கவிதை வனம்



நிற மாற்றங்கள்

சிறிய வளையத்தினுட் புகுந்து வெளிவந்தவளின்
வறண்ட கேசம் குறித்தும்
கிழிந்த ஆடையினூடே எட்டிப்பார்த்த அவளின்
இளமை குறித்தும்

கைகளை தோளோடு பின்திருப்பி வட்டமிடும்
வறுமை மெலிந்த தேகம் குறித்தும்
அவளருகில் நின்ற வருங்கால வித்தைக்காரனின்
பசி சுமந்த கண்கள் குறித்தும்
மஞ்சள் ஒளிர்ந்ததும் வாகனத்திற்கு இடையூறின்றி
அக்குழந்தைகள் கலைந்தது குறித்தும்
பச்சை ஒளிர்ந்தபின்
மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிடும் நான்
முதலில் சிவப்பு ஒளிர்ந்தபோது
மகிழுந்தின் கதவுகள் தாழிடப்பட்டிருப்பதை
என் கரங்கள் உறுதி செய்ததை மட்டும்
இங்கே எழுதாமல் விடுகிறேன்
தவறுகையில்
நீங்களேனும் அதைப் படிக்காமல் விடுங்கள்.
                             

- பா.வனிதா ரெஜி

அருவி

உச்சி வகிடெடுத்து
மொத்த காட்டையும்
இரண்டாகப் பிரித்திருக்கிறாய்
சிறு இலைகள் அசைவதைப்போல
அசைகிறது உன் கூந்தல்
என்னை கூழாங்கற்களாக சமைத்து
காதில் அணிந்து கொள்கிறாய்
நீ பிரித்திருக்கிற காடு இப்பொழுது
அருவியாய் கொட்டுகிறது
                            
- விநோத்