ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 36

எந்த ஒரு முடிவையும் நாம் எடுப்பதில்லை. அது, ஏற்கனவே யாராலோ எடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கூட முடிவை நாமே எடுப்பதாகவும், எடுக்கப்போவதாகவும் சொல்லிக் கொள்கிறோம். உலக நிகழ்வுகள் ஒன்றுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. அப்படியிருக்க, கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுக்கான முடிவை நாமெப்படி நல்லதாகவும் கெட்டதாகவும் எடுக்க முடியும்? இது ஒருவிதமான நம்பிக்கை.

இந்த நம்பிக்கையை சிலர் விதியாகவும் இயற்கையாகவும் பார்க்கிறார்கள். காரணம் எதுவும் இல்லாமல் நானும், இசாக்கும், ஹாஜாக்கனியும், கவிக்கோ அப்துல் ரகுமானை சந்தித்தே தீருவது என்று அன்று எடுத்த முடிவும் கூட அப்படியானதுதான். இத்தனை ஆண்டுகளில் கவிக்கோவை அவ்வளவு தீவிரமாக சந்தித்தே ஆகவேண்டுமென எனக்குத் தோன்றியதில்லை. ஆனால், அம்முறை ஏனோ அப்படி ஒரு தீவிரம் என்னை ஆட்கொண்டிருந்தது.

கவியரங்குகளிலும் இன்னபிற மேடைகளிலும் அவரோடு இணைந்து பயணிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தபோதும், அவரை அவருடைய இல்லத்தில் சென்று அவ்வப்போது சந்தித்து அளவளாவும் வழக்கத்தை நான் வைத்திருக்கவில்லை. இசாக்கிற்கும், ஹாஜாக்கனிக்கும் என் தீவிரமும் தீர்க்கமும் எளிதாகப் புரியக்கூடியது என்பதால், எந்த மறுப்புமில்லாமல் என்னுடன் கிளம்பினார்கள்.

நாளைக்குப் போகலாம் என்றோ அடுத்த வாரத்தில் ஒருநாள் சந்திக்கலாம் என்றோ அவர்களில் ஒருவர் சொல்லியிருந்தால் கூட அன்றைய பயணம் தடைபட்டிருக்கும். ஆனால், அவர்கள் இருவருமே என் விருப்பத்திற்கு ஏற்ப செவிசாய்த்து உடன் வந்தார்கள். மூவருக்குமே கவிக்கோ என்றால் கவிதைகளைத் தாண்டிய பிரியமும் பிரமிப்பும் உண்டு.

நாங்கள் கவிக்கோ இல்லத்திற்குச் சென்றிருந்தபோது, அவர் வாராந்திர மருத்துவ சோதனைக்குப் போயிருப்பதாகத் தகவல் வந்தது. எப்போது வருவார் என்றதும், மதியத்திற்குப் பிறகுதான் வரக்கூடும். வந்தாலும், சந்திக்கும் வாய்ப்பில்லை. அவர் உடலை வருத்தும் மருந்தெடுத்துக் கொள்வதால் ஓய்வு தேவைப்பட உறங்கிவிடுவார். மாலையோ இரவோ கண்விழிக்கும்போதுதான் சந்திக்க இயலும் என்றார்கள்.

இசாக்கும், ஹாஜாக்கனியும் திரும்பிடலாமா? என்றார்கள். எனக்கென்னவோ திரும்பிவிட மனமில்லை. நள்ளிரவே ஆனாலும் அவர் கண் விழிக்கும்வரை காத்திருந்து, அவரைச் சந்தித்துவிட்டுக் கிளம்புவோமே என்றேன். சொல்லவொண்ணா தீவிரத்தோடு அன்றிருந்தேன். பாடல் பதிவு நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில் உடனே வரச்சொல்லி தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

தவிர்க்க முடியாத வேலையிலிருப்பதாக மனமறிந்து பொய்சொல்லி, அழைப்புகளைத் துண்டித்தேன். அன்று மட்டும் கவிக்கோவைச் சந்திக்காமல் திரும்பியிருந்தால் அதன்பின் அவரைச் சந்திக்கும் வாய்ப்பே இல்லை என்பதை அப்போது நாங்கள் மூவருமே அறிந்திருக்கவில்லை. எந்த முடிவையும் நாம் எடுப்பதில்லை. அது, ஏற்கனவே யாராலோ எடுக்கப்பட்டுவிட்டது. கவிக்கோ கண்விழிக்கும்வரை அவர் வீட்டு வாசலிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

அந்தப் பேச்சிலும் கவிக்கோதான் மிகுதியும் வந்துபோனார். கவிக்கோவை பேச ஆரம்பித்தால் எனக்கோ, இசாக்கிற்கோ, ஹாஜாக்கனிக்கோ நேரம் போவதே தெரியாது. மணிக்கணக்காக, நாள் கணக்காக, வருஷக்கணக்காக அவரைப்பற்றிப் பேசியிருக்கிறோம். எங்கள் மூவருக்குமான பொதுமொழியாக கவிக்கோ அன்றுமிருந்தார். அடிக்கடி சந்திக்கவில்லையென்றாலும் யாரோ ஒருவரை மட்டுமே நம்முடைய இதயம் நெருக்கமாக உணரும். உணர்த்தும். அப்படி ஒருவராக கவிக்கோ இருந்தார்.

இருந்தார் என்று எழுதுகிற இந்த நொடியில் என்னையுமறியாமல் கண்கள் கலங்குவதை தவிர்க்கமுடியவில்லை. தட்டச்சு எந்திரத்தில் கண்ணீர்த் துளிகள் படாதவாறு தள்ளி வைத்துக்கொள்கிறேன். பாரதியோ, பாரதிதாசனோ, கண்ணதாசனோ இல்லை என்பதை ஏற்கும் என் மனம், கவிக்கோ இல்லை என்பதை ஏற்க இன்னும் சிலகாலம் ஆகலாம். ‘உன் கண்களால் தூங்கிக்கொள்கிறேன்’ என்றெழுதிய கவிக்கோவுக்கு, எங்கள் வருகை குறித்த பொறி தட்டியிருக்க வேண்டும்.

வழக்கத்துக்கு மாறாக அன்று முன்னமே எழுந்துவிட்டார். எழுந்தவுடனேயே எங்கள் காத்திருப்பை தெரிந்து கொண்ட அவர், அவசர அவசரமாக படுக்கையிலிருந்து வராந்தாவிற்கு வந்தார். “சொல்லியிருந்தால் தூங்கப்போயிருக்க மாட்டேனே, மருந்தும் மாத்திரைகளும் உடம்பைச் சோர்வுறச் செய்தன, மற்றபடி தூக்கமில்லை...” என்று உரையாடலைத் தொடங்கிய அவர், எங்கள் மூவரையும் அன்றலர்ந்த புன்னகையால் குசலம் விசாரித்தார்.

உடல் நலம் எப்படியிருக்கிறது? என்ற எங்களது கேள்வியையோ தொந்தரவு செய்துவிட்டோமா என்ற எங்களுடைய பரிதவிப்பையோ அவர் பொருட்படுத்தவே இல்லை. ‘கவிக்கோ’ விருது விழா ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது. அழைப்பிதழ் கிடைத்ததா? என மூவரிடமும் கேட்டார். கடந்த ஒருவார காலமாக விழாவை எண்ணிக்கொண்டு சரியாக உறங்காததை அவருடைய கண்கள் கூறின.

“சமீபத்துல ஓம் பாட்டு ஒண்ண கேட்டேம்ப்பா நல்லா இருந்துச்சி, அந்தப் பொண்ணு ஸ்ரேயா கோஷல் ரொம்ப பிரமாதமாப் பாடியிருக்கு. அந்தப் பொண்ணு சென்னைக்கு எப்போதாவது பாட வந்தா என்ன கூட்டிட்டுப் போ. வாழ்த்தணும்...” என்றார். ஸ்ரேயா கோஷலை, அவர் லதா மங்கேஷ்கருக்கு நிகராகப் புகழ்ந்தார். இன்னும் ஒருபடி மேலேபோய் “லதாவுக்கு பிறமொழி உச்சரிப்பு அவ்வளவாக வராது.

ஆனா, ஸ்ரேயாவுக்கு தமிழும் மலையாளமும் அட்சர சுத்தமாக வருகிறது...” என்றார். பெங்காலியான ஸ்ரேயா கோஷல் நானெழுதிய நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றதும் ஆச்சர்யத்துடன், “அவ்வளவையும் குறுவெட்டுல பதிஞ்சி தா கேட்டுடுறேன்...” என்றார். கவிக்கோ திரையிசைப் பாடல்களின் காதலர். ‘அம்மி கொத்த சிற்பி எதற்கு?’ என்று திரைப்பாடல் குறித்து அவர் சொன்னதை பெரிதுபடுத்திய பத்திரிகைகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும் அவர் அலமாரியில் சேமித்து வைத்திருந்த இசைத்தட்டுகளின் எண்ணிக்கை தெரியாது.

கவிதை நூல்களுக்கு சற்றும் குறைவில்லாமல் சினிமா பாட்டு புத்தகங்களை பைண்ட் செய்து வைத்திருந்தார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல திரைப்படப் பாடல்களை மேற்கோள் காட்டுவார். திரை இசையில் தனித்து விளங்கும் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் எத்தனையோமுறை அவரைப் பாடல் எழுதித்தரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்ன காரணத்தினாலோ நாகரீகமாகத் தவிர்த்துவிட்டார்.

அவர் பாடல் எழுதவில்லை என்றாலும், ராஜாவும், ரகுமானும் அவர்மீது கொண்டிருந்த அன்புக்கும் மரியாதைக்கும் அளவில்லை. இருபது வருடங்களுக்கு முன் இயக்குநர் அருண்மொழியும், சத்யசீலனும் தயாரித்த ஒரு படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதித் தந்திருக்கிறார். வாணி ஜெயராமும், பி.சுசீலாவும் பாடிய அப்பாடல்கள், “விடியாத நள்ளிரவில் வாங்கிய சுதந்திரம் போலாயிற்று...” என்று அவரே ஒருமுறை வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார்.

தன்னை கவிஞனாக ஆக்கியதில் இந்தி இசையமைப்பாளர் நெளஷாத்துக்கு பெரும் பங்குண்டு என எழுதியிருக்கிறார். ‘இல்லையிலும் இருக்கிறான்’ என்னும் நூலில் எட்டாவது சுரம் என்றொரு கட்டுரை இருக்கிறது. அதில், நெளஷாத்தின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். ஹமீர் என்ற கடினமான ராகத்தை நெளஷாத், ‘கோஹினூர்’ திரைப்படத்தில் கொண்டு வந்திருக்கும் தகவலையும், போஜ்பூரி நாட்டுப்புறப் பாடலை அடிப்படையாகக் கொண்டு ‘முகலே ஆஸம்’ திரைப்படத்தில் இசையமைத்திருப்பது பற்றியும் அவர் அக்கட்டுரையில் வியந்திருக்கிறார். நெளஷாத்தின் துணையில்லாமல் அவருடைய ஓர் இரவுகூட கழிந்ததில்லை.

‘அன்மோல் கடீ’, ‘பாபுல்’, ‘தீதார்’, ‘தர்த்’, ‘மேலா’, ‘தில்லகீ’ ஆகிய படங்களில் நெளஷாத் இசையமைத்த பாடல்களை மனப்பாடமாக அவரால் சொல்ல முடியும். இன்னும் சொல்லப் போனால் அவருடைய தூண்டுதலால்தான் செங்கம் ஜப்பார், நெளஷாத் இசையமைத்த ‘முகலே ஆஸம்’ படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். இசைப்பேழை வெளியீட்டு விழாவுக்கு வந்த நெளஷாத்திடம் நான்கு மணி நேரம் உரையாடியதை பெருமையாகக் கருதி, அன்றும் அவ்வுரையாடலை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.

நெளஷாத்தை கவிக்கோ வியந்ததுபோலவே கவிக்கோவை நெளஷாத் வியந்து, அவர்களுடைய இரண்டாவது சந்திப்பு நடந்திருக்கிறது. ‘இசையே என்னுடைய முதல் காதலி. அது ஒருதலைக் காதலாகிவிட்டதால் கவிதையைக் கைப்பிடித்தேன்’ என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனவர், தான் மொழிபெயர்த்து வைத்திருந்த மலையாளத் திரையிசைப் பாடல்களை எடுத்துவந்து வாசித்துக் காட்டினார். ஓசை ஒழுங்குகளோடு மொழி பெயர்க்கப்பட்டிருந்த அப்பாடல்கள் அற்புதமான உணர்வுகளை மீட்டின.

அந்த உரையாடலில், தமிழ்க் கவிதைகளின் திசைவழியைத் தீர்மானித்த கவிக்கோ, திரைப்பாடல்கள் எழுதியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என யூகிக்க முடிந்தது. இசைப்பாடல் மீது ஏகக் காதல் வைத்திருந்த கவிக்கோ, திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில்லை என எடுத்த முடிவு ஏற்புடையதில்லை. பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் அவருக்குப் பிடித்தமான பாடலாசிரியர்கள்.

சிலவேளைகளில் கம்பதாசனையும், கு.மா.பாலசுப்ரமணியத்தையும் போற்றி யிருக்கிறார். கவிக்கோவை கவிஞராக, பேராசிரியராக, சொற்பொழிவாளராக, பத்திரிகைகளில் பத்தி எழுதுபவராக பலர் அறிந்திருக்கலாம். எனினும், எங்கள் தலைமுறைக்கு கவிதையின் சகல சூட்சுமங்களையும் கற்பித்த ஆகிருதியாகவும் ஆசானாகவும் இருந்தவர் அவர் ஒருவரே. நவீன கவிதைகளின் தோற்றுவாயாக சிலர் பாரதியையும் சிலர் ந.பிச்சமூர்த்தியையும் சொல்வார்கள். எங்களுக்கோ அவர்கள் இரண்டுபேரையும் சொல்லி, அதிலிருந்து, தான் எப்படி வேறுபடுகிறேன் என்பதை காகிதங்களிலும் கவியரங்குகளிலும் நிரூபித்தவர் அவர்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்