3D ஒரு பட்டன் தட்டினா உங்க சிலை ரெடி!



-ஷாலினி நியூட்டன்

உங்களை நீங்களே சிலையாக செதுக்கிக் கொள்ளலாம். ஆனால், உங்களை நீங்களே 3D பிரிண்ட் அவுட் ஆக, அதுவும் சிலை வடிவில் எடுக்க முடியுமா?‘யும்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறார் சுரேந்திரன் ரெட்டி. இவரது ‘3டிங்’ நிறுவனத்துக்குள் நுழைந்தால் ஆச்சர்யத்தில் நம் கண்கள் விரியும்.

புத்தர் சிலை, ஸோம்பி ஹன்டர், ‘கபாலி’ ரஜினி, அழகான தம்பதிகள்... என பலரும் வெவ்வேறு உயரங்களில், அளவுகளில் குட்டி குட்டி டிஜிட்டல் சிலைகளாக நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். எலெக்ட்ரானிக் ரொபாடிக்ஸ்ல இன்ஜினியரிங் முடிச்சதும் நிறைய ரோபோ ப்ராஜெக்ட்ஸ் பண்ணினோம். இதுக்குரிய மூலப்பொருட்கள் அவ்வளவு சுலபத்துல எங்களுக்கு கிடைக்கலை.

அப்பதான் 3D பிரிண்டிங் மெஷின் பத்தி தெரிய வந்தது. ஆனா, இது காஸ்ட்லி. ஒவ்வொரு மெஷினும் குறைஞ்சது ஒரு லட்சம் ரூபாய். இந்த சூழல்லதான் நம்மை மாதிரி எத்தனை பேர் ப்ராஜெக்ட் டிசைனிங் செய்ய கஷ்டப்படறாங்க... அவங்களுக்கு உதவற மாதிரி ஏதாவது செய்யலாமேன்னு தோணிச்சு.

மெஷின்களை சப்ளை செய்ய ஆரம்பிச்சோம்...’’ என்று சொல்லும் சுரேந்திரன், இப்படி செய்த பிறகும் மெஷினின் விலை பயமுறுத்தியதாக சொல்கிறார். ‘‘பெரிய கல்லூரிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இதை வாங்குவாங்க. தனி மனுஷங்களால முடியாதே... இதைப் பத்தி யோசிச்சப்ப, நாமே ஏன் இதை உருவாக்கி குறைஞ்ச விலையில விற்பனைக்கு கொடுக்கக் கூடாதுன்னு தோணிச்சு.

அதனோட விளைவுதான் வெறும் ரூ.20 ஆயிரத்துல எங்ககிட்ட 3D பிரிண்ட் கிடைக்கும் என்கிற சூழல். அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கூட பிரிண்ட் கிடைக்கும்...’’ என்றவரிடம் இந்த 3டி பிரிண்டிங் என்ன செய்யும் என்று கேட்டோம். ‘‘நீங்களே பாருங்க...’’ என்றபடி கம்ப்யூட்டரில் ‘Kungumam’ என டைப் செய்து பிரிண்ட் கொடுத்தார். 20 நிமிடங்களில் சிவப்பு நிற பிளாஸ்டிக் கீ செயின் ‘Kungumam’ என்ற வார்த்தைகளுடன் சுடச் சுட நம் கையில் கிடைத்தது!

‘‘இன்னொரு மேஜிக் பாருங்க...’’ என உள்ளே அழைத்துச் சென்றார். சற்றே பெரிய மெஷின் வெள்ளை நிறத்தில் சதுரமாக பிரிண்ட் எடுத்துக் கொண்டிருந்தது. ‘‘மூணு மணி நேரமா பிரிண்ட் நடக்குது. இதோ முடியற நேரம். பாருங்க...’’ என வெள்ளை அட்டை போன்ற தகடை நம் கைகளில் கொடுத்தார். ஒன்றும் புரியவில்லை.

‘‘இப்ப பாருங்க...’’ என்றபடி அறையின் லைட்ஸை அணைத்து விட்டு அந்த வெள்ளை அட்டை போன்ற தகடை மொபைல் டார்ச்சின் முன்பக்கம் பிடித்தார். வாவ்... பிளாக் & ஒயிட்டில் நயன்தாரா! ‘‘இதை கண்ணாடி பாக்ஸுக்குள்ள லைட்டோட செட் பண்ணினா நைட் லேம்ப் ரெடி! இது மாதிரி உங்களுக்கு பிடிச்சவங்களோட உருவத்தை நைட் லேம்ப்பா மாத்தலாம். சிலையா வடிக்கலாம்.

திருமண தம்பதிகளுக்கு அவங்க உருவம் பொறிச்ச சிலையையே பரிசா தரலாம். ரூ.8 ஆயிரம் வரை இதுக்கு செலவாகும். இந்த மாதிரி ஆர்டர்ஸ் நிறைய வருது. இதை டிஜிட்டல் ஸ்கல்ப்டிங்னு சொல்லுவோம். ஆனா, எங்க குறிக்கோள் இது இல்ல. கேட்டா மட்டும் இந்த மாதிரி அன்பளிப்புகள் செய்வோம். எங்களுக்கு ரியல் எஸ்டேட் கட்டிட மாடல்கள், ப்ராடக்ட் சேம்பிள் டிசைன், இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ், மெஷின் விற்பனை... இதெல்லாம் தான் முதன்மையான தொழில்...’’ என்கிறார் சுரேந்திரன். 

படங்கள்: ஆர்.சி.எஸ்