நடிகவேள் குடும்பத்திலிருந்து வரும் இயக்குநர்!



-மை.பாரதிராஜா

இந்த படத்தோட ஐடியா தோணினப்ப ‘காஞ்சனா’ மட்டும்தான் வந்திருந்தது. பேய்ப்பட சீஸன் தொடங்கறதுக்கு முன்னாடியே இந்த கான்சப்ட் ரெடியாகிடுச்சு. படத்துல பதினாறு பெரிய ஆர்ட்டிஸ்ட்ங்களுக்கு மேல இருக்காங்க. தவிர, எங்க தயாரிப்பாளர் அட்லீ, அங்கிள் ராதாரவினு எல்லாருமே வேற படங்கள்ல பிஸி. அத்தனை பேரையும் ஒண்ணு சேர்த்து ஷூட்டிங் கிளம்பினா... இங்க எக்கச்சக்க காமெடி ஹாரர்ஸ் வந்திடுச்சு.

ஆனாலும் நாங்க பயப்படாம வர்றதுக்கு காரணம், இது வெறும் ஹாரர் மட்டுமில்ல. காமெடி பின்னியெடுக்கும் ஃபேமிலி என்டர்டெயினர். போன வாரம் இந்தப் படத்தை எங்க நண்பர்கள் குடும்பத்தோட பார்த்தோம். அத்தனை பேரும் என்ஜாய் பண்ணி ரசிச்சாங்க. அப்பவே இதோட சக்சஸ் தெரிஞ்சிடுச்சு...’’ நம்பிக்கையும், உற்சாகமுமாக பேசுகிறார் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் அறிமுக இயக்குநரான ஐக். பிரியதர்ஷன், கமல்ஹாசன் என ஜாம்பவான்களின் ஸ்கூலில் இருந்து வரும் நடிகவேள் எம்.ஆர். ராதா குடும்பத்து வாரிசு.

‘‘நாங்க பெரிய குடும்பம். போயஸ் ரோடு முதல் தெருவில் இருந்து ரெண்டாவது தெரு வரை இருக்கிறவங்க பெரும்பாலும் சொந்தக்காரங்கதான். ஐம்பது அறுபது பேர் இருக்கிற கூட்டுக்குடும்பம்னே சொல்லலாம். சொந்தக்காரங்களை மதிய சாப்பாட்டுக்கு வாங்கனு கூப்பிட முடியாது. பந்தி பெருசு. டைனிங் ஹால் பத்தாது. நடுராத்திரி குல்ஃபி ஐஸ் சாப்பிடலாம்னு தெருவுக்கு வந்தா என் கஸின்ஸே முப்பது நாற்பது பேர் திரண்டுடுவாங்க.

அப்படி ஒரு அருமையான குடும்ப சூழல்ல வளர்ந்தவன் நான். மும்பை போய் படிச்சிட்டு வந்த பிறகுதான் குடும்ப உறவுகளோட அவசியம் புரிஞ்சது. நாம எல்லாருமே குடும்பத்தோட அருமை பெருமைகளை கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வர்றோம். அதனாலதான் என் முதல் படமே ஃபேமிலி என்டர்டெயினரா இருக்கணும்னு விரும்பினேன்...’’ என்கிறார் ஐக்.

நீங்க பிரியதர்ஷன்கிட்ட எட்டு படங்கள் வேலை பார்த்திருக்கீங்க. கமல்கிட்ட ‘விஸ்வரூபமா’ பெயர் வாங்கியிருக்கீங்க.. ஆனா, உங்க முதல் படத்துல ஜீவா வந்தது எப்படி?
எனக்கு நண்பர்கள் ஜாஸ்தி. நான் ‘விஸ்வரூபம்’ ஒர்க் பண்றப்ப எங்க ஃபேமிலி ஃப்ரெண்டான மகேந்திரன் சாரும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ சண்முகம் சாரும் என்னோட ஒர்க்கை கவனிச்சிருக்காங்க. அவங்ககிட்ட கமல் சார், ‘ஐக் சினிமா குடும்பத்து புள்ள... அவனோட முதல் படம் சரியான தயாரிப்பாளர்கிட்ட அமையணும்’னு சொல்லியிருக்கார்.

அட்லீ முதல் தயாரிப்பை தொடங்கும் போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது இப்படித்தான். பாலிவுட்ல அக்‌ஷய்குமார் மாதிரியே படங்களை செலக்ட் பண்றவர் ஜீவா. அதனாலதான் அவர் இந்த கதைக்குள்ள வந்தார். ஜீவாகிட்ட நான் கதை சொல்ல போகும் போது, அவர் வேற ஒரு வேலையா டெல்லிக்கு பிளைட் பிடிக்கிற அவசரத்துல இருந்தார். ‘நீங்க பிரியதர்ஷன், கமல்சார்கிட்ட ஒர்க் பண்ணினவர்னு சொல்றீங்க... பெரிய பட்ஜெட் கதையா சொல்வீங்களே பிரதர்’னு பயந்தார்.

‘என்னை வில்லேஜ் பையன்னு சொல்றீங்க... காமெடிக்கு சூரி காம்பினேஷன் எனக்கு செட் ஆகுமான்னு தெரியல்ல...’னு தயக்கத்தோடதான் கதை கேட்க சம்மதிச்சார். நீங்க இப்ப முதல் பாதி கதையை கேளுங்க. செகண்ட் ஹாஃப் கதையை டெல்லி போயிட்டு வந்த பிறகு கேளுங்கனு சொன்னேன். ‘சரி’னு உட்கார்ந்தார். பாதி கதையை கேட்டதும் அவரோட அசிஸ்டெண்ட்டை கூப்பிட்டவர், ‘இன்னிக்கு டெல்லி பிளைட்டை கேன்சல் பண்ணிடுங்க’னு சொல்லிட்டு மீதிக்கதையை கேட்டார்.

முதல் படமே பெரிய நட்சத்திரப் பட்டாளம். எப்படி சமாளிச்சீங்க..?
பிரியதர்ஷன் சார், கமல் சார்கிட்ட கத்துக்கிட்ட பாடம்தான். பிரியதர்ஷன் சார் ஷூட்டிங் ஸ்பாட்டுல அன்னிக்கு செட்டுக்கு வரவேண்டிய நடிகர்கள் வரலைன்னாலும் இருக்கற ஆர்ட்டிஸ்ட்டை வைச்சு சமாளிச்சுடுவார். கமல் சார் சின்னப்பசங்கள ரொம்பவும் என்கரேஜ் பண்ணுவார். ‘இவன்கிட்ட இந்த பொறுப்பை கொடுத்தா பண்ணிடுவானா?’னு நினைக்காம ஃப்ரீ ஹேண்டடா ஒர்க்கை ஒப்படைப்பார். ஷூட்டிங்கோ, ஆர்ட்டிஸ்ட் கூட்டமோ எப்பவுமே எனக்கு பெரிசா தெரிஞ்சதில்லை.

‘நீ வெளியே என்னா வேணா பண்ணிட்டு வா... உனக்கு உன் ஃபேமிலி சப்போர்ட்தான் ரொம்ப முக்கியம். அது இருந்தா நீ எதையும் எளிதா சமாளிச்சிடலாம்...’ என்பதுதான் படத்தோட ஒன்லைன். ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி இவங்க யாரோடவும் நான் இதுக்கு முன்னாடி ஒர்க் பண்ணினதில்லை. ஜீவா - சூரி கெமிஸ்ட்ரி செமையா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. பழனி பக்கம் உள்ள கிராமத்து பையனா ஜீவா நடிச்சிருக்கார்.

சூரி இதுல புது கெட்அப் ஒண்ணு போட்டிருக்கார். அதுக்காக வெளிநாட்டுல இருந்து விக் ஒண்ணு வரவழைச்சோம். படத்துல ராதாரவி, ராதிகா, வாசுவிக்ரம்னு எங்க ஃபேமிலியில உள்ளவங்க தவிர தம்பிராமையா, இளவரசு, கோவை சரளா, மதுமிதா, தேவதர்ஷினினு நிறைய பேர் கலக்கியிருக்காங்க.

என்ன சொல்றாங்க ஸ்ரீதிவ்யா..?
முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கை ஹீரோயினே இல்லாமதான் நடத்தினோம். ஜீவாவுடன் இதுவரை நடிக்காத ஹீரோயின் யார்னு தேடினதில் ஸ்ரீதிவ்யா வந்தாங்க. நான் மும்பை, சென்னைனு சிட்டில வளர்ந்தவன். ஸ்ரீதிவ்யா சரியான சாய்ஸான்னு எனக்கே ஒரு தயக்கம் இருந்துச்சு. ஆனா, பழனிக்கு ஷூட்டிங் போனப்பதான் அவங்க கிரேஸ் எங்களுக்கே புரிஞ்சது. முதல் நாள் ஷூட் அப்பவே அவங்க ஒரு குட் பர்ஃபாமர்னு நிரூபிச்சிட்டாங்க. ஸ்பாட்டுல எந்த தொந்தரவும் கிடையாது. பழனி ஷூட்டிங்கில் ஸ்ரீதிவ்யாவை பார்க்க வண்டி வண்டியா திரண்டு வந்தாங்க. அவங்க ஃபேன்ஸ்கிட்ட அவ்ளோ அன்பா பழகினாங்க.

உங்க ஸ்கூல்மேட் யுவன் படத்துக்கு இசையமைக்கலையே... ஏன்?
நான் கேட்ட டைம்ல யுவன் ரொம்ப பிஸி. ஆனா, இதுல அவனோட சின்ன பங்களிப்பும் உண்டு. அது சஸ்பென்ஸ். ‘ஜில்ஜக் ஜங்’ விஷால் சந்திரசேகர் இசையமைச்சிருக்கார். எனக்கு மியூசிக்ல ஆர்வம் ஜாஸ்தி. விஷால் என் டேஸ்ட்டுக்கு செட் ஆவாரான்னு சின்ன தயக்கம் இருந்துச்சு. நிஜமாகவே பிச்சு உதறியிருக்கார்.

படத்துல சிம்பு, டி.ஆர்., அனிருத், பிரேம்ஜி, கங்கை அமரன்னு நிறைய பேர் பாடியிருக்காங்க. ‘மாயா’ல சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு ரொம்ப பிடிச்சிருந்தது. டார்க் லைட்டிங்கில் வித்தியாசமான ஒளிப்பதிவில் கலக்கியிருந்தார். அவரே இந்தப் படத்துக்கும் கேமரா பண்ணியிருக்கார். நான் மும்பையில் இருக்கும்போதே லால்குடி இளையராஜாவும் நானும் ஃப்ரெண்ட்ஸ். ‘விஸ்வரூபம்’க்காக கமல் சார்கிட்ட அவரை அறிமுகப்படுத்தியிருக்கேன். அவரோட ஆர்ட் ஒர்க் இதிலும் பேசப்படும்.

உங்க அங்கிள் ராதாரவி என்ன சொல்றார்..?
அங்கிளுக்கு ரொம்ப ஹேப்பி. அவரோட சப்போர்ட் எனக்கு எப்பவும் உண்டு. ‘நம்ம ஃபேமிலில நேரம் தவறாமை முக்கியம். எதுவுமே உன்னால தாமதம் ஆகக்கூடாது. டைமுக்கு ஸ்பாட்டுல இருக்கணும்’னு அடிக்கடி சொல்வார். இந்தப்படத்துல அவர் ஸ்பாட்டுல இருந்தாலே யூனிட்ல கலகலன்னு ஒர்க் போகும். கமல் சார் மாதிரியே அங்கிளும் என்மேல அக்கறையும் நம்பிக்கையும் வச்சிருக்காங்க. அவங்க சந்தோஷப்படுற மாதிரி நானும் ஒரு நல்ல ஃபேமிலி என்டர்டெயினர் கொடுத்திருக்கறதா நம்புறேன்!