ஃபால்கன் பறவைகளைக் காக்கும் பத்திரிகையாளர்!



-ச.அன்பரசு

வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பதுதானே நமது வழக்கம்? வரவேற்பதற்கு பதிலாக வெட்டத் தொடங்கினால் என்ன ஆகும்? இப்படி நடந்தது நாகலாந்தில்தான். ஆனால், கொல்லப்படுவது மனிதர்கள் அல்ல. பறவைகள்! மனிதனோ பறவையோ நாம் அனைவருமே இயற்கையின் குழந்தைகள். சூழல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இயற்கையை அழிக்கத் தொடங்கும்போது நம் எதிர்காலமும் சேர்ந்தே அழிகிறது.

நாகலாந்தின் டோயாங் காடுகள் பூமியின் சொர்க்கங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் அமூர் ஃபால்கன் பறவைகள் வந்து செல்வது வழக்கம். சைபீரியாவில் இருந்து அரபிக் கடல் வழியாக ஆப்பிரிக்காவுக்கு சுமார் 22 ஆயிரம் கி.மீ. வலசை போகும் இப்பறவைகள் இளைப்பாறலுக்காக இங்கு வருகின்றன. இதைத்தான் உணவுக்காக வேட்டையாடுகின்றனர் நம் மக்கள். இது குறித்து கானுயிர் மற்றும் உயிர்பன்மைச் சூழல் ட்ரஸ்ட் தலைவரும் பத்திரிகையாளருமான பானு  ஹராலுவிடம் பேசினோம்.

‘‘2010ம் ஆண்டு பறவைகள் சர்வேயின் போது நாகலாந்தின் வோகா மாவட்டத்தில் உள்ள டோயங் காடுகளுக்கு ஃபால்கன் பறவைகள் வருவதை அறிந்தேன். பின்னர் 2012ம் ஆண்டு என் நண்பர்களான குவோட்ஸூ, ராம்கி, ஷஷாங்க் ஆகியோருடன் இணைந்து மறுமுறை டோயங் காடுகளுக்கு சென்றபோது, ஃபால்கன் பறவைகள் இறைச்சிக்காகக் கொடூரமாக கொல்லப்படுவதைப் பார்த்து அதிர்ந்தேன்.

நாகலாந்தின் கிராம சந்தைகளில் சுற்றி வந்தால் ஷாக்காகி விடுவீர்கள். சாலையோரங்களில் ஃபால்கன் பறவைகளை சுடச்சுட துண்டுகளாக வெட்டியும், கொசு வலையில் உயிரோடு பிடித்து வைத்தும் பரபரவென விலைபேசி விற்றுக் கொண்டிருப்பதை சாதாரணமாக பார்க்கலாம் தென் ஆப்பிரிக்காவில் தோராயமாக ஃபால்கன் பறவைகள் ஓராண்டுக்கு உண்ணும் பூச்சிகளின் எண்ணிக்கை 2.5 பில்லியன். விவசாயத்துக்கு இடையூறு செய்யும் கரையான் உள்ளிட்டவற்றைத்தான் இப்பறவைகள் இரையாகக் கொள்ளும். இதை வேட்டையாடினால் விவசாயம் அழியும்.

இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது என்று தொடர்ந்து கோரிக்கைகளை நாகலாந்து சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பினோம். கூடவே, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேவாலயம், சந்தைகள், பள்ளிகள் எனப் பொது இடங்களில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறோம். நவம்பர் 2013ம் ஆண்டு இந்தியாவின் கானுயிர் மையம், ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டக்குழு ஆகியவற்றோடு மாநில அரசும் இணைந்து அமூர் ஃபால்கன் பறவைகளுக்கு செயற்கைக்கோள் பட்டைகளை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு உள்ளூர் வேட்டைக்காரர்களும் உதவினார்கள் என்பதுதான் ஹைலைட். மணிப்பூரின் டாமெங்லாங், திமாபூர் மாவட்டம் ஆகிய இடங்களில் அமூர் ஃபால்கன் நடனத் திருவிழா நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். இதுபோன்ற கடுமையான முயற்சிகளின் பலனாக ஃபால்கன் இங்கு வந்து செல்லும் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் அவை கொல்லப்படும் சதவிகிதமும் கணிசமாக குறைந்திருந்தது. மாற்றம் என்பது ஒரே நாளில் முழுமையாக நிகழாது. ஆனால், கவனமாகத் தொடர்ந்து செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது ஒரு நாள் அனைத்தும் மாறும்...’’ நம்பிக்கையோடு புன்னகைக்கிறார் பானு.        

வேட்டை கிராமம்!

கிராம வேட்டைக்காரர்கள் (பாங்டி, நாகா, வோகாவில் சராசரியாக) - 60 ஃபால்கன்களின் வேட்டை எண்ணிக்கை - 1000 (தினசரி)

சீசன் விற்பனை வருமானம் -25 / 40 ஆயிரம் வரை.

ஓராண்டில் கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கை - 1,40,000

இந்தியாவின் கானுயிர் பாதுகாப்பு சட்டம் (1972) படி வேட்டை அபராதத் தொகை - ரூ.5 ஆயிரம்.
(conservationindia.org, Nagaland Wildlife and Biodiversity Conservation Trust 2013 தகவல்படி)

பானு ஹராலு

‘‘தூர்தர்ஷன், என்டிடிவி ஆகிய வற்றில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்திருக்கிறேன். வடகிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்த வன்முறை கிளர்ச்சிகள், விலங்குகள் வேட்டை, பிரம்மபுத்திரா வெள்ளம், யானைகளின் இறப்பு எனப் பல்வேறு நிகழ்வு சார்ந்த செய்திகளை மக்களிடம் சேர்த்திருக்கிறேன். சுற்றுச்சூழலில் எப்போதுமே ஆர்வம் உண்டு.

பத்திரிகைப்பணியா... சுற்றுச்சூழல் செயல்பாடுகளா என்ற கேள்வி வந்தபோது இரண்டாவதை என் வாழ்வாகத் தேர்ந்தெடுத்தேன். இதில்தான் எனக்கு முழு மனநிறைவு கிடைக்கிறது. நான் சூழலியல் ஆர்வலரான 2009ம் ஆண்டிலேயே அரசின் சுற்றுலாத்துறையோடு இணைந்து கானுயிர் பாதுகாப்புத் திட்டங்கள், பறவைகள் குறித்த வழிகாட்டி தயாரிப்பு ஆகியவற்றில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது இயற்கையின் ஆசீர்வாதம்தான்...’’ - பானு ஹராலு

நாகலாந்து கானுயிர் மற்றும் பன்மைச்சூழல் ட்ரஸ்ட் (NWBCT)

நாகலாந்தின் உயிர்பன்மைச்சூழல் கொண்ட பகுதிகளிலுள்ள (16,527ச.கி.மீ) அரிய கானுயிர்களைக் குறித்த பிரசாரம், துல்லியமான ஆய்வு, இயற்கை உயிரிகளோடு நேசம் பொருந்திய மனித உறவுகளைக் கட்டமைக்கிறது இந்த தன்னார்வ அமைப்பு. இதில் ராம்கி னிவாசன், ஷஷாங்க் தால்வி, ரோஹோஹெபி குவோட்ஸூ ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறார் பானு ஹராலு. 50 சதவிகிதக் காடுகள் கொண்ட நாகலாந்தின் அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதி 1.3%தான். WCS, NCBS  ஆகிய இந்தியாவின் முக்கிய சூழல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் சூழல் நேய அமைப்பு இது.