கவிதை வனம்
ப்ரியங்களின் வாசனை
நீ இல்லாத இரவுகளில் உன் நினைவுகளை போர்த்தி உறங்குகிறேன் அது என்னை கதகதப்பாக்குகிறது காலத்துக்குள் புரட்டிப்போடுகிறது காயங்களை தடவிக்கொடுக்கிறது காதருகே விசும்புகிறது நான் உறங்கிய பிறகு
 உடலில் இருந்து விலகி மெல்ல பரவுகிறது அறையெங்கும் ப்ரியங்களின் வாசனையாக நீ இல்லாத இரவுகளில் எப்போதும் நிறைந்துவிடுகிறாய் அந்த இரவு முழுவதும்
- கி.ரவிக்குமார்
பதிமூன்று வேகத்தடைகளுக்கப்பால்
ரகசிய அறையைத் திறக்கும் சினிமா வில்லனைப்போல ஸ்டியரிங் சுழற்றி வாழ்வைத் திறக்கின்றேன் அனுதினம் சிவப்பு எம்மை வறுமையின் கோட்டில் நிறுத்திவைக்கையில் ஓடிவந்து யாசிப்பவர்களுக்கு கொய்து தரவியலாது சிக்னல் கம்பத்தில் கனிகிறதொரு ஆரஞ்சு இந்த நள்ளிரவு முதல் டீசலுக்காக நீங்கள் குறைத்த ஆறு காசுகளில் அரை டஜன் ஆப்பிளும் நான்கு ரொட்டியும் வாங்கமுடியுமெனில்
பதிமூன்று வேகத்தடைகளுக்கப்பால் பட்டினிச்சித்திரங்களாய் படுத்துறங்கும் என் குழந்தைகளின் காத்திருந்த வயிற்றில் முத்தமிட்டு எழுப்பிடுவேன் நான்
- நிலா கண்ணன்
|