5 ஆயிரமா..?!



-ரீடர்ஸ் வாய்ஸ்

அரசு மருத்துவக் கொள்கையின் ஓட்டை உடைசல்களை துல்லியமாக அடையாளம் கண்டு அதனை அரசுக்கு சரியானபடி எடுத்துரைத்த மருத்துவக் கொள்கை கட்டுரை அவசியமான ஒன்று.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

நக்சல்பாரிகள் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்திருந்த எங்களுக்கு அவர்களைப் பற்றி துல்லியமாக விளக்கிய குங்குமத்தின் பாங்கு தனித்துவமானது. பயத்தின் வழியில் பயணம் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு நக்ஸலின் கதையே உதாரணம். நக்ஸல்களின் சிதைவை லைட் போட்டு காட்டிவிட்டது நக்ஸல்பாரி கட்டுரை.
- எஸ்.அருண்ராஜ், சிதம்பரம். உஷாகோபு, விழுப்புரம். த.சத்தியநாராயணன், சென்னை - 72.

யுகபாரதியின் ‘ஊஞ்சல் தேநீரை’ துளித்துளியாக ரசித்து அருந்தினேன். சமூகம் குறித்த அடையாளமாய் பாவலர் வரதராசன் குறித்த கட்டுரை அருமை.
- கோபுகண்ணன், விழுப்புரம்.

ஜாக்கெட்டை தைக்க கூலி மட்டும் ஐந்தாயிரம் என்று படித்ததும் வாயடைத்துப் போய் செயலற்று நின்றுவிட்டது எங்கள் இதயம்.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.

பிரெஞ்சு விவசாயிகள் குறித்த செய்தி அருமை. விவசாயிகள் புறக்கணிக்கப்படும் சூழலில் குங்குமத்தின் ஆதரவான செயல்பாடு பாராட்டுக்குரியது. 
- சு.இலக்குமணசுவாமி, மதுரை - 6. கல்யாணசுந்தரம், மதுரை.

உலகச்செய்திகளை தேடிப்பிடித்து ரசிக்கும்படியாக தொகுத்து மீட்டருக்கு மேல் கொட்டிக் கொடுக்கும் கருத்துப்பேழை எங்கள் குங்குமம்தான்.
- கல்யாணசுந்தரம், மதுரை.

அழியாத மையை கடைகளுக்கும் கொண்டு வந்தால் அழியவே அழியாத கோலம் போட நம்மூர் பெண்களுக்கும் உதவியாக இருக்குமே! 55 ஆண்டுகளாக தேர்தல் ஆணையத்தின் அழியா  மைக்கு உழைத்த மைசூர் பெயிண்ட்ஸின் மார்க்கர் பென் தயாரிப்பு மாற்றம், காலத்தின் கட்டாயம்.
- எஸ். பூதலிங்கம், நாகர்கோவில். சிவகுமார், சென்னை - 33.

சம்மரில் ஹீரோயின்களின் குளுகுளு ஸ்பாட் எட்டு பக்கங்களில் செம ஜில்லுனு ஆக்கிவிட்டீர். ஜில் ஸ்பாட் பெருமூச்சு விட வைத்தது.
- மயிலை கோபி, அசோக்நகர். ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்.

கவிதை வனத்தில், ராம் வசந்தின் இசையுதிர்காலம் கடந்தகாலத்தின் இனிய நினைவுகளை ஞாபகப்படுத்தி அசைபோட வைத்துவிட்டது.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

‘வெங்காய’த்தின் மூலம் இதயத்தை உருக வைத்த இயக்குநர் ராஜ்குமார், ‘நெடும்பா’வின் சோதனைகளைத் தாண்டி வந்து ஜெயிப்பார்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

முதலை பயடேட்டா, முதலை பண்ணை டேட்டா, கிண்டி பாம்பு பூங்கா டேட்டாக்கள் விலாவரியாக அருமை. எகிப்து மக்களின் முதல் தெய்வம் சோபெக் என முதலைகளைப் பற்றிய விவரங்களை தெளிவாக எடுத்துரைத்தது நம்ம குங்குமம்தாங்க! அறிந்த இடம் அறியாத விஷயம் கலர் புகைப்படங்களோடு அசத்தல்.
- ஜானகி ரங்கநாதன், சென்னை - 4. ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர். எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

பூட்டிய அறையிலிருந்து ஜெனரல் என்ற நாய் தப்பியது மிராக்கிள்.
- ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்.