இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?
அனுபவத் தொடர் - 6
- பா.ராகவன்
கடவுள் இல்லாத இடமே இல்லை என்று தன் தகப்பனிடம் சொன்னான் பிரகலாதன். சைவ உணவில் கார்போஹைடிரேட்தான் கடவுள். படைப்பது, காப்பது, அழிப்பது மூன்றையும் செய்வது அதுதான். காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள், பழங்கள், பால், தயிர் - எதை எடுத்தாலும் அதில் நிச்சயம் இருக்கும் கார்போஹைடிரேட் என்கிற மாவுச் சத்து.
 ஒரு சிலவற்றில் கூடுதலாக இருக்கும். வேறு சிலவற்றில் குறைவாக இருக்கும். ஆனால், இருக்கும். அதில் சந்தேகமில்லை. இந்த கார்போஹைடிரேட் உணவின் அளவு அதிகரிக்கிறபோது உடல் பருமனில் பிள்ளையார் சுழி போட்டு நீரிழிவு வரைக்கும் சந்தையில் கிடைக்கிற சகலவிதமான வியாதிகளுக்கும் நமது தேகமானது வாசல் திறந்து வைத்துவிடுகிறது.
உதாரணத்துக்கு ஓராண்டுக்கு முன்னால்வரை எனது தினசரி மெனு என்னவாக இருந்தது என்று ஒரு சாம்பிள் சொல்கிறேன். நான் ஏன் குண்டானேன் என்பது இதிலிருந்து உங்களுக்குப் புரியும். காலை எழுந்ததும் பிரமாதமாக ஒரு டிகிரி காப்பி வேண்டும் எனக்கு. தண்ணீர் கலக்காத பாலில் கலந்த உயர்தர காப்பி. கண்டிப்பாக சர்க்கரை உண்டு. இந்த ரக நல்ல காப்பி குறைந்தது முப்பது முதல் முப்பத்தைந்து கலோரி இருக்கும். காப்பிக்குப் பிறகு காலை உணவாக நாலைந்து இட்லி என்றால், தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடி போதாது எனக்கு.
ஒரு இட்லிக்கு சாம்பார். இன்னொன்றுக்கு சட்னி. வேறொன்றுக்கு கெட்டித்தயிர், இன்னொன்றுக்கு நெய் என்று கதன குதூகலமாகத் தொடங்கினால்தான் எனக்குக் காலைவேளை களைகட்டும். அதுவும் தினமும் இட்லியாக இருந்துவிடக் கூடாது. இன்று இட்லி என்றால் நாளை தோசை. (நெய் ரோஸ்ட்!) அடுத்த நாள் பூரி. அவ்வப்போது பொங்கல், என்றேனும் சேமியா உப்புமா, அரிசி உப்புமா. எப்படிப் பார்த்தாலும் காலைக் கணக்கு கண்டிப்பாக சுமார் அறுநூறு முதல் எழுநூறு கலோரிகளாகும்.
 அடுத்து மதியம் என்றுதானே நினைக்கிறீர்கள்? அங்கேதான் நான் மாறுபடுகிறேன். காலைக்கும் மதியத்துக்கும் நடுவே சுமார் நான்கு மணி நேரம் உள்ளதால் நடுவே நொறுக்கு நேரம் என்று ஒன்று உண்டு. அப்போது வேர்க்கடலை சாப்பிடுவேன். அல்லது சிப்ஸ் சாப்பிடுவேன். சீடை, முறுக்கு வகையறாக்களை மொத்த கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு தினமும் நூறு முதல் நூற்றைம்பது கிராம் அளவுக்குப் பகல் பதினொரு மணிக்குச் சாப்பிட்டு, ஒரு தேநீர் அருந்துவேன். நூறு கிராம் உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ளது, சுமார் 550 கலோரி. கொசுறாகக் குடிக்கும் தேநீருக்குப் போடு ஒரு ஐம்பது. ஆக, பதினொன்றரைக்கு ஒரு 600 கலோரி.
அடுத்தபடியாக மதிய உணவு. எனக்கு மதிய உணவோடு கண்டிப்பாக அப்பளம் இருந்தாக வேண்டும். காய்ச்சிய அப்பளமல்ல. பொரித்த அப்பளம். குழம்பு சாதத்துக்கு ஒன்று, ரசத்துக்கு ஒன்று, தயிர் சாதத்துக்கு ஒன்று என்று கணக்கு. பாயசத்துக்கே அப்பளம் தோய்த்து உண்கிற பிரகஸ்பதி நான். சில நாள் இந்த அப்பளங்கள் தவிர கடையில் இரண்டு பஜ்ஜி வாங்கி வைத்துக்கொண்டு சாப்பிடுவதும் உண்டு. இவற்றோடு வழக்கமான காய் கூட்டு வகையறாக்கள். இந்த உணவு குறைந்தது 1200 கலோரிக்கு வரும்.
அடுத்தபடியாக மாலைச் சிற்றுண்டி. உத்தியோகம் என்ற ஒன்று பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் பெரும்பாலும் மாலை வேளைகளில் இனிப்பு மட்டுமே சாப்பிடுவேன். சும்மா ஒரு கால் கிலோ மைசூர்பா, நூறு கிராம் பால்கோவா, நாலு மோத்திசூர் லட்டு என்று வாங்கி வைத்துக்கொண்டு தின்பது அந்நாளில் என் வழக்கம். சாப்பிட்டுவிட்டு சுடச் சுட ஒரு காப்பி. இங்கே இன்னொரு ஐந்நூறு, அறுநூறு கலோரி போட்டுக்கொள்ளுங்கள்.
இரவுக்கு தோசையோ சப்பாத்தியோ. எதுவானாலும் நாலு. தொட்டுக்கொள்ளும் வக்கணைகளுக்குக் குறைச்சலிருக்காது என்று சொல்லவேண்டியதில்லை அல்லவா? எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் நாளொன்றுக்கு மூவாயிரம் கலோரிக்குக் குறையாமல் தின்று கொழுத்தவன் நான். இது நாலாயிரம், நாலாயிரத்தைந்நூறு ஆகியிருக்கலாமே தவிர இரண்டாயிரம், இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.
பிரச்னை என்னவென்றால் மனுஷகுமாரனாகப்பட்டவன் சகல சௌபாக்கியங்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து தீர்ப்பதற்கு நாளொன்றுக்கு அவனுக்கு ஆயிரத்தி ஐந்நூறு முதல் ஆயிரத்து எழுநூற்றைம்பது கலோரி வரை உணவிருந்தால் போதும். சரி ஒழிகிறது இரண்டாயிரம். அதற்கு மேல் போனால்தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. சில பேருக்கு சிக்கல் காண்டம் சீக்கிரம் வரும். என்னைப் போன்ற உத்தமோத்தமர்களுக்கு கொஞ்சம் தாமதமாக வரும். ஆனால், எப்படியும் வரும்; வந்தே தீரும்!
உடல் இயந்திரம் வேலை செய்ய ஆயிரத்து ஐந்நூறு கலோரிக்குச் சாப்பிட்டால் போதும் என்னும்போது மூவாயிரம் கலோரிக்குத் தின்பவனின் மிச்ச கலோரிகள் என்னவாகின்றன? பரதேசி நாளைக்குப் பட்டினி கிடந்தால் உதவட்டுமே என்கிற பரோபகார சிந்தனையின் அடிப்படையில், செலவானது போக மீதமுள்ளவற்றை உடம்பு சேகரிக்க ஆரம்பிக்கிறது. இன்றைக்கு ஆயிரம், நாளைக்கு ஆயிரத்து ஐந்நூறு, அடுத்த நாள் இரண்டாயிரம் என்று ஆண்டுக்கணக்கில் இப்படிக் கூடுதல் உணவின் மூலம் உள்ளே போகிற மாவுச்சத்து அடி வயிற்றில் சேரச் சேர, உடம்பானது ஊதத் தொடங்குகிறது.
 மறுபுறம் இப்படிக் கணக்கு வழக்கின்றி நாம் உள்ளே தள்ளுகிற மாவுப் பொருள்களை உடம்பு க்ளூக்கோஸாக்கினால்தான் சக்தி. அதற்குக் கணையம் இன்சுலின் என்னும் ஹார்மோனைச் சுரக்க வேண்டும். அது பாவம் ஒழுங்காகத்தான் சுரக்கும். ஆனால், அமுக்கு அமுக்கு என்று நாம் அமுக்கிக்கொண்டே இருந்தால் அந்தப் பாவப்பட்ட ஹார்மோன்தான் என்ன செய்யும்?
அது பத்தாமல் போகும்போது ரத்த சர்க்கரை அளவு தாறுமாறாகிவிடுகிறது. உள்ளே சுரக்கும் இன்சுலின் போதாமல் வெளியில் இருந்து மாத்திரை வடிவிலும், அதுவும் பத்தாமல் போகும்போது இன்ஜெக்ஷன் வடிவிலும் செயற்கையாகவும் உள்ளே அனுப்பும்படியாகி விடுகிறது. டாக்டர் பட்டம் மாதிரி சர்க்கரைப் பட்டம். ஆக, அனைத்துக்கும் காரணம் என்ன? உள்ளே போகிற உணவில் இருக்கிற கார்போஹைடிரேட்.
காலை எழுந்ததும் குடிக்கிற காப்பியில் ஆரம்பித்து, ராத்திரி படுக்கப் போவதற்கு முன்னால் மெல்லுகிற நாலு பாக்குத் தூள் வரைக்கும் சகலமானவற்றிலும் கலந்திருக்கிற கடவுள் அதுதான். கொஞ்சம் ஓவர் டோஸாகும்போது இதுவே கெட்ட கடவுளாகிவிடுகிறது. ஆனால், என்னவொரு ஓரவஞ்சனை பாருங்கள். இப்படி சகல வியாதி வெக்கைகளுக்கும் காரண கர்த்தாவான கார்போஹைடிரேட் சைவ உணவில்தான் நீக்கமற நிறைந்திருக்கிறதே தவிர அசைவத்தில் சுத்தமாகக் கிடையாது! இன்னும் புரியும்படிச் சொல்லுவதென்றால், புல் தின்னும் ஆட்டுக்கு ஷுகர் வந்தாலும் வருமே தவிர, ஆட்டைத் தின்னும் சிங்கம், புலிக்கு வரவே வராது!
(தொடரும்)
பேலியோ கிச்சன்
பனீர் உப்புமா
200 கிராம் பனீர். ஒரு வெங்காயம். ஒரு தக்காளி. அரை குடைமிளகாய். இரண்டு ஸ்பூன் நெய். மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு. கட்டக்கடைசியாக இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி. முடிந்தது. பனீரை ஏதாவது ஒரு வடிவத்தில் நறுக்கியோ, அல்லது சும்மா பிய்த்துப் போட்டோ வைத்துக்கொள்ளவும். வெங், தக், குடை வகையறாக்களை நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி. அதிலே நெய். தாளித்ததும் காய்களைப் போட்டு வதக்கி, அதன்மேல் பனீரைச் சேர்த்து உப்பு, மிளகாய்ப் பொடி வகையறாக்களை வரிசையில் போட்டுப் புரட்டினால் ஐந்தே நிமிடங்களில் பனீர் உப்புமா தயார். இப்படிச் செய்தால் உதிரி உதிரியாக வரும். இதுவே வேகும்போது கால் டம்ளர் பால் சேர்த்துப் பாருங்கள். கொஞ்சம் குழைந்து, இன்னும் ருசியாக வரும். பனீர் உப்புமாவுக்குத் தேங்காய் சட்னி ஒரு நல்ல காம்பினேஷன்.
|