பொறுத்தவரைக்கும் நீயும் எங்களில் ஒருத்தன் ஆனது மகிழ்ச்சிதான். எங்களாலே செய்ய முடியாத வேலைகளை உனக்கு கொடுக்கறோம். அதே மாதிரி நீயும் சில வேலைகளை எங்களுக்கு கொடுக்கலாம். நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருப்போம்...” பாப்லோவுடன் இந்த இணக்கமான போக்குக்கு உடன்பாடு இல்லாதவர்கள், தங்களுக்குள் கூடிப்பேசினார்கள். கார்டெல்களின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கிய ஒருத்தனையே கார்டெல் வைத்துக் கொள்ள தலைவர் அனுமதித்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

“தலைவருக்கு என்னாச்சி? புரோக்கர் வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற சின்னப் பயலையெல்லாம் கார்டெல் லீடர் ஆக்குறாரே?” வயிறெரிந்தார்கள். சமயம் கிடைக்கும்போது வகையாக பாப்லோவை சிக்கவைக்க வேண்டுமென்றும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பாப்லோ, கார்டெல் தலைவரான விஷயம் மெதிலின் நகர் முழுக்க பரவியது. அவரால் பயன் பெறும் ஏழை, எளியவர்கள் இதை திருவிழா மாதிரி கொண்டாடினார்கள். தினமும் பாப்லோ இந்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது.

குஸ்டாவோ மூலமாக கார்டெலுக்கு நூற்றுக்கணக்கில் இளைஞர்களை வேலைக்கு சேர்த்தார். அத்தனை பேருக்கும் கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், அவர்களுக்கு சுட பயிற்சியளித்தார். மெதிலின் நகரின் மேப்பை வைத்துக்கொண்டு பாப்லோ தன்னுடைய கார்டெல் பணிகளைத் திட்டமிட ஆரம்பித்தார். நகரிலிருந்த அத்தனை மதுவிடுதிகளிலும் சப்ளை செய்யப்படும் போதை மருந்துகள், தம்முடைய கார்டெல்லுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாய ஆணை பிறப்பித்தார்.

கார்டெல்லில் பணியாற்றுபவர்களுக்கு ஐடெண்டிட்டி கார்ட், மாதாமாதம் கணிசமான சம்பளம், இன்சென்டிவ் என்று பக்காவாக கார்ப்பரேட் கம்பெனி செட்டப்பை உருவாக்கினார். நகரில் எந்த சம்பவம் நடந்தாலும் போலீசுக்கு முன்பாக மெதிலின் கார்டெல் ஆட்கள் போய் நிற்பார்கள். சம்பவ இடத்திலேயே நீதி விசாரணை நடத்தப்படும். தப்பு செய்தவர்களுக்கு தண்டனை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி.

யாரும் போலீஸ், கோர்ட்டு என்றெல்லாம் போகவேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்துக்கு வரியும் கட்ட வேண்டாம். ‘எங்க ஏரியா உள்ளே வராதே’ என்று அரசாங்கத்தை துரத்தித் துரத்தி அடித்தார்கள் மெதிலின் கார்டெல்காரர்கள். விளைவு, மெதிலின் நகரமே கொலம்பியாவில் இருந்து தனியாக துண்டிக்கப்பட்டது மாதிரி ஆகிவிட்டது. பாப்லோ, மெதிலினுக்கு அரசர் போல தன்னை நினைத்துக் கொண்டார்.

மெதிலின் கார்டெல்லே சாலைகள் போட்டது. மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது. தகுதியான டாக்டர்களோடு நவீன வசதிகள் கொண்ட இலவச மருத்துவமனைகள். குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுப்பதற்காக பள்ளிகள் அனைத்தும் நவீனப்படுத்தப் பட்டன. ஒரு நல்ல மக்கள்நல அரசாங்கம் என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையையும் சட்டவிரோத அமைப்பான மெதிலின் கார்டெல் செய்து கொண்டிருந்தது.

வருமானம்? கார்டெல் அமைத்துக் கொள்ளலாம் என்று தலைவர் அனுமதி கொடுத்தவுடனேயே தன்னுடைய பிசினஸை இன்டர்நேஷனல் லெவலுக்கு விரிவு படுத்தி விட்டார் பாப்லோ. மற்ற கார்டெல்காரர்களுக்கும் சைடில் ‘ஜாப் ஒர்க்’ செய்து கொடுத்தார். ஏற்கனவே பணம் குன்றுமாதிரி பாப்லோவின் பங்களாவில் குவிந்திருந்தது. இப்போது மலையளவு பெருகத் தொடங்கிவிட்டது.

கார்டெல்காரர்களின் நலப்பணிகளில் மக்கள் மகிழ்ச்சியாகத் தான் இருந்தார்கள். ஆட்சியாளர்கள்தான் கொதித்துப் போனார்கள். பாம்பாய் கொத்துவதற்கு சமயம் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பாப்லோ மீது கடுப்பில் இருந்த போட்டி கார்டெல்காரர்கள் அவர்களோடு இணைந்து கொண்டார்கள். இவர்களுக்கு பாப்லோவும் பதிலடி கொடுக்க நினைத்தபோதுதான் கொலம்பிய தெருக்கள், ரத்தத்தால் கழுவப்பட்டன.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்