தற்கொலைக்கு சென்ற நெசவாளர்களை வாழவைக்கும் உஸ்ரம்மா!



-ச.அன்பரசு

‘‘டெக்ஸ்டைல் துறைக்கு 1989ம் ஆண்டு வந்தேன். இந்த 28 ஆண்டுகளில் தேசிய கைத்தறி தினம் என்ற கொண்டாட்டம் ஆண்டுதோறும் நிகழ்வது இருக்கட்டும். இதனால் நெசவாளர்களின் வாழ்வில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? அவர்களை நோக்கி ‘ஐயோ பாவம்’ என்று கூறுவது தவிர்த்து வேறு எந்த சொல்லை பயன்படுத்தி இருக்கிறோம்..?’’

நிதானமாக அதே நேரம் அழுத்தமாகக் கேட்கிறார் உஸ்ரம்மா. இப்படி சொல்வதை விட ‘மால்கா’ உஸ்ரம்மா என்று சொன்னால்தான் சட்டென்று புரியும். காரணம், செகந்திராபாத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் ‘மால்கா மார்க்கெட்டிங் ட்ரஸ்ட்’. சீமாந்திரா, தெலுங்கானா என ஆந்திரா இன்று இரு மாநிலங்களாகப் பிரிந்திருந்தாலும் ஒன்றிணைந்த ஆந்திர மாநில மக்களுக்கு கைத்தறி மூலம் வாழ்வில் வெளிச்சம் தந்திருப்பவர் இவர்தான். வயது 70க்கும் மேல். ஆனாலும் இன்றும் இளைஞர்களுக்குரிய சுறுசுறுப்புடன்தான் வலம் வருகிறார்.

‘‘என் கதையையும் ‘மால்கா’வின் முன்னேற்றத்தையும் இணைக்காதீர்கள்...’’ என தன்னடகத்துடன் சொல்லும் உஸ்ரம்மா, 1990களில் ஆந்திராவில் ஏற்பட்ட பஞ்ச சாவுகளுக்கு காரணமாக இருந்த பருத்தி வகைகளைக் கொண்டே ஆடைகளை நெய்து அந்த நெசவாளர்களை பெரும் துயரங்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்.

அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்குள்ளும் இயல்பாகவே பொதுவுடமை சிந்தனைகள் பூத்தன. அக்கால வழக்கப்படி 18 வயதில் இவருக்கு திருமணமானது. கணவரின் ஊக்கத்தால் சிறுசிறு கைவினைப் பொருட்களைச் செய்யத் தொடங்கியவர், ஆந்திராவின் ஹேண்டி கிராப்ட்ஸ் கார்ப்பரேஷனில் தன்னார்வமாக செயல்படத் தொடங்கினார்.

அங்குதான் டெல்லியைச் சேர்ந்த கைவினைப் பொருட்களின் அமைப்பான ‘தாஷ்க’ரின் அறிமுகம் கிடைத்தது. விளைவு, ‘தாஷ்கரி’ன் கிளையை 1996ம் ஆண்டு ஆந்திராவில் நிறுவினார்.

சரி ‘மால்கா’ பருத்தியின் ஸ்பெஷல் என்ன?
கைத்தறியில் நெசவாளர்களால் நேர்த்தியுடன் நெய்யப்படும் - இயற்கை சாயங்களால் வெளுக்கப்படும் - சூழல்நேய பருத்தி வகை துணி ஆடையே ‘மால்கா’. ஆந்திராவில் (சிராலா, கம்மம், கரீம் நகர்) தொடங்கிய ‘மால்கா’ பருத்தி தயாரிப்பு, இன்று கர்நாடகா (பெல்லாரி), கேரளா (பல்ராம்புரம்), மகாராஷ்டிரா (வார்தா) என பல மாநிலங்களில் விரிவடைந்துள்ளது. இதில் கேரளா யூனிட் முழுக்க பெண்களாலேயே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டு பதிவு பெற்ற ‘Kranti Nulu Vastrautpathi Vikraya Kendram’ (KNVKK) அமைப்பு, நூலிழைகளை பெற்று நெய்து சாயமிட்டு ‘மால்கா’ ட்ரஸ்டிடம் பொறுப்பாக ஒப்படைக்கிறது. ‘‘சூழலுக்கு பொருத்தமாக, சமூகத்தை முன்னேற்றும் தன்மையில் நல்ல தரத்தில் ஆடைகளை உருவாக்குகிறோம். ஆனால், எங்கள் அடிப்படை நோக்கம் கிராமத்திலுள்ள எளிய மக்களிடம் வாழ்க்கை குறித்த நம்பிக்கையை உருவாக்குவதுதான்...’’ என்று சொல்லும் உஸ்ரம்மாவிடம் ‘மால்கா’ டிரஸ்டின் எதிர்காலம் குறித்த கவலையும் இருக்கிறது.

‘‘ஒரு நிறுவனம் தன் சொந்தக் காலில் நிற்க முதலீட்டாளர்கள் கண்டிப்பாகத் தேவை. தொழிலில் முதலீடு செய்பவர்கள் அதற்கான லாபத்தை எதிர்பார்க்கவே செய்வார்கள். ஆனால், ‘மால்கா’ திட்டம் சமூக முன்னேற்றத்தை லட்சியமாகக் கொண்டது. எனவே உடனடி லாபம் சாத்தியமில்லை.

இதை கவனத்தில் கொண்டு முதலீடு செய்பவர்களைத் தேடி வருகிறோம்...’’ நம்பிக்கையுடன் சொல்லும் உஸ்‌ரம்மாவின் ‘மால்கா’ பருத்தி ஆடைகளுக்கு பிரான்ஸ், இத்தாலி, நார்வே, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏக டிமாண்ட். காரணம், இந்த ஆடைகள் இயற்கையான நிறங்களைக் கொண்டிருப்பதுதான்!         

மால்கா ஹிஸ்டரி!

மல்மல் (Mulmul), காதி (Khadi) என்பதிலிருந்து தோன்றியதே மால்கா (Malkha). பாஃப்டா, நைன்சுக், தோசுதி, மோரீ, ஜம்தானி, மல்மல், சின்ட், மஷ்ரூ, ஹிம்ரூ என்பவை பருத்தியின் சில வகைகள். தெலுங்கானா, சீமாந்திராவில் உள்ள ‘மால்கா’ யூனிட்கள் - 5; ஒரு மீட்டர் ‘மால்கா’ ஆடையின் விலை ஆயிரம் ரூபாய்.

மால்கா காட்டன் ரெடி!

கார்டிங் மெஷின் மூலம் முதலில் பஞ்சு தூய்மை செய்யப்படுகிறது. நீராவி அழுத்தம் வழியாக பஞ்சு அதிக சேதாரம் இன்றி பண்டலாக்கப்படுகின்றன. அவை பின்னர் மரச்சக்கரங்களில் சுற்றப்பட்டு தளர்வாகவுள்ள பண்டல்கள் இறுக்கமாக்கப்படுகின்றன. இதன் மூலம் கிடைத்த நூலை வைத்து கையில் அல்லது எந்திரம் மூலம் நெசவு செய்யலாம். இதன் பின்னர் ஆடைகளுக்கு ஸ்டார்ச் மாவு மற்றும் ஆயில் பயன்படுத்தி பாவு போடப்படும். மீண்டும் நெசவில் நூலின் தரம் உறுதிப்படுத்தப்பட்டு சாயம் போட்டு காய வைத்தால் ‘மால்கா’ ஆடை ரெடி!