ராஜ்பவன்



அறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

‘‘எத்தனையோ முறை சென்னை அடையாறுல இருந்து கிண்டிக்கும், கிண்டியிலிருந்து அடையாறுக்கும் அலைஞ்சிருக்கேன். அப்பல்லாம் ஒரு தடவையாவது இந்த ராஜ்பவனை சுத்திப் பாத்துடணும்னு ஆசையா இருக்கும். இதுக்குள்ள அப்படி என்னதான் இருக்கும்னு யோசிச்சுகிட்டே போவேன். இன்னைக்குதான் அந்த அற்புதமான சான்ஸ் கிடைச்சிருக்கு...’’ உற்சாகம் பொங்க பேசுகிறார் பார்வையாளர் ஒருவர்.

கிண்டியைக் கடக்கும் எல்லாருக்கும் ராஜ்பவனை தரிசித்துவிட வேண்டும் என்கிற ஆசை நிச்சயமாக இருக்கும். ஆனால், பாதுகாப்புக் காரணங்களால் வெளியாட்கள் யாரும் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. சமீபத்தில் இந்த விதியைத் தளர்த்தி மக்களின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இனி, பொதுமக்களும் வாரத்தில் மூன்று நாட்கள் ராஜ்பவன் என்று அழைக்கப்படும் ஆளுநர் மாளிகையை சுற்றிப் பார்க்கலாம். ராஜ்பவன் அதிகாரிகள் சுற்றுலாத் துறையினரோடு இணைந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அப்படியாக, நாமும் விண்ணப்பித்து ஒரு மாலைப் பொழுதில் ராஜ்பவனின் ஊழியர்கள் கேட் வழியே நுழைந்தோம்.

வாசலிலேயே வழிமறித்து நிற்கிறார்கள் செக்யூரிட்டிகள். அவர்களுக்கு மத்தியில் உட்கார்ந்திருக்கும் அதிகாரி ஒருவர், விண்ணப்பித்தவர்களின் ஆன்லைன் லிஸ்ட்டுடன் ஒரிஜினல் ஐ.டியை சரி பார்த்து அனுப்புகிறார். அப்போது, அங்கே வயதான ஒரு தம்பதி டூவீலரில் ஆஜராகியது. செய்தியில் பார்த்து நேரடியாக விசிட் அடித்திருப்பார்கள் போல!

அவர்களிடம், ‘‘பெயரென்ன?’’ என்கிறார் அதிகாரி. பெயரைச் சொல்கின்றனர். ‘‘உங்க பேர் லிஸ்ட்டில் இல்லையே சார்’’ என்கிறார் அதிகாரி. உடனே, ‘‘ஆன்லைனில் பணம் செலுத்தி விண்ணப்பித்தீர்களா?’’ என்கிறார் மீண்டும். அவர்கள், ‘இல்லை’ என்றதும் அதைப்பற்றி தெளிவுபடுத்துகிறார். மூன்று மாதங்களுக்கு ‘ஃபுல்’ என்கிற தகவல்களையும் சொல்கிறார்.

வருத்தமாகத் திரும்பும் அந்தத் தம்பதியைக் கடந்து நடக்கிறோம். வலதுபக்கத்தில் மசூதி நம்மை வரவேற்கிறது. அதற்கடுத்தாற் போல புனித செபாஸ்தியார் ஆலயம் அழகூட்டுகிறது. தவிர, சிவன் கோயிலும், முனீஸ்வரர் ஆலயமும் ராஜ்பவனை ஆன்மிகமாக்குகின்றன. பிறகு, இடதுபக்கமாக வருகிறது பெரிய மைதானம். அதன் பெவிலியன் அறையை இப்போது பார்வையாளர் அறையாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.

மைதானத்துக்கு அந்தப்பக்கமாக பெரிய மரங்களுக்கிடையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அனைவருக்குமான குடியிருப்பு இருக்கிறது. மொத்தம் 140 குடியிருப்புகள். இதுதவிர செயலகத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகள் ‘வொயிட் ஹவுஸ்’ எனப்படும் குடியிருப்பில் வசிக்கிறார்கள். பதினான்கு பேர்கள் அமரக்கூடிய நான்கு பேட்டரி கார்கள் வரிசையாக வந்து சேர்ந்தன.

அதில் ஏறி அமர்ந்தோம். ஒவ்வொரு காருக்கும் ஒரு வழிகாட்டி என பயணம் தொடங்கியது. ஆளுநரின் செயலக அலுவலகத்தைத் தாண்டி உள்ளே செல்லச் செல்ல சுற்றிலும் மரங்கள். அந்தப் பகுதியே ஜில்லென்று மாறி சென்னையை மறக்கடித்தது. முதலில் வந்தது நூலகம். ‘‘இது முக்கியமான லைப்ரரி.

கன்னிமாராவில் கிடைக்காத புக்ஸ் கூட இங்க கிடைக்கும்...’’ என்கிறார் வழிகாட்டி கணேஷ். பிறகு, தீயணைப்பு நிலையமும், கார் ஷெட்டும் அடுத்தடுத்து வருகின்றன. முதல் பாயின்ட்டான நர்சரியில் இறங்கினோம். இங்கே, தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், கீரை வகைகள், தேங்காய் என காய்கறி வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

இதை 14 ஊழியர்கள் பராமரிக்கிறார்கள். அவர்களுக்கு பொறுப்பாக ஒரு தோட்டக்கலை அலுவலரை நியமித்திருக்கிறார்கள். ‘‘இங்க விளையிற காய்கறிகளதான் ஆளுநர் மாளிகையின் சமையலறையில பயன்படுத்துறோம். அப்புறம், இங்க 238 தென்னை மரங்கள் இருக்கு. அதிலிருந்து கிடைக்கிற தேங்காய்களை சமையலுக்கும், மீதியை செக்குக்கு அனுப்பி எண்ணெய்யாக்கியும் யூஸ் பண்றோம்.

எதுக்காகவும் நாங்க வெளி மார்க்கெட்டுக்கு போறதில்ல...’’ என்கிறார் உடன் வந்திருந்த அதிகாரி ஒருவர். அப்படியே அங்குள்ள சிறிய நீர்த்தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த வாத்துகளைப் பார்த்துவிட்டு தர்பார் ஹாலுக்குச் சென்றோம் ‘‘உங்களுக்கு தெரிஞ்சதுதான். பதவிப் பிரமாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் இங்கதான் நடக்கும்.

டிவியில பார்த்திருப்பீங்களே..?’’ என்கிறார் இன்னொரு அதிகாரி. இந்த தர்பார் ஹாலுக்கு வெளியே பச்சைப் பசேலென்ற பெரிய புல்வெளி, ஊட்டியின் தாவரவியல் பூங்காவை ஞாபகப்படுத்துகிறது. இதன் நீளம் ஒரு ஃபுட்பால் கிரவுண்டை விட பெரியது. இந்தப் புல்வெளியில் அழகழகான குட்டி புள்ளிமான்கள் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டும்.

இதில் உள்ள சுதந்திர தின பொன்விழா அரங்கத்தில்தான் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ெதாடர்ந்து, ‘காசோபோ’ என்ற செயற்கை நீரூற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். ‘‘இது ஜப்பான் வார்த்தை. கார்டனை ரிலாக்ஸா பார்வையிடுற பகுதினு சொல்லலாம். கவர்னர் நம்மள மாதிரி வெளிக்கடைகளுக்கு போய் காபி சாப்பிட முடியுமா? அதான், அவர் இங்க உட்கார்ந்து காபி சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ற மாதிரி இந்த இடத்தை அமைச்சிருக்காங்க...’’ என்றார் சுற்றுலா வழிகாட்டி.

இதன்பிறகு, ‘பிரசிடென்ஷியல் சூட்’ என்ற பகுதி வருகிறது. இரண்டு மாடிகள் கொண்ட பிரமாண்ட பங்களா. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் வந்தால் இங்குதான் தங்குவார்கள். அவர்களுக்கான பிரத்யேகக் கட்டிடம் இது. இதன் நுழைவுவாயிலின் அருகே உள்ள புல்வெளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் தத்ரூபமான சிலையை வைத்திருக்கிறார்கள்.

வாசலின் இருபக்கமும் முதல் மற்றும் இரண்டாம் குடியரசுத் தலைவர்களான ராஜேந்திர பிரசாத், ராதாகிருஷ்ணன் சிலைகள் அழகூட்டுகின்றன. இப்படி நிறைய சிலைகள் ராஜ்பவனை அலங்கரிக்கின்றன. ‘‘இவை மோனோலித்திக் எனப்படும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தனித்துவமான சிலைகள்...’’ என்கிறார் வழிகாட்டி.

சமீபத்தில் வைக்கப்பட்ட லவ் பேர்ட்ஸ் கூடாரத்திற்குள் சென்றோம். வித்யாசாகர் ராவின் மனைவி வினோதாவின் கைவண்ணத்தில் இது உருவாகியிருக்கிறது. இதில், 20 வெரைட்டிகளில் 80 பறவைகள் வசிக்கின்றன. ‘‘அப்பா, எனக்கு பேர்ட்ஸ் சரியா தெரியலை...’’ என்றது அங்கே வந்திருந்த குழந்தை ஒன்று. உடனே, குழந்தையைத் தூக்கி கூடாரத்தின் மேல்பகுதியில் நின்றிருந்த பறவைகளைக் காட்டி உற்சாகப்படுத்துகிறார் தந்தை.

தொடர்ந்து, ஹெர்பல் கார்டன், ஓவல் கார்டன், சில்வர் ஜூப்ளி கார்டன் ஆகியவற்றை பார்த்துவிட்டு ஆளுநர் மாளிகையின் முன்புறத்திற்கு வந்தோம். அதன் முன்னர் நின்று பார்வையாளர்கள் அனைவரும் ஜாலியாக புகைப்படமும், செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்கள். ‘‘சீக்கிரம் எல்லோரும் வண்டில ஏறுங்க. இருட்டுறதுக்குள்ள ஃபாரஸ்ட் பகுதிக்கு போயிட்டு வந்துடலாம்.

வண்டில உட்கார்ந்தபடியே மான், ஊர்வன எதுவாவது இருந்தா பார்க்கலாம்...’’ என்றபடியே எல்லோரையும் வேகப்படுத்தினார் வழிகாட்டி கணேஷ். ஒன்றரை கி.மீ. தூரம் ஃபாரஸ்ட் பகுதிக்குள் பயணம் செய்தோம். வழியில் செக்யூரிட்டிகள் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் நிற்கின்றனர். அந்தக் காட்டுக்குள் இருக்கிறது அழகான பழைய பங்களா ஒன்று. வெளியிலிருந்தே பார்வையிட்டோம்.
 
‘‘அநேகமாக இந்த பில்டிங் விரைவில் மியூசியமாக மாற்றப்படலாம்...’’ என்றார் ஓர் அதிகாரி. அங்கிருந்து மீண்டும் தர்பார் ஹாலுக்கு வந்து சேர்ந்தோம். ‘‘எல்லாரும் அமைதியாக உட்காருங்க. கவர்னர் உங்களைச் சந்திக்க வருகிறார்...’’ என்றனர் அங்கிருந்த அதிகாரிகள். சிறிது நேரத்தில் பேட்டரி காரில் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனாவுடன் வந்திறங்கினார் வித்யாசாகர் ராவ்.

பார்வையாளர்களிடம் ‘ஆளுநர் மாளிகை’ அனுபவத்தைக் கேட்டறிந்தார். பிறகு குழந்தைகளிடம் பிஸ்கட் கொடுக்க உத்தரவிட்டார். ஆளுநருடன் குழந்தைகளும் மான்களுக்கு பிஸ்கட் ஊட்டி குதூகலம் அடைந்தார்கள். பார்வையாளர் அறைக்கு வந்து சேர்ந்தோம். இரவு வெளிச்சத்தில் ரம்மியமாக காட்சியளித்த ராஜ்பவனை விட்டு வெளியே இரண்டடிதான் வைத்திருப்போம். வெக்கை உடல் மீது படர்ந்தது. ஆடைகள் வியர்வையில் குளித்தன. மீண்டும் பரபரப்பாக நம்மை வரவேற்றது பேரிரைச்சல்!    

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

ராஜ்பவன் பயோடேட்டா

* 156 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது ராஜ்பவன்.
* இங்கே நெட்டுலிங்கம், குல்மொகர், கொன்றை, புளியமரம், மாமரம் என 152 வெரைட்டிகளில் 7,158 மரங்கள் உள்ளன. தவிர, 678 புள்ளிமான்கள், 198 பிளாக் பக் மான்கள், விதவிதமான ஊர்வன / பறவையினங்கள் வசிக்கின்றன.
* காந்தி, நேரு, சர்தர் வல்லபாய் பட்டேல் எனத் தலைவர்களின் உருவச்சிலைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதோடு விரைவில், திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் சிலை நிறுவப் போகிறார்கள்.
* அடையாறு நதிப்படுகையிலும், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியிலும் ராஜ்பவனுக்கு சொந்தமாக 8.63 ஏக்கர் இடம் இருக்கிறது. இவை, வாட்டர் பம்பிங் ஸ்டேஷனாக செயல்படுகின்றன. இங்கிருந்து ராஜ்பவனுக்கு தண்ணீர் சப்ளையாகிறது.
* இதுதவிர, ஊட்டியிலும் 86.72 ஏக்கரில் ராஜ்பவன் அமைந்திருக்கிறது.

ராஜ்பவன் வரலாறு

* ராஜ்பவன் ஒரு காலத்தில் கிண்டி லாட்ஜ் என அழைக்கப்பட்டது. இதனை 1670ல் ஆளுநர் வில்லியம் லாங்ஹோர்ன் என்பவர் கட்டியதாக நம்பப்படுகிறது. இவர், 1678ல் சின்ன வெங்கடகிரி என்பவருக்கு இந்த இடத்தை விற்றார். அவர் கிழக்கிந்திய கம்பெனிக்கு கைமாற்றி விலைக்கு தந்துள்ளார். பிறகு, அரசு பண்ணை வீடாக இந்தக் கட்டிடம் இருந்திருக்கிறது.

* 19ம் நூற்றாண்டில் கில்பர்ட் ரிக்ெகட்ஸ் என்பவர் இந்தக் கட்டிடத்தை வாங்கி அரசு வங்கியிடம் லோனுக்காக அடமானம் வைத்தார். திடீரென கில்பர்ட் மரணமடைய, வங்கியின் அடமானத்தில் இருந்த இந்தக் கட்டிடத்தை ஆளுநர் தாமஸ் மன்றோ அரசு சார்பாக அன்றைய மதிப்பில் ரூ.35 ஆயிரம் கொடுத்து மீட்டுள்ளார். பிறகு, ஓர் ஆர்மேனிய வணிகரிடம் இருந்து அருகிலிருந்த நிலத்தையும் அரசு வாங்கியிருக்கிறது.

பார்வையாளர்களுக்கு...

* ராஜ்பவனை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 முதல் 6.30 வரை விசிட் செய்யலாம். இதற்கு, www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து டிக்கெட்டை உறுதி செய்யவேண்டும்.
* இதற்கான பதிவுக் கட்டணம் தலைக்கு ரூ.25. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் வழியே ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான தகவல் வரும்.
* நாளொன்றுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
* பார்வையிட வரும்போது இமெயில் தகவலையும், அடையாள அட்டை ஒன்றையும் கொண்டு வர வேண்டும்.
* டில்லி ராஷ்டிரபதி பவனை பொதுமக்கள் பார்வையிடுவதைப் போல மும்பை ராஜ்பவனை பார்வையிட வழிவகை செய்தார் அங்கு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ். அதை தமிழகத்திற்கும் கொண்டு வந்திருக்கிறார்.