மூன்றாம் உலகப்போர்..? அச்சுறுத்தும் டர்ட்டி குண்டுகள்!



- ச.அன்பரசு

கருங்கடல் அருகிலுள்ள சிறுநகரமான கோபுலெடியிலுள்ள பாலத்தினருகில் நகம் கடித்தபடி பதற்றத்துடன் காத்திருந்தார், ஜார்ஜியா நாட்டின் வணிகரான அமீரன் சதுநெலி. அரிய பொருளுக்கான டீலை ஓகே செய்துவிடும் வேகத்தில், போனில் பேசிய இருவரையும் சந்திக்க அமீரன் வரச் சொல்லியிருந்த மீட்டிங் பாய்ண்ட் அது.

இருவரையும் பாலத்தினருகிலிருந்த பிளாட் ஒன்றுக்கு அழைத்துச்சென்று ஸ்மார்ட்போன் பாக்சிலிருந்த சரக்கை பரவசத்துடன் காட்டினார் அமீரன். உள்ளேயிருந்தது சாதாரண பொருளல்ல. யுரேனியம் 135 என்ற கதிர்வீச்சு வஸ்து. பொருளைப் பார்த்தவுடன் சற்று யோசித்த இருவரும் சட்டென்று அமீரனின் பின்கழுத்தில் துப்பாக்கி வைத்து கைது செய்தனர். யெஸ். அவர்கள் இருவருமே ரகசிய போலீசார்.

அணு ஆயுதம் செய்ய இந்த யுரேனியம் போதாது என்றாலும், வெடிகுண்டுகளில் இதை இணைத்தால் போதும். டர்ட்டி பாம் (Dirty bomb) ரெடி! அணுஆயுதம் போல் இதில் பாதிப்பு ஏற்படாது. என்றாலும் டர்ட்டி பாம் வெடித்தால், அப்பகுதியில் கதிர்வீச்சு பரவும். அங்குள்ள உயிர்ச்சூழலை சீரழிக்கும்.

மனிதர்களை கொடூர நோய்கள் தாக்கும். இப்போது அமீரன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், எண்ணற்ற ‘அமீரன்’கள் கையில் டர்ட்டி பாமுடன் உலகெங்கும் சுற்றி வருகிறார்கள். ISIS அமைப்பைச் சேர்ந்த இவர்களிடம் இருக்கும் டர்ட்டி பாமால் மூன்றாம் உலகப் போர் நடக்கலாம் என உலகமே அஞ்சுகிறது.

அணு ஆயுத அணிவகுப்பு!
1970ஆம் ஆண்டில் அணு ஆயுதம் வைத்திருந்த 5 நாடுகளின் லிஸ்ட்டில் இன்று 9 நாடுகள் உள்ளன. ஈரானின் அணு ஆயுத செறிவூட்டலை முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது சாதுரியத்தால் சிலகாலம் தள்ளி வைத்தார்.ஆனால், இப்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப், ‘முடிந்தால் மோதிப்பார்’ டைப்.

வடகொரியாவும் விட்டுக்கொடுக்காமல் அமெரிக்காவிடம் ‘முடிந்தால் மோதிப்பார்’ என்று நேரடியாகவே திமில் சிலிர்த்து நிற்கிறது. ‘உள்நாட்டு தீவிரவாதத்திற்கு’ என்ற பெயரில் அமெரிக்காவிடம் மானியம் பெற்று அதை அணு ஆயுத தயாரிப்புக்கு மெல்ல பாகிஸ்தான் திருப்பத் தொடங்கியுள்ளது. ஆக, ஏறத்தாழ அணுஆயுதங்களை உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே செய்து கொண்டிருக்கின்றன அல்லது பெற முயற்சித்து வருகின்றன. 

மெல்லக் கொல்லும் கதிர்வீச்சு!
பல்வேறு தொழிற்சாலைகளிலும், மருத்துவத் துறைகளிலும் கதிரியக்க தனிமங்கள் முன்பே நுழைந்துவிட்டன. சிறிய சூட்கேஸில் யுரேனியத்தை சர்வ சாதாரணமாக அடைத்து வெடிப்பொருட்களோடு சேர்த்து டர்ட்டி பாம்களை உருவாக்கலாம். இந்த டர்ட்டி பாம்கள் வெடித்தால் பொதுவான குண்டுகள் போல உயிர்ப்பலி நிகழாது. மாறாக, மெல்ல கதிரியக்கம் (ஆல்பா, பீட்டா, காமா) பரவி மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். பொருளாதாரமும் சரியும். கதிரியக்க தனிமங்களை பிளாக் மார்க்கெட்டிலேனும் கைப்பற்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு துடிப்பது இந்தக் காரணத்தினால்தான்.

நில் கவனி ஜார்ஜியா!
முன்பு சோவியத் யூனியனில் அங்கம் வகித்த ஜார்ஜியாவில் கடந்த 12 ஆண்டுகளாக அமெரிக்கா 50 மில்லியன் டாலர்களை தண்ணீராய் செலவழித்திருக்கிறது. எதற்கு? 3.7 மில்லியன் மக்கள் வாழும் நாடான ஜார்ஜியாதான் உலகிற்கே அணு ஆயுதங்களைக் கடத்துவதற்கான நியூக்ளியர் ஹைவே என்பதால்தான். இந்த வழித்தடத்தில் ஆல் நியூ டெக்னாலஜி டிடெக்டர்கள், வீரர்கள் என கள்ளக்கடத்தலுக்கு செக் வைக்க ஒவ்வொரு இன்ச்சிலும் பக்கா செக்யூரிட்டி!

ரஷ்யாவின் காகசஸ் மலைத்தொடரிலிருந்து துருக்கி, ஈரான் வழியாக ஜார்ஜியா செல்லும் கடத்தல் வழித்தடத்தில் சில பகுதிகளை ஐஎஸ்ஐஎஸ் தன் கைப்பிடியில் வைத்துள்ளதுதான் அமெரிக்காவின் பரபர செக்யூரிட்டிக்கு காரணம். 2016 ஆம் ஆண்டில் துருக்கி பார்டரில் சீசியம் - 137 என்ற தனிமத்தை கடத்திய கும்பலையும், 3 மாதம் கழித்து ஏப்ரல் 17இல் யுரேனியம் தனிமத்தை 200 டாலர்களுக்கு விற்க முயன்ற மற்றொரு கும்பலையும் ஜார்ஜியா போலீஸார் கைது செய்துள்ளது மேட்டரின் சீரியஸுக்கு சின்ன சாம்பிள். அடுத்த சில மாதங்களில் முதல் பாராவில் பார்த்த சதுநெலியின் சகாக்களுக்கும் போலீஸ் காப்பு மாட்டியது அணு ஆயுதத் தடுப்பில் சக்சஸ் ஸ்டோரி.

ஐஎஸ்ஐஎஸ் தந்திரங்கள்!
அல்கொய்தா உள்ளிட்ட அபாயகரமான குழுக்களை ஓரம் கட்டிவிட்டு நேரடியாக களத்தில் முன்னேறும் ஐஎஸ்ஐஎஸ், கிடைக்கும் ஆயுதங்களை வைத்து ஐரோப்பிய நாடுகளை குலைநடுங்க வைத்து தாக்குவதில் டிஸ்டிங்ஷன் அடிக்கிறது. எடுத்துக்காட்டாக மார்ச் 16 அன்று பெல்ஜியத்தின் பிரஸ்சல்ஸில் நடந்த சம்பவம். அதேநேரம், அணு ஆயுதங்களிலும் தன்னை அப்டேட் செய்வதில் ஐஎஸ்ஐஎஸ் கில்லிதான்.

ஈராக்கின் மொசூலை 2014ஆம் ஆண்டு கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், அங்கிருந்த பல்கலைக்கழகத்திலிருந்து 40 கிலோ யுரேனியத்தை கொள்ளைடித்தனர். இதுபற்றிய தகவலறிந்த ஐ.நா., ‘ஐஎஸ்ஐஎஸ் கைப்பற்றியிருக்கும் யுரேனியத்தால் எந்த ஆபத்தும் இல்லை’ என்று அறிக்கை வெளியிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டுவிட்டது. 

‘‘ஐஎஸ்ஐஎஸ் தன் டர்ட்டி பாம் தாக்குதலை நடத்துவற்கு முன்பே நமக்கு கிடைத்த ஒரேயொரு சரியான தகவல் இதுதான்...’’ என்கிறார் உலகளாவிய ஆய்வு மற்றும் புள்ளிவிவரங்கள் மையத்தின் (CSIS) அணு ஆயுதப்பெருக்கத்திற்கு எதிரான செயல்பாட்டாளரான ஷரோன் ஸ்வாசோனி.

அவிழ்கிறது மர்மம்!
1990களில் சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்றபோது, அணு உலைகளிலிருந்த கதிரியக்க எரிபொருள், தனிமங்கள் போன்றவை வணிகர்களால் கைப்பற்றப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். ரஷ்யாவிலிருந்து முறைப்படி ஜார்ஜியா பிரிந்தாலும், அங்குள்ள தனது இடங்களை தொடர்ந்து ரஷ்யா பராமரிக்கிறது. அரசின் கட்டுப்பாடற்ற இந்த இடங்கள்தான் கட்டரேட்டில் ஆயுதங்கள் விற்பனையாகும் கள்ளச்சந்தையின் சொர்க்கம்.

‘‘இங்கு வாழும் மக்களுக்கு கள்ளக்கடத்தலில் ஈடுபடுவதைத் தவிர பிழைக்க வேறு வழியில்லை. இந்நிலையில் கடத்தும் பொருட்களின் பின்விளைவுகளைக் குறித்த குற்றவுணர்வு அவர்களுக்கு எப்படி இருக்கும்?’’ என யதார்த்தமாகப் பேசுகிறார் ஆய்வாளர் ஷரோன். அப்ஹாசியாவின் சுஹூமியில் உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் ரஷ்யா பாதுகாத்து வந்த கதிரியக்கப் பொருட்கள் குறித்து எந்த பதிலும் ரஷ்யாவிடமிருந்து இதுவரை வரவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது.

உலகப்போருக்கான நதிமூலம்!
எதிர்கால டர்ட்டி பாம்களின் தயாரிப்புக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குத்தான் முக்கியமான ரோல். தேர்தலின்போதே ஐ.நா. சபையின் அணுசக்தி ஏஜன்சி குறித்து, ‘நேரமும் காலமும் விரயம்’ என திருவாய் மலர்ந்திருக்கிறார். மார்ச், 2016ல் தாக்கலான ட்ரம்பின் புதிய பட்ஜெட்டில் உலக நாடுகளிலுள்ள பல்வேறு அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதி, பிற நாடுகளுக்கான நன்கொடை ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதால் அணு ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் பணி தேக்கமடையும் என்கிறார்கள்.

‘‘தன்னார்வமாக அணு ஆயுதத்திற்கு எதிராக செயல்படும் என்ஜிஓக்களுக்கு பயிற்சித் தொகை உள்ளிட்டவைகளுக்கு அமெரிக்காதான் கேரண்டி...’’ என தீர்க்கமாகப் பேசுகிறார் அரசு அதிகாரியான லைமேஜ். ஜார்ஜியாவிலிருந்து கார் அல்லது படகு மூலம் துருக்கி சென்று, அங்கிருந்து சிரியா அல்லது ஈராக் செல்வது ரொம்பவே சுலபம்!

அகதிகளுக்கு மறுவாழ்வு!

அகதிகளின் எண்ணிக்கை - 62,600 (கிரீஸ்), 15,614 (இத்தாலி)
குடியமர்த்தப்பட உள்ள மக்களின் எண்ணிக்கை - 13,000
மறுவாழ்வுக்கான காலக்கெடு - செப்டம்பர் 2017
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் (ஐரோப்பிய நாடுகளில்) - 858(7%)
மறுகுடியமர்த்தல் சதவிகிதம் (ஐரோப்பா) - 5% (20 நபர்களில் ஒருவருக்கு இடம்)
கடந்த 10 ஆண்டுகளில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை (2007 - 2017) - 8,92,243
(தகவல்  உதவி: European commission (9th report (2017), international organization for migration)