COFFEE TABLE



-குங்குமம் டீம்

சுறாவின் பிரேக்ஃபாஸ்ட்!

பர்ஸ் கனமாக இருப்பவர்கள் இந்த சம்மரை கொண்டாட குளுகுளு மாலத்தீவுகளுக்குத் தாராளமாக ஒரு விசிட் அடிக்கலாம். வானில் உள்ள நட்சத்திரக் கூட்டம் போல மின்னுகிறது மாலத்தீவிலுள்ள குட்டித் தீவான பரோஸ். ஆழ்கடலில் கொத்து கொத்தாய் மீன்கள் கூட்டம்... அந்த மீன்களிடையே உணவிற்காக லாவகமாக நீந்தும் சுறா மீன்... என வியக்கவைக்கும் காட்சிகள் அங்கே ஏராளம். அந்த தீவின் பெருங்கடலில் ஷார்க் ஃபிஷ்ஷும், ஜாக் ஃபிஷ்ஷும் காலை உணவு தேடும் பயணத்தை ஃபேஸ்புக்கின் ‘best part of world’ பக்கத்தில் குட்டியூண்டு வீடியோவாக தட்டிவிட 20 லட்சம் பேர் அதைப் பார்த்து, ரசித்து வைரலாக்கியுள்ளனர்.

சைலன்ட் கார்னர்

சீனப் பெண்கள் - சொல்லப்படாத கதை
சின்ரன் / தமிழில்: ஜி. விஜயபத்மா [எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002. விலை ரூ.280. தொடர்புக்கு: 99425 11302]

சீனாவின் பிரபல வானொலி தொகுப்பாளினி சின்ரனின் நூல். சீனப் பெண்களிடம் புதைந்து கிடந்த மனக் குமுறல், உண்மைகள், எதிர்கொண்ட வன்முறைகள் என அனைத்தையும் கொட்டிய புத்தகம். உண்மை சீன அரசை தைத்தது. அதன் விளைவாக சின்ரன் லண்டனுக்கு ஜாகையை மாற்ற வேண்டியதாயிற்று.

ஒரு நாவல் மாதிரி உருக்கொண்டு பயணிக்கிறது இந்தப் புத்தகம். நினைவலைகள் என்றாலும் சக சீனப் பெண்ணின் துயரத்தில் அடையாளம் காண நேர்கிற, புரிந்துகொள்கிற எழுத்தும் சின்ரனின் வசம் இருக்கிறது. விஜயபத்மாவின் மொழிபெயர்ப்பு சிடுக்கு இல்லாதது. புரிந்துணர்வோடு செய்யப்பட்ட வகையில் எழுதியது தெரிகிறது. அரிய வகை நூல்தான்.

அந்தரத்தில் ஐ.டி ஊழியர்கள்!

இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு இது போதாத காலம். டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆனதும் விசா பிரச்னை. இப்போது ஐ.டி செக்டாரில் வேகமாக நடந்துவரும் ஆட்டோமேஷன் எனும் தானியங்கி முறை தொழில்நுட்பம் இன்னொரு தடங்கல். இது இந்திய ஐ.டி.யிலும் கனஜோராக நடைபெறுகிறது.

ஆனால், இந்த தானியங்கி தொழில்நுட்பத்தைக் கற்கும் திறன் நம் ஐ.டி ஊழியர்களுக்கு இல்லை. காரணம், அவர்களுக்கு போதிக்கப்பட்ட நம்முடைய ஐ.டி. கல்வி. இதனால் இந்திய ஐ.டி. துறையில், கீழ் நிலையில் உள்ள ஊழியர்களில் சுமார் 64 லட்சம் பேரும், மிடில் லெவலில் இருக்கும் ஊழியர்களில் சுமார் 40 லட்சம் பேரும் 2021க்குள் வேலை இழப்புக்கு உள்ளாகலாம் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

ரீடிங் கார்னர்

வெள்ளரிப் பெண்
கோணங்கி [புலம், 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005. விலை ரூ.350/- தொடர்புக்கு: 9840603499) கோணங்கியின் ஒன்பது சிறுகதைகள், ஒரு குறுநாவல், அவரது நேர்காணல் என நிரம்பப் பெற்ற புத்தகம். கோணங்கியை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்த முடியாது. எப்போதுமே அவர் தமிழ் இலக்கிய உலகின் தனிக்குரல். கனவின் தீராத பாதைகளில், காலத்தின் முடியாத பயணங்களைச் சுமந்து திரியும் எழுத்து நாடோடி.

அவரது எழுத்துகள் இப்போது அவ்வளவாக புரிபடுவதில்லை என்பர். அந்த வகை எழுத்துகளும் இருக்கிறது. இப்போது அவரது சொல்லாடல் புதிர் நிரம்பியது. அதன் முன்பான எழுத்தும் இதில் இடம் பெறுகிறது. கோணங்கியின் கதை ஊடாக கவனமாகப் பயணம் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. அவர் அதற்கான இடத்தையும் அர்த்தத்தையும் விட்டுச் செல்கிறார்.

அவரின் நேர்காணல் முக்கியமானது. பெரும் வீச்சை அதில் உணர முடியும். எண்ண ஓட்டத்தை தெளிய வைத்து மனதையும், புத்தியையும் இணைக்கும் வரிகள். நிறைந்த அனுபவத்தையும் செறிவையும் பெற படிக்கலாம். பல பரிமாணங்களைக் கொண்ட எழுத்தாளரைக் காண்பது எப்போதும் வியப்புதான்.

டாப்ஸியின் சம்மர் விசிட்!‘

கோடையை கொண்டாடுவதில் டாப்ஸிக்கு நிகர் டாப்ஸியே. இந்த சம்மருக்கு தங்கை ஷாகனுடன் தாய்லாந்தின் Koh Sumui தீவிற்குச் சென்று அங்கே கடலில் ஸ்கூபா டைவிங்கில் மெய்மறந்து ரெஃப்ரெஷ் ஆகிவிட்டது பொண்ணு. இப்போது பாலிவுட்டில் வருண் தவானுடன் நடிக்கும் ‘Judwaa 2’ படத்துக்காக லண்டன் பறந்திருந்திருக்கும் டாப்ஸி, அப்படத்துக்காக ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டு வருகிறார். லண்டன் தெருக்களில் ஷார்ட் ஸ்கர்ட்டில் அவர் ஸ்கேட்டிங்கில் கலக்குவது வைரல் ஹிட். கூடுதல் போனஸாக ‘‘cheers to the wonderful new things we learn at work’’ என நெகிழ்கிறார் எக்கச்சக்கமாக!