விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 25

‘‘சரண்டர்தான் பெஸ்ட்...’’ தன் முன்னால் நின்றிருந்த இருவருக்கும் கேட்கும்படி கிருஷ்ணன் கிசுகிசுத்தான். ‘‘இவங்ககிட்ட இருக்கிற வெப்பன்சை பார்த்து அமெரிக்காவே பயப்படறதா ஒரு ரூமர்...’’ சொல்லி முடிப்பதற்குள் ஐஸ்வர்யாவும் ஆதியும் தங்கள் கையை உயர்த்தி விட்டார்கள்.

மேக்னடிக் வேவ்ஸுக்குள் காற்றைப் போல் சர்வசாதாரணமாக 81 ஹாபிட்ஸும் ஊடுருவியது மூவரையும் வியக்க வைத்தது என்றால் - அதன் பிறகு நடந்தவை அனைத்தும் கனவில் நடப்பதுபோல் இருந்தன. கைகளைக் கட்டவில்லை. ஆயுதங்களால் தாக்கவில்லை. மாறாக சுற்றி நின்றார்கள். கண்களால் ‘நட’ என கட்டளையிட்டார்கள்.

எப்படி நுழைந்தார்களோ, சீராக ஒருவர் பின் ஒருவராக எப்படி நடந்தார்களோ, அப்படியே ஹாபிட்ஸ் அழைத்துச் சென்ற திசையை நோக்கி பயணப்பட்டார்கள். திசை? அதுதான் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் ஆயிற்று. தென்மேற்கு திசை வழியாக பாழடைந்த கோயிலுக்குள் நுழைந்தோம். நேர்கோட்டில் நடந்தோம்.

இப்போது? மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பாதை வளைந்தது. நேரானது. யூ டர்ன் அடித்தது. இடது, வலது, நேர், எதிர்... கணக்கிடுவதை நிறுத்துவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நொடிகளோ, நிமிடங்களோ, நேரங்களோ... கடிகாரம் ஓடாததால் எதுவும் தெரியவில்லை. சுற்றிச் சுற்றி வந்தார்கள். சுற்றுப்புறம் முழுக்க மின்காந்த அலைகள்.

சுவாசம் சீராக இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எப்படி இது சாத்தியம் என கிருஷ்ணன் யோசித்தபோது அவனது வலது உள்ளங்கை எறும்பு கடித்தது போல் வலித்தது. கிள்ளியது ஐஸ்வர்யாதான். ஜாடை மூலம் ஹாபிட்ஸை காண்பித்தாள். கவனித்தான், அவர்களது வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதை. இடத்தை நெருங்கி விட்டோமா?

ஆம் என்பதற்கு அறிகுறியாக வெட்டவெளி அன்புடன் வரவேற்றது. ஸ்ரீரங்கம் கோயிலை முற்றுகையிட்ட லட்சக்கணக்கான ஹாபிட்ஸும் அங்கு குழுமியிருந்தார்கள். வரிசையாக. கோடு கிழித்ததுபோல். ‘ஊஊஊஊஊஊஊ...’ அவர்களைச் சிறைப் பிடித்து அழைத்துச் சென்ற சித்திரக் குள்ளர்களில் முன்னால் நின்றவன் குரல் கொடுத்ததும் வரிசை பிரிந்தது. வழி கிடைத்தது.

அதன் ஊடாக நடக்கும்போது அந்த சிம்மாசனத்தை கவனித்தார்கள். கம்பீரமாக அதில் வீற்றிருந்த ஒரு பெண்மணியையும். தலையில் கிரீடம். உடலில் ஆபரணம். பட்டாடை. கண்களில் ஒளி. கூர்மையான நாசி. மாநிறம். ‘‘யார் அவங்க...’’ ஐஸ்வர்யாவின் முணுமுணுப்பு முடியக் கூட இல்லை. அதற்குள் முன்னால் சென்ற ஆதி ஓடிச் சென்று அவள் காலில் விழுந்தான். நமஸ்கரித்தான். எழுந்தான். கை கூப்பினான்.

‘‘தாயே... உங்களை இங்க பார்ப்பேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை...’’ குரல் தழுதழுத்தது. திரும்பி மற்ற இருவரையும் பார்த்தான். ‘‘உங்களை என் எதிரியாதான் நினைக்கறேன். ஏன், எங்க நாட்டோட சொத்தை அபகரிக்க வந்த கூட்டமாதான் பார்க்கறேன். உங்க கூடவே வந்தது கூட சமயம் பார்த்து உங்களை கொலை செய்யத்தான்.

ஆனா...’’ சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த பெண்மணியை ஏறிட்டான். உணர்ச்சிப் பெருக்கில் அவன் கண்கள் கலங்கின. ‘‘எப்ப அம்மாவைப் பார்க்கிற வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தீங்களோ... அப்பவே உங்களை மன்னிச்சுட்டேன்...’’ மீண்டும் நமஸ்கரித்தான். தலையை உயர்த்தவில்லை. குரல் மட்டும் செவியை நிரப்பியது.

‘‘கிருஷ்... ஐஸ்... நீங்களும் வணங்குங்க... யாருக்குமே கிடைக்காத பாக்கியம் நமக்கு கிடைச்சிருக்கு...’’ ‘‘இவங்க..?’’ ஐஸ்வர்யா தடுமாறினாள். ‘‘உலூபி தாயார்...’’ மரியாதையுடன் உச்சரித்தபடி ஆதி எழுந்தான். ‘‘மாவீரன் அர்ஜுனனோட மனைவி. மகாபாரதத்துல படிச்சிருப்பீங்க. ஏழைக் குடியானவனைக் காப்பாற்ற தருமரும் திரவுபதியும் தனியா இருந்தப்ப தன் ஆயுதத்தை எடுக்க அர்ஜுனன் அவங்க மாளிகைக்கு நுழையறார். தர்மப்படி அது தப்பு. அதனால நாடு கடத்தப்படறார்.

அந்த நேரத்துல அவர் நாக இளவரசியான உலூபி தாயாரை சந்திச்சார். பரஸ்பரம் இரண்டு பேரும் காதலிக்கிறாங்க. அர்ஜுனனை பூமிக்கடியில இருக்கிற தன் ராஜ்ஜியத்துக்கு அம்மா அழைச்சுட்டு போறாங்க. அங்க இரண்டு பேருக்கும் திருமணம் நடக்குது. இவங்க காதலுக்கு அடையாளமா ஒரு மகன் பிறந்தார். அவருக்கு இரவன்னு பெயர் வைக்கிறாங்க.

தன் அன்புக்கு அடையாளமா இனிமே தண்ணீர்ல வாழற அனைத்து ஜீவராசிகளும் அர்ஜுனனுக்கு கட்டுப்படும்... தண்ணீர்ல அவரை யாராலும் வெல்ல முடியாதுனு அம்மா தன் கணவருக்கு வரம் அளிக்கிறாங்க...’’ நிறுத்திய ஆதி அப்படியே தரையில் சரிந்து உலூபியின் காலைப் பற்றுகிறான். ‘‘ஆண்டுகள் பறக்குது. குருக்ஷேத்திர போர்ல பாண்டவர்கள் ஜெயிக்கறாங்க.

அஸ்வமேத யாகம் நடத்த முடிவு பண்றாங்க. குதிரையை ஓட விடறாங்க. எல்லா நாட்டுக்குள்ளயும் சுதந்திரமா நுழைஞ்ச அந்த புரவியை தன் எல்லைக்குள்ள பாப்ருவாஹணன் தடுத்து நிறுத்தறார். இந்த பாப்ருவாஹணன் யார் தெரியுமா..?’’ எழுந்த ஆதியின் முகத்தில் வெளிச்சம் படர்ந்தது. ‘‘அர்ஜுனனோட மகன்தான். அவருக்கு சித்ரங்கடானு ஒரு மனைவி உண்டு.

அவங்க இரண்டு பேருக்கும் பிறந்தவர்தான் பாப்ருவாஹணன். இவருக்கு போர்க் கலைகளைக் கற்றுக் கொடுத்தது வேற யாருமில்ல. நம்ம உலூபி தாயார்தான். ஆனா, அர்ஜுனன்தான் தன்னோட அப்பானு பாப்ருவாஹணனுக்கு தெரியாது. அதுமட்டுமில்ல... குதிரைக்கு பின்னாடி வந்த படையும் தன் அப்பாவுக்கு சொந்தமானதுனு தெரியாம பாப்ருவாஹணன் மோதறார்.

இந்தப் போர்ல பாப்ருவாஹணன் விட்ட அம்பு அர்ஜுனனை தாக்கி அவர் மயக்கமாகறார்... இது தெரிஞ்சதுமே உலூபி தாயார் அந்த இடத்துக்கு ஓடோடி வந்து தன் கணவரைக் காப்பாத்தினாங்க. அப்புறம் அப்பாவையும் மகனையும் சேர்த்து வைச்சாங்க. அப்படிப்பட்ட அன்புக்கு பாத்திரமான உலூபி தாயார் இவங்கதான்...’’ ஆதி முடிக்கவும், அதுவரை சிலை போல் வீற்றிருந்த உலூபி எழுந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அந்த கம்பீரத்துக்கு கட்டுப்பட்டு தங்களையும் அறியாமல் ஐஸ்வர்யாவும் கிருஷ்ணனும் முழங்காலிட்டு வணங்கினார்கள். இருவரின் மனமும் ஒன்றைத்தான் நினைத்தது. வில்லுக்கு விஜயன் என்பார்கள். அப்படிப்பட்ட அர்ஜுனனையே எப்படி பாப்ருவாஹணனால் வீழ்த்த முடிந்தது? வினாவுக்கான விடை உடனே கிடைத்தது. அதுவும் கார்க்கோடகர் வடிவில்!

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்

செல்ஃபியில் சாதனை!

செல்ஃபியில் உலக சாதனை நிகழ்த்த முடியுமா? கின்னஸ் ரிக்கார்டே செய்யலாம் என்று காட்டியிருக்கிறார் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரரான ஆலன் ஷியரர். நியூகாஸ்டிலில் இருக்கும் பள்ளியில் மாணவர்களோடு 3 நிமிடத்தில் 134 செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் உலக ரிக்கார்ட். எதற்காக இப்படி செல்ஃபி? அறக்கட்டளை நிதிக்காக!

சிலந்தி ராணி!

நாய், பூனையோடு வசிப்பது புதிதல்ல. ஆனால் 1,500 சிலந்திகளோடு வாழ்வது என்றால் மிராக்கிள்தானே! இந்தோனேஷியாவில் வசிக்கும் மிங் கு என்ற 28 வயது பெண்ணுக்கு சிலந்திகளை சேகரிப்பதுதான் ஹாபி. இதற்காக அவர் தனி வெப்சைட் தொடங்கியபோது அவரைச் சுற்றிலும் இருந்தவை சிலந்திகள்தான். கடந்த 7 ஆண்டுகளில் சிலந்திகளை பராமரிப்பதற்காக அவர் செலவழித்துள்ள தொகை எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட், 55 ஆயிரம் டாலர்கள்!