பாகுபலி 2



-குங்குமம் விமர்சனக்குழு

மகிழ்மதி தேசத்தின் அரச வாரிசான பாகுபலியை அந்த நாட்டின் விசுவாசமான தளபதி கட்டப்பாவே கொன்றுவிட முதல் பாகம் நிறைவுக்கு வந்தது. ‘கட்டப்பா ஏன் கொன்றார்?’ என்று தேசமே கேள்வியில் மூழ்கிவிட... அதற்கு விடை சொல்ல வந்திருக்கிறது ‘பாகுபலி 2.’ நாட்டு மக்களின் குறைகளை அறிய திக்விஜயத்திற்கு தயாராகிறார் இளவரசன் பிரபாஸ்.

அதில் அவர் சந்திப்பது அழகும், இளமையும் கொண்ட, வில்வித்தைகளில் தேர்ந்த அனுஷ்காவை. இருவரும் பரஸ்பரம் விரும்புகிறார்கள். கொள்ளைக் கூட்டத்தோடு பிரபாஸ் கடுமையாகப் போரிட்டு விரட்ட, அவரின் ராஜவம்சமும் அனுஷ்காவிற்கு தெரிந்து விடுகிறது. இந்த நிலையில் அனுஷ்காவின் ஓவியத்தைப் பார்த்த அண்ணன் ராணாவும் அவர் அழகில் மயங்கிவிடுகிறார்.

விருப்பம் அறிந்த ராஜமாதா ராணாவுக்குத் திருமணம் செய்து வைப்பதாக வாக்கு தருகிறார். இளவரசனுடன் வந்த அனுஷ்கா அவமானப்பட, பிரபாஸ் அரசப் பதவியைத் துறந்து அவளைக் காப்பாற்றுகிறார். நாசரும், ராணாவும் சதி செய்ய, கட்டப்பாவின் கையால் பாகுபலி கொல்லப்படுகிறார். அனுஷ்கா சிறை வைக்கப்படுகிறார்.

புதிதாகப் பிறந்த இளவரசன் வளர்ந்து தாயின் அடிமைச் சங்கிலியை அறுத்தாரா என்பதுதான் பின்கதைச் சுருக்கம். பிரமாண்டமும், ஆக்‌ஷனும், பெரும் பரப்பும், விஸ்தாரமான காட்சி யமைப்பும்... நாம் உள்ளே இருக்கிறவரை எதையும் எண்ண வைக்காமல் வைத்திருக்கிறது. அரசவை போக்கையும், ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளையும் அசலாக, அழுத்தமாக, அட்டகாசமாக பதிவு செய்திருப்பதற்கு... சூப்பர் ராஜமெளலி!

பிரபாஸ் துரோகிகளை அழிக்கும் போதும், ரம்யா கிருஷ்ணனின் தாயன்பில் நெகிழும்போதும், கட்டப்பாவிடம் பாசத்தை கொட்டும்போதும், அனுஷ்காவிடம் மனதைப் பறிகொடுக்கும் போதும் கம்பீரத்திலும் மேனரிசத்திலும் அள்ளுகிறார். ஆனாலும் முகத்தில் இன்னும் உணர்ச்சிகளைக் கொண்டு வந்து இறக்கியிருக்கலாம். வாளால் சுழட்டும்போதும், கண்களில் பார்வையைச் சுழற்றும்போதும் அனுஷ்கா இனிப்பு.

இன்னும் உயரத்தில், இறுக்கமாக அண்ணனாக அரசனாக ராணா. இருவரும் மோதிக் கொள்ளும் உச்சக் கட்ட இறுதிக் காட்சியை சீக்கிரத்தில் முடித்திருந்தால், சீட்டின் நுனியிலேயே உட்கார்ந்திருக்கலாம். தனக்கு விருப்பமான பெண்ணை தம்பி விரும்பும்போது வரும் எரிச்சல், அனுஷ்காவிடம் காட்டும் ஆவேச அன்பு, ஒவ்வொரு முறையும் ஆத்திரம் உச்சிக்கு ஏறி, பின்பு அமைதியாகி மாயப் புன்னகையில் மறைவது என ராணா இன்னும் இறங்கி விளையாடியிருக்கலாம்.

ராஜமாதாவாக ரம்யாகிருஷ்ணன் அதிரடி அவதாரம். அரசியல் அவதானிப்பில் குரலெடுத்து, தாயாகி மனம் கசிந்து, இறுதியில் உண்மையறிந்து தவிக்கும்போது... அனுபவம் பேசுகிறது. ராஜ விசுவாசத்தில் சத்யராஜ் பொங்கி பிரவாகமெடுக்கிறார். மொத்த சினிமாவிலும் அவர் தன் இடம் தளர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டதிலும், செதுக்கிய பாத்திர வார்ப்பிலும் அருமை.

குள்ள நரித் தந்திரத்திலும், மிரட்டும், உருட்டும் கண் அசைவிலும் நாசர் கச்சிதம். மதன் கார்க்கியின் வசன வரிகள் பல இடங்களில் பளிச். பின்னணியில் பிரமிப்பு தரும் மரகதமணியின் இசை, பாடல்களில் கைகொடுக்கவில்லை. செந்தில்குமாரின் கேமரா  கதாபாத்திரங்களின் தோளில் கவ்விப் பயணித்து பரபரக்கிறது. காட்சிகளில், கதை சொன்ன வகையில், ‘பாகுபலி 2’ இந்திய சினிமாவின் மைல்கல்.