கவிதை வனம்



அம்மாவின் அல்சைமர்

கற்றுத் தந்ததை மறந்த சிறுமி போல்
முற்றத்துக்கும் புழக்கடைக்கும்
வழியறியாது கைபிசைந்து நிற்கிறாள்
பணத்தை பாம்பென்றும் சோற்றை மண்ணென்றும்
பெயர் மாற்றி வைக்கிறாள்
ரெண்டு மாமாங்கப் பாழ் நெற்றியில்
குங்குமம் தரித்தும் தும்பைப்பூ சிகையில்

துளி முல்லைச்சரம் சூட்டியும் அழகுபார்க்கிறாள்
அவசரமாய் ஓடி அமரத் தெரியாமல்
அடிக்கடி ஆடையை நனைத்துக்கொள்கிறாள்
ஆரு பெத்த புள்ள இது
அடிக்கடி ஊட்டுக்கு வருதென்று
அவள் சொல்லும்போது  மட்டும்
ஆயிரம் ஊசி உயிர் துளைக்கும்
வலியை என் செய்வதெனப் புரியவில்லை.
                        

- லதா அருணாச்சலம்

மொட்டு

ஐம்பத்தைந்து நாட்கள்
தள்ளிப்போன மாதவிலக்கை
‘மொட்டு துளிர்த்திருக்கும்’
என உவகையில் உள்ளுணர்ந்த
கணத்தில் சட்டென கட்டவிழ்ந்து
பூக்கா புதுமலர் உதிர,
இனியும் நாம் வருந்தி
ஆவது ஒன்றுமில்லை.
இதோ, இந்த ஓட்டு வீட்டிற்கு
அப்பால் தென்னைமரங்களுக்குள்
பக்கவாட்டு தண்டவாளங்களில்
எதிரெதிர் திசைகளில் பாயும்
ரயில்களின் பேரழகில் லயித்து
பருகும் தேநீர் மிடறுகளின் இடையில்
சில கவிதைகள் சொல்…
அல்லது கேள்… போதும்

- வள்ளி மயில்