பெண்களைக் காக்கும் ஆண்களின் அமைப்பு!



- ச.அன்பரசு

இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் கராச்சியிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்த சிந்திக் குடும்ப சிறுவன் அவன். இந்தியாவில் இருப்பது போல் ஆண் / பெண் வேலை பிரிவினைகள் அவன் குடும்பத்தில் கிடையாது. அச்சிறுவனின் தந்தையே வீட்டுவேலைகளில் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறான். பள்ளி விட்டு வந்ததும் தானும் வீட்டு வேலைகளில் தன் அம்மாவோடு சேர்ந்து ஈடுபட்டிருக்கிறான்.

ஆனால், மும்பைக்கு வந்தபின், வீட்டு வேலைகளிலும் சமையலிலும் அம்மாவுக்கு உதவியாக இருக்கும் அவனை பக்கத்துவீட்டு வாண்டுகள், ‘பெய்ல்யா’ (அம்மா பையன்) என பட்டப்பெயரிட்டு கிண்டல் செய்தனர். அவர்களுக்குத் தெரியாது, பின்னாளில் பெண்களைக் காக்க ஆண்களால் செயல்படும் ஓர் அமைப்பை அச்சிறுவனே தொடங்கப் போகிறான் என்று.

ஆம்! அச்சிறுவன்தான் ஹரிஷ் சதானி. ‘மாவா’ (Men against Violence and Abuse) என்ற பெண்களுக்கான - சம உரிமைகளுக்கான - வன்முறை மனப்பாங்கை மாற்ற ஆண்களுக்கு பயிற்சியளிக்கும் தன்னார்வ அமைப்பின் நிறுவனர். என்றாலும் ஆண்களை மட்டுமே குற்றம்சாட்டும் சாதாரண அமைப்பல்ல ‘மாவா’ என்பதுதான் ஸ்பெஷல்.

‘‘ஆண்களின் பணிகளைவிட வீட்டிலுள்ள பெண்களின் பணி கீழானது என்ற எண்ணமே எனக்கு பேரதிர்ச்சி தருகிறது. எனக்கு ரோல்மாடலும் இன்ஸ்பிரேஷனும் என் அப்பாதான்...’’ என உற்சாகமாக தன் அமைப்பினருக்கு பணிகளை பகிர்ந்தளித்தபடியே சொல்கிறார் ஹரிஷ் சதானி.

தீர்வின் தொடக்கம்!
மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட்டில் சமூக அறிவியல் பட்டம் பெற்ற ஹரிஷ் சதானி, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அறிய முற்படுகிறார். இதற்காகவே பெண்கள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அவர்களது அனுபவங்களையும் சேகரிக்கிறார்.

‘‘பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்குத் தீர்வாக குறிப்பிட்ட ஆணின் வீட்டை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்புவது, முகத்தில் கரி பூசுவது, அடிப்பது... ஆகியவை எல்லாம் சரியான தீர்வல்ல என்பதை விரைவிலேயே உணர்ந்தேன். கணவர் தன் மனைவியிடம் வன்முறையை மீண்டும் ஆயுதமாக்குவதை நிறுத்துவதே தீர்வு...’’ என அனுபவத்தின் வழியே ஆழமாகப் பேசுகிறார் ஹரிஷ்.

காக்க காக்க!
1991ம் ஆண்டு பத்திரிகையாளர் சி.ஒய்.கோபிநாத், பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை எதிர்க்கும் ஆர்வமுள்ள ஆண்களை தன் கூட்டத்துக்கு அழைத்திருந்தார். அதில ஹரிஷ் சதானியோடு 200க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பெற்ற தன்னம்பிக்கையில்தான் பெண்களுக்கு எதிராக ஆண்களை வில்லனாக்கும் பிற அமைப்புகளிலிருந்து மாறுபட்ட அமைப்பாக ‘மாவா’வை திட்டமிட்டு செதுக்கினார் ஹரிஷ் சதானி.

பெண்களைக் குறித்து ஆண்களிடம் கலந்துரையாடி தீர்வு தேடுவதே இந்த அமைப்பின் நோக்கம். ‘‘இது ஆணாதிக்க சமூக அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆண், பெண் இருவருக்குமான சமநிலைக்கு, அதிகாரங்களைக் கொண்டுள்ள ஆண்களிடம் உரையாட முயற்சிக்கிறோம்...’’ என வார்த்தைகளில் பேரன்பு பொதித்து பேசுகிறார் ஹரிஷ்.

டீன் ஏஜில் பாலியல் கல்வி!
20 தன்னார்வலர்களோடு தொடங்கிய ‘மாவா’ அமைப்பு மூலம், உளவியல் வல்லுநர்களைக் கொண்டு கலந்துரையாடல் முகாம்களை இளைஞர்களுக்கு நடத்துகிறார். அத்துடன் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிலும், பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்புகளிலும் ஆக்கபூர்வ செயல்பாட்டாளராக பங்கேற்று வருகிறார் ஹரிஷ் சதானி.

‘புருஷ் ஸ்பந்தனா’ என்ற பாலியல் சமநீதி பேசும் கட்டுரை நூலை தீபாவளி மலராக ஆண்டுதோறும் வெளியிடுகிறார் ஹரிஷ். மும்பை, புனே உள்ளிட்ட 7 மகாராஷ்டிர மாவட்டங்களில் ‘யுவமைத்ரி’ என்ற பெயரில் 18 - 21 வயது இளைஞர்களுக்கு பாலியல் சமநிலை வகுப்புகளை ‘தேசிய சேவை’ அமைப்புடன் ‘மாவா’ நடத்திவருகிறது.

அவசியச் செயல்பாடு!
சிறப்பாகச் செயல்படும் கல்லூரி மாணவர்களுக்கு 5 நாட்கள் பாலியல் சமநிலை குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பல்வேறு உளவியல் வல்லுநர்கள் மூலம், பெண்கள் குறித்த தவறான கருத்துகள், பாலினத்தவரின் உரிமைகள் குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றன. இம்மாணவர்களின் மூலம் கல்லூரிகளில் பாலியல் சமநிலையை ஆதரிக்கும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இன்று 600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் - பெண்களுக்கான உரிமைகள், பாலுறவு, திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளது அவசியச்செயல்பாடு.

மும்பையின் சிவாஜி பூங்காவில் நடந்த ‘மாவா’ இளைஞர்கள் நிகழ்வில் கல்லூரி மாணவர் ரவி ஜெய்ஸ்வால், தன் அம்மாவின் மாதவிடாய் காலகட்ட சிரமங்களை உருக்கமான மொழியில் பேசி கண்கலங்க அதனை மற்றவர்கள் செவிமடுத்தனர். ‘‘பெண்களைக் குறித்து இந்த முகாமில் அறிந்துகொண்டபின் அவர்களை கல்லூரியில் சீண்டுவது, குத்தும் மொழியில் பேசுவது போன்றவற்றை தவிர்த்துவிட்டேன்.

இப்போது வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருக்கிறேன்...’’ என்கிறார் ஒரு கல்லூரி மாணவர். ‘‘ஆரம்பத்தில் அவர்களது பிரச்னைகளை எங்கள் அமைப்பு நீர்த்துப்போகச் செய்வதாக பெண் செயல்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால், தந்தைவழி சமூக அமைப்பில் ஆணை எதிரியாக நினைத்தால் பெண்களுக்கான சுதந்திரம் எப்படி கிடைக்கும் என்பதை நாங்கள் புரிய வைத்த பிறகு இப்போது எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்...’’ என்கிறார் ஹரிஷ் சதானி.

மாவா ஹிஸ்டரி!

இந்தியாவில் உருவான பெண் வன்கொடுமைகளுக்கு எதிரான ஆண் செயல் பாட்டாளர்களைக் கொண்ட முதல் அமைப்பு இதுதான். 1993ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு ஜோதிபாய் மற்றும் சாவித்திரிபாய் பூலே, ரகுநாத் மற்றும் மால்திதாய் கார்வே, டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டவர்களே ஆதர்ச முன்னோடிகள்.

நேரடி வகுப்புகள், தொலைபேசி வழி ஆலோசனை என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பாலியல் சமநிலை குறித்த ஆலோசனைகளை இதுவரை ‘மாவா’ வழங்கியிருக்கிறது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட வழக்குகளில் வாதாடி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் பெற்றுத் தந்துள்ளது.

செப்டம்பர் 2009ல் வன்கொடுமைகளுக்கு தீர்வளிக்க ஹெல்ப் லைன் எண்ணையும் (மும்பை) ‘மாவா’ அறிமுகப்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகளையும் இளைஞர்களுக்கு வழங்கி வருகிறது. 2010ம் ஆண்டு என்ஜிஓ கூட்டமைப்பு (iCONGO) கர்மவீர் புரஸ்கார் விருதை அந்த ஆண்டு ஹரிஷ் சதானிக்கு அளித்து கௌரவித்தது.

குடும்ப வன்முறை!

பெண்கள் மீதான குடும்ப வன்முறை வளர்ச்சி (2012 - 2015) - 34%
வன்முறை தாக்குதல் அளவு - 41.7% (2012), 53.9% (2015)
பதிவான வழக்குகளின் எண்ணிக்கை - 1,06,527 (2012);
1,13,403 (2015)
தாக்குதலில் முன்னணி மாநிலங்கள் - மேற்கு வங்கம்,
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகராஷ்டிரா, மத்தியப்பிரதேசம்.
(NCRB (2015), Indiaspend தகவல்படி)