3D ஓவியம் அசத்தும் கூலித் தொழிலாளியின் மகன்



-ஷாலினி நியூட்டன்

பரதநாட்டிய உடை. அழகான முகம். சாந்தமான மனநிலையுடன் கண்களை மூடி தரையில் படுத்திருக்கும் பெண். ‘வாவ்...’ என ஆச்சர்யத்துடன் உற்றுப் பார்த்தால் - அட! அது ஓவியம்! யார் இதை வரைந்தது என்று ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் அலைய வேண்டியதே இல்லை. தனது பெயரையும், மொபைல் எண்ணையும் ஓவியத்துடனேயே இணைத்திருந்தார் ‘மோ’.

‘‘என் பேரு கேதன் பிரமோத் பாடில். இதுல பிர‘மோத்’ல இருக்கிற ‘மோ’வை ஓவியப் பெயரா வைச்சிருக்கேன்...’’ என்று சிரிக்கிறார் கேதன் பிரமோத் பாடில். சுருக்கமாக ‘மோ’. ‘‘மும்பை வாசி. அப்பா கூலித் தொழிலாளி. அம்மா, ஹவுஸ் ஒய்ஃப். எனக்கு ஓர் அண்ணன் இருக்கான். இதுதான் எங்க குடும்பம். மகாராஷ்டிரா, வாசை மாவட்டத்துல இருக்கிற ஜுசந்திரா கிராமம்தான் எனக்கு சொந்த ஊர்.

எங்க கிராமமே அவ்வளவு அழகா இருக்கும். என்னைப் பொறுத்தவரை அதுதான் சொர்க்கம். அங்க வசிக்கிற எல்லாருமே நடனம், பாட்டு, ஓவியம்னு ஏதாவது ஒரு திறமையோட இருப்பாங்க. இருக்காங்க. அப்படி இருக்கிறப்ப அந்தத் திறமைகள்ல கால்வாசியாவது எனக்கு இருக்காதா என்ன?! சின்ன வயசுலயே என் கவனம் ஓவியம் பக்கம் குவிஞ்சது.

நிறைய வரைஞ்சேன். சுவர் பெயிண்ட்ல முத்திரை பதிச்சேன்...’’ என்று சொல்லும் ‘மோ’, மராத்தி வரலாற்றில் பி.ஏ. முடித்திருக்கிறார். கிராஃப்ட் ஆசிரியருக்கான டிப்ளமோவை படித்திருக்கிறார். ‘‘ஓவியம் தொடர்பா என்னென்ன கலைகள் இருக்கோ அது அத்தனையும் கத்துக்கிட்டேன். எனக்கு குருனா அது வைபவ் சார்தான். முறையா, நுணுக்கமா கத்துக் கொடுத்தார்.

தொடர்ந்து வரைய ஆரம்பிச்சு இப்ப புரொஃபஷனல் ஓவியராவும் இருக்கேன். ஆனாலும் ஏதோ ஒண்ணு என் மனசை உறுத்திக்கிட்டே இருந்தது. எதையோ மிஸ் பண்றதா உள்ளூர அலாரம் அடிச்சுக்கிட்டே இருந்தது. அந்த ஏக்கத்தை இந்த நாட்டியப் பேரொளிதான் தீர்த்து வெச்சுருக்கா. எத்தனையோ நடனங்கள் இந்தியாவுல இருந்தாலும் சாந்தமான, அமைதியான மனநிலை பரதத்துக்கு உண்டு.

அதனாலதான் பரதம் ஆடும் பெண்ணை 3Dல வரைஞ்சேன். அது இப்ப வாட்ஸ் அப்புல வைரலாகி உலகத்தோட எந்தெந்த மூலைகளில் இருந்தெல்லாமோ முகம் தெரியாத ஆட்கள் போன் பண்ணி பாராட்டறாங்க. சந்தோஷமா இருக்கு. ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், திருப்தியையும் கொடுக்கறது அவன் திறமைக்கு கிடைக்கிற அங்கீகாரம்தான். இதோ, தமிழகத்துலேந்து நீங்க கான்டாக்ட் செய்து பேட்டி எடுக்கறீங்க. இதுலேந்தே தெரியலையா நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்னு!’’ என்று நெகிழும் ‘மோ’, எல்லா பெருமைகளும் தன் கிராமத்துக்கே போய்ச் சேர வேண்டும் என்கிறார்.